Published:Updated:

பேரனின் ‘குடி’ க்காக ஏந்திய பிச்சைப் பாத்திரம்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பேரனின் ‘குடி’ க்காக ஏந்திய பிச்சைப் பாத்திரம்...
பேரனின் ‘குடி’ க்காக ஏந்திய பிச்சைப் பாத்திரம்...

போதைக்கு முன்பாக உறவுகள் எம்மாத்திரம்?

பிரீமியம் ஸ்டோரி

‘‘எனக்கு என் பேரனையும் அவனுக்கு என்னையும் விட்டா வேற சொந்தம் இல்லய்யா... பாவிப்பய அவனும் குடிகாரனாயிட்டான். நான் பிச்சையெடுக்குற காசை வாங்கிட்டுப்போய் குடிச்சிட்டு வருவான். நானும் கொடுத்துருவேன். என்ன செய்ய... நாளைக்கு நான் செத்தா தூக்கிப்போட ஆளு வேணுமில்ல...’’ - உடைகள் மட்டுமல்லாமல் ஆளும் கந்தலாக நைந்து போயிருக்கும் செல்லம்மா பாட்டியிடமிருந்து உடைந்து உடைந்து விரக்தியாக உதிர்கின்றன வார்த்தைகள்.

85 வயதாகிவிட்டது செல்லம்மா பாட்டிக்கு. இத்தனை ஆண்டுகளில் காலம் அவரிடமிருந்து எல்லாவற்றையும் பறித்துக்கொண்டிருக்கிறது - உயிரைத் தவிர. இயல்பான முதுமையின் கோடுகளையுமே வறுமை வரைந்திருந்ததால், பாட்டியால் எழுந்து நிற்கக்கூட திராணியில்லை. கண்பார்வையும் காது கேட்கும் திறனும் மங்கிவிட்டன. ஆனாலும், வெயிலைப் பொருட்படுத்தாத சருகைப்போல நெல்லை சாலையோரம் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார் செல்லம்மா பாட்டி.

பேரனின் ‘குடி’ க்காக ஏந்திய பிச்சைப் பாத்திரம்...

சில தினங்களுக்கு முன்னர் பாளை சேவியர் கல்லூரி அருகே மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் கண்களில் பட்டிருக்கிறார் பாட்டி. தாளாத வெயிலில் தலையில் துணியைப் போர்த்திக்கொண்டு கையேந்தி அமர்ந்திருந்த அவரின் முகம் ஆட்சியரின் மனதை என்னவோ செய்திருக்க வேண்டும். உடனடியாக, நெல்லை மாநகராட்சி சார்பாக தனியார் பங்களிப்புடன் நடத்தப்படும் ஆதரவற்றோர் மையத்தைத் தொடர்புகொண்டவர், பாட்டியை மீட்டுப் பராமரிக்கும்படி உத்தரவிட்டிருக்கிறார்.

அதன் பிறகுதான் பாட்டியின் பரிதாபப் பின்னணியை அறிந்து அனைவருமே அதிர்ந்து போனார்கள். இது குறித்து நம்மிடம் பேசினார் ‘ஆர்-சோயா’ தன்னார்வ அமைப்பின் தலைவர் சரவணன். ‘‘அந்தப் பாட்டியால எந்திரிச்சு நிக்கக்கூட முடியலை. தவழ்ந்துதான் போறாங்க. அவங்களை யாரோ கூட்டிட்டு வந்து விட்டிருக்காங்க. பாட்டிகிட்ட கேட்டதுக்கு, ‘என் பேரன் பைக்குல கொண்டாந்து விட்டுட்டு, சாயங்காலம் வீட்டுக்குக் கூட்டிட்டுப் போயிருவான்’னு சொன்னாங்க. அப்பவே எங்களுக்கு ஏதோ நெருடிச்சு. இருந்தாலும் பாட்டிகிட்ட, ‘முதியோர் உதவித்தொகை வாங்கிக் கொடுக்கோம். வேறு எதுனா வேணும்னாலும் கேளுங்க. கலெக்டர் உங்களுக்கு உதவச் சொல்லியிருக்காங்க. இனிமே பிச்சையெடுக்கக் கூடாது’னு சொல்லிட்டு வந்தோம். பிறகு ஒரு வாரத்துக்கு பாட்டி அந்த இடத்துக்கு வரலை.

ஷில்பா பிரபாகர் சதீஷ், சரவணன்
ஷில்பா பிரபாகர் சதீஷ், சரவணன்

ஆனா, சில நாள்களுக்கு முன்னாடி அதே இடத்துல பாட்டி பிச்சையெடுக்குறதை கலெக்டர் பார்த்திருக்காங்க. மறுபடியும் எங்களுக்கு போன் செஞ்சுட்டு, போலீஸுக்கும் தகவல் சொல்லிட்டாங்க. உடனே நாங்களும் போலீஸும் அங்கே போய் ஓரமா இருந்து கவனிச்சோம்.

சாயங்காலம் பைக்குல வந்த ஒருத்தர், பாட்டிகிட்ட பணத்தை வாங்கிட்டு டாஸ்மாக் போயி பாட்டில் வாங்கினார். மறுபடியும் வந்து பாட்டியைக் கூட்டிட்டுப் போக முயற்சி செஞ்சப்ப பிடிச்சுட்டோம். அவர்கிட்ட விசாரிச்சப்ப, அவர் பாட்டியோட பேரன் முருகன்னு தெரிஞ்சுது. பேட்டை பக்கத்துல ஜீவா நகர்ல வசிக்கிறதா சொன்னார். போலீஸ் அவரை ஸ்டேஷனுக்குக் கூப்பிட்டாங்க. பயந்து போனவர், வண்டியைப் போட்டுட்டு ஓடிட்டார். அதனால பாட்டியை எங்க மையத்துக்குக் கூட்டிட்டு வந்து பராமரிக்கிறோம். பாட்டியோட வீட்டு அக்கம் பக்கத்துல விசாரிச்சதுல ஓடிப்போன பேரன் இதுவரைக்கும் வரலையாம். பக்கத்து வீட்டுக்காரங்க கிட்ட பாட்டி எங்ககிட்ட இருக்கிற விஷயத்தைச் சொல்லிட்டு வந்திருக் கோம். பாட்டி எங்களோட இருந்தாலும், அவங்க மனசெல்லாம் பேரன் மேலதான் இருக்கு’’ என்றார்.

செல்லம்மாள் பாட்டியைச் சந்தித்தோம். கண்களைக் குறுக்கி நம்மைப் பார்த்ததும், ‘‘என் பேரனாய்யா... எங்கய்யா போன இத்தனை நாளா...’’ என்று கண்ணீருடன் கேட்டபடி தவழ்ந்தே அருகில் வந்தார். “நாங்களும் உங்க பேரன்மாதிரிதாம்மா” என்றபடி அவரிடம் பேச்சுக் கொடுத்தோம்...

‘‘என் வீட்டுக்காரர் பேரு முனுசாமி. நானும் அவரும் பழைய பேப்பர் பொறுக்கி பொழப்பை ஓட்டினோம். எங்களுக்கு மூணு ஆம்பிளைப் பிள்ளைங்க. எல்லாருமே இறந்துட் டாங்க. மூணாவது மகன் பேராட்சியின் மவன்தான் இந்த முருகன். அவனுக்கு அம்மா, அப்பா இல்லாததால நான்தான் தூக்கி வளர்த்தேன்.

நான் கெதியா இருந்தவரைக்கும் பேப்பர் பொறுக்கிேனன். அதுல கெடைச்ச காசைவெச்சு ரெண்டு பேரும் வயிராறுவோம். இப்ப முடியாமப் போச்சுய்யா... எந்திருச்சு நிக்கவே முடியலை. அதான்... நாலு பேருகிட்ட கையேந்துறேன். எப்படியோ பாழாப்போன குடிப்பழக்கம் பேரனுக்குத் தொத்திக்கிச்சு. தெனமும் பிச்சையெடுக்குற காசை, அவன் அப்பப்போ வந்து வாங்கிட்டுப் போய் குடிச்சுருவான்.

நடுவுல அவனுக்குக் கல்யாணம் செஞ்சு வெச்சேன்யா. ரெண்டு குழந்தைங்க பொறந்துச்சு. ஆனா, இவனோட குடிப்பழக்கத்தால பொண்டாட்டி இவன்கூட வாழலை. குழந்தைகளைக் கூட்டிக்கிட்டு போயிட்டா. பிறகு குடிப்பழக்கம் அதிகமாகிடுச்சு. எனக்கும் அவனைவிட்டா வேற நாதியில்லை. அவனுக்கும் என்னை விட்டா யாருமில்லை. நாளைக்கு நான் செத்தாக்கூட அவன்தானேய்யா தூக்கிப் போடணும்... அதனால, எனக்கு பிச்சையெடுக்குறதைத் தவிர வேற வழி தெரியலய்யா...” ஆற்றாமையுடன் தட்டுத் தடுமாறி சொல்லி முடித்தார் செல்லம்மா பாட்டி.

தூக்கி வளர்த்த உறவையே வெயிலில் தூக்கியெறிய வைத்திருக்கிறது பாழாய்ப்போன குடி. மிச்ச நாள்களிலாவது செல்லம்மாவுக்கு நிம்மதி கிடைக்கட்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு