Published:Updated:

உங்களிடம் கையேந்தும் அவர்களுக்கும் உறவுகள் இருக்கின்றன... #relationshipgoals

சில நேரங்களில் `சாப்பிட்டீங்களா' என்று கேட்டபடி பர்ஸை எடுப்பதற்குள், `நான் சாப்பிட்டேன் பாப்பா. நீ ஆபீஸ்க்கு போ' என்று பணம் வாங்காமலே போய்விடுவார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சில வருடங்களுக்கு முன்னால், இன்றைக்கு இடிக்கப்பட்டுக் கிடக்கும் அபிராமி மால் அருகேதான் அந்தப் பெரியவரை முதல் முறையாகப் பார்த்தேன். ஆறடி உயர கறுத்தக் குச்சிபோல இருந்தார். மறைந்திருக்க வேண்டிய விலா எலும்புகள் எல்லாம் வெளியே தெரிய, தெரியவேண்டிய வயிறு ஒரு கிலோ அரிசிக் கொட்டி வைக்கலாம் என்கிற அளவுக்கு உள்ளே கிடந்தது.

மாலில் சினிமா பார்க்க வந்த இளைஞர்கள் சிலர், இளம் பெண்களை கிண்டல் செய்ய, அவர்களை, தான் ஊன்றி நடப்பதற்காக வைத்திருந்த மரக்கிளையால் அடிக்க முயற்சி செய்துகொண்டிருந்தார். `த பாருடா பெருசு நம்மளை அடிக்க வர்து' என்ற கிண்டலோடு, கேட்கத்தகாத வார்த்தைகளால் அந்தப் பெரியவரை திட்ட ஆரம்பித்ததோடு, கை ஓங்கவும் ஆரம்பித்தார்கள் அந்த இளைஞர்கள்.

`நம்மிடம் தர்மம் கேட்பவர்கள் எல்லாருமே பி...க்காரர்கள்; அவர்களுக்கு சொந்தமென்று சொல்லிக்கொள்ள யாருமே கிடையாது' என்றுதான் அதுவரை நினைத்துக்கொண்டிருந்தேன். அதை தன் கண்ணீரால் அழித்துவிட்டுச் சென்ற முதல் நபர் அந்தப் பெரியவர்தான்.

நாலைந்து பேர் வயதானவரை அடிப்பதைப் பார்த்த பொதுமக்கள் அந்த இளைஞர்களை விரட்டி, பெரியவரை மீட்டார்கள். மீட்டவர்களில் நானும் ஒருத்தி. `பொம்பளைப் புள்ள நீயும் எனக்காக பரிஞ்சுக்கிட்டு வந்தல்ல' என்று அவர் பேச, நட்போ, பாசமோ ஏதோ ஓர் உறவு ஏற்பட்டது அவருக்கும் எனக்கும்.

அந்தப் பெரியவர் புரசைவாக்கம் பகுதியில் தர்மம் கேட்பவர். எப்போதாவது பார்க்கும்போது அவர் டிபன் சாப்பிடுறதுக்கு பணம் தருவேன். சில நேரங்களில் `சாப்பிட்டீங்களா' என்று கேட்டபடி பர்ஸை எடுப்பதற்குள், `நான் சாப்பிட்டேன் பாப்பா. நீ ஆபீஸ்க்கு போ' என்று பணம் வாங்காமலே போய்விடுவார். அப்படிப்பட்டவர் ஒருநாள், அலுவலகம் முடிந்து வெளியேபோகும்போது வாசலிலேயே நின்றுகொண்டிருந்தார்.

அவர்களுக்கும் உறவுகள் இருக்கின்றன
அவர்களுக்கும் உறவுகள் இருக்கின்றன

கையில் இருந்த பிரிஸ்கிருப்ஷனைக் காட்டி `உடம்பு சரியில்ல பாப்பா. இங்க ஜெனரல் டாக்டர் ஒருத்தரைப் பார்த்தேன். மருந்து எழுதிக்கொடுத்திருக்காரு. வாங்கணும்' என்றவரை, தர்மம் கேட்பவர்கள் பிரைவேட் டாக்டரைப் பார்ப்பார்களா என்று ஆச்சர்யமாகப் பார்த்தபடியே பர்ஸில் இருந்த ஒரேயொரு நூறு ரூபாய் நோட்டை எடுத்துக்கொடுத்தேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சில நாள்கள் கழித்து வழக்கம்போல என்னை யதேச்சையாகச் சந்தித்தவரிடம், முதல்முறையாக அவருடைய பர்சனல் பற்றிக் கேட்டேன். அந்தப் பெரியவருக்கு சொந்த ஊர் திருநெல்வேலி. சென்னை சிம்சனில் வேலைபார்த்திருக்கிறார். மனைவி இறந்துவிட, திருமணமான அவருடைய 3 ஆண் பிள்ளைகளோடு ஏதோ காரணத்தால் ஒன்றாக இருக்கப்பிடிக்காமல் வீட்டை விட்டு வெளியேறிவிட்டிருக்கிறார்.

சூழ்நிலைக் காரணமாக தர்மம் கேட்க தெருவில் இறங்கியவர்கள் நம்மிடம் கையேந்தும்போதே, இத்தனை காலம் வாழ்ந்த வாழ்க்கை அவர்களின் கைகளைப் பின்னிழுக்கும்.

அவருடைய நான்காவது பையன் மீது மட்டும் அவருக்குக் கொள்ளைப் பிரியம். `அவன் ஊர்ல வேலை பார்த்துட்டிருக்கான். ரொம்பக் கம்மி சம்பளம் அவனுக்கு. ரொம்பக் கஷ்டப்பட்டுக்கிட்டிருக்கான். அதனாலதான், இவனுங்ககூட இருக்கலாம்னு வந்தேன். ஒத்து வரலை. வீட்டைவிட்டு வெளியே வந்துட்டேன். சாப்பாட்டுக்கு என்ன பண்றதுன்னு தெரியாம பிச்சையெடுக்க ஆரம்பிச்சுட்டேன். இதெல்லாம் என் பசங்களுக்குத் தெரியாது' என்று அழுதவரைச் சமாதானப்படுத்தி, கடைசி மகனிடமே போய்விடுங்கள் என்றதுக்கு, எந்தப் பதிலும் சொல்லாமல் சென்றுவிட்டார். `நம்மிடம் தர்மம் கேட்பவர்கள் எல்லாருமே பி...க்காரர்கள்; அவர்களுக்குச் சொந்தமென்று சொல்லிக்கொள்ள யாருமே கிடையாது' என்றுதான் அதுவரை நினைத்துக்கொண்டிருந்தேன். அதை தன் கண்ணீரால் அழித்துவிட்டுச் சென்ற முதல் நபர் அந்தப் பெரியவர்தான்.

அதன்பிறகுதான், தர்மம் கேட்பவர்களை உற்று கவனிக்க ஆரம்பித்தேன். இதை புரொபஷனலாக செய்பவர்கள், தங்களுடைய உடல்குறைப்பாட்டை பொதுமக்கள் பார்க்கும்படி தெரியப்படுத்தியிருப்பார்கள். அவர்களுடைய பிசினஸ் டெக்னிக் அது. ஆனால், பிள்ளைகள், பேரன், பேத்தி எல்லாரும் இருக்க, சூழ்நிலை காரணமாக தர்மம் கேட்க தெருவில் இறங்கியவர்கள் நம்மிடம் கையேந்தும்போதே, இத்தனை காலம் வாழ்ந்த வாழ்க்கை அவர்களின் கைகளைப் பின்னிழுக்கும். இதயங்களால் மட்டுமே இதைப் பார்க்க முடியும். அப்படிப்பட்டவர்களிடம் `சாப்பிட்டீங்களா' என்று கேட்டுப் பாருங்கள். அனிச்சைச் செயலாக `சாப்பிட்டேன் கண்ணு' என்கிற பதில் வரும்.

தர்மம் கேட்பவர்கள்
தர்மம் கேட்பவர்கள்

அப்படித்தான் அந்த அம்மாவை மவுன்ட் ரோடு ஸ்பென்சர் பிளாசா அருகே சந்தித்தேன். அந்தப் பகுதியில் வழக்கமாக தர்மம் கேட்கிற இன்னொரு பெண் இவரை விரட்டிக்கொண்டிருந்தார். கண்களில் நீருடன் இருந்தவரிடம் `சாப்பிட்டீங்களாம்மா' என்றேன். அந்தம்மா மதுரையைச் சேர்ந்தவர். மருமகளோடு ஒத்துவரவில்லையாம். `சென்னையில வீட்டு வேலைபார்க்கிறேன்'னு பிள்ளையிடம் பொய் சொல்லிவிட்டு, கையேந்திக்கொண்டிருக்கிறார். சமீபத்தில் `பேத்தி பெரிய மனுஷியாயிட்டா. ஊருக்குப் போயிட்டு வரேம்மா' என்றார். `திரும்பி வர மாட்டீங்கதானே' என்றதற்கு சிரிப்பை மட்டும் பதிலாக கொடுத்துவிட்டுப் போனவர், ஒரு மாதம் கழித்து மறுபடியும் கண்களில் தட்டுப்பட்டுக் கொண்டிருக்கிறார்.

உறவுகள் இருந்தும் கையேந்துகிற முடிவுக்கு வந்தவர்கள் ஒருபுறம் என்றால், உறவுகளே சிலரை கையேந்தவிட்டதையும் பார்த்திருக்கிறேன். பெரிய பெரிய பஸ் ஸ்டாண்டுகளில், இரண்டு பேருந்துகளுக்கு இடைப்பட்ட சிமென்ட் திட்டில் திடீரென உடம்புக்கு முடியாத வயதானவர்கள் படுத்துக்கிடப்பார்கள். வில்லிவாக்கம் பஸ் ஸ்டாண்டில் அந்தப் பாட்டியை அப்படித்தான் பார்த்தேன். எப்படியும் எண்பது வயதுகளின் இறுதியில்தான் இருப்பார். பார்வை கிட்டத்தட்ட இல்லை. பஸ் ஏற வந்தவர்களில் சிலர், அந்தப் பாட்டிக்கு டீ, பிஸ்கெட் வாங்கிக் கொடுக்க, ஒருவர் இட்லிப் பொட்டலத்தை அந்தப் பாட்டியின் கையில் வைத்தார்.

`பாட்டியால நடக்க முடியலை. வெளிக்குப் போயிட்டு அதுலேயே கிடந்து உழலுது. அதனால, டீ, பிஸ்கட் மட்டும் வாங்கிக்கொடுங்க போதும்!'

பாவம் பாட்டி, ஆவலாக வாங்கிக்கொண்டார். பார்சலை தடவித் தடவிப் பிரித்து வேகமாக சாப்பிடத் தொடங்கினார். இட்லி வாங்கிக் கொடுத்த நபரிடம் கண்டக்டர் ஒருவர், `பாட்டியால நடக்க முடியலை. வெளிக்குப் போயிட்டு அதுலேயே கிடந்து உழலுது. அதனால, டீ, பிஸ்கட் மட்டும் வாங்கிக்கொடுங்க போதும்' என்று சொல்லிக்கொண்டிருந்தார். ஒரு நாள் ஒரு கப் டீயை அந்தப் பாட்டியின் கையைப் பிடித்து கொடுத்தபோது, இலக்கில்லாமல் எங்கோ வெறித்தபடி என்ன சொன்னார் தெரியுமா? `கோயிலுக்குப் போலாம்னு சொல்லிக் கூட்டிட்டு வந்து எங்கேயோ விட்டுட்டுப் போயிட்டானுங்க.' யாரு பாட்டி என்றதற்கு, `எம் புள்ளைங்கதான்' என்றார் பாட்டி.

இன்னும் சில வயதானவர்கள் தன் பிள்ளைகளைக் காப்பாற்றுவதற்காகவே தர்மம் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். நான் நிருபர் என்று தெரிந்ததும், `சொந்த வீடு வைச்சிக்கிட்டிருக்கிறவங்க எல்லாம் முதியோர் பென்ஷன் வாங்கறாங்கம்மா. அவங்க எல்லாம் கொஞ்சம் விட்டுக்கொடுத்தா எங்களை மாதிரி ஆளுங்க கையேந்தாம வாழுவோம்' என்கிறார்கள் கண்ணீருடன்.

அத்தனை பேருமே பி....க்காரர்கள் இல்லை.
அத்தனை பேருமே பி....க்காரர்கள் இல்லை.

நம்மிடம் அம்மா, அய்யா என்று கையேந்துபவர்கள் அத்தனை பேருமே பி....க்காரர்கள் இல்லை. அவர்கள் உறவேயில்லாத தனி மனிதர்களும் இல்லை. தன்மானத்தை வயிறு வென்றதால் கையேந்தும் அவர்களிடம் மனமிருந்தால் பேசுங்கள். உங்களில் அவர்களுடைய மகனையோ, மகளையோ ஒருவேளை அவர்கள் பார்க்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு