Published:Updated:

"சாதி விலங்கை உடைக்கும் கருவிதான் காதல்!"- காதல் திருமணங்களுக்கு ஆப் மூலம் உதவும் தம்பதி

வே.பாரதி, சுதா காந்தி

"காதல் திருமணம் செய்துகொள்வோர் எளிதில் அணுகும் வகையில் தளம் வேண்டும் என்று எண்ணி மனைவி சுதாகாந்தி மற்றும் நண்பர்களுடன் ஆலோசித்து 'காதல் அரண்' என்ற செயலியை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கினேன்." - பாரதி

Published:Updated:

"சாதி விலங்கை உடைக்கும் கருவிதான் காதல்!"- காதல் திருமணங்களுக்கு ஆப் மூலம் உதவும் தம்பதி

"காதல் திருமணம் செய்துகொள்வோர் எளிதில் அணுகும் வகையில் தளம் வேண்டும் என்று எண்ணி மனைவி சுதாகாந்தி மற்றும் நண்பர்களுடன் ஆலோசித்து 'காதல் அரண்' என்ற செயலியை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கினேன்." - பாரதி

வே.பாரதி, சுதா காந்தி

கோவை மாவட்டம், பொள்ளாச்சி தாலுகா கள்ளிப்பாளையத்தில் தாய்த் தமிழ் தொடக்கப் பள்ளி நடத்தி வரும் வே.பாரதியும், வழக்கறிஞர் சுதா காந்தியும் காதலித்து சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு லெனின், பொருநை என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

தங்களைப் போன்று காதலித்து திருமணம் செய்து கொள்வோருக்கு உதவ 'காதல் அரண்' என்ற செயலியை உருவாக்கி, அதன் மூலம் இதுவரை 50-க்கும் மேற்பட்ட காதல் திருமணங்களை நடத்தி வைத்துள்ளார் பாரதி. காதல் திருமணத்தில் உள்ள பிரச்னைகள், திருமணத்துக்குப் பின் தம்பதிகள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை நம்மிடம் பகிர்ந்து கொண்டார் பாரதி.

"சாதிய கட்டமைப்பு புரையோடிப் போகியுள்ள இந்தச் சமூகத்தில், காதல் திருமணங்களால் அந்த இறுக்கத்தை குறைந்த அளவிலாவது தளர்த்த முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இந்த நவீன காலத்திலும் காதல் திருமணம் செய்துகொள்வோர் பெற்றோர், உறவினர்களால் அச்சுறுத்தப்படுவதும், அதன் தொடரச்சியாக அவர்கள் அணவக் கொலை செய்யப்படுவதும் நாள்தோறும் கேள்விப்படும் செய்திகளாகவே மாறிவிட்டன.

சாதி மறுப்புத் திருமணங்கள்
சாதி மறுப்புத் திருமணங்கள்
காதல் திருமணம் செய்துகொள்வோருக்கு உதவ வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்த நேரத்தில், உடுமலை சங்கர் கொலை, காதல் மற்றும் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொள்வோரின் பாதுகாப்பு குறித்து என்னுள் பெரும் கேள்வியை எழுப்பியது. காதல் திருமணம் செய்துகொள்வோர் எளிதில் அணுகும் வகையில் தளம் வேண்டும் என்று எண்ணி மனைவி சுதாகாந்தி மற்றும் நண்பர்களுடன் ஆலோசித்து `காதல் அரண்' என்ற செயலியை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கினேன்.

காதல் திருமணம் செய்து கொள்ள விரும்பும் இணையர்கள், காதல் அரண் செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதில், என் செல்போன் எண் கொடுக்கப்பட்டிருக்கும். உதவி தேவைப்படுவோர் அழைத்தால், அவர்களுக்கான திருமணப் பதிவு மற்றும் அவர்களுக்கான சட்டப் பாதுகாப்பு உதவிகளை செய்து வருகிறேன். இதுவரை 50-க்கும் மேற்பட்ட திருமணங்களை நடத்தி வைத்துள்ளேன். இவ்வாறு காதல் திருமணம் செய்தவர்களை காதலர் தினமான பிப்ரவரி 14-ஆம் தேதி அழைத்து அவர்களின் அனுபவங்களைப் பகிரும் நிகழ்ச்சியையும் ஆண்டுதோறும் நடத்தி வருகிறேன்.

பெரும்பாலான காதல் திருமணத்தில் பெண்களின் கல்வி தடைபடுகிறது. இதைப் போக்க திருமணத்துக்குப் பின்னரும், கணவரிடம் பேசி அப்பெண்ணுக்கு கல்வி தடைபடாமல் இருக்க அனைத்து உதவிகளையும் செய்கிறேன். அவ்வாறு நான் திருமணம் செய்து வைத்த நிவேதா என்ற பெண், குழந்தை பிறந்து மூன்றாண்டுகளுக்குப் பின் தற்போது கல்லூரியில் சேர்ந்துள்ளார்.

வே.பாரதி, சுதா காந்தி குடும்பம்
வே.பாரதி, சுதா காந்தி குடும்பம்

காதல் திருமணம் செய்துகொள்வோர்களுக்கு முதல் அச்சுறுத்தலே அவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் இருந்துதான் வருகிறது. குறிப்பாக பெண் பிள்ளைகளை தங்களின் உடமையாகவும், குடும்பத்தின் கெளரவமாகவும் பார்க்கும் மனநோய் நம் சமூகத்தில் பரவிக் கிடக்கிறது. அந்தப் பெண் விரும்பிய வாழ்க்கை துணையைக் கூட தேர்ந்தெடுக்க முடியாமல் தடுக்கப்படுவதும், அதையும் மீறி அப்பெண் தனக்கான இணையைத் தேர்ந்தெடுத்துவிட்டால், அவன் அல்லது அவளை கொலை செய்யும் கொடூர போக்கும் இங்குள்ளது.

காதல் திருமணம் செய்துகொள்வோர் பாதுகாப்புகோரி, காவல் நிலையம் சென்றால் அங்கும் பிரச்னைதான். ஆணும், பெண்ணும் மேஜராக இருக்கும்பட்சத்தில், அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதை விட்டுவிட்டு, பெரும்பாலான காவல் நிலையங்களில் பெற்றோர்களை அழைத்து பஞ்சாயத்து செய்யும் வேலைதான் நடக்கிறது. பெற்றோருடன் செல்ல மறுக்கும் பெண்கள் காவலர்களால் மிரட்டப்படுவதும், தனியாக அழைத்துச் சென்று அறிவுரை கூறுவதென்ற பெயரில் உறவினர்களுடன் அனுப்பி வைப்பதும் என்று காவல் நிலைய அத்துமீறல்கள் நீண்டுகொண்டே செல்கிறது.

இதுபோன்ற பிரச்னைகளை களையவும், காதல் திருமணம் செய்வதை முறைப்படுத்தவும் 'தமிழம் மணவுரிமை' என்ற சங்கத்தைத் தொடங்கி உள்ளேன். 18 வயது நிறைந்த பெண்ணும், அகவை 21 நிரம்பிய ஆணும் ஒருவரையொருவர் சாதி, மதம் பாராது அவர்களுக்கு திருமணம் செய்து வைப்பது, திருமணம் செய்யும் இணையர்களைக் கொண்டு சாதி, மதம் கடந்த நிகர்மைப் பண்பாட்டை அடிப்படையாகக் கொண்ட குடும்பத்தை அமைப்பது, எதிர்ப்புக்கும் புறக்கணிப்புக்கும் ஆளான இணையருக்கு மணமுடித்து வைப்பதோடு அதன் பின்பும் அவர்கள் உயிரினைப் பாதுகாக்க, அனைத்து வகையிலும் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பது உள்ளிட்ட கொள்கைகளை உருவாக்கி சங்கத்தை நடத்தி வருகிறேன்.

வே.பாரதி, சுதா காந்தி
வே.பாரதி, சுதா காந்தி

சாதி மறுப்புத் திருமணம் செய்துகொள்வோருக்கு அரசு சார்பில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஆனால், அதை பெறும் வழிமுறைகள் எளிமையாக இல்லை. இதை அரசு எளிமைப்படுத்துவதுடன், சாதி மறுப்பு திருமணம் செய்துகொள்வோரின் குழந்தைகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும்.

உலகின் மூத்த இனம், மூத்த மொழி என்ற பெருமையான அடையாளங்களைக் கொண்ட இந்த தமிழ்ச் சமூகத்தில்தான் சாதி என்ற அழுக்கும் வரலாறு நெடுக பின்தொடர்ந்து வருகிறது. இந்த சாதி விலங்கை உடைக்கும் கருவியாகத்தான் காதலையும், சாதி மறுப்புத் திருமணங்களையும் பார்க்கிறேன்" என்றார் பாரதி.