பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

இன்று புதிதாய் இணைந்தோம்!

கொச்சனியன் - லெக்ஷ்மி
பிரீமியம் ஸ்டோரி
News
கொச்சனியன் - லெக்ஷ்மி

முதியோர் இல்லத்தில், ‘தங்களின் உறவினர்கள் யார், எங்குள்ளனர் எனச் சொல்லுங்கள்.

காதலில் பல பரிணாமங்கள் பூத்துவரும் நூற்றாண்டு இது. நீலக் குறிஞ்சியாக, 67 வயது ஆணும், 66 வயதுப் பெண்ணும் முதியோர் இல்லத்திலிருந்து தங்கள் மணவாழ்க்கையைத் தொடங்கியிருக்கும் அழகிய அன்பிணைவு ஒன்று நிகழ்ந்திருக்கிறது. கடவுள் தேசத்தின் இந்தக் காதல் தம்பதிக்கு, நாடு முழுவதிலுமிருந்து பிரியங்களில் நனைத்த வாழ்த்துகள் அனுப்பப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு, குருவாயூர்க் கோயிலுக்கு வந்த முதியவர் கொச்சனியன் மயங்கிவிழ, அவசரமாக வயநாடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். பக்கவாத பாதிப்பு ஏற்பட்டு, ஒரு பக்கக் கைகால்கள் இழுத்த நிலையிலிருந்த அவருக்கு, அங்கு ஒன்றிரண்டு மாதங்கள் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. வாதத்தின் பிடியிலிருந்து கொஞ்சம் மீண்ட அவர், வயநாட்டில் உள்ள அரசு முதியோர் இல்லத்தில் அனுமதிக்கப்பட்டார்.

முதியோர் இல்லத்தில், ‘தங்களின் உறவினர்கள் யார், எங்குள்ளனர் எனச் சொல்லுங்கள். அவர்களிடம் உங்களைச் சேர்க்கிறோம்’ எனக் கேட்க, ‘லெக்ஷ்மி, திருச்சூர் நகராட்சி முதியோர் இல்லத்தில் இருக்கிறார்’ என்றிருக்கிறார் கொச்சனியன். உடனே வயநாட்டிலிருந்து திருச்சூர் முதியோர் இல்ல அதிகாரிகளைத் தொடர்புகொண்டு, லெக்ஷ்மியின் புகைப்படத்தைப் பெற்று, ‘இவரா?’ என்று கேட்க, பொக்கிஷத்தைக் கண்டதுபோல முகம் மலர்ந்து நெகிழ்ந்திருக்கிறது கொச்சனியனுக்கு. அருகிலிருந்தவர்கள், ‘யார் இவர்? மனைவியா, சகோதரியா?’ என்று கேட்க, அவர்கள் சற்றும் எதிர்பார்த்திராத பதிலைச் சொல்லியிருக்கிறார் அவர். ‘என் காதலி!’ ஒரு நொடி உறைந்து போயினர் அனைவரும்.

இன்று புதிதாய் இணைந்தோம்!
இன்று புதிதாய் இணைந்தோம்!

அதற்குப் பிறகு நடந்ததைச் சொல்லியிருக்கிறார் திருச்சூர் நகராட்சி முதியோர் இல்லத்தின் மேற்பார்வையாளர் ஜெயக்குமார்.

“வயநாடு முதியோர் இல்ல நிர்வாகிகள், திருச்சூர் முதியோர் இல்லத்தில் கொச்சனியனின் விருப்பப்படி அவரை ஒப்படைத்தனர். கேரளத்தில் உள்ள 30 அரசு முதியோர் இல்லத்துப் பொறுப்பாளர்களுக்கான கூட்டம், துறை அதிகாரிகளின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் லெக்ஷ்மி, கொச்சனியன் குறித்து விவாதித்தோம். மேலும், முதியோர் இல்லங்களில் தம்பதிகளுக்கான அறைகள் வேண்டும், அதேபோல் ஆதரவற்ற முதியோர்கள் பரஸ்பரம் விரும்பினால் திருமணம் செய்துகொள்ளலாம் என்ற தீர்மானங்களை அக்கூட்டத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றினோம்.

லெக்ஷ்மியிடம், ‘இருவரும் திருமணம் செய்துகொள்கிறீர்களா?’ எனக் கேட்டோம். இருவரும் விரும்பிவந்தாலும் சமூகத்தை எண்ணி, தயக்கம் காட்டினார்கள். பின்னர், முதியோர் இல்லத்தில் உள்ள 80 பேரும் அவர்களுக்குத் திருமணம் செய்துவைப்பதாக நம்பிக்கையளித்தனர். இறுதியில் இருவரும் ஒப்புக்கொள்ள, இல்லமே விழாக்கோலம் பூண்டது. 500 பேருக்கு அழைப்பிதழ் கொடுத்தோம். இங்கு பணியாற்றும் ஊழியர்கள் முதல் முதியோர்வரை பலரும் ஆளுக்கோர் உதவியைச் செய்ய, புதுத்துணி முதல் தாலிவரை அனைத்தும் வாங்கப்பட்டன. வேளாண் துறை அமைச்சர், மாவட்ட ஆட்சியர், பல அரசுத்துறை அதிகாரிகளுடன் 500க்கும் அதிகமான பொதுமக்களும் கலந்துகொள்ள, கடந்த டிசம்பர் 28-ல் சிறப்பாக நடந்துமுடிந்தது திருமணம்’’ என்றார்.

இந்தத் திருச்சூர் முதியோர் இல்லத்தில்தான் வசித்துவருகிறார்கள் புதுமணத் தம்பதியர். மரத்தடியில், நாற்காலிகளில் அமர்ந்தவாறு மகிழ்ச்சியாகப் பேசிச் சிரித்தபடி இருந்தவர்களை நெருங்கினோம். நேர்த்தியாகக் கட்டப்பட்ட புதுப்புடவை, நரையில் படிந்திருக்கும் குங்குமச் சிவப்பு, புதுத் தாலி, முகத்தின் சுருக்கங்களை முந்திக்கொண்டுவரும் புன்னகையுடன் லெக்ஷ்மி.

“நான் தமிழர். 16 வயதில் எனக்கு 48 வயதான கிருஷ்ணய்யருக்குத் திருமணம் முடித்துவைத்தனர். 22 ஆண்டுகளுக்கு முன் அவர் இறந்துபோனார். எங்களுக்குக் குழந்தை இல்லை, சொந்தம் என்றும் யாரும் இல்லை. கணவரின் மறைவுக்குப் பிறகு மிகுந்த தனிமையிலிருந்த நான், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வீட்டில் வழுக்கி விழுந்ததில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. சிகிச்சைக்குப் பின்னரும் இயல்பாக நடக்க முடியாமல்போக, இந்த முதியோர் இல்லத்தில் தஞ்சம் அடைந்தேன்.

என் கணவரின் உதவியாளராக, எங்கள் குடும்ப உறுப்பினர்போல, நம்பிக்கைக்குரிய பலமாக இருந்துவந்தவர் கொச்சனியன். என் கணவர் இறக்கும் தறுவாயில்கூட கொச்சனியனிடம், ‘லெக்ஷ்மியை பத்திரமாகப் பார்த்துக்கொள்’ என்றார். எனக்கென்று யாருமே இல்லாத இந்த உலகத்தில், அந்த ஒற்றை அன்பு மிகவும் ஆறுதலாக இருக்கும். கடைசியாக என்னைப் பார்க்க முதியோர் இல்லத்துக்கு வந்தபோது, குருவாயூர் செல்லவிருப்பதாகக் கூறினார். தனியாகப் போக வேண்டாம் என்றேன். என் பேச்சைக் கேட்காமல் போனார்‌’’ எனும்போது, தன் கணவரிடம் கொஞ்சம் கோபம் காட்டிக்கொள்கிறார் லெக்ஷ்மி.

இன்று புதிதாய் இணைந்தோம்!

“போன இடத்தில் பக்கவாதம் ஏற்பட்டு, பாதிப்புடன் இரண்டு மாதங்களுக்கு முன்னர் இங்கு கொண்டுவந்து சேர்க்கப்பட்டார். நான் அவரை கவனித்துக்கொண்டேன். முதுமையும் தனிமையும் மட்டுமே இனி துணை என்றிருந்த எங்கள் வாழ்வில், ‘நமக்கு ஏதாவது ஒன்றென்றால் பார்த்துக்கொள்ள இதோ இருக்கிறது ஓர் உயிர்’ என்ற நம்பிக்கையை இருவரும் ஒருவருக்கொருவர் கொடுத்தோம். இந்த அன்பும் ஆதரவும், சொச்ச ஆயுளுக்கும் தொடரட்டும் என்று திருமணம் செய்துகொண்டோம்.

பத்து நாள்களாகிறது எங்களுக்குத் திருமணம் முடிந்து. கனவைப்போல உள்ளது. அவருக்கு சட்டைப் பொத்தான்களைப் போட்டுவிடுவது, நெற்றியில் சந்தனம் வைத்துவிடுவது, குடிக்கத் தண்ணீர் கொண்டுவந்து கொடுப்பது, அவர் எனக்காகத் தேநீர் வாங்கிக்கொண்டு அறைக்கு வருவது, இருவரும் ஒன்றாக உணவருந்துவது என, இது எங்களுக்கு மறுபிறவிபோல உள்ளது. அவரை தினமும் முகச்சவரம் செய்யச் சொல்கிறேன். அவருக்குச் சில பற்கள் சொத்தையாக உள்ளன, செயற்கைப் பல் பொருத்த வேண்டும். நிர்வாகம் ஒப்புக்கொண்டால் நானும், என் கணவரும் ஒருநாள் ஊட்டிக்குச் சென்று சுற்றிப்பார்த்து வர ஆசை’’ என்று சொல்லும் லெக்ஷ்மியின் முகத்தில் வெட்கம்.

“இது சாதி மறுப்புத் திருமணமும்கூட’’ என்று ஆரம்பித்த கொச்சனியன், ‘`நாதஸ்வரமும் சமையலும்தான் என் இளமைக்கால உலகம். கடந்த 30 ஆண்டுகளாக லெக்ஷ்மியை எனக்குத் தெரியும். கிருஷ்ணய்யர் இறந்ததற்குப் பின், லெஷ்மி உடல்நலம் குன்றும்போதெல்லாம் அவரைப் பார்த்து நலம் விசாரித்துவிட்டு வருவேன். சில ஆண்டுகளில் எனக்கும் உடல்நலம் பாதித்தது. எங்கு சென்றாலும் லெக்ஷ்மி நினைவு வர ஆரம்பித்தது. என் ஆறுதலுக்கும் எனக்கு லெக்ஷ்மியின் அன்பு தேவைப்பட்டது. முதியோர் இல்லத்தில், ‘யாருக்குத் தகவல் சொல்ல வேண்டும்?’ என்று என்னிடம் கேட்க, லெக்ஷ்மியின் பெயரை நான் சொன்ன நொடி, எங்கள் அன்பை ஆசீர்வதிக்கத் தயாராகிவிட்ட இந்த உலகத்துக்கு எப்படி நன்றி சொல்வது?!’’ என்று நெகிழும் கொச்சனியனுக்கு, 96 வயதாகும் அம்மா இருக்கிறார். கொச்சனியனின் தங்கை அவரைப் பார்த்துக்கொள்கிறார்.

இந்தப் புதுமணத் தம்பதியின் விருப்பம், ஏக்கம், பிரார்த்தனை எல்லாம் ஒன்றுதான். ‘`எங்களுக்கு மட்டுமல்ல, உலகத்துக்கே புத்தம் புதுசான இப்படி ஒரு வாழ்வை நாங்கள் தொடங்கக் காரணமாக இருந்தவர், விடுதியின் பொறுப்பாளர் ஜெயக்குமார். 46 வயதாகியும் அவருக்குத் திருமணம் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது. அவருக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைந்தால் போதும்’’ - கைகூப்பிச் சொல்கிறார்கள் இருவரும்.

அன்புக்கான பிரார்த்தனை நிச்சயம் நிறைவேறும்!