அலசல்
Published:Updated:

ஈகோவைத் தூக்கி எறிய என்ன வழி?

ஈகோ
பிரீமியம் ஸ்டோரி
News
ஈகோ

திருமண வாழ்க்கையில் இருவரும் வெற்றி பெற வேண்டும். தம்பதியருக்கிடையில் ஈகோ என்பதே கூடாது. கோபம், சண்டை, பொறாமை போன்றவற்றில் தொடங்கி, ஒரு கட்டத்தில், ‘நான் சொல்வதை நீ கேட்கவில்லை

நீயா, நானா என்ற போட்டிக்கு அடிப்படையான ‘ஈகோ’ மனித வாழ்க்கையில் என்னவெல்லாம் செய்கிறது? நட்பு, உறவு என எதையும் நொடி நேரத்தில் சிதைத்து, சின்னாபின்னமாக்கக்கூடிய இந்த ஈகோ ஒருவருக்கு அவசியம்தானா? எந்த எல்லை வரை அதை அனுமதிக்கலாம்? சென்னையைச் சேர்ந்த உளவியல் ஆலோசகர் நப்பின்னையிடம் பேசினோம்...

‘‘ஈகோ என்பது அனைவருக்கும் இருக்க வேண்டிய ஒன்றுதான். ஆனால், அது தன்மானம் என்ற அளவில் மட்டுமே இருக்க வேண்டும்...’’ இதமான ஒரு மெசேஜுடன் ஆரம்பிக்கிறார் நப்பின்னை.

‘நான் சொல்வதுதான் சரி...’, ‘நான் சொல்வதைத்தான் செய்ய வேண்டும்’ என்பதெல்லாம் ஈகோவில் அடக்கம். ஈகோவில் இன்னொரு விதம் உண்டு. இருவரில் யார் தவறு செய்தாலும் எதிராளிதான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது. இவர்களுக்கு விட்டுக்கொடுத்துப் போவதற்கான மனநிலையே இருக்காது. ஈகோவுக்கு ஆண், பெண் வேறுபாடு இல்லை. பசி எப்படி எல்லோருக்கும் பொதுவானதோ, அதைப் போன்றதுதான் ஈகோவும். உறவை மதிக்காத, உறவின் அவசியத்தை, முக்கியத்துவத்தைp புரிந்துகொள்ளாத எல்லோருக்கும் ஈகோ இருக்கும். அது யாராகவும் இருக்கலாம். ஈகோ என்பது குழந்தைப்பருவத்திலேயே இருக்கலாம். சில குழந்தைகள் தவறு செய்தால், மன்னிப்பு கேட்கச் சொன்னாலும் கேட்க மாட்டார்கள். ஆக, ஈகோ இந்த வயதில்தான் தொடங்கும் என்றில்லை. பெற்றோர் வளர்ப்பிலும் அதற்குப் பங்குண்டு.

நப்பின்னை
நப்பின்னை

பெற்றோர் எப்படிப் பேசிக்கொள்கிறார்கள். அவர்களின் உரையாடல் எப்படி இருக்கிறது. ஒருவருக்கொருவர் புரிந்துணர்வோடு நடந்து கொள்கிறார்களா என்பதையெல்லாம் பார்த்து வளரும் குழந்தை, அவர்களிட மிருந்தும், அந்தச் சூழலிலிருந்தும் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்கிறது. சில பெற்றோர் எதிரும் புதிருமாக `நான் பெரிய ஆளா, நீ பெரிய ஆளா’ என்று நடந்துகொள்வார்கள், விட்டுக்கொடுக்க மாட்டார்கள். அவர்களில் அதிக கோபத்துடன் சண்டையிட்டுப் பேசுபவரே பெரும்பாலும் வெற்றிபெறுவார். இன்னொரு நபர் சண்டையிட விருப்பம் இல்லாமலோ, சூழலை சரி செய்யும் எண்ணத்திலோ விட்டுக்கொடுக்க நேரிடும். இதனால், வெற்றிபெற்றவர் தன்னைப் பற்றிப் பெருமையாக எண்ணிக் கொள்வார். இதைப் பார்த்து வளரும் குழந்தையின் மனதில், ‘மிரட்டி சண்டையிட்டு வெல்வதுதான் வாழ்க்கை, நான் சொல்வதுதான் சரி என்று அழுத்தமாக இருந்தால்தான் எதிராளியைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்’ என்ற எண்ணம் வேரூன்றுகிறது. விட்டுக்கொடுப்பது என்றால் என்ன என்பதே அந்தக் குழந்தைக்குத் தெரியாமல் போய்விடுகிறது.

நான்தான் பெரியவன்(ள்), நான் பேசுவதுதான் எடுபட வேண்டும் என்று நினைப்பவர்களின் மனதில் ‘விட்டுக்கொடுத்தால் வலிமையற்றவராக அறியப்படுவோமோ’ என்ற எண்ணம் இருக்கலாம். விட்டுக்கொடுப்பவர்கள் ஏமாளிகள், அவர்களால் யாரையும் எதிர்த்துப் பேசிப் போராட முடியாது, அவர்கள் தோற்றுதான் போவார்கள் என்றும் நினைக்கிறார்கள். அதனால், ‘நான் ஏன் விட்டுக்கொடுக்க வேண்டும்’ என்ற மனநிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

ஈகோவைத் தூக்கி எறிய என்ன 
வழி?

திருமண வாழ்க்கையில் இருவரும் வெற்றி பெற வேண்டும். தம்பதியருக்கிடையில் ஈகோ என்பதே கூடாது. கோபம், சண்டை, பொறாமை போன்றவற்றில் தொடங்கி, ஒரு கட்டத்தில், ‘நான் சொல்வதை நீ கேட்கவில்லை... நான் ஏன் விட்டுக்கொடுக்கவேண்டும்’ என்பதில் வந்து நிற்கும். உடன் பிறப்பு களுக்குள்ளும் சரி, வேறு உறவாக இருந்தாலும் சரி, நட்பிலும் சரி... விரிசல் விழ ஈகோதான் அடிப்படை. வளரவிட்டால் அது வன்முறையாகக்கூட மாறலாம்.

அதன் தொடர்ச்சியாக உறவுகள், நட்புகள் என எல்லோரையும் இழக்க நேரிடும். ஒரு கட்டத்தில் தனக்கென யாரும் இல்லை என்பது புரியும். தன் ஈகோதான் அதற்குக் காரணம் என்ற தெளிவும் ஏற்படும். அந்தத் தருணத்தில் அதிலிருந்து விடுபடுவதற்கான முயற்சியிலும் இறங்க வேண்டும்.

ஈகோவைத் தூக்கி எறிய என்ன 
வழி?

நாம்தான் ஒரு பிரச்னைக்குக் காரணம் என்று தெரிந்தால் தயங்காமல் மன்னிப்பு கேட்க வேண்டும். அதே தவற்றை மீண்டும் செய்யக்கூடாது. மனிதருக்கு ஈகோ இருக்கலாம், ஆனால் அளவோடு இருக்க வேண்டும். சக மனிதரை சமமாக மதிக்க பிள்ளைகளுக்குப் பெற்றோர் கற்றுத்தர வேண்டும். நம்மைப் போலவே மற்றவர்களுக்கும் ஆசைகள், தேர்வுகள் இருக்கும் என்பதைப் புரியவைக்க வேண்டும். ஈகோவை உடைக்கும் எளிய வழி சொல்லவா? எல்லோரையும் நேசிப்பது, அன்பு செலுத்துவது.

அன்பு செலுத்த ஈகோ தடையாக இருக்கிறதா? அப்படியானால் தூக்கி எறியுங்கள் ஈகோவை; உறவுகளை அல்ல!