Published:Updated:

நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை காதல் திருமணம் வெல்லுமிடம் இதுதான்! #AllAboutLove - 22

Marriage
Marriage ( Photo by Benita Elizabeth Vivin on Unsplash )

இந்தத் தொடரைப் படித்துவிட்டு வரும் கமென்ட்ஸ், கேள்விகள் எல்லாமே சுவாரஸ்யமானவையாக இருக்கும். சில சமயம் ஆச்சர்யமாகவும் இருக்கும். சென்ற வாரம் வந்த ஒரு கமென்ட் `ஆமால்ல... இதை மிஸ் பண்ணிட்டோமே' என யோசிக்க வைத்தது.

//Bro I am reading the article about relationship broke up. I connect well with the aritcle. If you don't mind include narcissistic personality people also. I am myself got experienced bitterly! If there is no lockdown I might b trusting him ever. Being in a queer relationship itself difficult. That too with a narcissistic person means Destiny has no mercy! Plz add about narcissistic abusing in relationship and other disorder people also!!!//

இந்தத் தகவலை அனுப்பிய நபர் தன்பால் ஈர்ப்பாளர். அவர் பார்ட்னரை `நார்ஸிஸ்ட்' என்கிறார். இவர் குறிப்பிடும் நார்ஸிஸ்டிக் மனநிலைக்குப் பிறகு வருவோம். தன்பால் ஈர்ப்பாளர் பற்றி இத்தொடரில் எங்கும் குறிப்பிடவேயில்லை. இந்தத் தொடரில் பெரும்பான்மையான விஷயங்கள் பாலினம் சார்ந்து இல்லாமல் பொதுவாகவே எழுதியிருக்கிறேன். அதனால், அவை ஆண் - பெண், LGBTQ சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என அனைவருக்குமே பொருந்தக்கூடியவைதான் என நினைக்கிறேன். ஆனால், தன்பால் ஈர்ப்பாளர்களின் ரிலேஷன்ஷிப் என்பது இங்கு வேறாகத்தான் இருக்கிறது. இன்னமும் அவர்களை ஏற்றுக் கொள்ளும் சமூகம் உருவாகாத நிலையில், அவர்களின் முக்கிய பிரச்னை அந்த அங்கீகாரமாகவே இருக்கிறது. ரிலேஷன்ஷிப் என்பது ஆண்-பெண் இடையே மட்டுமென நான் நினைக்கவில்லை. தன்பால் ஈர்ப்பாளர்களின் உறவும் இயற்கையான உறவுதான். ஆனால், அவர்களின் பிரச்னைகள் பற்றிய புரிதல் எனக்கு அதிகம் இல்லையென்பதால் அது குறித்து எழுத முனையவே இல்லை. விரைவிலே அவர்களின் காதலும் சமூகத்தால் முழுவதுமாகப் புரிந்துகொண்டு ஏற்கப்பட்டு வாழ வாழ்த்துகளை மட்டும் இப்போது சொல்லிக் கொள்கிறேன்.

LGBTQ
LGBTQ
Pixabay
பிரேக்அப் செய்வது என முடிவெடுத்துவிட்டீர்களா? அதை இப்படிச் செய்யுங்கள்! #AllAboutLove - 20

அடுத்து, நாம் எப்போதும் பேசும் ரிலேஷன்ஷிப் விஷயத்துக்கு வருவோம். காதல் திருமணங்கள் பெற்றோர்கள் நிச்சயிக்கப்படும் திருமணங்களைவிட சிறந்தவை என்கிறோம். எதனால்? அதன் `சக்ஸஸ் ரேட்' அதிகமானது என்பதால் என நினைத்தால் தவறு. திருமண முறிவு, கசப்பு ஆகியவை இரண்டு திருமணங்களிலும் அதிகம்தான். அது காரணமல்ல.

ஆண் - பெண் சமம் என்பதைவிட இருவரும் சமமாகக் கருதப்பட வேண்டியவர்கள் என்பதே அடிப்படை. உடல் சார்ந்து இருவருக்கும் சில வித்தியாசங்கள் உண்டு. குழந்தை பெறுவதில் இருவருக்கும் பங்குண்டு என்றாலும் பிரசவமும் பிறந்த குழந்தைக்கான பாலும் பெண்களால்தான் சாத்தியம். இதன் அடிப்படையில்தான் தொன்றுதொட்டு வாழ்வியலுக்கான விஷயங்களை இருவரும் பகிர்ந்துகொண்டோம். காலம் மாற மாற அந்தப் பகிர்தலில் நிறைய மாற்றங்கள் தேவைப்பட்டன. உதாரணமாக, கல்வி, வேலைக்குச் செல்வது ஆகியவை. புரிந்துகொண்டவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். புரியாதவர்கள் கலாசாரம், முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்களில்லை எனப் பேசுகிறார்கள். மனித இனம் தோன்றி இத்தனை ஆண்டுகளுக்குப் பின் இன்று நாம் சொல்ல வேண்டியது, செய்ய வேண்டியது... ஆண் பெண் இருவரின் ஆசைகளையும் தேவைகளையும் விருப்பங்களையும் ஓர் உறவு சரி சமமாகப் பார்க்க வேண்டும்; தர வேண்டும் என்பதே. காதலில், தன் இணையைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்திலே அந்த விருப்பம் ஈடேறுகிறது. அதனாலே, இந்தச் சமநிலை பெற்றோர்கள் நிச்சயிக்கும் திருமணங்களைவிடக் காதல் திருமணத்தில் அதிகம். நார்ஸிஸம் இந்த சமநிலையைத்தான் குலைக்கிறது. அந்தச் சமநிலையே இல்லையென்றால் பின் காதலித்து என்ன பயன்? அந்த இருவரும் திருமணம் செய்து என்ன பயன்? அதனால்தான், அப்படியொருவருடனான காதலோ ரிலேஷன்ஷிப்போ தவறு.

Love is when the other person's happiness is important than your own

நார்ஸிஸம் என்பது ஒரு மனநோய். அது, தன்னைப் பற்றி மட்டுமே யோசிக்க வைக்கும். தனக்கு ஒரு வேளை உணவு கிடைப்பதற்காக இன்னொருவரின் வாழ்க்கையையே அழிக்கவும் தயங்காத மனத்தைக் கொடுக்கும். பிறர் மீது எந்தக் கருணையையும் காட்டாது. எப்போதும் எல்லோருடைய கவனமும் தன் மீது மட்டுமே இருக்க வேண்டும் என நினைக்க வைக்கும். முதல் பத்தியில் சொன்னவரின் பார்ட்னர் அப்படியொருவராக இருந்திருக்கிறார். நார்ஸிஸ்ட்கள் செய்வது காதல் அல்ல. அப்படியொருவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதில் அர்த்தமும் இல்லை.

நார்ஸிஸ்ட்கள் மட்டுமல்ல; ஒருதலைக் காதலும் சிக்கலானதுதான். பரிச்சயம் இல்லாத ஒருவர் மீது ஈர்ப்பு வரலாம்; ஆசை வரலாம். அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை எனச் சொல்லவில்லை. ஆனால், அதைக் காதல் என்று சொல்வதில்தான் சிக்கல். நார்ஸிஸ்ட்கள் போல இவர்கள் காயப்படுத்துவதில்லை. ஆனால், அது காதலாக இருக்கும் வாய்ப்பு குறைவு. காதல் என்பதே, இருவரும் சேர்ந்து வாழ்வை எதிர்கொள்வதும் ரசிப்பதும்தானே?

மனிதன் ஒரு சமூக விலங்கு. இந்தச் சமூகத்தை வெறுத்து விலகி ஒருவர் வாழலாம். ஆனால், அவர்களுக்கும் ஏதேனும் ஒரு வகையில் இச்சமூகத்தின் தேவையோ பங்களிப்போ இருக்கும். `நான் கடவுள்' ஆர்யாவுக்குக் கூட சமூகத்தின் தேவை இருந்தது. அந்தச் சமூகத்துக்காகவும் சேர்ந்து யோசிப்பதே மானுடம் ஆகும். காதலிலும் ரிலேஷன்ஷிப்பிலும் கூட இது பொருந்தும். அதற்காக சமூகம் அல்லது சமூகத்தில் ஒரு பிரிவினர் எதிர்பார்க்கும் விஷயங்களைச் செய்ய வேண்டுமென்பதில்லை. நம் வாழ்வு இச்சமூக மேம்பாட்டுக்காகவும் அமைவது நல்லது.

Love
Love
Pixabay
`அர்ஜூன் ரெட்டி' பாட்டி பிரேக்அப் பற்றிச் சொன்னது உண்மைதான்; ஆனால்..! #AllAboutLove - 21

உங்களைக் காதலிப்பவரோடு நீங்கள் சேர்ந்து வாழலாம்; திருமணம் செய்துகொண்டு வாழலாம். அது உங்கள் விருப்பம். ஆனால், அந்த வாழ்வில் மேலே சொன்ன சமநிலை குலையாது வாழுங்கள். இந்த உலகம் இயங்குவதும் உயிர்த்திருப்பதும் இந்தச் சமநிலையை நோக்கிதான் என எண்ணுகிறேன். இந்தச் சமநிலைதான் உலகின் அத்தனை ஜீவராசிகளின் அடிப்படையாக இருக்கிறது. அது நம் காதலிலும் இருக்க வேண்டும் என்பதே இயற்கையான விஷயம். இருவரின் வாழ்க்கையையும் மேம்பட யோசியுங்கள். இருவரின் ஆசையும் தேவையும் நிறைவேற செயல்படுங்கள். அதைமீறிய அன்பின் வெளிப்பாடு வேறெதுவுமில்லை.

அனைவருக்கும் வாழ்த்துகள்!

- முடிந்தது.
அடுத்த கட்டுரைக்கு