சென்னை ராஜ்பவன் ஆளுநர் மாளிகையில் நேற்று அன்னையர் தினத்தை முன்னிட்டு சிறந்த அன்னைக்கான விருது சிலருக்கு வழங்கப்பட்டது. அதில் திருநங்கை கிரேஸ் பானுவின் வளர்ப்புத் தாய் திருநங்கை முன்னா நாயக் என்கிற ஹீனாவும் ஒருவர்.
சமூக செயற்பாட்டாளர், எழுத்தாளர் எனப் பன்முகம் கொண்டவர் கிரேஸ் பானு. சிறந்த அன்னைக்கான விருதினை அவர் அம்மாவுடன் சேர்ந்து கிரேஸ் பானுவும் பெற்றுக் கொண்டார்.
அப்போது விழா மேடையில் பேசிய திருநங்கை ஹீனா, `திருநங்கை சமூகம் சார்பாக என்னை சிறந்த அன்னையாக தேர்வு செய்ததற்கு கவர்னருக்கு என் நன்றியை தெரிவிச்சிக்கிறேன். கல்வி தான் ஒருவரைத் தீர்மானிக்கும். இவ்ளோ தூரம் என் புள்ளையால நான் வந்துருக்கேன்னு ரொம்ப சந்தோஷமா இருக்கு. என் புள்ளைக்கு கல்வி கொடுத்தேன். இன்ஜினியர் ஆக்கிப் பார்த்தேன். நான் திருநங்கையா மாறினதனால என்னால கல்வியைத் தொடர முடியாம போச்சு. படிப்பை பாதியிலேயே விட்டுட்டேன். ஆனா, அந்தக் கல்வி ஆசையை என் புள்ளை மூலமா பூர்த்தி பண்ணிக்கிட்டேன். அந்த சந்தோஷம் எனக்குப் போதும் என கண்கலங்கினார்.
அவரைத் தொடர்ந்து பேசிய கிரேஸ் பானு, `திருநர் மக்களுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துட்டே இருக்கோம். திருநர் மக்களுக்குக் கல்வியைக் கொடுத்தே ஆகணும்னு அதுக்காகவும் தொடர்ந்து ஓடிட்டு இருக்கோம். அவங்களுக்கு கல்வி கொடுக்கணுங்கிற எண்ணம் வந்ததுக்கு என் அம்மாவும் ஒரு காரணம். தாய், தந்தை என ஆண் பால், பெண் பால் பிரிவினர்களை மட்டுமே பார்த்துட்டு இருக்கோம். அன்னை என்கிற சொல்லுக்கு அன்பு என்பதுதான் அர்த்தம். அன்பிற்கு பாலினம் கிடையாது. 16 வயசில வீட்டை விட்டு என்னை வெளியே துரத்தினாங்க. எனக்கு ஒரு அம்மாவாக, பக்கபலமாக ஹீனாம்மா எப்பவும் இருந்தாங்க. என் சமூக மக்களும் படிக்கணும், வேலைக்குப் போகணும்னு நான் நினைச்சதுக்கு பாபா சாஹிப் அப்தேப்கர் தான் காரணம். பெரியார், கலைஞர் போன்ற பலர் எல்லா சமூக மக்களுக்கும் கல்வி கிடைக்க வித்திட்டிருக்கிறார்கள். என் சமூக மக்கள் தொடர்ந்து எல்லா துறைகளிலும் சாதனை படைப்பார்கள்!' எனக் கூறியிருந்தார்.
சிறந்த அன்னைக்கான விருதினைப் பெற்ற திருநங்கை அன்னைக்குப் பலரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.