Published:Updated:

2கே கிட்ஸ் யுகத்தில் காதல்... சிறப்பு சர்வே சொல்லும் சேதி!

2கே கிட்ஸ் யுகத்தில் காதல்...
பிரீமியம் ஸ்டோரி
2கே கிட்ஸ் யுகத்தில் காதல்...

தலைமுறை இடைவெளியை மையப்படுத்திய சர்வே என்பதால் வயதுக்கேற்றாற்போல் சர்வேயில் பங்கெடுப்பவர்களைப் பிரிப்பது அவசியமாகிவிட்டது.

2கே கிட்ஸ் யுகத்தில் காதல்... சிறப்பு சர்வே சொல்லும் சேதி!

தலைமுறை இடைவெளியை மையப்படுத்திய சர்வே என்பதால் வயதுக்கேற்றாற்போல் சர்வேயில் பங்கெடுப்பவர்களைப் பிரிப்பது அவசியமாகிவிட்டது.

Published:Updated:
2கே கிட்ஸ் யுகத்தில் காதல்...
பிரீமியம் ஸ்டோரி
2கே கிட்ஸ் யுகத்தில் காதல்...

'பூமி’ எனப் பெயர் சூட்டப்படுவதற்கு முன்பிருந்தே இங்கு பாய்ந்துகொண்டிருக்கிறது ஆறு. அதன் போக்கை மையம்கொண்டே அடுத்தடுத்து பரிணாமம் அடைந்திருக்கிறது மனித நாகரிகம். போலவே காதலும். காலத்திற்கேற்றாற்போல மாறிக்கொண்டே இருக்கும் காதலை மையம்கொண்டே வளர்ந்து வந்திருக்கிறது நம் வாழ்வியல். அதனாலேயே காதலில் முரண்களும் அதிகம். தாத்தாவின் ட்ரங்குப் பெட்டியில் சுருட்டி வைக்கப்பட்டிருக்கும் அவர் சட்டையை அணுகுவதைப் போலத்தான் ஒரு தலைமுறை முந்தைய தலைமுறையின் காதலை அணுகுகிறது - ‘பொக்கிஷம்தான். ஆனால் நமக்குப் பொருந்தாது.’

முப்பதாண்டுகளாக இருந்த ஒரு தலைமுறையின் காலம் டிஜிட்டல் யுகத்தில் ஐந்தாண்டுகளாகச் சுருங்கிவிட்ட இந்தச் சூழ்நிலையில் காதலைப் பல்வேறு வயதினரும் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்பினோம். உடனே விகடன் இணையதளத்தில் 10 கேள்விகள் அடங்கிய சர்வேயைத் தொடங்கினோம். ஆயிரக்கணக்கானோர் பங்குகொண்ட இந்த சர்வேயில் நமக்குக் காத்திருந்தன சில ஆச்சரியங்களும் சில அதிர்ச்சிகளும்.

2கே கிட்ஸ் யுகத்தில் காதல்... சிறப்பு சர்வே சொல்லும் சேதி!

தலைமுறை இடைவெளியை மையப்படுத்திய சர்வே என்பதால் வயதுக்கேற்றாற்போல் சர்வேயில் பங்கெடுப்பவர்களைப் பிரிப்பது அவசியமாகிவிட்டது. 18லிருந்து 25 வயதுக்குட்பட்டவர்கள், 26லிருந்து 35 வயதுக்குட்பட்டவர்கள், 36லிருந்து 45 வரை, 45 வயதுக்கும் மேல் என நான்கு பிரிவாகப் பிரிக்கப்பட அதில் அதிகம் பங்கெடுத்தது ஆச்சரியமே இல்லாமல் 26லிருந்து 35 வயதினர்தான். இணையம் முழுக்க 90’ஸ் கிட்ஸின் ஆதிக்கமிருக்கும் நிலையில் காதல் தொடர்பான இந்த சர்வேயில் அவர்களில்லாமல் எப்படி? கிட்டத்தட்ட பாதிக்குப் பாதி அவர்கள்தான். அடுத்தபடியாக 25.9 சதவிகித இடம் பிடித்தது நடுத்தர வயதினர். காதலில் திளைப்பவர்களும், காதலை அசைபோடுபவர்களுமான கலவை இது.

பங்கெடுத்தவர்களில் 70 சதவிகிதத்திற்கும் மேற்பட்டவர்கள் ஆண்கள். காதல் குறித்துப் பேச சமூகம் பெண்களுக்கு விதித்து வைத்திருக்கும் கட்டுப்பாடுகள்கூட இதற்குக் காரணமாய் இருக்கலாம். சர்வேயின் முதல் பதிலே நம்மை ஆச்சரியப்படுத்தியது; ‘காதல் ஒருமுறைதான் பூக்குமா’ என்கிற கேள்விக்கு 77 சதவிகிதம் பேர் ‘இல்லை’ எனச் சொல்லியிருந்தார்கள். இதில் அனைத்து வயதைச் சேர்ந்தவர்களும் அடக்கம். ரெட்ரோ சினிமாக்கள் பல காலமாகக் கட்டமைத்த ‘இதயம்’ முரளி பிம்பத்திற்கு அப்படியே நேர்மாறான விடை இது.

2கே கிட்ஸ் யுகத்தில் காதல்... சிறப்பு சர்வே சொல்லும் சேதி!

சினிமாக்கள் கட்டமைத்த மற்றொரு பிம்பம் ‘பூவே உனக்காக’ ராஜாக்கள். அடுத்த கேள்வியில் அந்த பிம்பமும் உடைந்தது. ‘காதலில் தோல்வியடைந்தால் என்ன செய்வீர்கள்?’ என்கிற கேள்விக்கு ‘அடுத்த காதலைத் தேடிச் செல்வேன்’ என 49 சதவிகிதம் பேரும், ‘கல்யாணம்’ என 40 சதவிகிதம் பேரும் பதில் சொல்லியிருந்தார்கள். சோர்ந்து தேங்கிவிடாமல் அடுத்தகட்டம் நோக்கி நகரும் நேர்மறை எண்ணங்கள் பதில்களில் பிரதிபலித்தன.

‘காதலால் நிகழும் திருமணத்திற்கு முந்தைய பாலுறவு இயல்பானதா?’ என்கிற கேள்விக்கு ‘இல்லை’ என 53.8 சதவிகிதம் பேரும் ‘ஆம்’ என 46.8 சதவிகிதம் பேரும் பதில் சொல்லியிருக்கிறார்கள். ‘சரி, தவறு’ என்கிற விவாதத்தைத் தாண்டி திருமணத்திற்கு முந்தைய பாலுறவு குறித்த தமிழர்களின் பார்வை மாறிவருவதையே இது காட்டுகிறது.

2கே கிட்ஸ் யுகத்தில் காதல்... சிறப்பு சர்வே சொல்லும் சேதி!

‘ஆண்களைப் போல பெண்களுக்குக் காதல் தோல்விகள் இருப்பதில்லையே’ என்கிற கேள்விக்கு, ‘பெண்களுக்கு அதற்கான வெளியில்லை’ என்பதே அறுதிப் பெரும்பான்மை பெற்றது. கல்வி தரும் நம்பிக்கை, பொருளாதாரச் சுதந்திரம் ஆகியவை அதிகரித்துவரும் நிலையில் இந்நிலை சீக்கிரம் மாறும் என நம்புவோம்.

ஒருவரின் தனிப்பட்ட விருப்பங்களுக்கு, வாழ்க்கைக்குப் பொதுவெளியில் அதீத முக்கியத்துவம் தரப்படுகிறது’ என இங்கே ஒரு குற்றச்சாட்டு எப்போதும் உண்டு. ஆனால், ‘லிவிங் டுகெதர்’ தொடர்பான கேள்விக்கு ‘அது இருவரின் தனிப்பட்ட விஷயம்’ என 60 சதவிகிதம் பேர் பதில் சொல்லியிருந்தது ஆச்சரியம். ‘மற்றவர்களின் விருப்பங்களில் தலையிடுவது சரியில்லை’ என்கிற பக்குவப்பட்ட சமூகமாக நாம் மாறிவருவது மகிழ்ச்சியான மாற்றமே.

‘காதலைப் போல காதல் தோல்வியும் சகஜம்’ என்பதாக மக்களின் மனநிலை மாறிவிட்டதையே அடுத்த கேள்விக்கான பதில் காட்டியது. 76 சதவிகிதம் பேர் ‘காதல் தோல்வியடைந்தவரை திருமணம் செய்துகொள்வேன்’ எனக் கூறியிருந்தார்கள்.

‘சாதி மதம் பார்த்துக் காதலிப்பது சரியா?’ என்கிற கேள்விக்கு 45 சதவிகிதம் பேர் ‘முட்டாள்தனம்’ என விமர்சித்திருந்தார்கள். 40 சதவிகிதம் பேர், ‘இதெல்லாம் பிளான் பண்ணிப் பண்ணமுடியுமா?’ எனக் கேட்டிருந்தாலும் 14 சதவிகிதம் பேர் ‘சரி’ எனச் சொல்லியிருந்தது அதிர்ச்சி.

‘காதலை இந்தத் தலைமுறை எளிதாகக் கடந்துசெல்வது நல்லதுதான்’ என்பதே பெரும்பான்மையானோரின் கருத்தாக இருக்கிறது. வயது பாரபட்சமில்லாமல் அனைவரும் இந்தத் தலைமுறையின் போக்கை ஆதரிப்பது வரவேற்கத்தகுந்த மாற்றம்.

ஒருகாலத்தில் சினிமாக்கள்தான் காதலுக்கு அடிப்படையாக இருந்தன. ஆனால், தொழில்நுட்ப வளர்ச்சியால் சமூக வலைதளங்கள் ஏனைய ஊடகங்கள் மேல் ஆதிக்கம் செலுத்துவது போலவே சினிமா மேலும் ஆதிக்கம் செலுத்துகின்றன. 86 சதவிகிதம் பேர் சமூக வலைதளம் பக்கம் சாய்ந்திருந்தார்கள்.

2கே கிட்ஸ் யுகத்தில் காதல்... சிறப்பு சர்வே சொல்லும் சேதி!

‘பொசசிவ்னெஸ் காதலில் இயல்பானதா இல்லையா?’ என்கிற கேள்வி காதல் தோன்றிய காலத்திலிருந்தே இருக்கிறது. ‘மற்ற நண்பர்களோடு பழகுவது சகஜம்தான்’ என 27 சதவிகிதம் பேர் சொல்லியிருந்தாலும் அதைவிட அதிகமாய் ‘பொசசிவ் ஆகிடுவேன்’ என பதில் வந்திருந்தது. ‘இருந்தாலும் வெளிக்காட்டிக்கொள்ள மாட்டேன்’ என்கிற பதிலே மொத்தமாய் அதிகம். ‘நம் இணையின் விருப்பத்தில் நாம் தலையிடக் கூடாது’ என்கிற மனநிலை பெருகிவருவதையே இது காட்டுகிறது.

வாழ்க்கை மாறியிருக்கிறது; தலைமுறை மாறியிருக்கிறது; அதற்கேற்றாற்போல் காதலும் காதல் குறித்த எண்ணங்களும் மாறியிருக்கின்றன என்பதே இந்த சர்வே மூலம் நாம் கண்டடைந்த உண்மை. எத்தனை மாற்றங்கள் இருந்தபோதும் இந்த உலகத்தைக் காதல் இயக்கிக்கொண்டேயிருக்கிறது.