பெட்ரோல் விலை உயர்வு, விவசாயிகள் போராட்டம், சீன தாக்குதல் என நாட்டில் என்ன கலவரம் நடந்தாலும் சரி ஒரு கிரிக்கெட் போட்டி எல்லாவற்றையும் மாற்றிவிடும்.
கிரிக்கெட்தான் பெரும்பாலும் சமூகவலைதளங்களில் என்னப் பேசவேண்டும் என்பதை தீர்மானிக்கிறது. அப்படி கடந்த சில வாரங்களுக்கு முன்பு ட்ரெண்டானது பேரன்ட்டிங். ஆஸ்திரேலியாவில் பேட்டிங் செய்யவே சிரமமான பிட்ச்சில் 60 ரன்களுக்கு மேல் அடித்தும், தன் மகனைப் பாராட்டாமல் சென்சுரி அடித்திருக்கவேண்டும் என்று விமர்சித்த வாஷிங்டன் சுந்தரின் தந்தையை எல்லோரும் கலாய்த்து மீம்ஸ் போட்டுக்கொண்டிருந்தார்கள். பேரன்ட்டிங் பேசுபொருளானது.
கிரிக்கெட்டில் மட்டுமல்ல கல்யாணம்வரை இங்கே பலவற்றிலும் பெற்றோர்கள் மூக்குநுழைப்பதே பல பிரச்னைகளின் தொடக்கப்புள்ளி. குழந்தை பிறந்ததில் இருந்தே அதற்கு எல்லாமே ஸ்பெஷலாக இருக்க வேண்டும் என்று பார்த்து பார்த்து செய்யும் பெற்றோர்கள் குழந்தை பள்ளிக்கு செல்லும்போது முதலில் சொல்லித் தருவது பொருட்களை யாருக்கும் கொடுக்காமல் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதைத்தான். அதுதான் குழந்தைகளுக்கு முதலில் சக மனிதனை நம்பாதே என்பதைக் கற்றுத்தருகிறது.

வசதி இருப்பதால் இரண்டு பிள்ளைகள் இருந்தாலும் வீட்டில் எந்தப் பொருட்களையும் பங்கு போட்டுக்கொள்ள தேவை இல்லாதது உடைமை என்ற எண்ணத்தை உருவாக்குகிறது. அவர்களுக்குள் சண்டை வராமல் இருக்க இதைச் செய்கிறோம் என்பதுதான் பெற்றோர்களின் வாதம். ஆனால், உண்மையில் பெரிய பிரிவினைக்கான அடித்தளத்தை நாம் இங்கேதான் போடுகிறோம்.
இரண்டு பிள்ளைகள் இருக்கும் வீடுகளில் பத்து வயது குழந்தைகளிடம்கூட ப்ரைவசி என்று தனித்தனி அறைகள் கொடுப்பது, பள்ளி, கல்லூரிக்கு பொது வாகனங்களில் பாதுகாப்பில்லை என பெற்றோர்களே அழைத்துச் செல்வது, அக்கம்பக்கம் வீடுகளில் கூடி விளையாடிய வழக்கொழிந்து கம்ப்யூட்டர், மொபைல் போனில் விளையாட அனுமதிப்பது, ஐந்து வயது குழந்தையைக்கூட ஏதாவது ஸ்போர்ட்ஸ் க்ளப்பில் விளையாட சேர்ப்பது என பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் பாதுகாப்பு மற்றும் ப்ரைவசிக்காக செய்யும் காரியங்கள் பலவும் அவர்களை மற்றவர்களுடன் இணைந்து வாழத் தெரியாதவர்களாக ஆக்குகிறது.
கடந்த 20 ஆண்டுகளாக கல்வியும், Career Development-ம் தான் முக்கியம் என குழந்தைகளை திருமண சந்தைக்கு ஒரு Product-ஐ போல் தயார் செய்து வருகிறார்கள் பெற்றோர்கள். நண்பர்கள்/ உறவினர்களிடத்தில் பழகுவதற்கான நேரங்களைகூட குறைத்துவிடுகின்றனர். பிள்ளைகளுக்கு மனித உறவுகள் இரண்டாம்பட்சம் என இதன்மூலம் மறைமுகமாக போதிக்கப்படுகிறது. சிறிது சிறிதாக கடந்த 10 ஆண்டுகளில் இப்படி ஒரு சூழல் கிராமங்களிலும் பரவி வருவதுதான் கவலையளிக்கிறது.
காதல், அன்பு, நட்பு இவற்றுக்கான அடித்தளம் சக மனிதன் மீதான நம்பிக்கை. எல்லா வகையிலும் தனியாக வளரும் பிள்ளைகள் திருமணமத்திற்கு பிறகு இன்னொருவருடன் தன் வீட்டையும், நேரத்தையும் பகிர்ந்து கொள்வதை சிரமமாக கருதுகிறார்கள். அதேபோல் பெற்றோர்களால் எல்லாவற்றையும் நிர்வகித்து பழக்கப்படுத்தப்பட்ட பிள்ளைகள் திருமணத்திற்கு பிறகு தனது குடும்பத்தை நிர்வகிப்பதை சுமையாகப் பார்க்கிறார்கள். கடந்த வாரத்தில் நாம் பேசியதற்கான ஆரம்பம் இதுதான்.

1989-ம் ஆண்டு தமிழ்நாட்டில் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை சட்டம் வந்த பிறகு சொத்து பிரச்னை இல்லாத வீடுகளே பெரும்பாலும் இல்லை. சண்டையிட்டு ஆண்டுக்கணக்காக பேசிக்கொள்ளாத சகோதர சகோதரிகள் ஏராளம். தங்கள் பிள்ளைகளுக்கு ஒரு தவறான முன்னுதாரணமாக இருக்கும் இந்த #90s மற்றும் #2kKidsன் பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகள் வளரும் வயதிலேயே ஒருவருக்கு ஒருவர் ஒற்றுமையாக, ஆதரவாக இல்லை என்று புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். தட் “அது கரடி பொம்ம இல்ல, கண்ணாடி சார்” மொமன்ட்!
உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமையாக வாழ இயலாத ஒரு சமுதாயத்தில்தான் #ArrangedMarriage-ன் பெயரால் எந்த சம்பந்தமும் இல்லாத இரண்டு அந்நியர்கள் சேர்ந்து வாழ்வார்கள் என நம்பிக்கொண்டிருக்கிறோம்.
1982-ல் வெளிவந்த 'மணல் கயிறு' திரைப்படத்தில் தனக்கு பெண்பார்க்க கிட்டுமணி (எஸ்.வி.சேகர்) போடும் எட்டு கட்டளைகள் நினைவிருக்கலாம். கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகள் கழித்து இன்றும் இதுபோன்ற கண்டிஷன்களை ஆண்/பெண் இருவரின் பெற்றோர்களும் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். கிட்டுமணியின் கடைசி கண்டிஷன் தான் இறந்தபிறகு தன்னுடைய மனைவி மறுமணம் செய்துகொள்ள வேண்டும் என்பது. உண்மையில் அன்றைய காலகட்டத்தில் அது மிகத் தேவையான கண்டிஷனும்கூட. ஆனால் இன்றைய பெற்றோர்களோ பணத்தை சுற்றியே கண்டிஷன்கள் வைக்கிறார்கள்.
ஏற்பாட்டு திருமணங்கள் முழுக்க முழுக்க சாதி, மதம், சொத்து, வருமானம், அழகு என பலவிதமான **Conditions Apply tag- உடன் ஒரு வியாபார ஒப்பந்தம் போல நடக்கின்றன. இருவருக்கும் மனப் பொருத்தம், காதல், ஈர்ப்பு இருக்க வேண்டிய தேவையை பற்றி பெற்றோர்கள் யோசிப்பதில்லை. அதைபற்றி இன்றைய தலைமுறையினரும்கூட கவலைப்படுவதில்லை.
நம்மைச் சுற்றி நிறைய காதல் திருமணங்கள் நடப்பதுபோல இருந்தாலும் பெரும்பாலானவை உறவுகளுக்குள்ளும், சுய சாதிக்குள்ளும், குறைந்தபட்சம் 'புழங்கக் கூடியதாக' தாங்கள் கருதும் சாதிக்குள்ளும் மட்டுமே நடக்கிறது. அதற்கு மிகப்பெரும் சாட்சிதான் தற்போது பெருகிவரும் திருமண ஏற்பாட்டு மையங்கள்.
கலாசாரம், பண்பாடு என்கிற பெயரில் பெண் பார்க்கும் நிகழ்வுகள் இன்றும் இரண்டாம்கட்ட நகரங்களில் நடந்துகொண்டுதான் இருக்கிறது. மாடுகளை சந்தையில் கூட்டிக்கொண்டு விற்பதற்கு துளியும் குறைவில்லாத நிகழ்வுதான் ஒரு பெண்ணை திருமணச்சந்தையில் நிறுத்துவதும்.

ஒரு வீட்டிற்கு பெண் பார்க்க வரும்போது அந்தத் தெருவில் உள்ள எல்லோருக்கும் தெரிந்துவிடும். 2 - 3 நிகழ்வுகளுக்கு பிறகு அந்தப் பெண்ணுக்கும், பெண்ணின் குடும்பத்தாருக்கும் அது மிகப்பெரிய மன உளைச்சலை உண்டாக்கும். வயது ஆக ஆக நடந்த நிகழ்வுகள் கணக்கில் கொள்ளப்பட்டு அந்த பெண்ணிற்கு திருமணம் நடக்க பெரும் தடையாகவும் மாறிப்போகும். தற்போது பெண் பார்க்கும் நிகழ்வுகள் கோயில்களிலும், காபிஷாப்களிலும் நடப்பது சிறு ஆறுதல்.
பாதுகாப்பு என்கிற பெயரில் பெற்றோர்கள் சோஷியல் மீடியாக்கள் வரை பிள்ளைகளை கண்காணிக்கிறார்கள். திருமணத்தின்போது மாப்பிள்ளை வீட்டாரிடம் தங்கள் மகளின் ஈமெயில் ஐடி, ஃபேஸ்புக் பாஸ்வேர்ட் எல்லாம் தனக்கு தெரியும் என்று சொல்லும் அன்பு அம்மாக்கள் நம்மிடையே இருக்கிறார்கள். அதாவது தன் பெண் 'தனக்கு தெரியாமல் எதுவும் செய்யமாட்டாள், ஒழுக்கமாக வளர்த்திருக்கிறோம்' என்று இதற்கு பொருள். அதேப்போல் தங்கள் பிள்ளைகள் யாரையும் காதலிக்கவில்லை என்பதை ஒழுக்கசீலர்கள் என்கிற அர்த்தத்தில் பெருமையாக சொல்கின்றனர். 25 வயதுவரை ஒருவருக்கு யார் மீதும் காதல் ஏற்படவில்லை என்றாலும் அல்லது அவரிடம் யாரும் காதலை சொல்லக்கூடிய இடத்தை அவர் கொடுக்கவில்லை என்றாலும் அதன் அடிப்படை விஷயம் அவர்களுக்கு மனிதர்கள் மீது நம்பிக்கை இல்லாதது. அதுபோக நம்மூரில் இன்னமும் தனிமனித ஒழுக்கம் என்பது பெண்களின் கற்பை சுற்றித்தானே பேசப்படுகிறது.
ஒருவர் சக மனிதனை நம்புகிறாரா, இயல்பாக அன்பு செலுத்துகிறாரா என்பதுதான் திருமண உறவில் கவனிக்க வேண்டிய விஷயம். பெண் அழகாகவும், ஒழுக்கமாகவும் இருக்க வேண்டும் ஆண் நிறைய சம்பாதிக்க வேண்டும் எனும் அடிப்படையில்தான் நம்முடைய திருமணங்கள் நடக்கின்றன.
