
காதல் என்பது இயல்பான ஒன்று. ஆனால் தமிழ் சினிமாக்கள் காதலை மிகைப்படுத்திக் காட்டுவதால் இளவயதினரிடம் அதுகுறித்த தவறான பார்வை இருக்கிறது.
காதல் ஒருவரின் வாழ்க்கையை அழகாக்குகிறது, பக்குவப்படுத்துகிறது. பல சவால்களுக்கு மத்தியிலும் காதலர் நம்முடன் இருந்தால் மனதிற்குள் பட்டாம்பூச்சி பறக்கும். பேசாமலே காதல், ஆன்லைன் காதல், ஒருதலைக் காதல் என்று காதலின் வடிவம் ஒவ்வொரு காலகட்டத்திலும் மாற்றமடைந்திருக்கிறது. அவற்றில் ஒருதலைக்காதல் சிக்கல்கள் நிறைந்தது.
ஒருவர்மீது காதல் வந்த பிறகு காதலிப்பவரை எண்ணி எண்ணி உருகி, அவரைப் பின்தொடர்ந்து நாம் விரும்பும் நபரிடமிருந்து எந்தவித எதிர்வினையும் வராதபோது ஒரு கட்டத்தில் வெறுமையை ஏற்படுத்தும். அது, தன்னையே அழித்துக்கொள்ளும் அளவுக்கு விபரீத முடிவெடுக்கத் தூண்டும். சில நேரம், வன்முறையாக யோசிக்கவும் தூண்டும். இரண்டுமே ஆபத்தானவை.
ஒருதலைக்காதல் குறித்து இளம் பெண்களின் பார்வை எப்படியிருக்கிறது? மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி மாணவி புகழ்செல்வியிடம் பேசினோம்.

பெண்களால் காதலை வெளிப்படுத்த முடிகிறதா?
“காதல் என்பது இயல்பான ஒன்று. ஆனால் தமிழ் சினிமாக்கள் காதலை மிகைப்படுத்திக் காட்டுவதால் இளவயதினரிடம் அதுகுறித்த தவறான பார்வை இருக்கிறது. ஆணோ பெண்ணோ தன் காதலை வெளிப்படையாகச் சொல்லத் தயங்கும்போதுதான் ஒருதலைக்காதல் உருவாகிறது. ஒருதலைக்காதலில், தான் விரும்பும் நபருக்கு தன்னையோ, தன் இயல்பையோ பிடிக்கவில்லை என்றால் ஒருதலையாகக் காதலிக்கும் நபர் தன்னைத்தானே அல்லது பிறரை வருத்தும் முயற்சியில் ஈடுபடுகிறார். இதனால் வன்முறை தலைதூக்குகிறது. காதல் கைகூடவில்லை என்றால் வாழ்க்கையே முடிந்ததுபோல் இளவயதினர் உணர்வதற்கு முக்கிய காரணம் சினிமாக்களின் சித்திரிப்பே! ஒருதலைக்காதல் பற்றிப் பேசும்போது பெண்களால் காதலை வெளிப்படுத்த முடிகிறதா என்பதையும் சேர்த்துப் பேச வேண்டும். பல பெண்களுக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்படுவதால் பெண்களின் காதல் பெரும்பாலும் ஒருதலையாகவே இருக்கிறது” என்றார்.
ஆணுக்குத் தெளிவும் பக்குவமும் வேண்டும்!
“பொதுவாக ஓர் ஆண் ஒரு பெண்மீது காதல் கொண்டால், அந்தக் காதலை தீவிரமாக வெளிப்படுத்த நினைக்கிறான். அந்தப் பெண் அதை ஏற்க மறுத்தாலும், பருவவயது ஆர்வக்கோளாறு மற்றும் பக்குவமின்மையால் தூண்டப்பட்டு, அவளைப் பின்தொடர்கிறான். அவள் தனக்கு மட்டும் சொந்தம் என்று நினைக்கிறான். இது அந்தப் பெண்ணுக்குப் பாதுகாப்பற்ற மனநிலையை ஏற்படுத்துகிறது. ஓர் ஆணாக எனக்குள்ளும் இப்படிப்பட்ட எண்ணங்கள் இருந்திருக்கலாம். நான் சந்தித்த மனிதர்களாலும், அனுபவங்களாலும் நான் பக்குவமானேன். அந்தப் பக்குவமும் தெளிவும் ஒவ்வோர் ஆணுக்கும் கிடைக்க வேண்டும். அது கிடைத்தால், ஒருதலைக் காதல், அந்த ஆணையோ, பெண்ணையோ துன்புறுத்தாமல் இருக்கும்” என்கிறார் சென்னைப் பல்கலைக்கழக மாணவர் விக்னேஷ்.
ஒருதலைக் காதல் குறித்து சமூகச் செயற்பாட்டாளர் ஷாலினி மரிய லாரன்ஸ் என்ன சொல்கிறார்?

எது காதல் என்பதே இங்கு சிக்கல்...
“இந்திய சமூகத்தில் எது காதல் என்னும் வரையறையே சிக்கலாக இருக்கிறது. ஒருவரைப் பார்த்தாலே காதல், ஒரு பெண்ணின் கை ஓர் ஆணின் கையில் பட்டாலே காதல், ஒரு பெண் வெகுளித்தனமாக இருந்தால் காதல் என்று இந்தச் சமூகத்தின் காதல் கதைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். இங்கே சிலிர்ப்பும், சாதாரண ஈர்ப்புமே காதலாகப் புரிந்துகொள்ளப்படுகின்றன. ஒருதலைக் காதல் ஆணுக்கு ஒரு மாதிரியும் பெண்ணுக்கு ஒரு மாதிரியும் இருக்கிறது. பெண் தானாக முன்வந்து காதலை வெளிப்படுத்தினால் அவளைத் தவறாக நினைக்கும் சமூகம் இது. பெண்கள் தங்களுடன் பயணிக்கும் ஆண்களுடன் பேசவே பல குடும்பங்களில் கட்டுப்பாடு விதிக்கப்படும்போது காதலை வெளிப்படுத்த மட்டும் எளிதில் வாய்ப்பு கிடைத்துவிடுமா?
ஒருதலையாகக் காதலிக்கும் ஆண், பெண் எங்கு சென்றாலும் பின்தொடர்வது, அவளை அடைவதற்காகப் பல வகையில் முயல்வது போன்ற செயல்களில் ஈடுபடுகிறான். அது பெண்களின் கல்வி, வேலை போன்ற உரிமைகளை அவர்களின் குடும்பத்தார் பறிக்கக் காரணமாகின்றன. காதல் வந்தால் சம்பந்தப்பட்டவரிடம் உடனே சொல்வதும் அந்த நபரின் முடிவை மதிப்பதுமே ஆரோக்கியமானது’’ என்கிறார்.
“ஒருதலைக்காதல் என்பதும் காதல் தோல்வி என்பதும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே அளவிலான மன அழுத்தத்தையே ஏற்படுத்தும். ஆனால் வலியை ஆண்கள் கையாள்வதற்கும், பெண்கள் கையாள்வதற்கும் வித்தியாசம் உள்ளது’’ என ஆண், பெண் உளவியல் சார்ந்து பேசுகிறார் சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் மிதுன் பிரசாத்.

பெண்ணின் உணர்வை மதிக்க வேண்டும்
‘‘ஒருதலைக்காதல் கைகூடவில்லை என்றால் பெண்கள் தமக்குள்ளேயே அதைப் புதைத்து வைத்துப் புழுங்குகிறார்கள். குடும்பத்தினர் உட்பட யாருடனும் பேசாமல் இருப்பர். இதனை internalize behavior என்போம். ஆண்கள், காதல் தோல்வி ஏற்படும்போது அதை வெளிப்படுத்தத் தெரியாமல் பழிவாங்கும் செயல்களில் ஈடுபடுகின்றனர். இதற்கு சினிமாவும் முக்கிய காரணம். காதலை ஏற்க மறுத்த பெண்ணைப் பழிவாங்கும் எண்ணம் பெரும்பாலும் 20 வயதுக்குள்ளான ஆண்களுக்கே ஏற்படுகிறது. பக்குவமின்மையும், போதைப்பழக்கமும் இதற்கு முக்கியக் காரணங்கள். ஒருதலைக் காதல் தோல்வியால் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிக்கிறது. அதைத் தவிர்க்க வேண்டுமென்றால் இள வயது ஆண்களுக்கு சரியான வழிகாட்டுதலும், உளவியல் ஆலோசனையும் வழங்க வேண்டும். பெண்ணின் உணர்வை மதித்து ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையை ஆண் வளர்த்துக்கொள்ள வேண்டும். காதல் தோல்வி தந்த வலியை, வன்முறையில் வெளிப்படுத்தாமல், ஆக்கபூர்வமான செயல்களில் திசைதிருப்பக் கற்றுக்கொள்ள வேண்டும்” என்கிறார் மிதுன் பிரசாத்.
நீளும் கரங்களைப் பற்றிக்கொள்ள இன்னொரு கரம் மறுக்கும்போது, விலகத் தெரிந்திருக்க வேண்டும்.