Published:Updated:

"உடம்பெல்லாம் வலிக்குதுப்பான்னு அவன் அழறப்போ பயமா இருக்கும்"-  கண்ணீரில் மிதக்கும் சென்னை குடும்பம்!

``இது மஸ்குலர் டிஸ்ட்ரோபிங்கிற வியாதிங்க. எனக்கும் என் ரெண்டு அக்காங்களுக்கும் இந்த வியாதி இருக்கு.’’

மருந்தில்லா நோயும் வறுமையும் ஒரு வீட்டுக்குள் அடியெடுத்து வைத்தால்..? பூந்தமல்லியை அடுத்த செந்நீர் குப்பத்தைச் சேர்ந்த ரவீந்திரன் குடும்பம்போலதான் இருக்கும். எதிர் எதிரே இரண்டு பைக்குகள் வந்துவிட்டால், ஒரு வண்டி நின்றுதான் போக வேண்டும் என்ற நிலையில் இருக்கிற மேடும் பள்ளமுமான பல தெருக்களைத் தாண்டி, ரவீந்திரனுடைய குடிசை வீட்டுக்குச் சென்றோம்.

மஸ்குலர் டிஸ்ட்ரோபியால் பாதிக்கப்பட்ட ரவீந்திரன்
மஸ்குலர் டிஸ்ட்ரோபியால் பாதிக்கப்பட்ட ரவீந்திரன்

சிமென்ட் ஷீட்களை நேராக நிற்க வைத்து, மேலே கூரைவேய்ந்த பத்துக்குப் பத்தடி வீட்டில் ரவீந்திரனின் அப்பாவும் அம்மாவும் வயதின் தள்ளாமையால் படுக்கையில் கிடக்கிறார்கள். உள்ளே இரும்புக்கட்டிலில் அவரின் இளைய சகோதரி சுதா முடங்கிக் கிடக்கிறார். தளர்ந்துபோன தன்னுடைய உடலை வீல்சேருக்குள் வைத்திருக்கிறார் ரவீந்திரன். சரிவர தூக்க முடியாத தன் கைகளை முடிந்தவரை உயர்த்தி நம்மை வணங்க முயல்கிறார்.

``இது மஸ்குலர் டிஸ்ட்ரோபிங்கிற வியாதிங்க. எனக்கும் என் ரெண்டு அக்காங்களுக்கும் இந்த வியாதி இருக்கு. என் பெரிய அக்காவுக்கு கல்யாணமாகி ரெண்டு குழந்தைங்க பொறந்த பிறகு கைகால் விழுந்திடுச்சு. ஓரிடத்துல இருந்து இன்னோர் இடத்துக்குத் தவழ்ந்துதான் போக முடியும். ரெண்டாவது அக்கா படிச்சு முடிச்சு வேலைக்குப் போக இருந்த நேரத்துல கையும் காலும் படிப்படியா செயலிழக்க ஆரம்பிச்சிடுச்சு. கல்யாணமாகி என் பையன் பொறந்து 5 வருசம் கழிச்சு, எனக்கும் இதே வியாதி வந்துச்சு. எங்களைப் பார்த்த டாக்டருங்க எல்லாரும், `இது பரம்பரையா வர்ற வியாதி. உங்க அப்பா வகையிலோ, அம்மா வகையிலோ யாருக்காவது இந்த வியாதி இருந்திருக்கணும். அதனாலதான், உங்க குடும்பத்துல மூணு பேருக்கு மஸ்குலர் டிஸ்ட்ரோபி வந்திருக்கு.

ரவீந்திரன் வீடு
ரவீந்திரன் வீடு

இதைச் சரிசெய்ய முடியாது. மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டு கன்ட்ரோல்ல வெச்சுக்கத்தான் முடியும்’னு சொல்லிட்டாங்க. எங்க குடும்பத்தோட நிலைமையை சகிச்சுக்க முடியாத என் மனைவி எங்க பெண் குழந்தையைத் தூக்கிட்டு வீட்டைவிட்டே போயிட்டாங்க’’ என்றவரின் குரலில் மலையளவு சோகம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நடமாட்டமில்லாத ரவீந்திரனின் மூத்த அக்கா மகேஸ்வரியை 30-களில் இருக்கிற அவரின் மகள் பார்த்துக்கொள்கிறார். ரவீந்திரனுக்கு சாப்பாடு ஊட்டுவதிலிருந்து இயற்கை உபாதைகளுக்கு உதவி செய்வதுவரை அவரின் 13 மகன் நவீன்தான் பார்த்துக்கொள்கிறான். இளைய மகள் சுதாவையும் குடும்பத்தையும் ஹோட்டலில் வேலைபார்த்துக் காப்பாற்றிக் கொண்டிருந்திருந்த ரவீந்திரனின் அம்மா, வயதின் பலவீனத்தால் ஒரு நாள் தடுமாறி விழுந்தவரால், அதன் பிறகு பூவரச மரக்கிளையின் துணையில்லாமல் நடக்க முடிவதில்லை.

ரவீந்திரனின் அம்மா
ரவீந்திரனின் அம்மா
`இரவு உணவு உண்ணாமல் தூங்கச் செல்லும் குடும்பங்கள்!' -கொரோனா குறித்த ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

தற்போது, ரவீந்திரன், அவருடைய அப்பா, அம்மா மூவருக்கும் அரசாங்கத்தின் பென்ஷன் தலா 1,000 ரூபாய் வந்துகொண்டிருக்கிறது. அந்தப் பணத்தில்தான் தற்போது கால் வயிறு, அரை வயிறு எனச் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

ரவீந்திரன் தொடர்ந்தார். ``கஞ்சி குடிச்சிக்கூட காலத்தை ஓட்டிடலாம். ஆனா, ஹாஸ்பிட்டல் போக, வர ஆட்டோ செலவுக்கு, மருந்து மாத்திரை செலவுக்கு என்ன பண்றதுன்னு தெரியலை... என் பிள்ள படிக்கணும். சத்தா சாப்பிடணும். `எல்லா வீட்லேயும் பிள்ளைங்களுக்கு ஸ்நாக்ஸ் வாங்கித் தர்றாங்கப்பா. எனக்கும் வாங்கிக் கொடுப்பா’ன்னு அவன் கேட்கிறப்போ என்னால அழ மட்டும்தான் முடியுது.

என்னைக் குளிப்பாட்டறது, எனக்கு சாப்பாடு ஊட்டறது, இவ்வளவு ஏங்க... நான் டாய்லெட் போனாகூட என் பிள்ளதாங்க சுத்தப்படுத்தணும். இவ்ளோ வேலைகளையும் செஞ்சுக்கிட்டு, சத்தான சாப்பாடும் இல்லாம `உடம்பெல்லாம் வலிக்குதுப்பா’ன்னு அவன் அழறப்போ மனசுக்கு பயமா இருக்குங்க.

ரவீந்திரன் குடும்பம்
ரவீந்திரன் குடும்பம்
காலை, மதிய, இரவு உணவு... இப்படி இருக்க வேண்டும்!

`உடம்புல சத்தில்லாமதான் வலிக்குது தம்பி’ன்னு பிள்ளைய சமாதானம் செஞ்சுக்கிட்டிருக்கேன். ஆனா, அவனுக்கும் எங்களை மாதிரி ஏதாவது நடந்திடுமோன்னு பயமா இருக்குங்க. எங்க குடும்பத்தைக் காப்பாத்த தெய்வம்தாங்க யாரையாவது அனுப்பி வைக்கணும்’’ என்பவரின் குரல் எதிர்காலம் குறித்த பயத்தில் நடுங்குகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு