Published:Updated:

``அம்மாவின் மடியில் என் மகன்!''- தாய்மையில் நெகிழும் திருநங்கை அக்காய் பத்மஷாலி!

``திருநங்கைகள் செக்ஸ் வொர்க்கர்களாகவும் பிச்சைக்காரர்களாகவும் இருப்பதால் உங்களுக்குக் குழந்தையைத் தத்துக்கொடுக்க முடியாது என்றார்கள்''.

Akkai padmashali and Vasudev
Akkai padmashali and Vasudev ( Shethepeople )

கர்நாடகாவில், தன் திருமணத்தைப் பதிவு செய்த முதல் திருநங்கை அக்காய் பத்மஷாலியும் அவர் கணவர் வாசுதேவும் சமீபத்தில் ஆண் குழந்தையை சட்டப்படித் தத்தெடுத்திருக்கிறார்கள்.

Akkai padmashali and Vasudev
Akkai padmashali and Vasudev
Shethepeople

டிரான்ஸ் கம்யூனிட்டிக்காக கடந்த 30 வருடங்களாகப் போராடி வருகிற அக்காய், எல்லா திருநங்கைகளைப் போலவும், உலகம் இவரை ஆண் என்று விளிக்க, இவர் தன் பெண் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க... விளைவு 12 வயதில் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். அப்படிப்பட்டவர்தான் பின்னாளில், தன்பாலின ஈர்ப்பையும் தன் பாலுறவையும் குற்றப்படுத்திய 'இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 377 செல்லாது' என உச்சநீதிமன்றம் தீர்ப்பெழுதியதற்கு ஒரு முக்கியக் காரணமாக இருந்தார். தன் சேவைகளுக்காக கர்நாடக அரசின், பொதுமக்களுக்கான இரண்டாம் உயர் விருதான ராஜ்யோத்ஸவ விருதைப் பெற்ற முதல் திருநங்கையான அக்காய் தற்போது, சட்டப்படி ஓர் ஆண் குழந்தையைத் தத்தெடுத்திருக்கிறார்.

``அம்மாவாக வேண்டுமென்பது என் கனவு. வாசுவுக்கும் எனக்கும் திருமணம் முடிந்ததும் `ஒரு குழந்தை இருந்தால் வாழ்க்கை இன்னும் நன்றாக இருக்குமே' என்றுதான் யோசித்தோம். சில அநாதை இல்லங்களையும் அணுகினோம். ஆனால், அவர்களோ, திருநங்கைகள் செக்ஸ் வொர்க்கர்களாகவும் பிச்சைக்காரர்களாகவும் இருப்பதால் உங்களுக்குக் குழந்தையைத் தத்துக்கொடுக்க முடியாது என்று கூறிவிட்டார்கள்'' என்கிற அக்காய், தன் தொடர் முயற்சியால் தன் சகோதரியின் சொந்தத்திலேயே ஓர் ஆண் குழந்தையைத் தத்தெடுத்து அதற்கு `அவின்' என்று பெயர் சூட்டி விட்டார்.

அக்காய் பத்மஷாலி
அக்காய் பத்மஷாலி
Shethepeople

``நான் திருநங்கை என்ற காரணத்தினாலேயே, தங்கள் பேரக்குழந்தைகள் என்னைப் பார்த்துவிடக்கூடாது என்று குழந்தைகளின் கண்களைப் பொத்திய, என் தோழிகளின் அம்மாக்களைச் சந்தித்திருக்கிறேன். இதோ என் மகன் என் அம்மாவின் மடியில் விளையாடிக்கொண்டிருக்கிறான். என் முகம் பார்த்துச் சிரிக்கிறான். இதுபோதும் எனக்கு'' எனத் தாய்மையில் நெகிழ்கிறார் அக்காய் பத்மஷாலி.

News and Pic courtesy:Shethepeople