Published:Updated:

சுடர்விடும் மனைவிகள்... தூண்டுகோலாய் கணவர்கள்!

வெற்றிக்குப் பின்னே...
பிரீமியம் ஸ்டோரி
News
வெற்றிக்குப் பின்னே...

வெற்றிக்குப் பின்னே...

மனைவியின் திறமைக்கு ஊக்கம் கொடுத்து, வாழ்க்கைத் துணையைப் பிரபலமாக்கி அழகுபார்க்கும் கணவர்கள் அமைவது வரம். அந்த வகையில், மனைவிக்குப் பின்னணியில் இருந்து நம்பிக்கையளித்து, மீடியா வெளிச்சம் படாமல் இருக்கும் கணவர்கள் சிலர், தங்கள் வாழ்க்கைத் துணையின் வளர்ச்சி குறித்துப் பேசுகின்றனர்.

சொந்தத் திறமையால புகழ்பெற்றவங்க தமிழிசை - டாக்டர் செளந்தரராஜன்

(தெலங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை செளந்தரராஜனின் கணவர்)

“எங்களுடையது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட கல்யாணம். அந்த நேரத்துல சிறுநீரக பட்ட மேற்படிப்பை நானும், தமிழிசை எம்.பி.பி.எஸ் இரண்டாம் ஆண்டும் படிச்சுகிட்டு இருந்தோம். அப்போதே ஒருவரை ஒருவர் நல்லா புரிஞ்சுகிட்டு விட்டுக்கொடுத்துப் போனோம். அதனால, எங்க படிப்பிலும் குடும்ப வாழ்க்கையிலும் எந்தச் சிக்கலும் ஏற்படல. மக்கள் பணிக்காக பி.ஜே.பி-யில் இணைஞ்சதால தமிழிசை நிறைய சவால்களை எதிர்கொண்டாங்க.

சுடர்விடும் மனைவிகள்... தூண்டுகோலாய் கணவர்கள்!

‘வளர்ச்சி பெறாத பி.ஜே.பி-யில் சேர்ந்து என்ன பண்ணப் போறாங்க?’ன்னு அப்போ தமிழிசையைப் பலரும் பாவமாகவே பார்த்தாங்க. பிரபலமான பிறகும், உருவகேலி, கிண்டல்னு அவங்க அளவுக்கு அரசியல்ல எந்தப் பெண்ணும் விமர்சனத்துக்கு ஆளாகியிருக்க மாட்டாங்க. எதையும் கண்டுக்காம, எதிர்காலத்துல பெரிய பொறுப்புகள் கிடைக்கும்னு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமதான் என் மனைவி அரசியல்ல வேலை செஞ்சாங்க. ஆனா, மக்கள் பிரதிநிதியாகும் ஆசை மட்டும் தமிழிசைக்கு நிறைவேறல.

சிறுநீரக சிறப்பு மருத்துவரா வருஷக்கணக்குல உழைச்சு நான் பணம் சேர்ப்பேன். அதெல்லாம், என் மனைவி வேட்பாளரா போட்டியிடும்போது, தீபாவளி பட்டாசு போல ஒரே தேர்தல்ல காலியாகிடும். இதனால, விளையாட்டா சிரிப்போம். எல்லோருடனும் கனிவோடு நடந்துகொள்ளும் தமிழிசை, ரொம்பவே யோசிச்சுதான் ஒவ்வொரு முடிவையும் எடுப்பாங்க.

கல்யாணமான புதுசுல, ‘குமரி அனந்தன் மருமகன்’னு சொன்னாங்க. என் மனைவி பிரபல மானதும், ‘தமிழிசையின் கணவர்’னு சொல்றாங்க. இது பார்க்குற, பேசுறவங்களோட இயல்பு. டாக்டரா என்னோட பணியுடன், மனைவியின் வளர்ச்சிக்கும் முழு ஆதரவு கொடுத்து, கணவராவும் என் கடமையைச் சரியா செய்யுறேன். ஒவ்வொருத்தர் வளர்ச்சிக்கும் அவரவர் திறமைதான் முதல் காரணமா இருக்கும். அந்த வகையில மருத்துவம் அரசியல்னு ரெண்டு தளத்துலயும் சொந்தத் திறமையாலதான் தமிழிசை புகழ்பெற்றாங்க. அவங்களோட திறமைக்குச் சிறு தூண்டுகோலாக ஊக்கம் மட்டுமே கொடுக்கிறேன்.”

சுடர்விடும் மனைவிகள்... தூண்டுகோலாய் கணவர்கள்!

மனைவியின் விருப்பத்துக்குத் தடை சொல்லவே மாட்டேன்! - ராமகிருஷ்ணன்

(நடிகை மற்றும் இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணனின் கணவர்)

“என்னோடது கூட்டுக்குடும்பம். அங்கே பெண்கள் குனிஞ்ச தலை நிமிராம கட்டுப்பாடுகளுடன்தான் இருக்கணும். அப்படிப்பட்ட குடும்பத்துலயும் தன்னோட சுயமரியாதையை இழக்காம, நியாயமான விஷயங்களை யாருக்காகவும் விட்டுக்கொடுக்காம, லட்சுமி எல்லோரையும் அரவணைச்சுப் பொறுப்புடன் நடந்துகிட்டாங்க. அந்தக் குணம்தான் என் மனைவி மேல எனக்குப் பெரிய மதிப்பை உண்டாக்கிச்சு.

வெளிநாட்டு வேலையில இருந்து நான் சென்னை திரும்பின நேரத்துலதான், லட்சுமி சினிமாவுல ஆக்டிவ்வா நடிக்க ஆரம்பிச்சாங்க. ‘சினிமாவுல நடிக்கிறது நம்ம குடும்பத்துக்குச் சரிவராது’ன்னு குடும்பத்துல எதிர்ப்பு கிளம்புச்சு. கல்யாணத்துக்குப் பிறகு, நாங்க குளோஸ் ஃபிரெண்ட்ஸ். நம்ம தோழன்/தோழியோட விருப்பத்துக்கு எதிரா நாம நிற்போமா... என் மனைவியின் எந்த விருப்பத்துக்கும் நான் தடை சொல்லவே மாட்டேன். அதனால, சந்தோஷமா சினிமாவுல வேலை செய்யுறாங்க.

எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் வரும் போது, இறுதியில யாராச்சும் ஒருத்தரோட வாதத்தை இன்னொருத்தர் உடன்பட்டு ஏத்துப் போம். இருவருடைய வேலை விஷயம் பத்தியும் ஆரோக்கியமான முறையில விவாதிப்போம். என் மனைவி தொடர்ந்து வளர்வதையும் புகழ் பெறுவதையும் பார்த்துப் பெருமிதப்படுறேன். அதைவிட, என்னோட ஒவ்வொரு வளர்ச்சியைப் பார்த்து லட்சுமி பூரிப்படைவாங்க.

ஆராய்ச்சித்துறை வேலையில நானும், மீடியா துறையில மனைவியும் பிஸியா வேலை செஞ்சாலும், வீட்டுல எல்லா வேலைகளையும் பகிர்ந்துதான் செய்வோம். ஷூட்டிங், ஸ்கிரிப்ட் ரைட்டிங்னு லட்சுமி பிஸியா இருக்கும்போது, நான் சமைப்பேன்; வீட்டு வேலைகள் செய்வேன். இந்தப் பழக்கத்தால, கோவிட் லாக்டெளன் நேரம் எங்களுக்கு இனிமை யான தருணமா அமைஞ்சது. லாக்டெளன்ல இருந்து இப்ப வரை நான் சலூன் போகல. ஒரு வருஷமா லட்சுமிதான் எனக்கு முடி வெட்டிவிடுறாங்க. கணவன் மனைவியா இல்லாம, நாங்க ஃபிரெண்ட்ஸா இருக்கிறதால எங்களுக்குள் பிரிவோ, சண்டையோ, போட்டி பொறாமைகளோ ஏற்படுறதில்ல. இதை வெளியுலகம் எப்படிப் பார்த்தாலும் எங்களுக்குக் கவலையில்ல!”

சுடர்விடும் மனைவிகள்... தூண்டுகோலாய் கணவர்கள்!
படம்: பா.காளிமுத்து

மல்லிகாவின் அங்கீகாரத்தில் எனக்கு அளவுகடந்த பெருமிதம்! - பத்ரிநாத்

(சமையற்கலை நிபுணர் மல்லிகா பத்ரிநாத்தின் கணவர்)

“கல்யாணத்துக்குப் பிறகு, இல்லத்தரசியா இருந்த மனைவிக்குச் சமையற்கலையில ஆர்வம் அதிகரிச்சது. இன்டர்நெட் இல்லாத அந்தக் காலகட்டத்துல, தன்னோட தோழிகள், எங்க குடும்பப் பெண்கள் பலர்கிட்டயும் சமையல் விஷயங்களை விவாதிச்சும், சொந்த முயற்சியில புதுப்புது ரெசிப்பிகளைச் செஞ்சு பார்த்தும்தான் தன்னோட சமையல் திறனை மல்லிகா வளர்த்துகிட்டாங்க.

மனைவியின் திறமையை அடுத்தகட்டத்துக்குக் கொண்டுபோக நினைச்சேன். அவங்களோட தனித்துவமான ரெசிப்பிகளைப் புத்தகமா வெளியிட நிறைய மெனக்கெட்டோம். பதிப்பகங் கள்ல எங்களுக்குப் பெரிசா ஊக்கம் கிடைக்கல. அதனால, அடுத்தடுத்து நாங்களே ரெசிப்பி புத்தகங்களைச் சொந்தமா பிரின்ட் பண்ணி வெளியிட்டோம். 1990-கள்ல முன்னணி டிவி சேனல்கள்லயும் சமையல் நிகழ்ச்சிகள் செய்ததால மல்லிகாவுக்கு நல்ல அடையாளம் கிடைச்சது. புக் ஸ்டோர்ஸ், சூப்பர் மார்க்கெட்னு பல இடங்கள்லயும் எங்க ரெசிப்பி புத்தகங்களுக்கு வரவேற்பு அதிகரிச்சது. சிறப்பா சமைச்சு, ரெசிப்பிகளை எழுதுவாங்க என் மனைவி. அதை நான் பிசினஸா கொண்டுபோனேன். பல புத்தகங்கள் லட்சக்கணக்கில் விற்பனையாகியிருக்கு. இதுவரை 30 புத்தகங்களை வெளியிட்டிருக்கோம். மசாலா கம்பெனி ஒன்றையும் நல்லபடியா நடத்தினோம்.

தன்னோட புத்தகங்கள், குடும்பப் பெண்கள் பலருக்கும் உதவியா இருக்குனு மல்லிகாவுக்கு சந்தோஷம். தனக்குத் தெரிஞ்ச சமையற்கலையைப் பிறருக்குச் சொல்லிக்கொடுத்து, ஏராளமான சமையற்கலைஞர்களையும் என் மனைவி உருவாக்கியிருக்காங்க. கணவனோட வளர்ச்சியைப் பார்த்து ஒரு மனைவி எப்படிப் பெருமைப்படுவாங்களோ, அதுபோலவே மல்லிகாவின் திறமைக்குப் பெரிய அளவுல அங்கீகாரம் கிடைக்குதுனு எனக்கு அளவுகடந்த பெருமிதம். இதுக்காகவே, என்னோட ஆடிட்டர் வேலைகளையும் கணிசமா குறைச்சுகிட்டேன்.”

சுடர்விடும் மனைவிகள்... தூண்டுகோலாய் கணவர்கள்!

பிடிச்ச வேலைகளைச் சந்தோஷமா செய்யட்டுமே... - வினீத் முத்துக்கிருஷ்ணன்

(தொகுப்பாளர் அர்ச்சனாவின் கணவர்)

“நாங்க காதலர்களா இருந்த நேரம். ‘இளமை புதுமை’ நிகழ்ச்சித் தொகுப்பாளரா அர்ச்சனா அப்பவே ஃபேமஸா இருந்தாங்க. ‘கல்யாணத்துக்குப் பிறகும், உன் விருப்பம்போல திறமையை வெளிப்படுத்து. என்னால உன் கரியருக்கும் கனவுகளுக்கும் எந்தத் தடையும் இருக்காது’ன்னு நம்பிக்கை கொடுத்தேன். எங்க ரெண்டு குடும்பங்களும் முற்போக்கா யோசிப்போம். பெண்கள் வீட்டுக்கு வெளியேயும் சாதிக்கணும்னு நினைப்போம். பெண்ணோட திறமையை ஏத்துக்கிறதுதான் ஆண்களுக்கு உண்மையான பெருமை. ‘என் பொண்டாட்டி மீடியாவுல வேலை செய்யுறாங்க’ன்னு நானும், ‘மருமக ஃபேமஸான தொகுப்பாளர்’னு என் பெற்றோரும் தெரிஞ்சவங்ககிட்ட சொல்லிப் பெருமைப்படுவோம்.

கல்யாணம் ஆனதுல இருந்து இப்பவரை, எங்க ரெண்டு குடும்பங்களையும் எந்த இடத்துலயும் அர்ச்சனா விட்டுக்கொடுத்ததே இல்ல. ‘இது ஆண் செய்யணும், இது பெண் செய்யக் கூடாது’ங்கிற எந்தப் பேச்சும் எங்களுக்குள் இருக்காது. என்னோட வேலைச் சூழலால, மாசத்துல சில நாள்கள்தான் வீட்டுக்கு வருவேன். என்னோட பொறுப்பையும் அர்ச்சனாதான் இப்பவரை கூடுதலா கவனிச்சுக் கிறாங்க. வீட்டு நிர்வாகத்துலயும், மீடியா வேலையிலும் முழு ஈடுபாட்டுடன் வேலை செய்வாங்க. தன் பெற்றோரைப்போலவே, மாமனார் மாமியாருக்கும் தன்னோட மனைவி முக்கியத்துவம் கொடுக்கணும்னுதானே பெரும் பாலான ஆண்கள் எதிர்பார்ப்பாங்க. இதை யாரும் சொல்லாமலேயே பொறுப்புடன் செய்யுற அர்ச்சனா, எந்த விஷயத்துலயும் இதுவரை எனக்கு அழுத்தம் கொடுத்ததே இல்ல.

எல்லா சவாலான தருணங்களையும் ஒற்றுமை யுடன் கடந்து வந்தோம். அதனால, இயல்பாவே அர்ச்சனா மேல எனக்கு மதிப்பு கூடிட்டேதான் இருக்கு. அர்ச்சனாவும் வேலைக்குப் போறதால கூடுதல் வருமானம் கிடைக்குதுங்கிறதெல்லாம் முக்கியமானதே இல்ல. அவங்களுக்குப் பிடிச்ச துறையில வேலை செய்யுறதால, எப்போதும் மகிழ்ச்சியா இருப்பதோடு, குடும்பத்தையும் நல்லா பார்த்துக்கிறாங்க. இது ஆக்டிவ்வா வேலை செய்யுற வயசு. எப்போ ஓய்வு எடுக்கணும்னு தோணுதோ அப்போ மீடியாவுல இருந்து விலகட்டும். அதுவரைக்கும் பிடிச்ச வேலைகளைச் சந்தோஷமா செய்யட்டுமே!”