திருமணம் நிச்சயித்தப்பின் காதலிக்க ஆறு மாதங்கள் அவகாசம் கொடுக்கின்றனர் பெற்றோர். பிள்ளைகளும்கூட இதில் சந்தோஷம் அடைகிறார்கள். சமூக வலைதளங்களில் நாம் நம்மை ப்ரமோட் செய்துகொள்வது போல திருமண விஷயத்தில் ஒருவருக்கொருவர் ப்ரமோட் செய்து கொள்கிறார்கள். பரிசுப்பொருட்கள் கொடுப்பது, டின்னருக்கு செல்வது, சேர்ந்து ஷாப்பிங் செய்வதெல்லாம் காதல் என்று நினைத்துக் கொள்கிறார்கள். இவை புரிதலை ஏற்படுத்தும் என நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரு சில திருமணங்கள் இந்தப் பழகும் காலத்தில் கருத்து வேறுபாடுகளால் நின்றுபோயிருக்கின்றன. திருமணமாகி சில நாட்களிலேயே கருத்து வேறுபாடு வந்து பிரிந்து போவதைவிட இது எவ்வளவோ பரவாயில்லை என ஆறுதல் கொள்ளலாம்.

அதே சமயம் ஏற்பாட்டுத் திருமணங்களில் 'பொன்னியின் செல்வன்' பிடித்த புத்தகம் என்று சொன்னவரை 'Harry Potter' படிக்கும் தன்னால் திருமணம் செய்து கொள்ள முடியாது என Reject செய்த பெண்களும் இருக்கிறார்கள். அடுத்தவரின் ரசனை, தேர்வுகளை மதிக்காத எந்த உறவும் உண்மையானதாக, நீண்ட நாட்கள் உடன் வரக்கூடியதாக இருக்காது.
என் உறவினர் ஒருவர் தனது மகளுக்கு திருமணம் செய்ய முடிவெடுத்தபோது அவரது முதல் கண்டிஷன் மாப்பிள்ளைக்கு உடன்பிறந்தவர்கள் இருக்கக்கூடாது என்பதுதான். பெற்றோர்கள் இல்லை என்றால் கூடுதல் நல்லது, தன் மகள் அவர்களுக்கு சமைத்துப் போடுவது தலையெழுத்தா என்பார். இப்படியே நான்கு ஆண்டுகளை வீணாக்கினார். இந்த காட்சிகளை சிரியல்களில்தான் முன்பு கண்டிருந்தேன். கடந்த பத்தாண்டுகளில் குறிப்பாக பெண் பிள்ளைகளின் பெற்றோர்கள் இப்படித்தான் மாறியிருக்கிறார்கள். இரண்டு பிள்ளைகள் இருக்கும் வீடுகளையே கூட்டுக் குடும்பம்போல, ஒரு பிள்ளையை வைத்திருப்பவர்கள் நினைக்கிறார்கள். உடன்பிறந்தவர்கள், பெற்றோர்கள் இல்லாத குடும்பங்களில் சிறு பிரச்னைகள், மனக்குழப்பங்கள் ஏற்படும்போது அங்கே பேசித் தீர்ப்பதற்கான ஸ்பேஸ் இல்லாமல் போகிறது, இதனால் கணவன் மனைவி இடையே சிக்கல்கள் பெரிதாகி விவகாரத்துவரை சென்றுவிடுகிறது.
இவர்களிடையேதான் பிள்ளைகளின் விருப்பத்தை மதித்து மகிழ்ச்சியுடன் காதல் திருமணங்களை செய்து வைப்பவர்களும் இருக்கிறார்கள். எங்கோ ஒரு மூலையில் இன்னமும் நம்பிக்கைக் கீற்றாக இருப்பவர்கள் அவர்கள்தான்.
திருமணம் முடிவு செய்யதபின் ஓட்டலில் சாப்பிட்ட பில்லில் இருந்து நிச்சயதார்த்த செலவு, உடைகள், நகைகள், திருமண மண்டபம், பத்திரிகை, புகைப்பட ஆல்பம், உணவு என ஒவ்வொன்றுக்கும் கணக்கு எழுதி வைத்து கறாராக ஒரு வியாபார ஒப்பந்தம் போட்டு முதலீடு செய்து திருமணங்கள் நடக்கின்றன. ஆனால் திருமணம் நடந்த அன்றே அவர்கள் அந்யோன்யமாக, காதலோடு வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டும் என எதிர்பார்ப்பது எவ்வளவு பெரிய அபத்தம்.
ஏற்பாட்டு திருமணங்களில் பண விஷயங்களில் ஏமாற்றுவது தற்சமயம் அதிகம் நடந்து வருகிறது. திருமணம் முடிந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று நினைக்கும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு பிரச்னைகளை ஏற்படுத்துகிறார்கள்.
தங்கள் மகள்களை செல்லமாக வளர்க்கும் பெற்றோர்கள், மகள்களின் திருமணத்திற்குப் பிறகு, அது வேறு ஒரு குடும்பம் என்பதை மறந்து எல்லா விஷயங்களிலும் மூக்கை நுழைக்கிறார்கள்.

பண்பாடு, கலாசாரம், பாசம், அக்கறையின் பெயரால் தங்கள் மகள்களின் கல்வி, வேலை, வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் உரிமைகளை அனுமதிக்காத பெற்றோர்கள் தன் பெண்ணுக்கு திருமணமான மறு நிமிடம் மாப்பிள்ளை வீட்டில் சமத்துவம், சுதந்திரம், முற்போக்கு, பெண்ணியம் பேச ஆரம்பித்துவிடுகிறார்கள்.
திருமணத்திற்குப் பிறகு பெண்கள் தங்கள் குடும்பமாக நினைத்து புகுந்த வீட்டில் அனுசரித்து வாழ நினைத்தாலும் பெற்றவர்கள் விடுவதில்லை. பெரும்பாலான பெற்றோர்கள் தங்களது பெண் மாமியார் மாமனாருக்கு காபி போட்டுத் தருவது கூட பெண்ணடிமைத்தனம் என்று புலம்புகிறார்கள்.
அதே சமயம் மருமகள் வேலை பார்ப்பதால் வருமானம் வருகிறது என பெருமையும், மகிழ்ச்சியும் அடையும் மாமியார் மாமனார்கள், அதே மருமகள் வீட்டையும் ஒரு முழுநேர #HomeMaker போல கவனித்துக் கொள்ளவேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள்.
ஒரு பெண் திருமணமாகிச் செல்லும்போது அவள் மாமியார் மாமனாருடன் பேசுவதை செல்போன் வாயிலாக அவளது பெற்றோர்கள் ஒட்டு கேட்கும் சம்பவங்களும் இப்போது நடக்கிறது. தனது பெண் புகுந்த வீட்டில் எப்படி நடக்க வேண்டும், என்ன பேச வேண்டும் என்று ஒரு ரோபோவை போல தங்கள் வீட்டிலிருந்து இயக்கிக் கொண்டிருக்கும் பெற்றோர்கள் நம்மிடையே இருக்கிறார்கள். நவீன தொழில்நுட்பத்துக்கு ஏற்ப மாறிக்கொள்கிறார்களாம்!
தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் மனிதர்களை Connected ஆக வைக்க கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் சமூக வலைதளங்களில் இருந்து ஆண்ட்ராய்ட் போன்கள், ப்ளூடூத் கருவிகள் வரை மனிதர்களை Connected ஆக வைக்கிறதே அன்றி Committed ஆக வைப்பதில்லை.

எனக்குத் தெரிந்த ஒருவருக்கு இருபது வயதில் திருமணமானது. அடுத்த ஆண்டே தாயாகிவிட்டார். தனது இளமைக்காலம் முழுவதும் தனிக்குடித்தனத்தில் வீடு மற்றும் பிள்ளையை கவனிப்பது மட்டுமே முழுநேர வேலையாகச் செய்தார். பாதுகாப்பு என்கிற பெயரில் பிள்ளையை நிழல்போல் தொடர்ந்தார். வீட்டிலும் ஒற்றை பிள்ளை, நண்பர்கள் கிடையாது. உறவினர் வீடுகளுக்கு அனுமதி கிடையாது. அவரது பிள்ளைக்கு திருமணம் ஆனதும் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டார். ஒரு கட்டத்தில் பிள்ளையின் திருமணம், அவரை பிள்ளையிடம் இருந்து பிரித்துவிட்டதாக நம்பவைத்தது. தன்னைவிட யாரும் நன்றாக பார்த்துக்கொள்ள முடியாது எனத் தன் பிள்ளைக்கு புரியவைக்க நினைத்தார். திருமணத்தினால் வந்த உறவுகளை பற்றி அவதூறுகளைச் சொன்னார். ஒன்றும் இல்லாத விஷயங்களை பெரிதாக்கி தன் பிள்ளையின் வாழ்க்கையை விவகாரத்தில் கொண்டுபோய் நிறுத்திவிட்டார்.
இத்தனை ஆண்டுகள் தன் குடும்பத்திற்காவே வாழ்ந்ததை நினைவுப்படுத்தி ஒருவித Emotional Blackmail-ற்கு அவர் பிள்ளையையும் கணவரையும் உள்ளாக்கி இருக்கிறார். இதுபோன்ற விவகாரத்துகள் இப்போது பெருகிக் கொண்டிருக்கின்றன.
பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் சொல்லும் இரண்டு முக்கிய காரணங்கள், தனக்குப்பின் தன் பிள்ளைகளை யாராவது பார்த்துக்கொள்ள வேண்டும். மற்றொன்று சுற்றி இருப்பவர்கள் கேள்வி கேட்பார்கள் என்கிற பயம்.
முப்பதுகளில் இருப்பவர்களை படிப்பு, வேலை, திருமணம், குழந்தை, சம்பாத்தியம், சேமிப்பு என எல்லாவற்றையும் மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பேசி மன உளைச்சல் ஏற்படுத்துவது நம் வீடுகளில் அதிகம் நடக்கிறது.
ஊரில் இருப்பவர்களுக்கு பயந்து கொண்டு சொந்த பிள்ளைகளை கஷ்டப்படுத்தும் பெரியவர்கள், அதனால் தங்கள் பிள்ளைகளின் உடல் மற்றும் மனநலம் பாதிக்கபடுவது பற்றி கவலைப்படுவதில்லை.

ஏற்பாட்டுத் திருமணங்கள் முற்றிலும் கூடாது என்று ஒதுக்கிவைக்க முடியாது. பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், குடும்பத்திற்காக என உழைத்து திருமண வயதை தாண்டியும் திருமணம் செய்யமுடியாமல் இருப்பவர்கள், வெளியில் சென்று அதிகமாக மக்களை சந்திக்க வாய்ப்பில்லாத மாற்றுத் திறனாளிகள், இயல்பிலேயே மற்றவர்களுடன் பேச, பழக கூச்சப்படுபவர்கள் என பலருக்கும் இந்த ஏற்பாட்டுத் திருமணங்கள் பெரும் உதவியாக இருக்கிறது.
ஒருவரை காதலிப்பதும், அந்த காதலை திருமணம் வரை கொண்டு செல்வதும் எல்லோருக்கும் ஒன்று போல சாத்தியங்கள் கிடையாது. அப்படி இருக்கையில் காதல் திருமணம் மட்டுமே உயர்வானது, மனமொத்தவர்கள் தான் சேர்ந்து வாழவேண்டும் என்று எவ்வளவுதான் பேசினாலும் குடும்ப அமைப்பு இருக்கும் வரை சமூகத்தில் ஏற்பாட்டு திருமணங்களும் இருந்துதான் ஆக வேண்டும்.