Published:Updated:

27 ஆண்டு குடும்ப வாழ்க்கை, அடுத்து புதிய அத்தியாயம்... பில்கேட்ஸின் வாழ்வில் மெலிண்டா யார்?

Bill and Melinda Gates in 1994 ( AP Photo / DAVE WEAVER )

பில்கேட்ஸ் போலவே அவருடைய மனைவி மெலிண்டாவும் தன் செயல்பாடுகளால் புகழ்பெற்றவர். இந்தப் பதிவு அவரைப் பற்றியதுதான்.

27 ஆண்டு குடும்ப வாழ்க்கை, அடுத்து புதிய அத்தியாயம்... பில்கேட்ஸின் வாழ்வில் மெலிண்டா யார்?

பில்கேட்ஸ் போலவே அவருடைய மனைவி மெலிண்டாவும் தன் செயல்பாடுகளால் புகழ்பெற்றவர். இந்தப் பதிவு அவரைப் பற்றியதுதான்.

Published:Updated:
Bill and Melinda Gates in 1994 ( AP Photo / DAVE WEAVER )
உலகின் பணக்காரர்களாக பலர் உருவெடுத்தாலும், `உலகின் நம்பர் 1 பணக்காரர் யார்?' என்ற கேள்வியைக் கேட்டால், பில்கேட்ஸ் என்கிற பதிலைச் சொல்கிறவர்கள் இன்னமும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஏனெனில், பில்கேட்ஸ் என்னும் பெயருக்கு இருக்கும் வீரியம் பலமானது. பில்கேட்ஸ் போலவே அவருடைய மனைவி மெலிண்டாவும் தன் செயல்பாடுகளால் புகழ்பெற்றவர். இந்தப் பதிவு அவரைப் பற்றியதுதான்.

உலகின் மிகப்பெரிய பணக்காரர் ஆக வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கும் ஒருவரை மணம் முடிக்கையில், அந்த வாழ்க்கை குறித்து, படங்களில் காட்டப்படுவதுபோல பங்களா, சொகுசு கார்கள், சொடக்கு சத்தத்துக்கே அடி பணியக் காத்திருக்கும் பணியாட்கள் என்ற பிம்பங்கள்தானே முதலில் தோன்றும்.

Bill and Melinda Gates
Bill and Melinda Gates
AP Photo / GAZI SARWAR

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆனால், பணக்காரரான பில்கேட்ஸை திருமணம் செய்துகொண்ட போது மெலிண்டாவின் வாழ்க்கை அப்படி இல்லை. கார், பணம், பங்களா என அனைத்தும் இருந்தும் அவர் தனது வாழ்க்கையை அப்படியாக அமைத்துக்கொள்ள விரும்பவில்லை. மிக எளிமையாகவே வாழப் பழகினார். பில்கேட்ஸையும் அப்படியே வாழப் பழக்கினார் என்றும் சொல்லலாம். கோடான கோடிகளுக்கு அதிபதியான பில்கேட்ஸ் மற்றும் மெலிண்டா ஆகிய இருவரும் வீட்டிலே தினமும் இரவு உணவுக்குப் பிறகு, ஒன்றாகச் சேர்ந்து பாத்திரங்களைத் துலக்குவார்களாம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது பற்றி ஒருமுறை பில்கேட்ஸிடம் கேட்டபோது, ``நீங்கள் என்னதான் பெரிய வேலை செய்தாலுமே வீட்டில் உங்கள் மனைவியுடன் வீட்டு வேலைகளைப் பகிர்ந்துகொண்டால்தான் இல்லறம் இனிக்கும். வேலையில் எவ்வளவு டென்ஷன் இருந்தாலும், தினமும் இரவு என் மனைவியுடன் சேர்ந்து பாத்திரங்களைத் துலக்கும்போது, நாங்கள் இருவருமே அந்த நேரத்தை ஒன்றாகச் சேர்ந்து செலவழிக்க கிடைக்கும் வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்கிறோம்" என்றார்.

இப்படி 27 ஆண்டுகாலமாக அந்நியோன்யமாக இல்லறத்தை நடத்திய இருவரும், தற்போது தங்களது திருமண உறவை முறித்துக்கொள்வதாகத் தெரிவித்திருப்பது, மக்களிடையே மிகுந்த அதிர்ச்சியையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Bill and Melinda Gates in 2001
Bill and Melinda Gates in 2001
AP Photo/Andy Rogers

இதுகுறித்து பில் கேட்ஸ் - மெலிண்டா வெளியிட்ட அறிக்கையில், ``கடந்த 27 ஆண்டுகளில் மூன்று சிறப்பான பிள்ளைகளை வளர்த்திருக்கிறோம். மேலும், எங்கள் தொண்டு நிறுவனத்தின் மூலம் உலகம் முழுவதிலும் லட்சக்கணக்கான மக்கள் ஆரோக்கியமாக இருக்க வழி செய்திருக்கிறோம். தொண்டு நிறுவனம் சார்ந்து எங்களின் பணிகளில் இணைந்து பயணிப்போம். ஆனால், இல்லற வாழ்வில் அடுத்தகட்டத்தில் இனி எங்களால் பயணிக்க முடியாது. புதிய வாழ்க்கையைத் தொடங்க இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மெலிண்டாவுடன் திருமணம் - ஒரு ஃப்ளாஷ்பேக்!

ஒரு பொறியாளரின் மகளான மெலிண்டா, வடக்கு கரோலினா மாகாணத்தில் இருக்கும் டியூக் பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் புரோகிராமிங் அண்ட் எகனாமிக்ஸ் இளங்கலைப் பட்டத்தை பெற்றுள்ளார். The Fuqua School of Business-ல் எம்.பி.ஏ-வும் படித்தவர். படிப்பை முடித்ததும், 1987-ம் ஆண்டில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் புராடெக்ட் மேனேஜர் பதவியில் சேர்ந்திருக்கிறார் மெலிண்டா. அலுவலக ரீதியான பார்ட்டி ஒன்றில் பில்கேட்ஸ் முதன்முதலில் மெலிண்டாவை சந்தித்திக்க, அதன்பிறகு இவர்கள் இருவருக்குள்ளும் தொடங்கிய நட்பு 1994-ம் ஆண்டு திருமணத்தில் முடிந்திருக்கிறது.

இந்தக் காதல் ஜோடியின் திருமணம், ஹவாய் தீவில் நடந்தபோது, அந்த நேரத்தில் உள்ளூரில் வாடகைக்கு விடப்பட்டிருந்த அனைத்து ஹெலிகாப்டர்களையும் இந்த ஜோடி வாடகைக்கு எடுத்திருக்கிறார்களாம். காரணம், அன்றைய நாளில் தங்களுடைய திருமணத்துக்கு வருபவர்கள் தவிர வேறு தேவையற்ற விருந்தினர்கள் அங்கு வருவதை அந்த ஜோடி விரும்பவில்லை என்றும் கூறப்பட்டது. அந்த அளவுக்கு தங்களுடைய காதலையும் அதைத் தொடர்ந்து அமைந்த திருமண வாழ்வையும் பில்கேட்ஸ்-மெலிண்டா தம்பதி அற்புதமாகக் கருதினர்.

மெலிண்டாவின் பார்வையில் பில்கேட்ஸ், எதைச் செய்தாலும் அதை இதயபூர்வமாகச் செய்பவர் என்று கருதினார். எந்த விஷயத்தைச் செய்தாலும் அதன் சாதக, பாதக அம்சங்களைப் பட்டியலிட்டு அவர் செயல்படுத்துவார் என்கிற நம்பிக்கை தன் கணவர் மீது மெலிண்டாவுக்கு எப்போதும் இருந்ததுண்டு.

தனக்கு முதல் குழந்தை பிறந்த பிறகு, 1996-ம் ஆண்டு மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திலிருந்து ஓய்வுபெற்று சமூக சேவையில் ஈடுபட ஆரம்பித்தார் மெலிண்டா. குறிப்பாக, கல்வி மற்றும் சுகாதாரத்தில் தன்னுடைய கவனத்தைச் செலுத்தினார். தற்போது இவர்கள் இருவருக்கும் மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். சமீபத்திய தரவுகளின்படி பில்கேட்ஸின் சொத்து மதிப்பு சுமார் 145 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இந்த மூவருக்கும் சேர்த்து, ஒருவருக்கு 10 மில்லியன் டாலர்கள் வீதம் 30 மில்லியன் டாலர்கள் மட்டுமே பில்கேட்ஸ் ஒதுக்கி இருப்பதாகத் தெரிகிறது. மற்ற சொத்துகள் அனைத்தும் சமூக சேவைக்கு என அவர் ஏற்கெனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தி மொமென்ட் ஆஃப் லிஃப்ட் புத்தகம்!

The Moment of Lift
The Moment of Lift

2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதல் 23-ம் தேதி மெலிண்டா கேட்ஸ்`தி மொமென்ட் ஆஃப் லிஃப்ட்: பெண்களை மேம்படுத்துவது உலகத்தை எவ்வாறு மாற்றுகிறது’ (The Moment of Lift: How Empowering Women Changes the World) என்கிற தலைப்பில் புத்தகம் ஒன்றை எழுதி வெளியிட்டார். அந்தப் புத்தகத்தில் ஆப்பிரிக்கா, இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் அவர் சந்தித்த பெண்களின் ஊக்கமிகு கதைகளைக் குறிப்பிட்டதோடு, மெலிண்டா அவரது சொந்த பெண்ணிய பரிணாமத்தையும் பகிர்ந்துள்ளார். அதில் மனைவி மற்றும் தாயாக வீட்டில் அவரின் பங்களிப்பு எவ்வாறு இருக்கின்றன என்பதயும் குறிப்பிட்டுள்ளார்.

பில் & மெலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேஷன்!

பில்கேட்ஸ் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் நிர்வாக பொறுப்புகளிலிருந்து வெளியேறிய பிறகு, இவர்கள் இருவரும் சேர்ந்து 2000-ம் ஆண்டு `பில் & மெலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேஷன்' என்கிற அறக்கட்டளையை நிறுவினார்கள். ஆணும் பெண்ணும் சரி சமம் என்பதை வலியுறுத்தும் வகையில், இவர்கள் இருவருமே இந்த அறக்கட்டளையில் தலைமை பொறுப்பு வகித்தார்கள்.

இரட்டை தலைமை குறித்து, கடந்த 2019-ம் ஆண்டில் அசோசியேடட் பிரெஸ் ஊடகத்துக்குப் பேட்டியளித்த மெலிண்டா, ``பில் & மெலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேஷனில் நானும் பில் கேட்ஸும் சமமான கூட்டாளிகள். ஆணும் பெண்ணும் பணியிடத்தில் சரி சமமாக மதிக்கப்பட வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த அறக்கட்டளை பெரும்பாலும் ஆரம்ப சுகாதாரம், கல்வி, பருவநிலை மாற்றத்தைத் தடுக்கும் நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுக்கிறது. தடுப்பூசி தயாரிப்பு திட்டங்களுக்காகவும் கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் ஆராய்ச்சிப் பணிகளுக்காகவும் இந்த அறக்கட்டளை 1.75 பில்லியன் டாலர்களை வழங்கியது.

Bill and Melinda Gates
Bill and Melinda Gates
AP Photo / Elaine Thompson

கடந்த 2019-ம் ஆண்டில் பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேஷனின் சொத்து மதிப்பு 43 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக உயர்ந்தது. இந்த அறக்கட்டளைக்கு அதிகம் சொத்து சேர்த்ததில் மெலிண்டாவின் பங்குதான் அதிகம். இந்த அறக்கட்டளை பணிகள் மட்டுமன்றி `பைவோட்டல் வென்ச்சர்ஸ் (Pivotal Ventures)' என்ற பெண்கள் மற்றும் குடும்பங்களின் நலன்கள் தொடர்பான ஒரு நிறுவனத்தை 2015-ம் ஆண்டில் மெலிண்டா தொடங்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பில்கேட்ஸ் - மெலிண்டா இருவருமே அடுத்தவரின் வெற்றிக்குப் பின்னால் இல்லை; உடன் இருந்தார்கள். இப்படிப்பட்ட தம்பதி 27 ஆண்டுகள் கழித்து திருமண வாழ்விலிருந்து பிரிவதைத்தான் வியப்புடன் பார்க்கிறது உலகம். பெருமூச்சோடு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism