Published:Updated:

மணமகள் - திருநங்கை, மணமகன் - திருநம்பி... இந்தியாவின் முதல் திருநர் தம்பதியின் காதல் கதை!

பெரும் போராட்டங்களுக்குப் பிறகு, இறுதியில் ஒன்று சேரும் காதலர்கள், காலகாலத்துக்கும் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள் என்று இறுதிக் காட்சியில் குறிப்புடன் முடியும் ஒரு காதல் திரைப்படம் போன்றதல்லவே எதார்த்த வாழ்வு?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சென்னை பெரியார் திடலில் 2018-ம் ஆண்டு மார்ச் 8 ‘உழைக்கும் மகளிர் தின’த்தன்று நடந்தது ஒரு திருமணம். பெரியார் திடலில் வழக்கமாக நடைபெறும் சாதி, சடங்கு மறுப்புத் திருமணங்களின் சிறப்பைத் தாண்டி, இந்தியாவில் ஒரு திருநங்கைக்கும், ஒரு திருநம்பிக்கும் நடைபெறும் முதல் திருமணம் என்ற புதியதொரு சிறப்பை அந்தத் திருமணம் தாங்கியிருந்தது.

ஆணாக இருந்து பெண்ணாக மாறிய திருநங்கை பிரீத்திஷாவுக்கும், பெண்ணாக இருந்து ஆணாக மாறிய திருநம்பி பிரேம்குமரனுக்கும் நடந்த அந்தத் திருமணம், இந்தியாவில் சட்டப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்ட முதல் திருநர் திருமணம் என்ற வரலாற்றுச் சிறப்பைப் பெற்றது.

திருநெல்வேலி மாவட்டம் கல்யாணபுரத்தைப் பூர்விகமாகக் கொண்ட பிரீத்திஷா, 1988-ம் ஆண்டு, தன்னுடைய பெற்றோருக்கு மூன்றாவது குழந்தையாக, ஓர் ஆணாகப் பிறந்தார். எல்லா குழந்தைகளையும் போல் இயல்பாக வளர்ந்துவந்த பிரீத்திஷா, 14 வயதில் தன்னை ஒரு பெண்ணாக உணரத் தொடங்கியிருக்கிறார். இதை அறிந்து பெற்றோர் அதிர்ச்சியடைய, வீட்டில் இதுவொரு பெரிய நெருக்கடியாக உருவெடுக்கவே வீட்டிலிருந்து வெளியேறி புதுச்சேரியில் ஓர் உறவினர் வீட்டில் தஞ்சமடைந்தார். அங்கு சில திருநங்கைகளின் அறிமுகம் ஏற்படவே, அவர்களோடு சேர்ந்து மஹராஷ்டிர மாநிலம் புனேவுக்குப் பிரீத்திஷா இடம்பெயர்ந்தார்.

திருநர் தம்பதி
திருநர் தம்பதி

சிறுவயதிலிருந்தே உழைப்பின் மீது பெரும் பிடிப்பு கொண்டிருந்த பிரீத்திஷா, திருநங்கைகள் தங்கள் வாழ்வாதாரத்துக்காக மேற்கொள்ளும் செயல்களில் ஈடுபடாமல், தோழி ஒருவரின் ஆலோசனையின் பேரில் புறநகர் ரயில் நிலையங்களில் கீ செயின்கள் உள்ளிட்ட பொருள்களை விற்கத் தொடங்கியிருக்கிறார். இது அங்குள்ள மற்ற திருநங்கைகளின் எதிர்ப்பைப் பெற்றுத் தந்தது. எப்பாடு பட்டாவது வாழ்க்கையில் மேலே வந்துவிட வேண்டும் என்ற தீர்மானத்துடன் அந்த எதிர்ப்புகளைக் கடந்து முன்னர்ந்துவந்தார் பிரீத்திஷா. இந்தப் பின்னணியில், தொழில் மூலம் கிடைத்த வருமானத்தையும், தன்னுடைய சேமிப்பிலிருந்த தொகையையும் கொண்டு, 17 வயதில் பால் மாற்று அறுவை சிகிச்சை செய்து திருநங்கையாக மாறினார் பிரீத்திஷா.

அந்தக் காலகட்டத்தில் திருநங்கைகள் சிலரின் மூலமாகக் கிடைத்த தொடர்புகள் வழியே, பிரீத்திஷாவுக்கு டெல்லியில் உள்ள ஒரு கலைக் குழுவின் அறிமுகம் கிடைத்தது. நடிப்பின் மீது கொண்ட ஈடுபாட்டால், டெல்லிக்குச் சென்று கலைக் குழுவில் இணைந்தார் பிரீத்திஷா. முறையான நடிப்புப் பயிற்சி இல்லையென்றாலும், கற்றுக் கொள்ளும் தீராத ஆர்வம் அவரை இயக்கவே, தொடர்ந்து நாடகங்களில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார் பிரீத்திஷா. இது அவரது தன்னம்பிக்கைக்குத் தொடர்ந்து வலுசேர்த்து வந்தது.

பிரீத்திஷா
பிரீத்திஷா

சுமார் 3 ஆண்டுகள் டெல்லிவாசத்துக்குப் பின் சென்னை திரும்பிய பிரீத்திஷா, ஜெயராவ் மாஸ்டரிடம் முறையாக நடிப்புப் பயிற்சி பெற்றார். இதைத் தொடர்ந்து குறும்படங்கள், மேடை நாடகங்கள் ஆகியவற்றில் நடித்துவந்த பிரீத்திஷாவுக்கு, திரைப்படங்களிலும் நடிக்க வாய்ப்பு வந்தது; தனியார் தொலைக்காட்சிகளிலும் குழந்தைகளுக்கு நடிப்புப் பயிற்றுநராகப் பகுதி நேரப் பணிகளிலும் பிரீத்திஷா ஈடுபட்டுவந்தார். பிரீத்திஷா தன்னுடைய பள்ளிப் படிப்பை எட்டாம் வகுப்புடன் இடைநிறுத்தினாலும், பின்னர் 10, 12 ஆகிய வகுப்புகளைத் தனித்த தேர்வராகப் படித்துத் தேர்ச்சி பெற்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தக் காலகட்டத்தில்தான் ஃபேஸ்புக் மூலமாக பிரீத்திஷாவும் பிரேம்குமரனும் அறிமுகமாகின்றனர்.

ஈரோட்டில் 1991-ம் ஆண்டு பெண்ணாகப் பிறந்த பிரேம்குமரன், தன்னுடைய 14 வயதில் தன்னை ஓர் ஆணாக உணரத் தொடங்கியிருக்கிறார். இதை அறிந்த பிரேம்குமரனின் குடும்பம், எல்லா குடும்பங்களையும் போலவே அதிர்ச்சியடைந்தது. பிரேம்குமரனுக்கோ அவரது குடும்பத்தினருக்கோ வழிகாட்ட யாருமில்லாத நிலையில், உடல்-மன ரீதியாக மிகப்பெரும் போராட்டங்களைச் சந்தித்துக் கொண்டிருந்தார் பிரேம்குமரன். இந்தப் பின்னணியில்தான், 2012-ம் ஆண்டு பிரேம்குமரனுக்கு ஃபேஸ்புக் மூலமாகப் பிரீத்திஷாவின் அறிமுகம் கிடைக்கிறது. அப்போது தன்னுடைய நிலை பற்றி பிரீத்திஷாவிடம் மனம் விட்டுப் பேசிய பிரேம்குமரனுக்கு இளைப்பாற ஒரு மரமாகப் பிரீத்திஷா அமைந்தார்.

பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்வது என்று முடிவெடுத்த பிரேம், சென்னை வந்து பிரீத்திஷாவைச் சந்தித்தார். காலம் விரைவில் தங்களை ஒன்றுசேர்க்கப் போகிறது என்பது குறித்த எந்தக் குறிப்பும், அவர்களுடைய இந்த முதல் சந்திப்பில் இல்லை.

பிரேம்குமரன்
பிரேம்குமரன்

தொடர்ந்து தங்கள் பிரச்னைகள், கவலைகள், எதிர்கொள்ளும் சங்கடங்கள் ஆகியவற்றை இருவரும் ஒருவரிடம் ஒருவர் மனம் விட்டுப் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினர். அப்படியான ஓர் உரையாடலின்போதுதான், பிரேம் ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்வதிலும், பிரீத்திஷா ஓர் ஆணைத் திருமணம் செய்துகொள்வதிலும் உள்ள சிக்கல்களை விரிவாகப் பேசியிருக்கின்றனர். இது இயல்பாக, “நாமே ஏன் திருமணம் செய்துகொள்ளக் கூடாது?” என்ற கேள்வியில் வந்து நிற்க, அதற்கு விடையாக மலர்ந்தது ஓர் அழகிய காதல்!

அந்தக் காதல் வளர்ந்து திருமணமாகப் பரிணமித்து இருவரையும் ஒன்றிணைத்தது. சும்மா நடந்துவிடவில்லை திருமணம். பல புறக்கணிப்புகளையும், போராட்டங்களையும் தாண்டிவந்தே இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள். சட்டப்படி பதிவுத் திருமணம் செய்துகொண்ட முதல் திருநர் தம்பதியினர் என்றாலும், அதன் முழுமையான அங்கீகாரம் இன்னும் இவர்களுக்குக் கிடைக்கவில்லை. இதுவொரு தடையாக இல்லாமல், வாழ்வை முன்னகர்த்திச் செல்லும் முனைப்பில் தங்களைத் தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டனர் பிரீத்திஷாவும் பிரேம்குமரனும்.

பெரும் போராட்டங்களுக்குப் பிறகு, இறுதியில் ஒன்று சேரும் காதலர்கள், காலகாலத்துக்கும் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள் என்று இறுதிக் காட்சியில் குறிப்புடன் முடியும் ஒரு காதல் திரைப்படம் போன்றதல்லவே எதார்த்த வாழ்வு?
பிரீத்திஷா - பிரேம்குமரன்
பிரீத்திஷா - பிரேம்குமரன்

முழு நேரப் பணியாக அல்லாமல் நடிகர், பகுதி நேர நடிப்புப் பயிற்சியாளர் என பிரீத்திஷா இயங்கிவந்தார். இந்தக் காலகட்டத்தில்தான், உணவு டோர் டெலிவரி செய்யும் தனியார் நிறுவனம் ஒன்றில் பிரீத்திஷாவுக்கு முழு நேர வேலை கிடைத்தது. இந்தியாவின் முதல் திருநங்கை டோர் டெலிவரி செய்பவர் என்ற பெருமையையும் இப்போது பிரீத்திஷா பெற்றார். திருமண வாழ்வின் தொடக்கத்திலிருந்த இவர்களுக்கு, இந்தப் பணியின் மூலம் கிடைத்த வருமானம், மதிப்புமிக்க வாழ்வை உறுதிசெய்தது.

எதிர்பார்ப்பைவிடவும் தன்னுடைய பணியில் சிறப்பாகச் செயல்பட்டுவந்த பிரீத்திஷாவுக்கு நிறுவனம் மிகவும் பக்கபலமாக இருந்தது. ஆனால், இது தொடர்ந்து நீடிக்கவில்லை. பிரீத்திஷா வேலை பார்த்துவந்த நிறுவனம், ஒருகட்டத்தில் மற்றொரு நிறுவனத்துக்கு விற்கப்படவே, தன்னுடைய பணியில் தொடரமுடியாத நிலை பிரீத்திஷாவுக்கு ஏற்பட்டது. கண்ணியமிக்க வேலை, தேவைக்கேற்ற ஊதியம் என வாழ்க்கை அப்போதுதான் ஒரு கட்டத்தை நோக்கி நகரத் தொடங்கியிருந்த சூழலில், இது மிகப்பெரிய பின்னடைவை இந்தத் திருநர் தம்பதியின் வாழ்வில் ஏற்படுத்தியிருந்தது.

ஆனாலும், துவண்டுவிடவில்லை இந்த முன்மாதிரித் தம்பதியினர்.

தங்களிடம் உள்ள சேமிப்பை அடித்தளமாகக் கொண்டு நண்பர்களின் உதவியோடு ‘மகிழம் பிரஷ்ஷாப்’ என்ற பெயரில் நடமாடும் தேநீர்க் கடை ஒன்றைத் தொடங்கினர். எதிர்காலம் குறித்த ஒட்டுமொத்த நம்பிக்கையைத் தேக்கி நின்ற அந்த நடமாடும் தேநீர்க் கடையின் வியாபாரம் நன்றாகத் தொடங்கிப் போய்க் கொண்டிருந்த நிலையில்தான், உலகமே எதிர்பார்த்திராத கோவிட்-19 பரவத் தொடங்கியது. உலகமே முடங்கிப் போன நிலையில், மகிழம் பிரஷ்ஷாப்-ன் இயக்கம் முற்றிலுமாக நின்றுபோனது.

கொரோனா சூழலும், பொருளாதார நிலையும், நடமாடும் தேநீர்க் கடையை மீண்டும் தொடங்க ஒத்துழைக்காத நிலையில், அன்றாடத்தை நகர்த்த வேண்டும் என்கிற கட்டாயத்தில், இரவு நேரங்களில் இருசக்கர வாகனத்தில் சென்று டீ வியாபாரம் செய்வது என்று பிரீத்திஷாவும் பிரேம்குமரனும் முடிவுசெய்தனர். பிரேம் வீட்டில் டீ, காபி தயாரித்துக் கொடுக்க, இரவு பதினோரு மணியளவில் விருகம்பாக்கம் வேம்புலி அம்மன் கோவில் அருகிலிருந்து பிரீத்திஷா டீ விற்கத் தொடங்குகிறார். அதிகாலை 4 மணியளவில் டீக்கடைகள் இயங்கத் தொடங்கும் நேரம்வரை பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் பிரீத்திஷா டீ வியாபாரம் செய்துவருகிறார்.

பிரீத்திஷா - பிரேம்குமரன்
பிரீத்திஷா - பிரேம்குமரன்

குடும்ப பாரத்தைப் பங்கிட்டுக் கொள்ளும் நோக்கில், பிரீத்திஷா டீ விற்கச் சென்றதும், தங்கள் குடியிருப்புக்கு வெளியே பின்னிரவு வரை ஐஸ்கிரீம் விற்கிறார் பிரேம்குமரன்.

இவை எதுவும் இன்றைய காலகட்டத்தில், சென்னையில் ஒரு தம்பதியின் அன்றாடத்தைச் சிரமமின்றி நகர்த்துவதற்கு எந்த வகையிலும் உதவுவதில்லை; திருநர் தம்பதியாக இவர்கள் எதிர்கொள்ளும் சவால்களும் இணைந்து இயல்பான ஒரு வாழ்க்கையை இவர்களுக்கு ஒரு தூரத்துக் கனவாக நிறுத்தியிருக்கிறது.

பெரும் நம்பிக்கையோடு, இருந்த சேமிப்புகளையெல்லாம் கொண்டு தொடங்கிய தொழில் கொரோனா பரவலால், மீண்டும் தொடங்க முடியாத நிலைக்குச் சென்றுவிட்டது. அன்றாடம் டீ, ஐஸ்கிரீம் வியாபாரத்தில் கிடைக்கும் வருமானமோ வீட்டு வாடகை தொடங்கி, அன்றாடத்தின் தேவைகளை நிறைவேற்றப் போதுமானதாக இல்லை. இதற்கு மத்தியில் சேர்ந்திருக்கும் கடன்களும் வட்டியோடு சேர்ந்துகொள்ள அன்றாடமே பெரும் நெருக்கடியாக இவர்களுக்கு நகர்ந்துகொண்டிருக்கிறது.

இந்தியாவிலேயே முதல் திருநர் தம்பதி என்ற அடையாளத்தோடு வாழ்ந்துகொண்டிருக்கும் பிரீத்திஷாவும், பிரேம்குமரனும் கடைசி வரை இந்த முன்மாதிரி நிலையைக் கடைப்பிடிக்க வேண்டும்; அடுத்துவரும் திருநர்களுக்கு ஊக்கம் தரும் வகையில் தங்கள் வாழ்க்கையை நம்பிக்கை மிகுந்ததாக முன்னகர்த்திச் செல்ல வேண்டும் என்ற தீர்மானத்தோடு கைகளை இறுகப் பற்றிக் கொண்டிருக்கின்றனர்.
பிரீத்திஷா - பிரேம்குமரன்
பிரீத்திஷா - பிரேம்குமரன்

இருவரில் ஒருவருக்கு அரசு வேலை கிடைத்தால், வாழ்க்கை ஓரளவு நிலைபெறும் என்ற நம்பிக்கையில், சென்னை உயர் நீதிமன்ற அலுவலக உதவியாளர் பணிக்குத் தேர்வெழுதி, நிர்ணயிக்கப்பட்ட மதிப்பெண்களைவிட அதிக மதிப்பெண்களைப் பெற்று தேர்ச்சி பெற்றிருக்கிறார் பிரீத்திஷா. நிச்சயம் இந்த வேலை தனக்குக் கிடைக்கும், தங்கள் வாழ்வில் ஒளி பரவும் என்ற நம்பிக்கையோடு ஒவ்வொரு நாளும் முன்னைவிடத் தீவிரத்துடனும், நம்பிக்கையுடனும் பிரீத்திஷாவும் பிரேம்குமரனும் காத்துக் கொண்டிருக்கிறனர்!

இடம், பொருள், ஆவல்: குறுகலான சாலையின் பெயர் பிராட்வே... இதை உருவாக்கிய ஆங்கிலேயர் யார் தெரியுமா?!
Preethisha - Prem இந்தியாவின் முதல் திருநர் தம்பதியின் காதல் கதை! | India's First Transgender Couple
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு