Published:Updated:

இந்த மூணுல உங்க காதல் எந்த வகை?! - #AllAboutLove - 2

ஒருவருக்கு காதல் எப்போது வருமென சொல்ல முடியாது. ஆனால், எப்படியெல்லாம் வரலாம் என சொல்லலாம்.

முதல் அத்தியாயம்...

அடுத்து காதல்தான். ஆற்றல் எத்தனை வகைப்படுமென ஆறாங்கிளாஸில் படித்திருக்கிறோம் இல்லையா? அப்படித்தான் காதலையும் வகைப்படுத்தப் போகிறேன். அதற்காக காதலை ஆற்றல்போல ஒரு கான்செப்டாகப் பார்க்கக் கூடாது; பார்க்க முடியாது. அது ஓர் உணர்வு. ஒருவருக்கு காதல் எப்போது வருமென சொல்ல முடியாது. ஆனால், எப்படியெல்லாம் வரலாம் என சொல்லலாம்.

Love out of Compulsion

 'ரெமோ'
'ரெமோ'

தமிழ் சினிமாவின் காதல் படங்களில் முக்கியமானது சேது. அதில் விக்ரம் என்ன செய்வார்? தன்னைக் காதலித்தே ஆக வேண்டுமென நாயகியைக் கட்டாயப்படுத்துவார். அதைச் சமாளிக்க முடியாத பாவமான அந்த நாயகி வேறு வழியின்றி காதலிக்கிறேன் என சொல்லிவிடுவார். இதுதான் கட்டாயத்தினால் வரும் காதல். படங்களில் மட்டுமல்ல; பெரும்பாலான டீன் ஏஜ் காதல்கள் இந்த வகைதான். தெருமுனைகளில் கையில் பிளேடுடன் பேசிக்கொண்டிருக்கும் சிறுவனை எத்தனை பேர் கடந்திருப்போம்? `உனக்காகத்தான் ப்ரியா. நீ இல்லைன்னு சொல்லு. இங்கேயே அறுத்துப்பேன்' என்றுதானே அவன் சொல்லிக்கொண்டிருந்திருப்பான்? இன்னொரு பக்கம், காதலிக்கவில்லையெனில் ஆசிட் அடிப்பேன் என்பவர்கள். அது மிரட்டலாகத்தான் இருக்க வேண்டுமென்றில்லை. இயல்பான அந்த உணர்வு வராமல் கட்டாயத்தினால் வரவைப்பதைதான் குறிப்பிடுகிறேன்.

ஆங்கிலத்தில், Peer pressure என்பார்கள். நம்மைச் சுற்றி இருப்பவர்களால நம் மீது விழும் அழுத்தத்தைதான் அப்படிச் சொல்வார்கள். `உன் கூட படிச்சவன்லாம்ன்னு’ என வி.ஐ.பி-யில் சமுத்திரகனி தனுஷைத் திட்டுவாரே… அதுதான் பியர் பிரஷர். நண்பர்கள் அனைவரும் கமிட் ஆகிவிட்டால் தனியே இருப்பவருக்கு உறுத்த ஆரம்பிக்கும். யாரையாவது காதலித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் வாய்ப்பிருக்குமிடத்தில் காதலிப்பதாகச் சொல்லிவிடுவார்கள். சொல்லிவிடலாம்; ஆனால் காதலித்துவிட முடியுமா? இந்த வகை காதல்கள் நீடிப்பது சிரமம். அந்தக் கட்டாயத்தை உடைக்கும் தைரியமும் சூழலும் கைகூடும்போது நிச்சயம் அதிலிருந்து வெளியேறிவிடுவார். மிரட்டல், பியர் பிரஷர் போல இன்னும் ஏகப்பட்ட கட்டாயங்கள் இருக்கின்றன. காதலில் இவை எதுவுமே நுழைய அனுமதிக்கக் கூடாது. ஒரு மொட்டு மலராகுவதைப்போல காதல் இயல்பாக வரும். `குட்டி’ படத்தின் செகண்ட் ஹீரோ மேலிருந்து கீழே குதிப்பேன் என்பாரே. அது கூடாது. `ரெமோ' சிவகார்த்திகேயன் போல கட்டாயப்படுத்தியும் வர வைக்கக் கூடாது.

சேது
சேது

Love out of Sympathy

அனுதாபம், பரிவு என இதைச் சொல்லலாம். ஒருவர் மீது நமக்கு வரும் அனுதாபத்தை காதல் என புரிந்துகொள்வது; அல்லது அனுதாபத்தால் காதல் வந்துவிட்டதென நம்புவது இரண்டுமே குழப்பம்தான். ஒருவர் நம் மீது காட்டும் அனுதாபம், அல்லது ஒருவர் மீது நமக்கு வரும் அனுதாபம் இரண்டுமே காதல் இல்லை. சிம்பதி ஒரு தற்காலிகமான ஆறுதல். சில சமயம் நம் மீதே நமக்கு சிம்பதி வரும். அந்தச் சூழலிலும் காதல் என நினைத்து ஒரு ரிலேஷன்ஷிப்புக்குள் நுழைந்துவிடாமல் இருப்பது புத்திசாலித்தனம்.

காதலுக்கும் அனுதாபத்தால் வரும் உணர்வுக்கும் அடிப்படை வித்தியாசம் காதல் நிரந்தரமானது; அனுதாபத்தால் வருவது தற்காலிகமானது. `உன் பிரச்னை புரியுது’ என்பது அனுதாபம். `நான் இருக்கேன். பாத்துக்கலாம்’ என்பது காதல். பெரும்பாலும், அனுதாபம் என்பது `அட இவனும் நம்மளே மாதிரியே இருக்கானே’ என்ற பேரலல் மனநிலைதான். நம்முடைய அன்றைய சூழல், மனநிலை மாறி அந்தப் பிரச்னை முடிந்துவிட்டால் அதற்காகக் கிடைத்த அனுதாபமும் தேவையின்றி போய்விடும். பிறகு அதனால் விளைந்த காதல் மட்டும் நிலைக்கவா போகிறது? அபூர்வ சகோதரர்கள் படத்தில் அப்பு கமல் மீது ரூபிணிக்கு இருந்தது அனுதாபம். அதைப் புரிந்துகொள்ளாததால் `காத்தடிக்கும் நேரம் மாவு விக்க போனேன்’ என சோக ராகம் பாடுவார் அப்பு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Love out of Understanding.

இதுதான் காதல். இருவரும் ஒருவரையொருவர் புரிந்துகொள்வதால், அந்தப் புரிதலால் எழும் மரியாதை மற்றும் அன்பால் கட்டப்படும் கோட்டை. கண்டதும் காதல் எல்லாம் கடவுள் போல. இருப்பதாக நினைத்தால் இருக்கிறது. இல்லையென்றால் இல்லை. ஆனால், பரஸ்பரம் புரிந்துகொள்வதால் எழும் காதலுக்கு சக்தி அதிகம்; ஆயுள் அதிகம். இதற்கு உதாரணம் சொல்ல எனக்கு `நீதான் என் பொன் வசந்தம்’ படம்தான் முதலில் வந்து நிற்கிறது. படம் முழுவதும் சண்டையிட்டுக் கொண்டுதான் இருப்பார்கள். ஆனால், ஒவ்வொரு சண்டையையும் காதல் மேலேறி காணாமல் போகச் செய்யும். ஒவ்வொரு சண்டையும் ஒருவரையொருவர் புரிந்துகொள்ள உதவும். அதுதான் காதல். அப்படி தெளிவாக, தீர்க்கமாக ஒருவர் மீது உங்களுக்குக் காதல் என உணருபோது அதைச் சொல்லிவிடுங்கள். இதயம் முரளிக்கள் எல்லாம் அந்தக் காலத்துக்கே அவுட் ஆஃப் ஃபேஷன். 96 ராம்களும் விதிவிலக்கு. உங்கள் காதல் சரியென தோன்றும்பட்சத்தில் தைரியமாக சொல்லலாம்.

96
96

ஆனால் எப்படிச் சொல்வது? நமக்குக் காதல் வந்துவிட்டது என்பதற்காக அவரைச் சிக்கலில் தள்ளும்படி சொல்லலாமா? எவ்வளவு மென்மையாக, நல்ல முறையில் சொன்னாலும், காதல் என்றாலே கடித்துவிடுபவர்களிடம் எப்படித்தான் சொல்வது? எப்படிச் சொன்னால் அதை அனுமதிக்கலாம்? ஒரு வேளை காதல் இல்லை என்றால் அதை எப்படிச் சொல்வது?

அதையும் பார்த்துவிடுவோம்.

- காதலிப்போம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு