Published:Updated:

`ஐ.ஆர்.எஸ் பணி ராஜினாமா; எதிர்க்கட்சிகளுக்குப் பதிலடி!'- டெல்லியில் அசத்தும் சுனிதா கெஜ்ரிவால்

Arvind Kejriwal and sunitha Kejriwal
Arvind Kejriwal and sunitha Kejriwal ( www.instagram.com/arvindkejriwal )

ஊழலுக்கு எதிராக ஒரு கட்சி, அதன் மையம் தன்னுடைய கணவர்தான் என்பதை ஏற்றுக்கொள்வதற்கு ஒரு பெரும் துணிவு வேண்டும். அந்தத் துணிவுடன்தான் தன் கணவரின் அரசியல் பயணத்துக்குக் கைகொடுத்தார் சுனிதா கெஜ்ரிவால்.

டெல்லி சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றிபெற்றுள்ளது அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி.

'வெற்றிபெற்ற ஒவ்வோர் ஆணுக்குப் பின்னும் ஒரு பெண் இருப்பாள்' என்பது பழைய பொன்மொழிதான். ஆனால், சுனிதா கெஜ்ரிவால் போன்ற பெண்கள், அவ்வப்போது அந்தப் பொன்மொழியைப் பட்டை தீட்டி ஜொலிக்க வைத்துவிடுகிறார்கள். கணவன், மனைவி இருவருமே மரியாதைக்குரிய அரசுப் பணியில் இருந்து, கை நிறைய சம்பாதிக்கவும் செய்கிறபோது, 'வேலையை விட்டுவிட்டு அரசியலுக்குப் போகிறேன்' என்று சொன்ன கணவர் கெஜ்ரிவாலின் லட்சியத்துக்குத் துணை நிற்பதற்கு முதலில் தைரியம் வேண்டும்.

அதைவிட முக்கியமாக, ஊழலுக்கு எதிராக ஒரு கட்சி, அதன் மையம் தன்னுடைய கணவர்தான் என்பதை ஏற்றுக்கொள்வதற்கு ஒரு பெரும் துணிவு வேண்டும். அந்தத் துணிவுடன்தான் தன் கணவரின் அரசியல் பயணத்துக்குக் கைகொடுத்தர் சுனிதா கெஜ்ரிவால்.

Arvind Kejriwal and sunitha Kejriwal
Arvind Kejriwal and sunitha Kejriwal
www.instagram.com/arvindkejriwal

சட்டமன்றத் தேர்தலில் பெற்றுள்ள வெற்றியையடுத்து, அரவிந்த் கெஜ்ரிவால் மூன்றாவது முறையாக டெல்லி முதல்வராகிறார்; மிகப் பெரும்பான்மையில் வெற்றி பெற்றிருக்கிறது அவரது ஆம் ஆத்மி கட்சி. இந்த இரண்டு மகிழ்ச்சிகளும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மனைவி சுனிதாவின் பிறந்த நாளன்று கிடைத்திருக்கின்றன. 'உன் பிறந்த நாளுக்கு என் பரிசு' என்று ஒரு கணவராக அரவிந்த் கெஜ்ரிவால் நெகிழ, 'இது நம் கட்சியைச் சேர்ந்த அத்தனை பேரின் கூட்டு உழைப்புக்கும் கிடைத்த பரிசு' என்று கம்பீரம் காட்டியிருக்கிறார் சுனிதா.

`நலத்திட்டங்கள்; சுயமதிப்பீடு; அதிரடி கள ஆய்வு!' -டெல்லி அரியணையை மீண்டும் கைப்பற்றிய ஆம் ஆத்மி

அரவிந்த், சுனிதா இருவருமே இண்டியன் ரெவன்யூ சர்வீஸில் பணிபுரிந்தவர்கள். இதற்கான சிவில் சர்வீஸ் எக்ஸாமை க்ளியர் செய்துவிட்டு, முஸோரியில் உள்ள ட்ரெயினிங் சென்டரில் பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தபோதுதான் இருவரும் சந்தித்திருக்கிறார்கள். அரவிந்த் கெஜ்ரிவாலின் தைரியமான அணுகுமுறையும் சமூக சேவையின்பால் அவருக்கிருந்த ஈடுபாடும் சுனிதாவை ஈர்த்தன. எனவே, அரவிந்த் தன் காதலைச் சொன்னதும் உடனே 'யெஸ்' சொல்லியிருக்கிறார் சுனிதா. அடுத்த வருடமே திருமணம், இரண்டு குழந்தைகள் என்று வாழ்க்கை சென்றுகொண்டிருக்க, அரவிந்த கெஜ்ரிவால் தன் லட்சியத்தின்படி ஊழலுக்கு எதிராக அரசியலில் இறங்குகிறார். வழக்கம்போல தன் ஐ.ஆர்.எஸ் பணி, குடும்பம் என்றிருந்த சுனிதாவின் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சிகள் விமர்சனங்களை அடுக்க ஆரம்பிக்க, வேலையை ராஜினாமா செய்துவிட்டு, கணவருக்குத் துணையாக இயங்க ஆரம்பித்தார் சுனிதா.

Arvind Kejriwal
Arvind Kejriwal
www.instagram.com/arvindkejriwal
`பி.கே வியூகத்தில் ஏ.கே..!'-  இந்தியாவின் ஆன்மாவை கெஜ்ரிவால் கைப்பற்றியது எப்படி?

தேர்தல் நேரங்களில் வீடு வீடாகச் சென்று கணவருக்காக ஓட்டுக் கேட்பது, அரவிந்த் கெஜ்ரிவாலை தீவிரவாதி என்று விமர்சித்தவர்களுக்கு 'இதற்கு டெல்லி மக்கள் பதிலளிப்பார்கள்' என்று பதிலடி தந்தது என, ஓர் அரசியல் தலைவரின் மனைவிக்கான இயல்புகளுடன் இயங்கிக்கொண்டிருக்கிற சுனிதா, சில நேரங்களில் கணவரை விமர்சிப்பவர்களை ட்விட்டரில் வெளுத்து வாங்கவும் செய்திருக்கிறார்.

2015 தேர்தலில் வெற்றிபெற்ற அரவிந்த கெஜ்ரிவால், தனக்காக வாக்கு சேகரித்த மனைவிக்கு நன்றி தெரிவிக்கும்வண்ணம், அவரை அணைத்தபடி இருக்கிற புகைப்படத்தை தன் சமூகவலைதளத்தில் பதிவேற்றியிருந்தார். 'அரசியல்வாதிகளின் மனைவிகள் தங்கள் கணவரின் அரசியல் பணிகளில் இருந்து சற்று தள்ளியே இருக்க வேண்டும்' என்று இதற்கும் விமர்சனம் எழுந்தது.

இதோ... காலம், சுனிதாவின் பிறந்தநாளன்று அவருடைய கணவரை மூன்றாவது முறையாக டெல்லி அரியணையில் அமர்த்தியிருக்கிறது. கூடவே கேக்கும் ஊட்ட வைத்திருக்கிறது.

வாழ்த்துகள் திருமதி கெஜ்ரிவால்!

அடுத்த கட்டுரைக்கு