Published:Updated:

மூத்தோரைக் காப்போம்!

மூத்தோரைக் காப்போம்!
பிரீமியம் ஸ்டோரி
மூத்தோரைக் காப்போம்!

தமிழ்நாட்டில் 2021-ல் 13.6 சதவிகிதமாக இருந்த மூத்த குடிமக்களின் எண்ணிக்கை, 2031-ல் 18.2 சதவிகிதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.

மூத்தோரைக் காப்போம்!

தமிழ்நாட்டில் 2021-ல் 13.6 சதவிகிதமாக இருந்த மூத்த குடிமக்களின் எண்ணிக்கை, 2031-ல் 18.2 சதவிகிதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.

Published:Updated:
மூத்தோரைக் காப்போம்!
பிரீமியம் ஸ்டோரி
மூத்தோரைக் காப்போம்!

இந்தியாவுக்கு வயதாகிக்கொண்டிருக்கிறது. மக்கள்தொகையில் உலகின் இரண்டாவது பெரிய நாடாக விளங்கும் இந்தியாவில் கருத்தரித்தல் மற்றும் இறப்பு விகிதங்களின் சரிவு, மருத்துவ முன்னேற்றங்களால் ஆயுட்காலம் நீட்டிப்பு, பொதுச் சுகாதாரத் திட்டங்கள் போன்ற காரணங்களால் 60 வயதைக் கடந்துவிட்ட மூத்த குடிமக்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.

இந்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI) வெளியிட்டுள்ள ‘இந்தியாவில் முதியோர்கள் - 2021’ என்ற அறிக்கையின்படி, 2011-ல் 75.1 லட்சமாக இருந்த மூத்த குடிமக்களின் எண்ணிக்கை, 2021-ல் 1.04 கோடியாக உயர்ந்திருக்கிறது; 2031-ல் இந்த எண்ணிக்கை 1.42 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் உடல்நலம்-மனநலம், பொருளாதாரம், சமூகப் பாதுகாப்பு எனப் பல்வேறு சவால்களை முதியோர்கள் எதிர்கொண்டிருக்கின்றனர்.

தமிழ்நாட்டில் 2021-ல் 13.6 சதவிகிதமாக இருந்த மூத்த குடிமக்களின் எண்ணிக்கை, 2031-ல் 18.2 சதவிகிதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. அப்போது இந்தியாவில் மூத்த குடிமக்களின் இரண்டாவது அதிக விகிதத்தைக் கொண்டிருக்கும் மாநிலமாகத் தமிழ்நாடு மாறும். உயர்ந்துவரும் மூத்த குடிமக்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு முதியோர் நலனைப் பாதுகாக்கும் நோக்கில், ‘மூத்த குடிமக்களுக்கான மாநிலக் கொள்கை 2022' வரைவை, கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்டிருப்பது முதியோர் நலனில் ஒரு முக்கிய முன்னெடுப்பாகக் கருதப்படுகிறது.

மூத்தோரைக் காப்போம்!

“முதுமை என்பது ஒரு பருவமே தவிர அதுவே ஒரு நோய் அல்ல. முதுமையில் உடல், மன, குடும்ப நலன்கள் நன்றாக இருக்க வேண்டுமென்றால், வருமுன் காக்கும் நடவடிக்கையாக நடுத்தர வயதிலிருந்தே கூடுதல் கவனம் எடுத்துக்கொள்ளத் தொடங்க வேண்டும்” என்று கூறும் முதியோர் நல மருத்துவர் வி.எஸ்.நடராஜன், முதுமை நலம் சார்ந்து மேற்கொள்ள வேண்டிய அடிப்படைகளைப் பரிந்துரைக்கிறார்.

“ஒன்று, முழு உடல் பரிசோதனை. முதுமை தொடங்குவதன் அறிகுறி என்பது முதுமை நோய்களின் எந்த அறிகுறியும் நடுத்தர வயதில் தென்படாமல் இருப்பதுதான். எனவே, முதுமை தொடங்கும் 50 வயதுக்குப் பிறகு முழு உடல் பரிசோதனை என்பது ஒவ்வோர் ஆண்டும் கட்டாயமாகிறது; இரண்டு, உணவுப் பழக்கமும் உடற்பயிற்சியும். அதுவரை பின்பற்றிவந்த உணவு முறையில் திருத்தம் கொண்டுவரலாமே தவிர, முதுமையில் புதிய உணவு முறைக்கு மாறக்கூடாது. முதுமையில்தான் உடற்பயிற்சி கட்டாயம், எனவே செலவும் பக்கவிளைவும் இல்லாத நடைப்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்; மூன்று, ‘தாத்தா பாட்டிக்கும் தடுப்பூசி உண்டு.’ பல்வேறு காரணங்களால் முதுமையில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்துவிடும். எனவே, நிமோனியா, இன்ஃப்ளூயன்சா தடுப்பூசிகளைச் செலுத்திக்கொள்வதன் மூலம், தீவிர நோய்களிலிருந்து முதியவர்கள் தங்களைக் காத்துக்கொள்ளமுடியும். மனநலத்தைப் பொறுத்தவரை தனிமைதான் முதுமைக்கு விரோதி. நடுத்தர வயதிலிருந்தே ஏதாவது ஒரு விஷயத்தில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டுவருவது முதுமையில் தனிமையைச் சமாளிக்க உதவும். முதுமையில் எதிர்பார்ப்புகள் இல்லாமல், தங்கள் தேவைகளை அதிகபட்சம் யாருடைய உதவியும் இன்றி நிறைவேற்றிக்கொள்ள முயல வேண்டும். குடும்ப நலனுக்கும் முதியோர்கள் பங்களிக்க முடியும். மாதாமாதம் வழங்கப்பட்டுவரும் முதியோர் உதவித் தொகையை அரசு உயர்த்த வேண்டும்; முதுமை நோய்களுக்குத் தொடர் சிகிச்சை அளிக்கும் வகையில் தாலுகா அளவில் மருத்துவ மையங்களைத் தொடங்க வேண்டும். முதுமை பற்றியும், முதியோர்கள் பற்றியும் பள்ளி அளவிலேயே விழிப்புணர்வு கொண்டுவரப்பட்டால் முதியோர் கொடுமை பெருமளவில் குறையும்” என்கிறார் நடராஜன்.

“வயதானவர்களே எல்லா வகையிலும் பாதிப்புக்குள்ளாகிறவர்கள் என்பதால், முதியோர் நலனை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசெல்லும் வகையில் சமூகத்தின் அனைத்துத் தரப்புப் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்து ‘மூத்த குடிமக்களுக்கான மாநிலக் கொள்கை 2022’ தயாரிக்கப்பட்டிருக்கிறது. ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து, சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், வாழ்வாதாரம் / வருவாய்ப் பாதுகாப்பு, வீட்டுவசதி மற்றும் சுற்றுச்சூழல், இடரின்மை மற்றும் பாதுகாப்பு, நிறுவனங்கள் மூலம் பராமரிப்பு, விழிப்புணர்வு மற்றும் கல்வி, ஆராய்ச்சி மற்றும் ஆவணப்படுத்துதல், பேரிடர் மேலாண்மை மற்றும் துயர் தணிப்பு, மூத்த குடிமக்கள் நலனுக்கான இயக்ககம் என்ற பத்து அம்சங்கள் இதில் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. இக்கொள்கை மீதான மக்களின் கருத்துகளைப் பெற்றிருக்கிறோம்; ஒவ்வொரு துறையின் செயலாளர்கள், மூத்த அதிகாரிகளின் ஆலோசனைகள், பரிந்துரைகளின் அடிப்படையில் கொள்கை வரைவை இறுதிசெய்து அரசிடம் சமர்ப்பிப்போம். தமிழ்நாட்டின் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் வாழும் மூத்த குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாத்து, அவர்களுக்கான சிறந்த சேவைகளை வழங்க இக்கொள்கை வழிவகுக்கும்” என்கிறார், ‘தமிழ்நாடு மூத்தகுடிமக்கள் மாநிலக் கொள்கை வரைவு - 2022’-ல் இடம்பெற்றிருந்த மூத்த அதிகாரி ஒருவர்.

சமீபத்தில் சென்னை மயிலாப்பூரில் நடந்த இரட்டைக் கொலை மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது; தனியாக வாழும் முதியோர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட முதியோர்களின் ஒட்டுமொத்த நலன் குறித்த பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது இந்தச் சம்பவம். இதையொட்டி, முதியோர் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த நெறிமுறைகளை விளக்குகிறார் தேசிய மனித உரிமை ஆணையத்தின் முதியோருக்கான குழுவின் மைய உறுப்பினர்களில் ஒருவரான டாக்டர் கார்த்திக் நாராயணன்,

வி.எஸ்.நடராஜன்
வி.எஸ்.நடராஜன்

“தனியாக வசிக்கும் முதியவர்களின் பாதுகாப்பு அவர்கள் பகுதியில் வசிக்கும் மற்றவர்களையும் சார்ந்தே இருக்கிறது. அந்த முதியோர்கள் பற்றிய விவரப் பதிவேடு அந்தப் பகுதியின் காவல்நிலையத்தில் பராமரிக்கப்படுதல் முக்கியம். மேலும், முதியோர் இல்லம், பராமரிப்பு மையம் போன்றவை சமூக நலத்துறை, சுகாதாரத் துறையில் பதிவுசெய்து இயங்க வேண்டியது அவசியம். அப்போதுதான் அங்கு வாழும் முதியோர்களைப் பற்றிய பல்வேறு தகவல்கள் அடங்கிய தரவுகளை உருவாக்க முடியும்; அந்தத் தரவுகளின் அடிப்படையிலேயே அவர்களின் நலன் சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். முதியவர்களை அவர்கள் வீடுகளிலேயே பராமரிக்கத் துணைவர்களை வழங்கும் முகமைகள் உள்ளன. இவை அந்தத் துணைவர்களின் பின்னணி விவரங்களை தேசியத் திறன் மேம்பாட்டு ஆணையத்தில் பதிவுசெய்திருக்க வேண்டும். இதுகுறித்த விழிப்புணர்வு மேம்படும்போதுதான் முதியவர்களின் பாதுகாப்பும் உறுதிசெய்யப்படும். மையப்படுத்தப்பட்ட ஒரு தரவு வங்கியை உருவாக்குவதன் மூலம், முதியோர்களின் நலன் சம்பந்தப்பட்ட அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட முடியும் என்பது இதன் அடிப்படை. மூத்த குடிமக்களில் பெரும்பாலானோர் இன்று தங்கள் கடைசிக் காலத்தை முதியோர் இல்லங்களில் தங்கள் வயதொத்தவர்களுடன் கழிக்க விரும்புகிறார்கள். மேலும், கண்ணியமான மரணம் என்பது ஒவ்வொருவரின் அடிப்படை உரிமை என்பதால், சிகிச்சை என்ற பெயரில் அவர்களுக்கு மேலதிக துன்பங்கள் ஏற்படாத வகையில் அவர்களின் விருப்பம், தேர்வு அறிந்து பிள்ளைகள் செயல்பட வேண்டியது முக்கியம்” என்கிறார்.

கார்த்திக் நாராயணன்
கார்த்திக் நாராயணன்

ஒரு சமூகத்தின் நலன் என்பது இளையோர் நலனில் மட்டுமல்ல, அச்சமூகத்தை உருவாக்கிய மூத்தோர் நலனிலும் அடங்கியிருக்கிறது. எனவே அரசு தொடங்கி துறை வல்லுநர்கள், அர்ப்பணிப்புள்ள தனிநபர்கள், சமூகம் சார்ந்த அமைப்புகள், மருத்துவ வல்லுநர்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பல்வேறு தரப்பினர் இணைந்து முதியோர் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டியது அவசியம்; அது அனைவரின் சமூகக் கடமையும்கூட!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism