Published:Updated:

இந்த 5 விஷயங்களை யோசிக்காமல் ரிலேஷன்ஷிப்புக்கு `Yes' சொல்லாதீர்கள்! #AllAboutLove - 5

Yes or No
Yes or No ( Pixabay )

ஒரு ரிலேஷன்ஷிப்புக்குள் நுழைய யோசிக்க வேண்டும். உணர்வுபூர்வமாக மட்டுமே யோசிக்காமல் அறிவுபூர்வமாகவும் யோசிக்க வேண்டும். `மனசும் மனசும் உரசிகிட்ட அப்புறம் என்னடா யோசிக்கணும்’ போன்ற சோஷியல் ஸ்டிக்மாக்களை உதறிவிட்டு யோசிக்க வேண்டும்.

ஒருவரைப் பார்க்கிறோம். அழகாய் தெரிகிறார். அவரைப் பற்றி அறிகிறோம். அவருடன் நேரத்தைக் கழிப்பது பிடித்திருக்கிறது. அவருக்கும் பிடித்திருக்கிறது. அவருடன் ஒரு கமிட்டெட் ரிலேஷன்ஷிப்பில் இருக்க இவை மட்டும் போதுமா? `நமக்கும் பிடிச்சிருக்கு... அவருக்கும் பிடிச்சிருக்கு... வேற என்ன வேணும்?’ என்கிறீர்களா? வேண்டும். நிறைய வேண்டும். 

`இப்படியெல்லாம் யோசித்து காதலிப்பது காதலே ஆகாது. இது காதலுக்கு எதிரானவர்கள் சொல்லும் காரணம் போல இருக்கிறது' என்பவர்கள் சென்ற அத்தியாயத்தைப் பார்த்துவிட்டு தொடரலாம். இங்கே சொல்வது காதலை, காதலிப்பதை ஏற்பதைப் பற்றியல்ல; ஒரு ரிலேஷன்ஷிப்புக்குள் நுழையும் முன் யோசிக்க வேண்டிய விஷயங்களைப் பற்றி மட்டுமே. என்னவெல்லாம் யோசிக்க வேண்டும் எனச் சொல்வதற்கு முன் ஏன் யோசிக்க வேண்டும் எனப் பார்த்துவிடலாம்.

இரண்டு படங்கள்.

ஒன்று 2000-ம் ஆண்டு வெளியான `அலைபாயுதே'.

இன்னொன்று 2009-ல் வெளியான `நாடோடிகள்'.

இரண்டிலும் காதலர்கள் அவசரத் திருமணம் செய்துகொள்வார்கள். அலைபாயுதேவைவிட நாடோடிகளில் அந்தத் திருமணம் நடக்க தடைகள் பெரிதாக, மோசமாக இருக்கும். அவற்றையெல்லாம் தாண்டி ஒன்றாக வாழ நினைக்கும் ஜோடியின் காதல்தானே பெரியது? வெயிட் ப்ளீஸ்.

Alaipayuthey
Alaipayuthey

திருமணத்துக்குப் பின், இரண்டு ஜோடிகளுக்குள்ளும் நிறைய பிரச்னைகள் வரும். அலைபாயுதேவில் பிரச்னைகளையெல்லாம் தாண்டி அவர்கள் ஒன்றாக வாழ காதல் காரணமாக இருக்கும். நாடோடிகளில் அவர்கள் பிரிந்துவிட முடிவு செய்வார்கள். இவை சினிமாதான். ஆனால், இரண்டு கதைகளும் நம்மைச் சுற்றி நடந்துகொண்டுதானிருக்கின்றன. அலைபாயுதேவில் திருமணத்துக்கு முன் ஷக்தி (ஷாலினி) கார்த்திக்கிடம் (மாதவன்) ஒன்றைச் செய்வார்.

`நமக்குள்ள ஒத்து வராது கார்த்திக்... நாம பிரிஞ்சிடலாம்.’

சொல்லிவிட்டு விலகியும் சென்றுவிடுவார். ஆனால், காதல் அவரை விடாது. கார்த்திக் இல்லாமல் தன் வாழ்க்கை இல்லையென உணரும் சமயம் கார்த்திக் சக்தியைத் தேடி வந்திருப்பார். இருவருக்கும் ஒருவர் மீது காதலும் நம்பிக்கையும் பெருகும். பின், திருமணம் செய்துகொள்வார்கள். இந்த விஷயத்தை நாடோடிகள் காதல் ஜோடி செய்திருக்க மாட்டார்கள். இதைத்தான் யோசிக்க வேண்டுமென்கிறேன். அது திருமணமோ, பாய் ஃபிரெண்டு /கேர்ள் ஃபிரெண்டு உறவோ, லிவிங் டுகெதரோ… ஒரு ரிலேஷன்ஷிப்புக்குள் நுழைய யோசிக்க வேண்டும். நிறைய யோசிக்க வேண்டும். உணர்வுபூர்வமாக மட்டுமே யோசிக்காமல் அறிவுபூர்வமாகவும் யோசிக்க வேண்டும். அதில் தவறேதுமில்லை. `மனசும் மனசும் உரசிகிட்ட அப்புறம் என்னடா யோசிக்கணும்’ போன்ற சோஷியல் ஸ்டிக்மாக்களை உதறிவிட்டு யோசிக்க வேண்டும்.

அப்படி என்னவெல்லாம் யோசிக்க வேண்டும்?

நீங்கள் ரெடியா?

நீங்கள் யாருடனான ரிலேஷன்ஷிப்புக்கு ஓகே சொல்கிறீர்கள் என்பதெல்லாம் அடுத்து. முதலில் நீங்கள், இந்தச் சூழலில், உங்கள் வாழ்க்கையின் தற்போதைய நிலையில் ஒரு ரிலேஷன்ஷிப்புக்குத் தயாரா என்பதுதான் முதலில் யோசிக்க வேண்டிய விஷயம். மிகச் சரியான ஆளைத் தேர்ந்தெடுத்திருந்தாலும் தவறான நேரத்தில் ஒரு ரிலேஷன்ஷிப்புக்குள் நுழைந்தால் அது தவறாகவே முடியும். முதலில் நீங்கள் ஒரு புதிய ரிலேஷன்ஷிப்புக்குத் தயாரா என்பதை நன்கு யோசித்துவிட்டு, பின்னர் அடுத்தகட்டத்துக்குத் தொடருங்கள்.

Nadodigal
Nadodigal
`திருமலை' விஜய் செய்தது காதலா? #AllAboutLove - 3

காதலும் அதைத் தாண்டி சிலவும்!

இரண்டாவது விஷயம்; முக்கியமான விஷயம். இருவருக்கும் ஒருவர் மீது காதல் இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். வெறும் ஈர்ப்பு மட்டுமே இருந்தால் அந்த ரிலேஷன்ஷிப் நீடிக்காது என்பதைத் தாண்டி கசப்பான அனுபவங்களையே அது தரும். போலவே, ஒருவருக்கு மட்டும் காதல் இருந்து, இன்னொருவர் பரிவின் காரணமாகவோ இரக்கத்தின் காரணமாகவோ ரிலேஷன்ஷிப்புக்கு சரியென்றால் அதுவும் நீடித்திருக்காது. நீடிக்காது என்பதைவிட ஒவ்வொரு நாளுமே அது பிரச்னையில் முடியும் வாய்ப்புகளே அதிகம். சில காரணங்களால் காதல் இல்லாமலும் இருவர் ஒரு ரிலேஷன்ஷிப்புக்குள் நுழையலாம். அது விதிவிலக்கு. அங்கேயும் யாரோ ஒருவர் காயப்படவே வாய்ப்புகள் அதிகம். காதல் என்பதைத் தாண்டி இன்னும் சில விஷயங்களும் ஒரு நல்ல ரிலேஷன்ஷிப்புக்கு வேண்டும். அது நம்பிக்கையும் பரஸ்பரம் மரியாதையும். அது இல்லாத உறவும் கஷ்டத்தையே கொடுக்கும்.

இயல்போடு ஏற்றுக்கொள்ளும்போது..!

இந்த உலகில் ஒருவரைப் போல இன்னொருவர் இருக்கவே முடியாது. தினமும் காலை 7 மணிக்கெல்லாம் ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் இருப்பாராம் இளையராஜா. இரவெல்லாம் கண் விழித்து ரெக்கார்டிங் செய்வாராம் ரகுமான். இரண்டும் எதிரெதிர் துருவம் என்றாலும் இருவரும் உலகின் உன்னத இசையைத்தான் நமக்குத் தந்திருக்கிறார்கள். ஆகவே, உங்கள் இணை உங்களை உங்கள் இயல்போடு ஏற்றுக்கொள்பவரா என்பது அவசியம். `உனக்காக மீன் சாப்பிடுறதே விடுறேன் பேபி' என்றவர்கள் விரைவில் சுறாப்புட்டே சாப்பிட்டதுதான் வரலாறு. எனவே, ஓகே சொல்லும் முன் அவர் உங்களை உங்கள் இயல்போடு ஏற்கிறாரா, அதே போல நீங்களும் அவரை அவர் இயல்போடு ஏற்கிறீர்களா என யோசித்துக் கொள்ளுங்கள்.

Love
Love
Pixabay

முதிர்ச்சிப் பொருத்தம்!

மெச்சூரிட்டியைத்தான் சொல்கிறேன். இந்தச் சொல்லே கொஞ்சம் `டிரிக்கி'தான். வயது, சூழல் எனப் பல காரணிகளைப் பொறுத்து இது மாறும். ஆனால், உங்கள் மெச்சூரிட்டிக்கு உங்கள் பார்ட்னர் பொருந்துகிறாரா என்பதைப் பார்ப்பது மிக முக்கியம். எந்த வயதிலும் காதல் வரலாம்; என்ன வயது வித்தியாசம் இருந்தாலும் வரலாம். மொழி, நிறம் என எது வேண்டுமென்றாலும் வித்தியாசப்படலாம். ஆனால், மெச்சூரிட்டி அளவில் பொருந்திப் போகவில்லையென்றால் சிக்கல்தான். சந்தோஷ் சுப்ரமணியம் பட ஹாசினி & சந்தோஷை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இந்த எதிரெதிர் இயல்பு நிச்சயம் ஈர்க்கும். ஆனால், சேர்ந்து வாழும்போது `நீ ஏன் இப்படிக் குழந்தையாட்டமே இருக்க' என சந்தோஷ் கோவப்படுவது போலத்தான் ஆகும்.

'இதயம்' vs 'ப்யார் ப்ரேமா காதல்'... Love vs Relationship குழப்பங்கள்... எது சரி? #AllAboutLove - 4

கரன்சியும் முக்கியம்!

கோபத்துடன்தான் இந்தத் தலைப்பைப் பலர் படித்திருப்பார்கள். ரிலாக்ஸ். ஒருவரின் பொருளாதார நிலையை வைத்து காதல் வருமென்றோ, ரிலேஷன்ஷிப்புக்கு ஓகே சொல்ல வேண்டுமென்றோ சொல்ல வரவில்லை. ஆனால், நாம் ஒரு ரிலேஷன்ஷிப்புக்குள் நுழையும்போது, அந்த உறவு எப்படி அமையுமென்ற ஐடியா நமக்கிருக்க வேண்டும். இல்லையேல் தேவையற்ற எதிர்பார்ப்புகளை உருவாக்கிக் கொண்டு ஏமாற நேரிடும். அந்த ஏமாற்றமே நமக்கு எல்லா பிரச்னைகளையும் கொண்டு வரும். அந்த ஏமாற்றங்கள் பட்டியலில் வரும் நிறைய விஷயங்களுக்குப் பொருளாதாரம் காரணமாக இருக்கிறது என்பதுதான் எதார்த்த நிலை. ஒருவரிடம் பணம் குறைவாக இருக்கிறதென்பதை வைத்து `யெஸ்' சொல்லலாம் எனச் சொல்லவில்லை. ஆனால், அவருடனான ரிலேஷன்ஷிப்பில் நீங்கள் என்னவெல்லாம் எதிர்பார்க்க முடியும் என்ற புரிதல் அவசியமென்கிறேன்.

இன்னும் நிறைய இருக்கின்றன. நீங்கள் இருவரும் மதிக்கும் விஷயங்கள் என்ன (Values), வாழ்க்கையில் உங்கள் இருவருக்கும் இருக்கும் லட்சியங்கள் என்ன, எந்த ஊரில் இருவரும் வாழ்கிறீர்கள் உட்பட உங்களுக்கு இன்னும் நிறைய விஷயங்கள் தோன்றலாம். அத்தனையையும் பட்டியிலிட்டுக் கொள்ளுங்கள். அவற்றுக்கு உங்களாலே பதில் அறிய முடிந்தவற்றை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். உங்கள் பார்ட்னரிடம் பேசி தெரிந்துகொள்ள வேண்டியதை அப்படிப் பேசி முடிவெடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் முழுமையாக கன்வின்ஸ் ஆன பின்னரே அந்த ரிலேஷன்ஷிப்புக்கு ஓகே சொல்லுங்கள்.

மீண்டுமொருமுறை நினைவூட்டுகிறேன். எந்தக் கட்டாயத்தின் பேரிலும் ஓர் உறவுக்கு ஓகே சொல்வது ஸ்மார்ட் ஆன செயலாகாது. உங்கள் வாழ்க்கை உங்கள் உரிமை. அதைக் கொஞ்சம் கவனமாகச் செய்யுங்கள் என்றுதான் சொல்கிறேன்.

Happily ever after is not a fairy tale. It's a choice.
Fawn Weaver

எவ்வளவு கவனமாக இருந்தாலும் பிரச்னைகள் இல்லாத மனித உறவு சாத்தியமாகுமா? அடுத்த வாரம், ரிலேஷன்ஷிப்புக்குள் வரும் பிரச்னைகள் பற்றிப் பார்க்கலாம்.

அடுத்த கட்டுரைக்கு