லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

கன்ட்ரோல், ஆல்ட், டெலீட்... இது காதலா... இதுதான் காதலா..?

இது காதலா... இதுதான் காதலா..?
பிரீமியம் ஸ்டோரி
News
இது காதலா... இதுதான் காதலா..?

சமூக வலைதளங்கள் மக்களிடையே பிரபலமான பிறகு, சினிமாக்களில் ஒருதலைக் காதல் என்பது பெரிதாக இல்லாமலே போய் விட்டது. காதலுக்காகத் தற்கொலை செய்துகொள்ளும் காட்சிகளும் வெகுவாகக் குறைந்து விட்டன.

‘காதல்’... சொல்லும்போதே சிலிர்க்கவைக்கும் அழகான உணர்வு. அது நமக்குள் நிகழ்த்துகிற மேஜிக்கே தனி. அது, பலரை சாதிக்கவும் வைத்திருக்கிறது. சாகவும் வைத்திருக்கிறது. கற்காலம் தொடங்கி, இன்றைய செல்போன் யுகம் வரையிலும் காதல், காதல், காதல்தான். `காதலினால் மானுடர்க்குக் கலவியுண்டாம், கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும், காதலினால் மானுடர்க்குக் கவிதையுண்டாம், கானமுண்டாம், சிற்ப முதற் கலைகளுண்டாம், ஆதலினாற் காதல் செய்வீர், உலகத்தீரே' என்று பாடினார் மகாகவி. ஆனால், இந்தக் காதல் மனித குலத்தைப் படுத்தும் பாடு சொல்லி மாளாது.

சமீபத்தில் வெளியான ‘லவ் டுடே’ திரைப் படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. அதற்கு காரணம் இன்றைய காதலின் பிரச்னைகளை வெட்டவெளிச்சம் போட்டுக் காட்டியது தான். மனித உணர்வுகள் எல்லா காலத்திலும் ஒன்று தான் என்றாலும் உணர்வுகளை மனிதன் அணுகும் விதம், வாழ்க்கை முறை, புறச்சூழல் சார்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது என்பது தான் உண்மை.

இது காதலா... இதுதான் காதலா..?
இது காதலா... இதுதான் காதலா..?

உலகம் இதுவரை எத்தனையோ மாற்றங் களைக் கண்டுவிட்டது. காதல் மட்டும் விதி விலக்கா? காலம் மாறுகிற வேகத்திலேயே காதலுக்கான விதிகளும் மாறிக்கொண்டே இருக்கின்றன. 1996-ல் வெளிவந்த ‘பூவே உனக்காக’ திரைப்படத்தில் விஜய், ``ஒரு செடி யில ஒரு பூ பூக்கும். அந்தப் பூ உதிர்ந்துட்டா அவ்வளவுதான். மறுபடியும் அந்தப் பூவை ஒட்ட வைக்க முடியாது” என்பார். சமீபத்தில் வெளியான ‘வாரிசு’ திரைப்படத்தில் இதே டயலாக்கை யோகி பாபு சொல்ல, “அதெல் லாம் `கம்' போட்டு ஒட்டிக்கலாம்பா” என்பார் பதிலுக்கு விஜய். இன்று காதல் எந்தளவுக்கு மாறியிருக்கிறது என்பதற்கு ஓர் உதாரணம் இது.

சமூக வலைதளங்கள் மக்களிடையே பிரபலமான பிறகு, சினிமாக்களில் ஒருதலைக் காதல் என்பது பெரிதாக இல்லாமலே போய் விட்டது. காதலுக்காகத் தற்கொலை செய்துகொள்ளும் காட்சிகளும் வெகுவாகக் குறைந்து விட்டன. ஒரு காதல் இல்லை யென்றால் என்ன, இன்னொரு காதல் என்ற நிலைக்கு இன்றைய தலைமுறையும் பழக ஆரம்பித்து விட்டது. இது வரவேற்கத்தக்க மாற்றம்தான். ஆனால், இன்றைய தலைமுறை யினரின் காதல் இதையும் தாண்டி மோசமான நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்பதுதான் வேதனையான விஷயம்.

ஒரு காலத்தில் காதலை அதிகபட்சமாக ஒருதலைக் காதல், தோல்வி அடைந்த காதல், வெற்றி கண்ட காதல் என்று பிரிக்க முடிந்தது. இன்று... லிவ் இன், ஒன் நைட் ஸ்டாண்ட், ஃப்லிங், ஃபிரெண்ட்ஸ் வித் பெனஃபிட்ஸ், பெஸ்டி என ஒவ்வொரு நாளும் ஆண், பெண் இடையிலான உறவுகளுக்கு புதிது புதிதாகப் பெயர்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன.

ஒரு காலத்தில் காதலுக்கு பெற்றோர்கள் மட்டும்தான் எதிரியாக இருந்தார்கள். ஆனால் இன்று ஃபிரெண்ட், பெஸ்டி, சோஷியல் மீடியா ஃபிரெண்ட் என யார் யாரோ எதிரி களாகிவிட்டார்கள்.

காதலைச் சொல்லவே பல ஆண்டுகள் எடுத்துக்கொண்ட காலமெல்லாம் இங்கு உண்டு. கண்களாலும், கடிதங்களாலும் மட்டுமே பேசிக்கொண்ட காலங்கள் உண்டு. அப்போதெல்லாம் காதலிக்க கொஞ்சம் வாய்ப்பு கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருந்தார்கள். இன்று... 24 மணி நேரமும் நம்மால் தொடர்பில் இருக்க முடியும். அந்த அளவுக்கு தொழில்நுட்பம் வாய்ப்புகளை உருவாக்கி வைத்திருக்கிறது. ஆனால், நம்மிடம் பேசுவதற்கு என்ன இருக்கிறது? ஓர்ஆணும் பெண்ணும் பேச ஆரம்பித்தால் அடுத்த ஐந்தாவது நிமிடம் பேசுவதற்கு வேறு ஒன்று மிருக்காது. ‘சாப்டியா, ம்ம்ம்ம், என்ன பண்ற... மறுபடியும் சாப்டியா, ம்ம்ம்ம், என்ன பண்ற...' இப்படித்தான் பேசிக்கொண்டிருக்க வேண்டி யிருக்கிறது.

எப்போதும் தொடர்பிலேயே இருக்க முடிகிறது என்பதால் ஆண், பெண் நட்பு கூட சில நேரங்களில் சிக்கலுக்குள்ளாகி விடுகிறது. இருவருக்குள்ளும் இருப்பது நட்புதானா அல்லது நாம் விரும்புவது வேறு எதுவுமா என்ற குழப்பத்துக்குள் பெரும்பாலானோர் தள்ளப்படுகிறோம். பெரும்பாலானவர்கள் பேச்சை மெள்ள பாலியல் சார்ந்து திருப்பு வதும் நடக்கிறது. அது போன்ற பாலியல் சார்ந்து குறுஞ்செய்தி ஒன்றைப் பகிரும்போது, ‘என்ன இப்படி அனுப்பியிருக்கிறாய்’ என்று கேட்டால், வேறு ஒருவருக்கு அனுப்புவதற்குப் பதிலாக மாற்றி அனுப்பிவிட்டேன் என்று எளிதில் சமாளிக்கவும் செய்கிறார்கள். சிலர் ‘அப்படி என்ன தவறாக அனுப்பி விட்டேன். இல்லையென்றால் இல்லையென்று சொல்ல வேண்டியதுதானே’ என்று திமிராகப் பேசு வதும் உண்டு.

இப்படியான போக்கை, ‘உடல் வேண்டு மென்று நேரடியாகவே கேளுங்கள். ஏன் நட்பு, தோழி, சகோதரி என்றெல்லாம் பேசிவிட்டு இறுதியில் இப்படி ஒரு முகத்தைக் காட்டு கிறீர்கள்’ என்று விமர்சனம் செய்வதும் நடக்கிறது. அதனாலேயே யாருடனும் நம்பி நட்புறவைக் கூட தொடர முடியாத நிலை ஏற்பட்டு விடுகிறது. நீண்டகால நட்புறவே இன்றைய காலத்தில் சாத்தியமில்லாத ஒன்றாகவும் மாறிவிடுகிறது. ஏனெனில் நாம் நேரடியாகப் பேசும்போது என்ன பேசுகிறோம், எந்த நோக்கத்தில் பேசுகிறோம் என்பதை நம்முடைய பாவனைகளே சொல்லிவிடும். ஆனால், இன்றைய சமூக வலைதள காலத்தில் மறுபக்கம் இருப்பவர் அனுப்பும் குறுஞ் செய்திகளோ, போனில் பேசுவதோ உண்மை யில் என்னவாக இருக்கிறது என்பதையே உறுதிபடுத்த முடிவதில்லை.

முன்பெல்லாம் காதலிப்பதே கடினமாக இருந்தாலும், காதல் அதனளவில் உண்மையாக இருந்தது. காதலின் தாங்கும் திறனை பரிசோதிக்கக் கூடிய சாத்தியங்களும் மிகவும் குறைவு. அதனாலேயே காதல்கள் பெரும் பாலும் திருமணங்களில் முடிந்திருக்கின்றன. இன்று எது காதல், எது ஃபிரெண்ட்ஷிப், யார் என்ன நோக்கத்துடன் நம்மிடம் பேசுகிறார்கள் என்பதையே புரிந்துகொள்ள முடியாத குழப்பத்தில்தான் பெரும்பான்மை யானோர் இருக்கிறோம். அதுமட்டுமா... ஒரே நேரத்தில் எத்தனை பேரிடம் வேண்டுமானாலும் பேசலாம், ஆண் பெண்ணாக மாறலாம், பெண் ஆணாக மாறலாம். யாரிடமும் பேசி காதல் என்ற உணர்வை கொண்டுவந்துவிட முடியும். ஆனால், அவையெல்லாம் காதல் தானா?

முகம் தெரியாத ஒருவரிடம் அத்துமீறி பேசுவதில் உள்ள தயக்கத்தை, பயத்தை சமூக வலைதளங்கள் உடைத்துவிடுகின்றன. ஃபேக் ஐடிகள் கோழைகளை தைரியசாலிகளாக மாற்றிவிடுகின்றன. ஃபேக் ஐடியில் வந்து பேசி காதலன் காதலியின் விசுவாசத்தைச் சோதித் துப் பார்க்கும் செயல்களும் பெருகி விட்டன. இப்படி, காதல் என்ற உணர்வையே முழுக்க முழுக்க அர்த்தமற்ற ஒன்றாக இன்றைய சூழல் மாற்றிவைத்திருக்கிறது. இதனால் எல்லா வற்றையும் சந்தேகத்துடனும் பயத்துடனுமே அணுக வேண்டிய நிலைதான் சமூக வலைதள காதலும் நட்பும் நமக்குக் கொடுத்த அனுபவங் களாக இருக்கின்றன.

கன்ட்ரோல், ஆல்ட், டெலீட்... இது காதலா... இதுதான் காதலா..?

இந்தப் போலித்தனம் ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் ஒவ்வொரு நபரையுமே இந்தத் தொழில்நுட்ப யுகம் சிதைத்துவிட்டது என்றே சொல்லலாம். `எது உண்மையான காதல்? முதலில் இது காதல்தானா? காதல் ஒரு முறைதான் வருமா, ஒரு முறைதான் வர வேண்டுமா?' என்ற கேள்விகள் மட்டுமே இருந்த நிலை மாறி, `காதல் தேவைதானா?' என்ற நிலைக்கு வந்து விட்டது. ஆனால், காதலைக் கொண்டாடுவது போலவும், திருமண உறவைக் கொண்டாடுவது போலவும் சமூக வலைதளங்களில் போலியாகக் காட்டிக் கொள்கிறோம். சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆக வேண்டுமென்பதற்காகவே காதல், திருமணம் போன்ற காட்சிகளை அரங் கேற்றும் போக்கு இன்று பள்ளி மாணவ, மாணவிகளிடமே கூட அதிகரித்துவிட்டது. ஆனால், சமூக வலைதளங்களில் காணப் படுவதுபோல காதலோ, திருமணமோ இங்கே பெரும்பாலும் மகிழ்ச்சிகரமானதாக இல்லை.

சமூக வலைதளங்களில் அதிக லைக்குகளையும், கமென்டுகளை யும் அள்ளவேண்டும். அதற் காகவே நாம் நட்பு, காதல், திருமணங்களை எல்லாம் கொண்டாடுவதாகக் காட்டிக் கொள்கிறோம். தனிப்பட்ட ஒரு நபரிடம் பகிர்ந்துகொள்ள வேண்டிய உணர்வுகளைப் பொதுவெளியில் பகிர்ந்து கொள்கிறோம். ஒரு கட்டத்தில், அப்படி பகிர்வதே போதும் என்ற மனநிலைக்கும் வந்துவிடுகிறோம். இது விர்ச்சுவல் ரிலேஷன்ஷிப் என்ற வகைக்குள் நம்மை தள்ளிவிடுகிறது. இவற்றுக்கு வைக்கப் பட்ட பெயர்கள்தான் செக்ஸ்டிங், வெப்சாட், வெட்சாட் எல்லாமே.

தனக்கே தனக்கென ஓர் உறவை உருவாக்கிக் கொள்ளத்தான் எல்லோருக்கும் விருப்பம். ஆனால், அதற்கான முயற்சிகளை எடுக்க நாம் தயாராக இல்லை. கடைசியில் அவசரத்தில் கட்டாயத்தில் காதலையோ, திருமணத்தையோ முடிவு செய்துவிட்டு வாழ்க்கையே பாழாகி விட்டதாக புலம்ப ஆரம்பித்துவிடுகிறோம். இப்படி எந்தவித அடிப்படை தெளிவும் இன்றி காதலிப்பதாகச் சொல்லிக் கொள் பவர்கள் விரைவிலேயே பிரிந்து விடுகிறார்கள். அப்போது பெரும்பாலானோர் சொல்வது இதுதான் ‘நீ இல்லையென்றால் என்ன... எனக் கென்ன ஆளா கிடைக்காது’ என்று சொல்லி விட்டுப் பிரிகிறார்கள். அதாவது `படகிருக்கு... வலை இருக்கு... கடலுக்குள்ள மீனா இல்ல... வேணாம்டா வேணாம் இந்த காதல் மோகம்' என்ற பாடல் வரிகள்தான் இன்றைய காதலின் நிதர்சனமான நிலை.

கன்ட்ரோல், ஆல்ட், டெலீட்... இது காதலா... இதுதான் காதலா..?

ஆட்டம் முடியும்போது, காட்சிகள் மாறும் என்பதுபோல இளவயதில் வாழ்க்கை பற்றியும் உறவுகள் பற்றியும் போதிய புரிந்துணர்வு இல்லாமல், காலத்தையும் உணர்வுகளையும் வீணடித்து விரைவிலேயே எல்லாவற்றிலும் நம்பிக்கை இழந்து, தன் மீதும் நம்பிக்கை இழந்து, தனித்தே இருந்துவிடலாம் என்ற முடிவுக்கு வருவதுதான் இன்றைய தலைமுறை யினரில் பெரும்பாலானவர்களின் நிலைப் பாடாக இருக்கிறது. ஆனால், நிஜமாகவே அனைவருக்கும் ஒரு காதல் தேவையாகவே இருக்கிறது.

அதற்கு இன்பம், துன்பம், சண்டை சச்சரவுகள், என எல்லாவற்றையும் கடந்து தான் அப்படிப்பட்ட காதலை உரு வாக்க முடியும். வாழ்க்கை முழுவதுக்குமான ஒரு துணையை அடைய வேண்டு மெனில் அதிலுள்ள எல்லா சவால்களையும் சிக்கல்களை யும் சந்திக்கத் தயாராக இருக்க வேண்டும். நமக்கான துணையைக் கண்டடையவும், அதற் கேற்ப காதலை உருவாக்கிக் கொள்ளவும் ஒரு கால அவகாசம் தேவைப்படும். எந்த ஒரு நபரையும் முழுமையாக அறிந்துகொள்ள தேவையான அவகாசத்தைக் கொடுக்க வேண்டும். ஆனால், இன்றைய தலைமுறை காதலை ஒரு பேக்கேஜ் போலவே எதிர் பார்க்கிறது. அதிலும் பாசிட்டிவ் விஷயங்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்கிறது. அதனாலேயே ரிலேஷன்ஷிப்பிலும் கன்ட் ரோல் ஆல்ட் டெலீட், கஸ்டமைஸ், ஃபில்டர் இவையெல்லாம் தேவையாக இருக்கிறது.

காதல் பற்றிய பேச்சு தொடங்கும்போதே பல கண்டிஷன்களோடும், நிபந்தனை களோடும், விதிமுறைகளோடும்தான் ஆரம்பிக் கிறது. ‘உன்னைக் கொடு என்னைத் தருவேன்’ என்றிருந்த காதல், இப்போது ‘நான் எதிர் பார்ப்பதையெல்லாம் கொடு, நான் காதலைத் தருகிறேன்’ என்ற வணிகமாக மாறிவிட்டது.

இயல்பிலேயே மனிதனுக்கு உடலளவிலும், மனதளவிலும் சில தேவைகள் இருக்கின்றன. அந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய வகையிலான உறவுகளைத்தான் நட்பு, காதல், திருமணம், குடும்பம் என நாம் உருவாக்கிக் கொள்கிறோம். ஆனால் அன்பு, காதல், திருமணம், குடும்பம் என ஒரு கட்டமைப்பை மிக எளிதாக இன்றைய தலைமுறைப் புறந் தள்ளிக் கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது.

உறவுகளையுமே சோஷியல் மீடியாவை ஸ்க்ரோல் செய்வதுபோல சில நொடிகளில் கடந்துவிடுகிறது. ஆனால் ‘காதல்’தான் இப் பெருவாழ்வின் நம்பிக்கை. இந்த நம்பிக் கையை இழந்துவிடாமல் இருப்பதுதான் வாழ்வதற்கான ஒரே வழி.

ஆதலால் காதல் செய்வீர் உண்மையாக!