Published:Updated:

`இவள் என்னை அழ வைத்துவிட்டாள்..!'- மகளின் வீடியோவால் நெகிழ்ந்த சுஷ்மிதா சென்

``குழந்தைகளை சுமந்து பெற்றவர்கள் தங்கள் வயிற்றிலிருந்து பெற்றெடுக்கிறார்கள். தத்தெடுத்தவர்கள் தங்கள் குழந்தைகளை இதயத்திலிருந்து பெற்றெடுக்கிறார்கள்.''

சுஷ்மிதாவின் மகள்
சுஷ்மிதாவின் மகள் ( instagram.com/sushmitasen47 )

சுஷ்மிதா சென் உலக அழகி மட்டுமல்ல, இரண்டு பெண் குழந்தைகளைத் தத்தெடுத்த `தாய்மை அழகி'யும்கூட. தற்போது 43 வயதான சுஷ்மிதா 2000-த்தில் தன்னுடைய முதல் பெண் குழந்தையைத் தத்தெடுத்தார். பெயர் ரெனீ. அதன்பிறகு 10 வருடங்கள் கழித்து தன்னுடைய இரண்டாவது பெண் குழந்தையைத் தத்தெடுத்தார். பெயர் அலிஷா. தற்போது 10 வயதாகிற அலிஷாவின் வீடியோ ஒன்றும் அதற்கு சுஷ்மிதாவின் போஸ்ட்டும்தான் சமூக வலைத்தளங்களின் லவ்வபிள் வைரல். 

பொதுவெளிகளில் சுஷ்மிதா சென்  பேசும்போதெல்லாம்,  `குழந்தைகளை சுமந்து பெற்றவர்கள் தங்கள் வயிற்றிலிருந்து பெற்றெடுக்கிறார்கள். தத்தெடுத்தவர்கள் தங்கள் குழந்தைகளை இதயத்திலிருந்து பெற்றெடுக்கிறார்கள்' என்பார். அவர் சொன்னது நூறு சதவிகிதம் உண்மையென்பது, அவருடைய குழந்தை வளர்ப்பிலிருந்து நன்கு தெரிந்துவிட்டது. 

அவருடைய இளைய மகள் அலிஷா, தன் பள்ளிக்கூடத்துக்காக தான் எழுதிய ஆங்கிலக் கட்டுரை ஒன்றை லேசான மழலைத்தன்மையுடன் சரியான ஏற்ற இறக்கங்களுடன் படிக்கிறார். `ஆதரவற்றோர் இல்லத்திலிருந்து குழந்தையை தத்தெடுத்தல் என்னுடைய டாபிக். உங்களுடையக் குழந்தையை நீங்களே தேர்ந்தெடுக்கலாம். அது அழகானதோர் உணர்வு. எங்களைப் போன்றவர்களுக்கும் அன்பு தேவைப்படுகிறது' என்று உணர்ச்சிப்பெருக்கான வார்த்தைகளுடன் அந்தக் கட்டுரையை வாசிக்கிறார் அலிஷா.  

மகள்களுடன் சுஷ்மிதா
மகள்களுடன் சுஷ்மிதா
instagram.com/sushmitasen47

அலிஷா கட்டுரை படிப்பதை வீடியோ எடுத்துக்கொண்டிருக்கும் சுஷ்மிதா, மகள் தன்னைப்பற்றி பேசுகிற இடத்தில் உணர்ச்சிவசப்பட்டு நெக்குருகியதோடு, அலிஷா தன் கட்டுரையில் வாசித்த 'நீங்கள் எங்களுக்கு உயிரைக்கொடுத்தீர்கள். நீங்கள் ஒருவரைக் காப்பாற்றினீர்கள்' என்ற வார்த்தையை தன்னுடைய இன்ஸ்டாவில் `இவள் என்னை அழ வைத்துவிட்டாள்' என்று நெகிழ்ந்திருக்கிறார்.

அலிஷாவின் வீடியோவையும் சுஷ்மிதாவின் போஸ்ட்டையும் படித்த நெட்டிசன்கள், `அருமையான வளர்ப்பு', `அவள் உங்கள் தேவதை' என்று கமென்டிட்டு வைரலாக்கி வருகிறார்கள்.