லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

L:பெண்+பெண்; G:ஆண்+ஆண்; B:ஆண்/பெண்+ஆண்/பெண்; T:திருநர்; Q:சமூகம் - அறிவோம், தெளிவோம், வாழ்வோம்...

LGBTQ
பிரீமியம் ஸ்டோரி
News
LGBTQ

பொதுச்சமூகத்தில் தன்பால் ஈர்ப்பு மற்றும் திருநர்கள் இயற்கைக்கு முரணான வர்கள் என பார்க்கப்படுகின்றனர். இதன் விளைவாக அவர்கள் ஒதுக்கப்படுவதால் பெரிதும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

இயற்கையின் படைப்பில் முறையானது, முறையற்றது என எதுவும் இல்லை. பாலினம் மற்றும் பாலுறவுத் தேர்வு சார்ந்து பெரும்பான்மை மக்களிடமிருந்து வேறுபட்டிருப்பவர்கள் LGBTQ சமூகத்தினர். தன் பாலின ஈர்ப்பாளர்கள், இரு பாலின ஈர்ப்பாளர்கள் மற்றும் திருநர் (திருநங்கையர், திருநம்பியர்) ஆகியோரை உள்ளடக்கியதே இச்சமூகம். பாலினச் சிறுபான்மையினராகத் தங்களை அறிவிக்கும் இச்சமூகத்தினர் பற்றி பல்வேறு கோணங்களில் அலசுவோம்…

L:பெண்+பெண்; G:ஆண்+ஆண்; B:ஆண்/பெண்+ஆண்/பெண்; T:திருநர்; Q:சமூகம் - அறிவோம், தெளிவோம், வாழ்வோம்...
TarikVision

LGBTQ... ஒரு விளக்கம்

பெண்ணுடன் ஈர்ப்பிலிருக்கும் பெண் (Les­bian), ஆணுடன் ஈர்ப்பிலிருக்கும் ஆண் (Gay), ஆண் மற்றும் பெண் என இருபாலினரிடத்திலும் ஈர்ப்புடன் இருப்பவர் (Bisex­u­al), திருநர் (Trans­gen­der), புதுமர் (Queer - வழக்கத்துக்கு மாறானவர்கள், விசித்திரமானவர்கள், விநோதமானவர்கள் என்றும் அழைக்கிறார்கள்). இந்த ஆங்கில வார்த்தைகளின் முதல் எழுத்தை வைத்துதான் ‘LGBTQ’ என்கிற சமூகமாக அழைக்கிறார்கள். இதற்கான விளக்கத்துடன் இச்சமூகத்தினரின் உளவியல் குறித்தும் விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த உளவியல் மருத்துவர் ஸ்வாதிக் சங்கரலிங்கம்…

 ஸ்வாதிக் சங்கரலிங்கம்
ஸ்வாதிக் சங்கரலிங்கம்

``தன் பாலீர்ப்பாளர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு எதிர்பாலினத் தவர் மீது எந்த ஈர்ப்பும் இருக்காது. தன் பாலினத்தைச் சார்ந்தவர்களுடன்தான் அவர்கள் பாலுறவுகொள்ள விரும்புவர். இவர்களில் ஆண்கள் Gay என்றும், பெண்கள் Lesbian என்றும் அழைக்கப்படுகின்றனர். ஆண், பெண் என இருபாலினர் மீது ஈர்ப்பு கொண்டவர்களே Bisexual எனப்படும் இரு பாலின ஈர்ப்பாளர்கள். Gay, Lesbian, Bisexual ஆகிய மூன்று பிரிவினரும் பாலுறவு சார்ந்து மட்டுமே தங்கள் தேர்வைக் கொண்டிருக்கின்றனர், தங்களின் பாலின அடையாளத்தை அப்படியே ஏற்றுக்கொள்கிறவர்கள்.

ஆணாகப் பிறப்பவர்கள் தங்களைப் பெண்ணாகவோ, பெண்ணாகப் பிறப்பவர்கள் தங்களை ஆணாகவோ உணர்கிறார்கள் என்றால் அவர்களே திருநர். இது பாலினத்தேர்வு சார்ந்தது. தன்னை எந்தப் பாலினமாக அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்கும், ஈர்ப்புக்கும் எந்தத் தொடர்பும் இல்லை, இரண்டும் வெவ்வேறானவை.

ஆண் மற்றும் பெண் மட்டுமே பரஸ்பரம் ஈர்ப்புடன் (Hetero sexual) இருப்பதைத்தான் இயற்கையானது; அதைத் தவிர, இந்த ‘LGBTQ’ சமூகமானது இயற்கைக்கு விரோதமானது என்று பலரும் பேசுகிறார்கள். ஆனால், அதை அப்படி எடுத்துக்கொள்ள முடியாது. ‘LGBTQ’ என்பதும் இயற்கையாகவே உருவாகும் உணர்வுதான். ஆனால், இந்த எல்.ஜி.பி.டி.க்யூ சமூகத்தினருக்கு ஏன் இத்தகைய உணர்வு ஏற்படுகிறது என்பது குறித்து அறுதியிட்டுக்கூறுமளவுக்கான ஆய்வுகள் இல்லை.

L:பெண்+பெண்; G:ஆண்+ஆண்; B:ஆண்/பெண்+ஆண்/பெண்; T:திருநர்; Q:சமூகம் - அறிவோம், தெளிவோம், வாழ்வோம்...
arsenisspyros

ஆண்-பெண் எனப்படும் எதிர்பாலின ஈர்ப்பாளர்கள்தான் சமூகத்தில் அதிகம். அப்படியல்லாமல் ‘LGBTQ’ எனும் வகையில் வருபவர்கள், ஒரு குழுவாகப் பிரித்துப் பார்க்கப்படுகின்றனர். ஒரு சிறுபான்மைக் குழுவாக இருப்பதால் அவர்களை ‘க்யர்’ (Queer) என்று ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள். இந்த வார்த்தையின் முதலெழுத்தான ‘ஜி’ என்பதை எல்.ஜி.பி.டி என்கிற பொதுவான வார்த்தையின் கடைசி எழுத்தாகச் சேர்த்து இவர்களை ‘LGBTQ’ சமூகம் என்று அழைக்கிறார்கள்.

இந்த வகையினர் உருவாவதற்கான காரணம் என எதுவும் இதுவரை அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. மனநல மருத்துவத்தில் இவர்கள் `பயோ சைக்கோ சோஷியோ' என்று அழைக்கப்படுகிறார்கள். உயிரியல் அடிப்படையில் இவ்வகையினருக்கு உடல் அளவிலும் மாற்றங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது, ஆனால், இதற்கான ஆதாரங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை. அதேபோல், மனதளவில் அவர்கள் தங்களை எப்படி உணர்கிறார்கள், சமூகத்தின் தாக்கம் இதில் எவ்வாறு பங்கு வகிக்கிறது என்பதெல்லாம் இதன் காரணிகளுள் அடக்கம். ஒரு மருத்துவரையோ, விமானியையோ பார்த்து தானும் அப்படி ஆக வேண்டும் என்று விரும்புவதைப் போன்றே சிலர் தங்கள் எதிர்பாலினத்தைப் பார்த்து அவர்களைப் போன்றே ஆக வேண்டும் என்று விரும்புகின்றனர்.

பொதுச்சமூகத்தில் தன்பால் ஈர்ப்பு மற்றும் திருநர்கள் இயற்கைக்கு முரணான வர்கள் என பார்க்கப்படுகின்றனர். இதன் விளைவாக அவர்கள் ஒதுக்கப்படுவதால் பெரிதும் பாதிப்புக்குள்ளாகின்றனர். இவர்களை தங்களுள் ஒருவராக ஏற்றுக் கொள்ள மறுக்கும்போதும் கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்டவை தடைப்படும் போதும் கடும் மன நெருக்கடியைச் சந்திக்கின்றனர்.

L:பெண்+பெண்; G:ஆண்+ஆண்; B:ஆண்/பெண்+ஆண்/பெண்; T:திருநர்; Q:சமூகம் - அறிவோம், தெளிவோம், வாழ்வோம்...
Alexandros Michailidis

இன்று இந்தப் போக்கு கொஞ்சம் மாறி யிருக்கிறது. தன்பால் ஈர்ப்பாளர்களும் திருமணம் செய்துகொள்கின்றனர். இவர்களது உறவும் வழக்கமான திருமண உறவைப் போன்றுதான் இருக்கும். ஒரே பாலினத்தவர் இரண்டு பேர் திருமணம் செய்துகொண்டதால் அவர்களிடையே எந்தச் சண்டைகளும் இருக்காது என நினைக்கக் கூடாது, நல்ல புரிந்துணர்வு உள்ளவர்கள் நீண்ட காலம் தங்கள் உறவைத் தொடர்வார்கள், அது இல்லாமல் போகும்போது அவர்கள் அந்த உறவை முறித்துக்கொள்வார்கள்.

ஆகவே, இவர்களும் நம்மைப் போன்றே இயல்பானவர்கள்தான் என்பதை உணர்ந்து அவர்களுடன் இயல்பாக உறவாடினாலே போதும். ஒவ்வொரு தனி மனிதருக்கும் தங்கள் விருப்பம் சார்ந்து வாழும் உரிமை உள்ளது. அது இச்சமூகத்தினருக்கும் பொருந்தும்” என்கிறார் ஸ்வாதிக் சங்கரலிங்கம்.

பெற்றோரின் ஆசை... பிள்ளைகளை பாதிக்கலாம்!

LGBTQ குறித்த உடலியல் சார்ந்த விளக்கங்களைக் கூறுகிறார் சென்னையைச் சேர்ந்த பாலியல் சிகிச்சை மருத்துவர் காமராஜ்…

 காமராஜ்
காமராஜ்

``தன்பாலின ஈர்ப்பு என்பது தற்காலத்தில் ஏற்பட்டது அல்ல, பல ஆயிரம் ஆண்டுகளாக இருப்பதுதான். சமூகத்தில் தன்பால் ஈர்ப்பாளர்கள் மட்டும் அல்ல, Hetero Sexual ஆக இருப்பவர்களில் 60 சதவிகிதத்தினர், தன்பால் உறவில் ஈடுபட்டவர்களாக இருக்கிறார்கள். அதாவது சிறிய அளவிலான தொடுதல்கள், உறுப்பைத் தூண்டுதல் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டிருக்கலாம். அமெரிக்காவில் இதுதொடர்பான ஆய்வை கின்ஸே நடத்தியபோது, உலக அளவில் பலரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பாலுறவின் மீதான ஆர்வத்தை இரண்டு எல்லைகளாக வகுத்துக்கொண்டால், அதன் ஓர் எல்லையில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் இருப்பார்கள். 100 சதவிகிதம் தன்பாலின ஈர்ப்பு கொண்டவர்களால், எதிர்பாலினத்தவருடன் உறவுகொள்ள முடியாது. மற்றோர் எல்லையில் Hetero Sexuals இருப்பார்கள் அவர்களால் எதிர்பாலினத்தவரைத் தவிர, வேறு யாருடனும் உறவு வைத்துக்கொள்ள முடியாது. இந்த இரு எல்லைகளுக்கு இடையில் 90, 70, 50 என சதவிகித அடிப்படையில் பல வரையறை கள் உள்ளன. இதில் 50 சதவிகிதம் பேர் ஆண் – பெண் இருவருடனும் உறவு கொள்ளும் இரு பாலின ஈர்ப்பாளர் களாக இருப்பர். இந்த சதவிகித மாறுபாடுகளுக்கேற்ப அவர்களுக்கான ஈர்ப்பு இருக்கும்.

L:பெண்+பெண்; G:ஆண்+ஆண்; B:ஆண்/பெண்+ஆண்/பெண்; T:திருநர்; Q:சமூகம் - அறிவோம், தெளிவோம், வாழ்வோம்...
Dedraw Studio

இந்த மாற்றங்கள் மரபு வழியாக வரலாம் எனச் சிலரால் கூறப்படுகிறது. மரபு வழியாக அல்லாமல், வாழ்வில் ஒருமுறை குறிப்பாக, சிறுவயதில் தன் பாலினத்தவர்களால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டவர்கள், அதுதான் தனக்கான பாலுறவுத் தேர்வு என நினைத்து தன்பால் ஈர்ப்புடையவர்களாகின்றனர். இயல் பாகவும் இந்த ஈர்ப்பு உண்டாகலாம். தன்பாலின ஈர்ப்பு என்பது மரபு வழியாக வரும் ஒன்றுதான் எனக் கூறுபவர்கள் அதற்காக பல்வேறு ஆதாரங்களை வைத்துள்ளனர். தன்பாலின ஈர்ப்புக்கு ஆதரவாக இயங்கும் குழுக்களும், நடத்தப்படும் கூட்டங்களும், அது இயற்கை யான ஒன்று என்றுதான் கூறுகின்றன. ஆனால், மருத்துவ சிகிச்சைக்காக வரும் போது பலரும் தங்களுக்குக் கிடைத்த தன்பால் உறவு அனுபவத்தின் மூலமே, தன்பாலின ஈர்ப்பு அறிமுகமானதாகக் கூறுகின்றனர்.

இருபாலின ஈர்ப்பு உள்ளவர்களுக்கு தன்பாலின ஈர்ப்பு உள்ளவர்களைப் போல் எதிர்பாலினத்தவர் மீது வெறுப்பு இருப்பதில்லை. இப்படிப்பட்டவர்களுக்கு சிறுவயது முதலே ஆண், பெண் இருவர் மீதும் ஈர்ப்பு இருந்திருக்கலாம். ஆண்/பெண் விடுதிகள், சிறை எனக் குறிப்பிட்ட வயதுக்கு மேல் தன் பாலினத்தவர்களுடனே தனிமைப்படுத்தப்படும் இடங்களில்

இந்த ஈர்ப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். இப்படிப்பட்டவர்கள் அச்சூழலில் இருந்து வெளிவந்த பிறகு, எதிர்பாலினத்தவர் மீதும் ஈர்ப்பு ஏற்படும்.

L:பெண்+பெண்; G:ஆண்+ஆண்; B:ஆண்/பெண்+ஆண்/பெண்; T:திருநர்; Q:சமூகம் - அறிவோம், தெளிவோம், வாழ்வோம்...
D. Talukdar

திருநர்களைப் பொறுத்தவரை பிறக்கும்போதே அவ்வகையாகப் பிறப்பது அல்லது வளரும்போது அப்படியாகத் தன்னை உணர்வது என இருவகை உண்டு. ஆணுறுப்பும் பெண்ணுறுப்பும் ஒருசேர இருக்கும். கர்ப்பப்பையும் இருக்கும். இதை `Gender dysphoria' என்போம். இவர்களை பிறக்கும்போதே இந்தப் பாலினத்தவர் என்று நிர்ணயிக்கப்படாமல் இருப்பவர்கள் எனலாம். இவர்களின் எண்ணிக்கை குறைவு. ஆணாகப் பிறந்து பெண்ணாக உணர்வார்கள். அதேபோல் பெண்ணாகப் பிறந்து ஆணாகவே உணர்வார்கள்.

பெண் குழந்தைகள் இல்லாத குடும்பங்களில் 4 அல்லது 5 வயது வரை ஆண் குழந்தைகளுக்கு பூ வைத்து, பெண் குழந்தைகளைப் போல் உடை அணிவிப்பார்கள். இந்த வயதில் செய்யப்படும் இந்த அலங்காரங்கள், அந்தக் குழந்தைகளின் மனதில் தான் ஓர் ஆண் அல்ல பெண் என்ற உணர்வை ஆழமாகப் பதிக்கும் வாய்ப்புகள் அதிகம். 4 அல்லது 5 வயதில் தான் குழந்தைகள் தங்கள் பால் அடையாளத்தை உணரத் தொடங்கும் வயது. இந்த வயதில் செய்யப்படும் அலங்காரங்களால் பதிந்து போகும் மாற்றுப் பால் அடையாளம், குறிப்பிட்ட வயதுக்குப் பிறகும் தொடரும், 7 அல்லது 8 வயதில் ஓர் ஆண் குழந்தை பெற்றோருக்கும் மற்றவர்களுக்கும் தெரியாமல் பெண் உடைகளை அணிந்து பார்க்கும். ஆணின் வயது அதிகமாகும்போது இந்தச் சுதந்திரங்கள் குறையும்போது, தான் முழுமையாகப் பெண்ணாக மாறிவிட வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்து 17 அல்லது 18 வயதில் வீட்டைவிட்டு வெளியேறி விடுகின்றனர். அறுவைசிகிச்சை செய்துகொண்டு திருநங்கைகளாக மாறிவிடுகின்றனர்.

திருநர்கள் பாலின மாற்று அறுவைசிகிச்சை செய்ய பாலியல் மருத்துவர் களைத்தான் அணுகுவார்கள். அப்படி வருபவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான விதிமுறைகளை உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஓராண்டுக் காலம் வரை எந்தச் சிகிச்சையும் அளிக்கப்படாது. அவர்கள் இரண்டு மனநல மருத்துவர்களை அணுகி, நல்ல மனநிலையில், உறுதியாகத்தான் இம்முடிவை எடுத்துள்ளனர் எனச் சான்றிதழ் பெற்று வர வேண்டும். அடுத்ததாக, பெண்ணாக மாற விரும்புபவர் பெண்களின் உடைகளை அணிந்துகொண்டு பணியிடம், பொது இடங்களுக்குச் சென்று வர வேண்டும். இதன் மூலம் குறிப்பிட்ட அந்த நபருக்கு சமூகம் தன்னை எப்படி அணுகும் என்ற தெளிவு ஏற்படும். இவற்றுக்குப் பிறகும் அவர் தன் முடிவில் திடமாக இருந்தார் என்றால் அவருக்கு பிளாஸ்டிக் சர்ஜன் மூலம் அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்படும்” என்கிறார் காமராஜ்.

 கிரேஸ் பானு
கிரேஸ் பானு

குடும்பம், அரசு, சமூகம்...தீண்டாமையால் தத்தளிக்கும் திருநர்கள்!

திருநருக்கான சட்டம் மற்றும் உரிமை சார்ந்த போராட்டங்கள் பற்றி விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த திருநங்கையும் செயற்பாட்டாளருமான கிரேஸ் பானு…

``LGBTQ உரிமைகள் தொடர்பாக நெடுங்காலமாகப் போராடி வருகிறோம். 377 சட்டப்பிரிவு எங்கள் உரிமைக்கு எதிரானதாக இருந்தது. இப்பிரிவு தன் பாலின ஈர்ப்பை கிரிமினல் குற்றம் எனக் கூறியதால், எல்லா தரப்பினரையும் கடுமையாக பாதித்தது. அதுவும் கிராமப்புறங்களில் தங்கள் விருப்பம் சார்ந்த உறவில் இருந்தால், காவல் துறையினரே அவர்கள் மீது 377 சட்டப்பிரிவில் வழக்கு பதிவு செய்து கடுமையான தொல்லைகளைத் தந்துள்ளனர். 2006-ம் ஆண்டு சென்னை வியாசர்பாடி காவல் நிலையத்தில் வைத்து அங்கிருந்த போலீஸார், பாண்டியம்மாளுக்கு பாலியல் சித்ரவதை செய்ததை அடுத்து, அவர் 2007-ம் ஆண்டு காவல் நிலையம் முன்பு தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக பாண்டியம்மாளின் சகோதரி ஜெயலஷ்மி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின் முடிவில் காவல் துறையினர் விசாரணை என்ற பெயரில் வன்முறையை நடத்தியதாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதோடு, பாண்டியம்மாளின் இழப்புக்கு, நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இத்தீர்ப்பை வழங்கியவர் ஒரு பெண் நீதிபதி என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

L:பெண்+பெண்; G:ஆண்+ஆண்; B:ஆண்/பெண்+ஆண்/பெண்; T:திருநர்; Q:சமூகம் - அறிவோம், தெளிவோம், வாழ்வோம்...
arsenisspyros

இந்தத் தீர்ப்புக்குப் பிறகே, திருநங்கைகளுக்கான நல வாரியம் ‘அலிகள் நல வாரியம்’ என்கிற பெயரில் தொடங்கப்பட்டது. பின்னர் அது ‘அரவாணிகள் நல வாரியம்’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்திய கூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட திருநங்கைகள் சிலர், தங்களுக்கு நல வாரியம் மூலம், அடையாள அட்டை வழங்குவதில் தொடங்கி பல்வேறு சிக்கல்கள் இருப்பதை எடுத்துரைத்து, தங்களுக்கு உதவ கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, தற்போதைய விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், கனிமொழி அவர்களிடம் இந்த மனுக்களை அளித்தார். இது அப்போதைய முதல்வராக இருந்த கருணாநிதி அவர்களின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்ட பிறகே, நாகரிகமான சொல்லாடலில் ‘திருநங்கைகள் நல வாரியம்’ என்று மாற்றப்பட்டது. இதன் மூலம் பல்வேறு சலுகைகள் திருநங்கைகளுக்குக் கிடைத்தன. 2014-ம் ஆண்டு தேசிய சட்ட சேவைகள் அமைப்பால் தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் 132 பக்க தீர்ப்பை வழங்கியது. அதில் திருநங்கைகளை சக மனிதர்களாக மதிக்க வேண்டும்,

6 மாத காலத்துக்குள் அனைத்து மாநில அரசுகளும் திருநங்கைகளுக்கான பாதுகாப்பு வாரியம் அமைக்க வேண்டும், அவர்களுக்கான வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.

L:பெண்+பெண்; G:ஆண்+ஆண்; B:ஆண்/பெண்+ஆண்/பெண்; T:திருநர்; Q:சமூகம் - அறிவோம், தெளிவோம், வாழ்வோம்...
TarikVision

2011-ம் ஆண்டு இரு திருநங்கைகள் தமிழ்நாடு அரசுத் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வில் கலந்துகொள்ள விண்ணப்பித்தபோது, தேர்வெழுத மறுக்கப்பட்டனர். இதுதொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கேள்வி எழுப்பியதில் திருநங்கைகளுக்கு அரசுப் பணிக்கான தேர்வெழுதும் உரிமை இல்லை என்றும், அதேபோல், பொறியியல் மற்றும் மருத்துவம் படிக்கவும் உரிமை இல்லை என அதில் தெரிவிக்கப் பட்டது. இதைத் தொடர்ந்து 2012-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தை திருநர் உரிமை கூட்டமைப்பு சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்தை நடத்தியதைத் தொடர்ந்து, இது தேசிய அளவில் விவாதப்பொருளாக மாறியது. 2013-ம் ஆண்டு சட்டமன்றக் கூட்டத்தொடரின் போது பலர் திருநங்கைகளுக்குச் செய்யப்பட்டுள்ள உதவிகள் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அரசு தரப்பில் தமிழகத்தில் மொத்தமாக 2,344 திருநங்கைகள் மட்டுமே இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப் பட்ட வழக்கில், திருநங்கைகளை அரசு வேலைவாய்ப்புக் கான தேர்வெழுத அனுமதிக்க வேண்டும் எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்தே உச்ச நீதிமன்றத்திலும் இதே தீர்ப்பு வெளியானது. இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்தே தமிழகத்தில் ஸ்வப்னா என்ற திருநங்கை இந்தியாவிலேயே முதல் முறையாக அரசுப் பணித் தேர்வில் வெற்றி பெற்று அரசுப் பணியாளராக இணைந்தார். அவர் தற்போது வணிக வரித்துறையில் உதவி ஆணையராகப் பணியாற்றி வருகிறார். மேலும், திருநர் உரிமை கூட்டமைப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் திருநங்கைகளுக்கு எனத் தனியாக இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து வழக்கு தொடர்ந்தது. இந்தியாவிலேயே திருநங்கைகளுக்கான உரிமைகள் தொடர்பாக தமிழகத்தில் தான் அதிக அளவு சட்டப் போராட்டங்கள் நடத்தப்பட்டு, உரிய தீர்ப்புகள் பெறப்பட்டுள்ளன.

2014-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் திருநர்களுக்கான இட ஒதுக்கீடு தொடர்பாக சில கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.

L:பெண்+பெண்; G:ஆண்+ஆண்; B:ஆண்/பெண்+ஆண்/பெண்; T:திருநர்; Q:சமூகம் - அறிவோம், தெளிவோம், வாழ்வோம்...
SoumenNath

பொதுவாக சமூக, கல்வி, பொருளாதாரத்தின் அடிப்படையில் பின்தங்கியவர்கள் என்ற அடிப்படை யிலும் திருநர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுதொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, திருநர்களுக்கான தனி நபர் தீர்மானம் ஒன்றை மாநிலங்களவையில் கொண்டு வந்தார். திருநர்களுக்கான இட ஒதுக்கீடு 2 சதவிகித மாகக் கொண்டு வர வேண்டும், பெண்களுக்கான ஆணையம் இருப்பது போன்று, திருநர்களுக்கான ஆணையம் அமைக்க வேண்டும், அவர்களுக்கு எதிரான வன்முறைக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும், இலவச மருத்துவ சிகிச்சைக்கு வழி செய்ய வேண்டும் எனப் பல்வேறு அம்சங்கள் அந்தத் தனி நபர் தீர்மானத்தில் இடம்பெற்றிருந்தன. அந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

2016-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் திருநர்களுக்கான இட ஒதுக்கீடு தொடர்பாக 6 மாதங் களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதே ஆண்டு பா.ஜ.க அரசு மாற்று பாலினத்தோர் பாதுகாப்பு உரிமை மசோதாவைக் கொண்டு வந்தது. திருச்சி சிவாவின் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், நாடாளுமன்றத்தில் அத்தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில் தோல்வியடைந்தது. இதையடுத்து, பா.ஜ.க, திருநர்களுக்கான மசோதாவைத் தாக்கல் செய்தது. அதில் குறிப்பிடப்பட்டிருந்த அம்சங்கள் திருநர் என்றால் பாதி ஆணாகவோ, பாதி பெண்ணாகவோ இருக்க வேண்டும். முழுமையான ஆணாகவோ, முழுமையான பெண்ணாகவோ இருக்கக் கூடாது என்று கொண்டு வந்தனர். இம்மசோதாவை அரசு அர்த்த நாரீஸ்வரரை முன் மாதிரியாக வைத்துக்கொண்டு வந்தது. இது திருநர்களுக்கு எதிராக இருப்பதாகக் கூறி இந்த வரைவு மசோதாவுக்கு தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பு எழுந்தது. இதைத் தொடர்ந்து, இந்த மசோதா விவாதத்தில் இருக்கும்போதே, அரசு இதை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பியது. இதையடுத்து, இந்தச் சட்டம் குறித்து விவாதிக்க நாடாளுமன்ற நிலைக்குழு தமிழகத்தில் இருந்து பலருக்கும் அழைப்பு விடுத்தது. அதன் பிறகு, இந்தியா முழுவதும் இருக்கும் திருநர்களை ஒன்றுதிரட்டி, ஜந்தர்மந்தரில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, நாடாளுமன்ற நிலைக்குழு தனது பரிந்துரையை அளித்தது. அதேபோல், 18 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பரிந்துரை அளித்தனர். ஆனால், இந்தப் பரிந்துரையில் சில அம்சங்களை மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள முடியும் என்று மத்திய அரசு கூறியது.

L:பெண்+பெண்; G:ஆண்+ஆண்; B:ஆண்/பெண்+ஆண்/பெண்; T:திருநர்; Q:சமூகம் - அறிவோம், தெளிவோம், வாழ்வோம்...
SoumenNath

பல்வேறு கோரிக்கைகள் வைத்த பின்னரும், அரசு தனது கருத்தில் உறுதியாக இருந்து அந்த மசோதாவை நிறைவேற்றி சட்டமாகக் கொண்டு வந்தது. அதுதான் தற்போது நடைமுறையில் உள்ள மாற்றுப்பாலினத்தோர் பாதுகாப்பு உரிமை சட்டம் 2019. 2016 முதல் 2019 வரை இந்த மசோதாவில் மாற்றம் செய்யக்கோரி நாடாளுமன்றக் கூட்டத்தொடரின்போது டெல்லி சென்று திருநர் உரிமை கூட்டமைப்பு சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில்தான் இப்போதுள்ள சட்டமும் கொண்டு வரப்பட்டது. திருநர் என்று பொதுவெளியில் அடையாளப்படுத்திக் கொள்ளலாம் என்பது இச்சட்டத்தின் முக்கிய அம்சம். ஆனால், திருநர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் அதிகாரம் மாவட்ட நீதிபதியிடம் தரப்பட்டது. அதுவே, 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளாக இருந்தால் அவர்களின் பெற்றோர் நேரில் சென்று அடையாள அட்டை வாங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்திய அரசியலமைப்பின் அடிப்படையில் ஒவ்வொரு தனி நபரும் தங்களுடைய பாலினம் எது என்பதை உறுதி செய்யும் அதிகாரம் அவருக்கே உள்ளது. ஒரு தனிநபர் மட்டுமே உறுதி செய்ய முடியும் எனும்போது, ஒருவர் தன்னை திருநர் என அடையாளப் படுத்திக்கொள்ளும்போது அவருக்கான அடையாள அட்டையை அரசு வழங்கித்தான் ஆக வேண்டும். ஏனெனில், அவ்வளவு எளிதாக யாரும் தாமாக முன் வந்து தங்களைத் திருநர் என்று அடையாளப்படுத்திக் கொள்ள மாட்டார்கள். அதைக்கடந்து யாரும் அவர்களை அடையாளப்படுத்த முடியாது. இந்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டம், திருநர்களின் பாதுகாப்பை சிறிய அளவு உறுதி செய்கிறது. ஆனால், அது முழுமையான தாக இல்லை. கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் திருநர்களை விலக்கக் கூடாது என்று அரசு கூறியுள்ளது. அதை வரவேற்கிறோம். ஆனால், இட ஒதுக்கீடு பற்றி மத்திய அரசு எதுவுமே இந்தச் சட்டத்தில் குறிப்பிடவில்லை. திருநர்களுக்கான இட ஒதுக்கீடு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் போது அப்போதைய அ.தி.மு.க அரசு திருநர்களை மிகவும் பிறப்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கிறோம் எனக்கூறி அதில் இணைத்தது.

L:பெண்+பெண்; G:ஆண்+ஆண்; B:ஆண்/பெண்+ஆண்/பெண்; T:திருநர்; Q:சமூகம் - அறிவோம், தெளிவோம், வாழ்வோம்...
SoumenNath

அரசின் இந்த அலட்சியப் போக்கால் பல திருநர்களின் வாய்ப்புகள் பறிக்கப்படுகின்றன. சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில், கர்நாடக மாநிலத்தில் திருநர்களுக்கு 2 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இதிலும் உள்ள சிக்கல் சமூக அடிப்படையிலான இட ஒதுக்கீடு எங்களுக்குக் கிடைப்பதில்லை. அதனால், பாலினம் மற்றும் சமூகத்தின் அடிப்படையிலான இட ஒதுக்கீடு வழங்கும்போது மட்டுமே திருநர்களால் அதன் பலனைப் பெற முடியும்.

அதேபோல், திருநர்களுக்கு வேலைவாய்ப்பில் வயது தளர்வு அளிக்க வேண்டும். ஏனெனில், உடலியல் மாற்றங்கள் கடந்து வர குறிப்பிட்ட காலம் தேவைப்படும் நிலையில், வயது தளர்வு அளிக்கப்பட வேண்டும். சமூகம் தற்போது திருநர்களை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறது. ஆனால், அதே சமூகம் திருநர்களுக்கான உரிமைகள் எனும் போது சிலரைத் தவிர பெரும்பாலானோர் ஆதரவு தருவதில்லை.

இந்தியா சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் கடந்த பின்னரும் திருநர்கள் பாலியல் தொழிலையும், பிச்சையெடுப்பதையும் செய்துகொண்டுள்ளனர். சமூகத்தில் கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட இடங் களில் அனைவருக்கும் சமமான இடத்தில் திருநர்கள் அமர நினைத்தால், அந்த இடத்தை அளிக்க சமூகம் தயாராக இல்லை. பொதுவெளியில் திருநர்களுக்கு எதிராக வன்முறை நடக்கும்போது யாரும் தட்டிக்கேட்பது இல்லை. ஆண்டுதோறும் திருநர்கள் கொலை செய்யப்படுவதும், மர்மமான முறையில் இறந்து போவதும் அதிகரித்து வருகிறது. இந்த இறப்புகளைத் தடுக்க வேண்டும்.

ஆண்டுதோறும் நவம்பர் 20-ம் தேதி அகில உலக அளவில் கொலை செய்யப்பட்ட, தற்கொலை செய்து கொண்ட, இறந்த திருநர்கள் நினைவுகூரப்படும் நாள். அந்நாளில், ஒவ்வொரு வருடமும் இறந்து போகும் திருநர்களின் பட்டியலை எடுத்துப்பார்த்தால், எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது.

சீருடைப் பணியில் வயது தளர்வு வழங்க உத்தரவிட்ட உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தற்போதைய தி.மு.க அரசு மேல் முறையீடு செய்துள்ளது. 2019-ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் கோயில் பூசாரியாக இருந்த திருநங்கை பட்டப்பகலில் தலையை வெட்டிக் கொல்லப்பட்டார். 2021-ல் கோவையில் ஹோட்டல் நடத்தி வந்த சங்கீதா என்ற வயதான திருநங்கை கழுத்தறுத்து கொல்லப்பட்டு டிரம்மில் அடைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

இந்தக் குற்றங்களைச் செய்த அத்தனை குற்றவாளிகளும் சமூகத்தில் சுதந்திரமாக உலவிக்கொண்டுள்ளனர். கடந்த ஆண்டு சேலம் மாவட்டத்தில் திருநங்கையாக மாறியதால் பெற்ற தாயே 19 வயது திருநங்கையை ஆள் வைத்து அடித்துக் கொலை செய்த சம்பவம் நடைபெற்றது.

திருநர்களுக்கான சமூக ஏற்பு இருக்கிறதா என்பதே இங்கு இரண்டாம்பட்சம்தான். ஏனெனில், ஒரு திருநர் குடும்ப தீண்டாமை, அரசு தீண்டாமை, சமூக தீண்டாமை என மூன்று விதமான தீண்டாமைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

சமூகத்தில் பாலியல் குற்றங்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், சாதிய வன்கொடுமைகள் என நடைபெறும் அத்தனை குற்றங்களுக்கு எதிராகவும் திருநர்கள் திரண்டு வந்து போராடுகின்றனர். ஆனால், திருநர்களுக்கு எதிரான வன்முறைக்கும் வன்கொடுமைகளுக்கும் எதிராக பொது சமூகம் குரல் கொடுப்பதில்லை” என்கிறார் கிரேஸ் பானு.

 அழகு ஜெகன்
அழகு ஜெகன்

தன்பால் ஈர்ப்பாளர்கள் தவறானவர்களா..?

தன்பால் ஈர்ப்பாளர்கள் குறித்தும் அவர்கள் எதிர்கொள்ளும் சமூக சவால்கள் குறித்தும் கூறுகிறார் சென்னையைச் சேர்ந்த தன் பாலீர்ப்பாளரும், செயற்பாட்டாளருமான அழகு ஜெகன்…

``நம் சமூகம் இன்று வரையிலும் தன்பால் ஈர்ப்பாளர்களை தவறானவர்களாகவே சித்திரிக்கிறது. அவர்களைத் தவறான கண்ணோட்டத்துடனேயே அணுகுகிறது. அதிலும், தன்பால் ஈர்ப்பாளர்கள் வெளிநாடுகளில் இருந்து இந்தக் கருத்தாக்கங் களை இறக்குமதி செய்து இங்கு பரப்பி வருவதாகவும், ஃபேஷனுக்காகச் செய்கின்றனர் என்றும் நினைக்கின்றனர். என்னைப் பற்றிய புரிந்துணர்வு வரும்வரை நானும் அப்படித் தான் நினைத்திருந்தேன். எப்படி ஓர் ஆணும் பெண்ணும் இப்படித்தான் காதலிக்க வேண்டும் என்று சமூகம் சொல்லிக்கொடுக்காமலேயே காதல் வருகிறதோ, அதேபோல்தான் தன்பாலினத்தவர்களிடையேயான காதலும் என்பதை சமூகம் புரிந்து கொள்ள வேண்டும்.

பாலின சிறுபான்மையினராக உள்ள தன்பால் ஈர்ப்பாளர்களுக்கு மிகவும் அவசியமானது சமூக பாதுகாப்புதான். ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 2 சதவிகிதத்தினர் மட்டுமே கொண்ட இந்த LGBTQ சமூகத்தினர் அதிக அளவில் தற்கொலை செய்துகொள்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒட்டுமொத்த தற்கொலை எண்ணிக்கை யில் மூன்றில், ஒருவர் என்ற அடிப்படையில் இந்தத் தற்கொலைகள் நடைபெறுகின்றன. திருநர்களுக்கு என்று இங்கொரு சமூகக்குழு இயங்குகிறது. தன்பாலின ஈர்ப்பாளர்கள், இருபாலின ஈர்ப்பாளர் களுக்கு தங்கள் ஈர்ப்பின் மீது சந்தேகம் இருந்துகொண்டே இருக்கும், தாங்கள் செய்வது சரியா, தவறா என்கிற எண்ணம் எப்போதும் இருக்கும், அடுத்ததாக, குடும்பம், நண்பர்கள் வட்டம் என எங்கும் ஒரு முகத்திரையுடனே வாழ வேண்டிய சூழல் காரணமாக அதிகமான மன அழுத்தம் ஏற்படும். இதனால் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் வரும். இப்படியானவர்களுக்கு உதவும் நோக்கில் `செவிகள்' என்ற அமைப்பை நாங்கள் நடத்தி வருகிறோம். இப்படிப்பட்டவர்கள் பெரும்பாலும் திருமண பந்தத்துக்குள் நுழைய ஒரு குடும்பம் நிர்ப்பந்திப்பதாலும், சமூகத்தை எதிர்கொள்ளும் அச்சத்தாலுமே தற்கொலைகள் நடக்கின்றன. ஒருவர் தன் பாலின அடையாளத்தை தன் பதின்பருவத்திலேயே உணர்ந்து விடுவார் எனும்போது அவருக்குத் தேவையான வழிகாட்டுதல் இருந்தால், தேவையற்ற தற்கொலைகளைத் தடுக்க முடியும். இது குறித்து அரசு விழிப்புணர்வை ஏற்படுத்த முன் வர வேண்டும். சமூகமும் இதை அங்கீகரிக்க வேண்டும்.

L:பெண்+பெண்; G:ஆண்+ஆண்; B:ஆண்/பெண்+ஆண்/பெண்; T:திருநர்; Q:சமூகம் - அறிவோம், தெளிவோம், வாழ்வோம்...
Pollyana Ventura

தன்பாலின திருமணம், விவாகரத்து உள்ளிட்டவற்றை சட்டப்படி அங்கீகரிக்க அரசு முன்வர வேண்டும். அப்போது மட்டுமே தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு கிடைக்கும். திருமணம் அங்கீகரிக்கப்பட்டாலே குழந்தைத் தத்தெடுப்பு, வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது எல்லாமே நடந்துவிடும்” என்கிறார் அழகு ஜெகன்.

 கரசூர் பத்மபாரதி
கரசூர் பத்மபாரதி

சடங்குகள், சம்பிரதாயங்கள், சவால்கள், சங்கடங்கள்...

‘திருநங்கைகள் சமூக வரைவியல்’ எனும் நூலில் திருநங்கைகளின் சடங்குகள், மொழி, வாழ்வியல் என அனைத்தையும் துல்லியமாகப் பதிவு செய்திருக்கும் புதுவையைச் சேர்ந்த ஆய்வாளர் கரசூர் பத்மபாரதி…

``திருநங்கைகளாகத் தங்களை உணர்தலில் இரண்டு வகை உண்டு. ஒன்று உடலியல் மாற்றம், இரண்டாவது மனதளவில் ஏற்படும் மாற்றம். உடலியல் மாற்றங்களில் பல்வேறு வகைகள் உண்டு. உதாரணத்துக்கு, இரு பாலின குறிகளுடன் பிறப்ப வர்கள், ஆணாகப் பிறந்து ஆண் தன்மையற்று இருப்பவர்கள் என நிறைய வகைகள் உண்டு. இவர்களின் உடலியல் பிரச்னைகள் அனைத்தும் கருவிலேயே உருவானவைதான். அதனால், அறிவியல்பூர்வமான ஆதாரம் இல்லை என்று சொல்வதை ஏற்கவே முடியாது. திருநங்கைகளைக் குறிக்கும் அலி என்ற சொல் தொல்காப்பியம், திருமந்திரம் உள்ளிட்ட சங்க இலக்கியங்களில் இருந்தே குறிப்பிடப்படும் வார்த்தை. அலி என்பது அந்தப்புரக் காவலர்கள், வாயிற் காவலர்கள் என்ற அர்த்தத்தில் முதலில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அரவாணி என்ற சொல் அலிக்கு மாற்றான சொல்லாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இதற்குப் பின்புலமாக கூத்தாண்டவர் கோயிலில் நடைபெறும் திருவிழாவைக் குறிப்பிடலாம். அரவாணின் மனைவியாகத் தங்களை இவர்கள் கருதிக் கொள்வதால், அந்தப் பெயர் இவர்களுக்கு வழங்கப்படுகிறது.

L:பெண்+பெண்; G:ஆண்+ஆண்; B:ஆண்/பெண்+ஆண்/பெண்; T:திருநர்; Q:சமூகம் - அறிவோம், தெளிவோம், வாழ்வோம்...
Biswaranjan Rout

2000-ம் ஆண்டுக்குப் பிறகு திமுக ஆட்சிக்காலத்தில் கருணாநிதி அவர்கள் அரவாணி, அலி என்ற வார்த்தைக்கு மாற்றாக திருநங்கை என்ற பெயரை கொண்டு வந்தார். மாற்று மொழிகளில் ஹிஜிரா, கின்னர் என்ற வார்த்தைகள் உண்டு. இன்று பெரும்பான்மையானவர்கள் திருநங்கை என்று அழைப்பதையே விரும்புகின்றனர்.

இவர்கள் பயன்படுத்தும் மொழியின் பெயர் `கவடி' என்று கூறப்படுகிறது. கவடி என்றால் ரகசிய மொழி என அர்த்தம். இம்மொழியில் உள்ள வார்த்தைகள் அனைத்தும் புரியாத குறியீட்டுத்தன்மை கொண்டதாக இருக்கின்றன. திருநங்கையர் சமூகத்திற்குள் நுழையும் புதியவர்களுக்கு 3 மாத காலம் இந்த மொழி பயிற்றுவிக்கப்படுகிறது. இவர்களின் சமூக அமைப்பு 7 படிநிலைகளைக் கொண்டதாக உள்ளது. முதல் நிலை `தாத குரு' என்று அழைக்கப்படுகிறது, இது பாட்டியின் தாயைக் குறிக்கிறது. `நான குரு' என்ற சொல் பாட்டியையும், `குரு' என்ற சொல் தாயையும், `சேலா' என்ற சொல் மகளையும் குறிக்கிறது. நாத்தி சேலா - பேத்தி, சந்தி சேலா - பேத்தியின் மகள், சடக்கை - கொள்ளுப் பேத்தியின் மகள். இந்தப் படிநிலைகளுக்குள்தான் இவர்களின் உறவுமுறை அமைந்துள்ளது.

இவர்கள் குழுவுக்குள் புதிதாக வரும் திருநங்கைகளை தத்தெடுக்க ஆறு முறைகளை வைத்திருக்கின்றனர். இதில் தத்தெடுக்கப்படுபவர்கள் தனக்கு மேல் உள்ள தாய், குரு உள்ளிட்டவர்களுக்கு கட்டுப்பட்டவர்களாக இருக்கின்றனர். திருநங்கைகள் எப்படித் தத்தெடுக்கப்படுகிறார்களோ அதேபோல், உறவை முறித்துக்கொள்ளவும் அனுமதி உண்டு. இவர்களிடையே இருக்கும் பஞ்சாயத்து அமைப்பின் முன் வெற்றிலையை இரண்டாகக் கிழித்து போடலாம் அல்லது துடைப்பங்குச்சி ஒன்றை இரண்டாக உடைத்துப் போட வேண்டும். இதை `ரிது' என்று அழைக்கின்றனர். இவர்கள் தங்கள் மூத்தோருக்கு மிகுந்த மரியாதை அளிக்கின்றனர். பாம்படுத்தியம்மா என்று முதியவர்களுக்கு மரியாதை செலுத்துகின்றனர். வணக்கம் வைத்து மரியாதை செலுத்தும் சிறியவர்களை `ஜியோ, ஜியோ' என கூறி அவர்கள் வாழ்த்துகின்றனர். இதே வார்த்தைகளை, இவர்கள் தவறு செய்த போது மன்னிப்பு கேட்கவும், மன்னிக்கவும் பயன்படுத்துகின்றனர்.

L:பெண்+பெண்; G:ஆண்+ஆண்; B:ஆண்/பெண்+ஆண்/பெண்; T:திருநர்; Q:சமூகம் - அறிவோம், தெளிவோம், வாழ்வோம்...
ajijchan

இந்தியாவில் வடமாநிலங்களில் இவர்களது பொருளா தாரம் மிகவும் நல்ல நிலையில் இருக்கும் சூழலில், தென் னிந்தியாவைப் பொறுத்தவரை கடுமையான வறுமையில் வாடுகின்றனர். இதற்கான காரணங்களாக திருநங்கைகள் கூறுவது, வடநாட்டில் தங்களை கடவுளுக்கு நிகராக வைத்து மதிப்பதாகவும், குழந்தைப் பிறப்பு, குழந்தைக்குப் பெயர் வைத்தல், பெண்கள் வயதுக்கு வந்ததும் செய்யும் சடங்குகள், கடைத்திறப்பு, புதிய வீடு கட்டுதல், திருமணம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிகழ்வுகளில் வாழ்த்த இவர்களை பலரும் அழைக்கின்றனர். இவை மட்டுமன்றி உணவகம், அழகு நிலையம் நடத்துதல் என பல்வேறு தொழில்களையும் செய்கின்றனர். தென் னிந்தியாவைப் பொறுத்தவரை கடைகளுக்குச் சென்று கை தட்டி பணம் பெறுதல், பிச்சை எடுத்தல் மற்றும் பாலியல் தொழில் மூலம் மட்டுமே வருமானம் பெறும் நிலையில் கணிசமான திருநங்கைகள் உள்ளனர். இவை தவிர்த்து கோயில் திருவிழாக்களின் போது நாடகங்களில் நடிக்கிறார்கள், இறப்பு உள்ளிட்ட துக்க நிகழ்வுகளில் ஒப்பாரி பாடுகிறார்கள், மதுபானக்கூடங்களில் கீழ்நிலை பணிகளைச் செய் கிறார்கள். அதேபோல், எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு பல்வேறு தொண்டு நிறுவனங்கள் இவர்களை அழைத்துச் செல்கின்றனர். ஆண்கள் செய்யும் உடல் உழைப்புக்கு இவர்கள் தயாராக இருப்பதில்லை. அதேநேரம் பெண்கள் செய்யும் வீட்டு வேலைகளை மிகவும் விரும்பிச் செய்ய முன்வருகின்றனர்.

இன்றைக்கு பாலினமாற்று அறுவைசிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. முன்பு மருத்துவ உதவியின்றியே குறி அகற்றம் செய்தனர். திருநங்கையாக மாறுவதற்கான சடங்குகள் அனைத்துமே ஒரு வழிபாடாகவே செய்யப் படுகின்றன. `மூர்க்கிவாலி மாதா' என்று அழைக்கப்படும் சந்தோஷி மாதாவை இவர்கள் தங்கள் இஷ்ட தெய்வமாக பாவிக்கின்றனர். சேவல் மீது அமர்ந்துள்ள பெண் தெய்வமான இந்த சந்தோஷி மாதா, குஜராத் மாநிலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற தெய்வமாக இருப்பது குறிப்பிடத் தக்கது. திருநங்கையாக மாற விரும்பும் ஆணின் பால் உறுப்பு நீக்கம் செய்யும் சடங்கை அவர்கள் நிர்வாண பூஜை என்று அழைக்கின்றனர். இந்த பூஜையில் சந்தோஷி மாதாவின் படத்தின் முன் வைத்தே அனைத்து சடங்கு களையும் செய்கின்றனர். இரவு 12 மணிக்கு நடத்தப்படும் இந்தச் சடங்கை தாயம்மா என்றழைக்கப்படும் வயது முதிர்ந்த திருநங்கைகளே செய்கின்றனர்.

L:பெண்+பெண்; G:ஆண்+ஆண்; B:ஆண்/பெண்+ஆண்/பெண்; T:திருநர்; Q:சமூகம் - அறிவோம், தெளிவோம், வாழ்வோம்...
Circle Creative Studio

இந்தச் சடங்குக்குத் தேவைப்படும் பணத்தைக் குறிப்பிட்ட அந்த ஆணே சம்பாதிக்க வேண்டும், தேவையான அளவு பணம் சேர்ந்த பிறகு, திருநங்கையாக மாற விரும்பும் நபரின் மீது தெய்வம் இறங்கி, ஆணாக இருக்கும் தன்னை பெண்ணாக மாற்ற வேண்டும் என்று கூறுவார்கள். அதன் பிறகு கடவுளின் முன் விபூதி, குங்குமப் பொட்டலத்தைக் குலுக்கிப்போட்டு அதில் குங்குமம் வந்தால் குறிப்பிட்ட அந்த ஆண்டே சித்திரை பெளர்ணமி தினத்தன்று அந்தச் சடங்கைச் செய்வது என்றும், விபூதி வந்தால் கடவுள் அனுமதி அளிக்கவில்லை எனக் கூறி 10 ஆண்டுகள் வரை அந்தச் சடங்கைத் தள்ளிப்போடுகின்றனர்.

குறி அறுக்கும் சடங்கு தினத்தன்று திருநங்கையாக மாற விரும்பும் ஆணுக்கு இரண்டு வேளை உணவு கொடுக்கின்றனர். பின்னர் லுங்கி அணிவித்து, முடியை அவிழ்த்துவிட்டு, சடங்கு செய்துகொள்ளப்போகும் நபரின் கை கால்களை அங்குள்ளவர்கள் பிடித்துக்கொள்கிறனர். அந்தக் குழுவின் குருவாக உள்ளவர், அவர்களின் கடவுளின் பெயரைக் கூறிக்கொண்டு குறியை வெட்டி விடுவார். காலின் கீழே விபூதி, குங்குமம் வைத்துள்ள பானையில் அறுக்கப்பட்ட ஆண் உறுப்பு விழச்செய்கின்றனர். இந்தச் சடங்கின் மூலம் தங்களின் இஷ்ட தெய்வமான சந்தோஷி மாதாவுக்கு தனது ஆணுறுப்பையே ஒருவர் காணிக்கையாக செலுத்துவதாக ஐதீகம். இந்தச் சடங்கினால் உயிரே போகும் என்ற நிலையிலும் அவர்கள் தங்கள் கடவுளின் மீது கொண்ட பக்தியாலும், திருநங்கையாக முழுமையடையவும் இந்தச் சடங்கை செய்து வந்தனர். இந்த முறை முழுமையாக ஒழிக்கப்பட்டு, அவர்களது நாட்டாரியல் சடங்குகள், சம்பிரதாயங்கள் ஆவணப்படுத்தப்பட வேண்டும், சமூகத்தில் திருநங்கைகளுக்கு மரியாதை அளிக்கப்பட வேண்டும், அரசு அவர்களுக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கித்தர வேண்டும். முறையான வேலை வாய்ப்புகள் கிடைக்காத சூழலில், படித்த திருநங்கைகளும் தவறான தொழில்களில் ஈடுபடுகின்றனர். இவை எல்லாம் மாறும் போது திருநங்கைகளில் வாழ்வும் முன்னேறும்” என்கிறார் பத்மபாரதி.

 சுதா
சுதா

உறுப்பு நீக்கம் முதல் ஹார்மோன் சிகிச்சைகள் வரை... திருநங்கையர் வாரியத் தலைவர் சுதா

``தமிழகத்தில் 2007-ம் ஆண்டு திருநர்களுக்கான அறுவை சிகிச்சை அரசு மருத்துவமனை களில் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையிலும், மதுரை மற்றும் சேலம் அரசு மருத்துவமனைகளில் பாலின மாற்று அறுவைசிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக மருத்துவமனைகளில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக் கிழமை அன்று மருத்துவர்களைச் சந்தித்து ஆலோசனைகள் பெறலாம். இச்சிகிச்சைக்காக வருபவர்களுக்கு முதல்கட்டமாக கவுன்சலிங் வழங்கப்பட்டு, அவர்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்த பிறகே அறுவைசிகிச்சை செய்யப்படும். திருநங்கைகளுக்கான சிகிச்சையில் பால் உறுப்பு நீக்கம், செயற்கை மார்பகம் பொருத்துதல், முகத்தில் வளரும் ரோமங்களை நீக்க லேசர் சிகிச்சைகள் செய்யப்படுகின்றன. பெண் தன்மை அதிகரிக்க ஹார்மோன் சிகிச்சைகளும் அளிக்கப்படுகின்றன. திருநம்பியருக் கான அறுவைசிகிச்சை அரசு மருத்துவமனைகளில் இல்லை. மார்பக நீக்கம், கர்ப்பப்பை நீக்க அறுவைசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு, சிலிக்கான் ஆண் உறுப்பு பொருத்தப்படும். தமிழ்நாட்டில் தனியார் மருத்துவமனைகளில் இரு பாலின மாற்று அறுவைசிகிச்சைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக 2 லட்சம் முதல் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அரசு மருத்துவ மனைகளில் இந்தச் சிகிச்சை மேற்கொள்ள திருநங்கையர் நலவாரியத்தின் உறுப்பினர் அட்டை கட்டாயம்'' என்கிறார் சுதா.

L:பெண்+பெண்; G:ஆண்+ஆண்; B:ஆண்/பெண்+ஆண்/பெண்; T:திருநர்; Q:சமூகம் - அறிவோம், தெளிவோம், வாழ்வோம்...
D. Talukdar
L:பெண்+பெண்; G:ஆண்+ஆண்; B:ஆண்/பெண்+ஆண்/பெண்; T:திருநர்; Q:சமூகம் - அறிவோம், தெளிவோம், வாழ்வோம்...
anil_shakya19

பெற்றோரின் பொறுப்பு பெரியது! - மருத்துவர் மற்றும் செஸ் அமைப்பின் நிறுவன இயக்குநர் மனோரமா

 மனோரமா
மனோரமா

``ஆரோக்கியமான உடல் மற்றும் மனதுடன் குழந்தை பெற விரும்பும் ஆணும் பெண்ணும் சொந்தத்தில் திருமணம் செய்யக் கூடாது. ஒரு குழந்தை பிறந்தவுடன் வெளித்தோற்றத்தில் ஆணா, பெண்ணா என்பதை அறிவது போல், அதன் உள் உறுப்புகளையும் ஆராய வேண்டும். ஒருவேளை ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் அதற்கு ஏற்றாற்போன்ற சிகிச்சைகளை மேற்கொள்ளலாம். பெற்றோர்கள் குழந்தை வளர்ப்பில் கவனம்கொள்ள வேண்டும். குழந்தையின் நட்பு வட்டம், நடவடிக்கைகளைக் கண்காணிக்க வேண்டும். தங்கள் குழந்தையிடம் காணப்படும் மாற்றம் இயற்கையானதா அல்லது தூண்டுதலின் பேரில் ஏற்பட்டதா என்பதைக் கண்டறிந்து அதை நெறிப்படுத்த வேண்டும்.

L:பெண்+பெண்; G:ஆண்+ஆண்; B:ஆண்/பெண்+ஆண்/பெண்; T:திருநர்; Q:சமூகம் - அறிவோம், தெளிவோம், வாழ்வோம்...
L:பெண்+பெண்; G:ஆண்+ஆண்; B:ஆண்/பெண்+ஆண்/பெண்; T:திருநர்; Q:சமூகம் - அறிவோம், தெளிவோம், வாழ்வோம்...
nito100

பள்ளி, கல்லூரிகளில் ஒருவரின் நடவடிக்கைகளைக் கொண்டு சக மாணவர்களால் புண்படும்படியான செயல்கள் நடைபெறலாம். இதை ஆசிரியர்கள், கண்டறிந்து பேசி புரிய வைக்க வேண்டும். சக மாணவர்களின் கேலி, கிண்டல்கள் ஒருவரை தற்கொலை நோக்கிக்கூட செலுத்தும்

அபாயம் உள்ளது. அவர்களுக்கு மனநல மருத்துவர் அல்லது ஆலோசகரை அணுகி கவுன்சலிங் கொடுக்கலாம். இவற்றைக் கடந்தும் ஒருவர் தன்னை ஓரினச் சேர்க்கையாளராகவோ, திருநராகவோ உணர்ந்தால் அவருக்கு குடும்பம் உறுதுணையாக இருக்க வேண்டும்'' என்கிறார் மனோரமா.