Published:Updated:

`டீன் ஏஜ் காதலால் மதிப்பெண் குறையுமா?’ - ஆய்வு முடிவும், மாணவர்களின் பதிலும்

முதிர்ச்சியில்லாத டீன் ஏஜ் வயசுல காதல் வந்தா, 25 வயசுல முதிர்ச்சி வந்தப்புறம், `இந்த ரிலேஷன்ஷிப் வேண்டாமே'னு தோணலாம்.

Teen age love Vs Education
Teen age love Vs Education

ஜார்ஜியாவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று, `டீன் ஏஜில் காதலில் விழாமல் இருந்தால், பிள்ளைகளின் மனநலன் காக்கப்படுவதுடன் அவர்களால் தேர்வில் அதிக மதிப்பெண்களும் எடுக்க முடியும்' என்று தனது முடிவை வெளியிட்டிருக்கிறது. 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கிற 600 மாணவர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது. இதில் டேட்டிங் செல்லாத, காதலில் விழாத மாணவர்கள் தேர்வில் நல்ல ஸ்கோர் எடுப்பதுடன் மன அழுத்தம் இல்லாமலும் இருக்கிறார்கள் என்று கண்டறியப்பட்டிருக்கிறது.

டீன் ஏஜ்
டீன் ஏஜ்

'இந்த ஆய்வு பற்றிய உங்கள் கருத்து என்ன?' என்று சில டீன் மாணவர்களிடமே கேட்டோம். பெயர், ஊர் அடையாளம் தவிர்க்கப்படுகிறது.

``நான் காதலிச்சேன். இப்ப பிரேக் அப் ஆயிடுச்சு. டீன் ஏஜ்ல லவ் வந்தா ஃபேமிலிகூட, ஃப்ரெண்ட்ஸ்கூட பேசறதுக்கே நேரம் இருக்காது. படிப்பு மேலே கவனம் போகவே போகாது. தவிர, லவ்வரோட கருத்து வேறுபாடு, சண்டைன்னு வந்துட்டா அதைப்பத்தித்தான் யோசனை ஓடிக்கிட்டே இருக்கும். லெக்சரர் என்ன பாடம் நடத்துறாங்கன்னே கவனிக்க முடியாது. என் அனுபவத்துல அந்த ஆய்வு முடிவு சரிதான்!''

``நான் அஞ்சு வருஷமா ரிலேஷன்ஷிப்ல இருக்கேன். எங்களோடது லாங் டிஸ்டன்ஸ் ரிலேஷன்ஷிப். அவர் வெளிநாட்ல இருக்கார். அதனால, தினமும் நைட்ல கொஞ்ச நேரம் பேசறதோட சரி. எக்ஸாம் நேரத்துல, `படிச்சு முடிச்ச பிறகு உங்களுக்கு போன் பண்றேன்'னு நானே சொல்லிடுவேன். அவரும், `அடுத்த வாரம் உனக்கு செமஸ்டர் இருக்கில்ல? போய் படி'ன்னு சொல்லிடுவார். நம்மளைப் புரிஞ்சுக்கிட்ட லவ்வரா கிடைச்சா படிப்பும் கெடாது, எதிர்காலமும் பாதிக்காது!''

டைம் மேனேஜ்மென்ட் படிப்புக்கு மட்டுமல்ல, லவ்வுக்கும் அவசியம்.

``நான் ரெண்டு வருஷமா காதலிக்கிறேன். லவ் பண்ண ஆரம்பிக்கிற அந்த முதல் ரெண்டு, மூணு மாசங்கள் வேணும்னா, அந்த ஃபீலிங் புதுசுங்கிறதால, படிப்புல தடுமாறுவாங்க. அதுக்கப்புறம் காதலும் வாழ்க்கையில ஒரு பார்ட்னு போயிடும். ஆனா, எக்ஸாமுக்கு முந்தின நாள் உங்களுக்குள்ள ஒரு சண்டை வந்தா, அது நிச்சயமா அரியர்ஸ் வாங்க வெச்சுடும்!''

``நான் இதுவரை யாரையும் காதலிச்சதில்ல. என் ஃப்ரெண்ட் லவ் பண்ணிக்கிட்டிருக்கா. அவ பல தடவை, லவ்வர்கிட்ட சண்டை போடுறது, அழறது, படிக்க முடியாமக் கஷ்டப்படறதுனு இருக்கிறதைப் பார்த்திருக்கேன். இந்த வயசுல படிப்பு, காதல் ரெண்டையும் மேனேஜ் பண்ண முடியாது. லைஃப் பார்ட்னர் செலக்ட் பண்ற வயசும் இது கிடையவே கிடையாது. எங்கேயோ ஒரு சிலர்தான் டீன் ஏஜ்ல படிப்பு, காதல்னு ரெண்டிலும் சக்ஸஸ்ஃபுல்லா இருக்கிறாங்க. எல்லாருக்கும் இது சாத்தியமில்ல.''

'டீன் ஏஜ் காதலால் மதிப்பெண் குறையுமா?'
'டீன் ஏஜ் காதலால் மதிப்பெண் குறையுமா?'

``எனக்கு பிரேக் அப் ஆயிடுச்சு. அந்த ஆய்வு சொல்ற அளவுக்கு, காதல் படிப்பை பாதிக்கும்னு நான் நினைக்கலை. லவ் பண்ண ஆரம்பிச்ச புதுசுல ஒருத்தரையொருத்தர் புரிஞ்சுக்கிறதுக்காக பொழுது முழுக்கப் பேசிட்டேயிருப்போம். இது கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சு ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கிட்டதுக்கு அப்புறம், பொண்ணு போன் பண்ணினாகூட, `நீ படி'ன்னு சொல்ற பசங்களும் இருக்காங்க. ஒருவேளை லவ்வர்ஸுக்குள்ள சண்டை வந்தா, அது தீருகிற வரைக்கும் படிப்பு மேல கவனம் போகாது. அந்த வகையில வேணும்னா மனநலன், படிப்பு ரெண்டும் பாதிக்கப்படலாம்.''

``நான் லவ் பண்ணிக்கிட்டிருக்கேன். காதல் வேற; படிப்பு வேற. நான் ரெண்டையும் குழப்பிக்கிறது இல்ல. அதுல ரொம்பத் தெளிவா இருக்கேன். காதல்ல இன்னிக்கு சண்டை வரும்; நாளைக்கு சரியாகிடும். ஆனா, படிப்பு போனா லைஃப் போயிடும். டைம் மேனேஜ்மென்ட் படிப்புக்கு மட்டுமல்ல, லவ்வுக்கும் அவசியம். இது படிப்புக்கான நேரம், இது லவ்வர்கிட்ட பேசற நேரம்னு பிரிச்சுக்கிட்டா ரெண்டிலும் சக்சஸ்ஃபுல்லா இருக்க முடியும்!''

ஒரு சிலருக்கு வேணும்னா காதல் ஓர் உத்வேகம் கொடுத்துப் படிக்க வைக்கும்.

``அந்த ஆய்வு உண்மைதாங்க. படிக்கிற வயசுல லவ் பண்ணிக்கிட்டு சரியான பாதையில போகாம, வேற எங்கேயோ போய் முட்டிக்கிட்டு நின்னவங்க நிறைய பேரைப் பார்த்துட்டேன். டீன் ஏஜ்ல வர்ற குறுகுறுப்பை காதல்னு நினைக்காம கடந்துட்டா எங்களுக்கும் நல்லது; எங்க குடும்பங்களுக்கும் நல்லது. `பொண்ணு ஓகே சொல்லிட்டா மச்சான், அவகிட்டே பேசிட்டேன்'னு தலைகால் புரியாம ஆகுறது, நோ சொல்லிட்டா மனசொடிஞ்சு போறது... ரெண்டுமே வேண்டாங்க. காதல் எனக்கும் வந்துச்சு. ஆனா, நான் அதை பெருசா எடுத்துக்கலை. 17 வயசுல காதல்னு சொல்லிக்கிட்டு திரியறதுல எனக்கு நம்பிக்கை இல்ல. இந்த வயசுல வர்ற காதல் கடைசி வரைக்கும் இருக்காது. இது காதலே கிடையாது.''

``இந்த வயசுல வர்ற காதலில் முதிர்ச்சி இருக்காது. ஒரு சிலருக்கு வேணும்னா காதல் ஓர் உத்வேகம் கொடுத்துப் படிக்க வைக்கும். அது அரிது. டீன் ஏஜ் காதல் அப்போதைக்கு சந்தோஷம் கொடுக்கலாம். ஆனா, பிற்கால வாழ்க்கை பாதிக்கப்படும்.''

``அந்த ஆய்வு முடிவை நான் ஒத்துக்கிறேன். வாழ்க்கையோட அடித்தளம் போடுற நேரம்தான் டீன் ஏஜ். அப்போ லவ் பண்ணிக்கிட்டு அலைஞ்சா வாழ்க்கையே மாறிப்போயிடலாம். முதிர்ச்சியில்லாத டீன் ஏஜ்ல வயசுல காதல் வந்து, 25 வயசுல முதிர்ச்சி வந்தப்புறம், `இந்த ரிலேஷன்ஷிப் வேண்டாமே'னு தோணலாம். தவிர, நம்ம வீட்டு நிலைமையையும் யோசிக்கணும். கோல் செட் பண்ணி ஹார்ட் வொர்க் செய்ய வேண்டிய நேரத்துல லவ்வைத் தவிர்த்திட்டா நல்லா இருக்கலாம்.''

`டீன் ஏஜ் காதலால் மதிப்பெண் குறையுமா?'
`டீன் ஏஜ் காதலால் மதிப்பெண் குறையுமா?'

``அந்த ஆய்வு நூத்துக்கு நூறு உண்மைதான். படிக்கிற வயசுல வர்ற லவ்வை அவாய்டு பண்ணினாதான் நல்லது. ப்ளஸ் டூவில எடுக்கிற மார்க்தான், நான் டாக்டர் ஆகப்போறேனா, ஆர்ட்ஸ் காலேஜ்ல சேரப் போறேன்னா முடிவு பண்ணும். படிச்சு முடிச்சு வேலைக்குப் போனதுக்கப்புறம் லவ் பண்ணிக்கலாம். டீன் ஏஜ்ல வேணாம்.''

டீன் ஏஜ் குழந்தைகள் பெற்றோரிடமிருந்து விலகுவது ஏன்? #LifeStartsAt40 #நலம்நாற்பது