சினிமா
ஆன்மிகம்
பேட்டி - கட்டுரைகள்
இலக்கியம்
Published:Updated:

கல்யாணங்கள் கேரிகேச்சரில் நிச்சயிக்கப்படுகின்றன!

கேரிகேச்சர் அழைப்பிதழ்
பிரீமியம் ஸ்டோரி
News
கேரிகேச்சர் அழைப்பிதழ்

கேரிகேச்சர்

உங்களில் எத்தனை பேர் உங்களுடைய திருமண அழைப்பிதழை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறீர்கள்? `நடந்து முடிஞ்ச அசம்பாவிதத்தை ஞாபகப்படுத்தற மாதிரி அதை வேற யாராவது பத்திரப்படுத்துவாங்களா?’ என நீங்கள் நக்கலடிக்கலாம். சென்னையைச் சேர்ந்த இளங்கோவன் டிசைன் செய்து தரும் அழைப்பிதழ்களைக் காலம் கடந்தும் பாதுகாக்கத் தோன்றும். அந்த அழைப்பிதழ்களுக்காகவே இன்னொரு முறை கல்யாணம் செய்துகொள்ளத் தோன்றும் யாருக்கும். அந்த அழைப்பிதழ்களில் அவ்வளவு கிரியேட்டிவிட்டி!

கேரிகேச்சர் அழைப்பிதழ்
கேரிகேச்சர் அழைப்பிதழ்

கேலிச்சித்திரங்கள் எனப்படும் `கேரிகேச்சர்' பாணியில் அழைப்பிதழ்களை டிசைன் செய்து தருவதில் நிபுணர் இளங்கோவன். கல்யாணத் தேதி குறித்ததும், இவரிடம் அப்பாயின்ட்மென்ட் வாங்கி வரிசையில் இருப்போரில் பிரபலங்களும் அடக்கம். இளங்கோவனின் பேச்சிலோ அநியாயத்துக்குத் தன்னடக்கம்!

‘` `ஸ்போர்ட்ஸ் ஸ்டார்’ பத்திரிகையில் வெளிவந்த கேரிகேச்சர் ஓவியங்களால் ஈர்க்கப்பட்டவன் நான். சின்ன வயசுலேருந்தே ஓவியங்கள் வரைவேன். லயோலா காலேஜில் விஸ்காம் படிச்சேன். காலேஜ் முடிச்சதும், சத்யம் சினிமாஸில் கிராபிக் டிசைனரா வேலைக்குச் சேர்ந்தேன். அப்புறம் `சந்தமாமா’வில் சில வருஷங்கள் வேலை பார்த்தேன். அதுவரைக்கும் கையால் வரைஞ்சிட்டிருந்த நான், அங்கேதான் டிஜிட்டல் இல்லஸ்ட்ரேஷன்ஸுக்கு மாறினேன். `கேரிகேச்சர்’னு சொல்லப்படற கேலிச்சித்திரங்கள் வரையறது ரொம்பப் பிடிக்கும். இந்தியாவில் கேரிகேச்சர் ஓவியங்கள் வரையற ஆட்கள் அதிகம் பேர் இல்லை. நிறைய ரிசர்ச் பண்ணினேன். அமெரிக்கா, யூகே, ஆஸ்திரேலியா நாடுகளில் கேரிகேச்சரில் லேட்டஸ்ட் டிரெண்ட்ஸை ஃபாலோ பண்ணி, என்னை அந்தத் துறையில் அப்டேட் பண்ணிக்கிட்டேன். எந்தத் திட்டமும் இல்லாம விளையாட்டா என் கல்யாணப் பத்திரிகையை கேரிகேச்சரில் ட்ரை பண்ணினேன். அந்த கான்செப்ட் எல்லாருக்கும் பிடிச்சிருந்தது. அப்புறம் ஃபிரெண்ட்ஸுக்கு, மத்தவங்களுக்குன்னு இன்னிக்கு அதுதான் எனக்கு வாழ்க்கையா மாறியிருக்கு...’’ அறிமுகம் சொல்பவர், வாழ்வை மாற்றிய அந்த முதல் திருமண அழைப்பிதழை நமக்குக் காட்டியபடியே தொடர்கிறார்.

கேரிகேச்சர் அழைப்பிதழ்
கேரிகேச்சர் அழைப்பிதழ்

‘`நான் மான்செஸ்டர் யுனைட்டடு ரசிகன். அதனால அந்த ஜெர்சி போட்டுக்கிட்டிருப்பேன். என் மனைவிக்கு பீட்டில் கார் ரொம்பப் பிடிக்கும். நாங்க லயோலாவில் ஒண்ணா விஸ்காம் படிச்சோம். நம்பர் பிளேட்டில் இருக்கும் எண்கள், காலேஜ்ல எங்களுடைய ரோல் நம்பர்ஸ்...’’ கான்செப்டை விளக்குபவரின் சூப்பர் ஸ்பெஷல் திறமை, தத்ரூபம். இளங்கோவின் ஓவியங்கள் பார்த்ததும் இன்னார் எனக் காட்டிக்கொடுப்பவை.

கேரிகேச்சர் அழைப்பிதழ்
கேரிகேச்சர் அழைப்பிதழ்

500-க்கும் மேலான டிசைன்களை உருவாக்கியிருக்கும் இளங்கோவனுக்கு இந்தியாவில் மட்டுமன்றி, வெளிநாடுகளிலிருந்தும் வாடிக்கையாளர்கள் உண்டு. ``வெளிநாடுகளில் உள்ளவங்க பாரம்பர்ய டச்சோடு அவங்களோட பர்சனல் விருப்பங்களும் கலந்த மாதிரியான தீம்களையே அதிகம் கேட்கறாங்க...’’ எனும் இளங்கோ, உதாரணத்துடன் அதை விளக்குகிறார்.

save the date
save the date

‘`அந்த மணமகன், மணமகள் ரெண்டு பேரும் ஃபுட்பால் ரசிகர்கள். அதையே தீமா எடுத்துக்கிட்டேன். ஃபுட்பால் ஸ்டேடியத்தில் அவங்க ரெண்டு பேரும் நிற்கிற மாதிரியும் ரெண்டு பேரின் டீம் கேப்டன்களும் அவங்களை வாழ்த்தற மாதிரியும் டிசைன் பண்ணிக் கொடுத்தேன். இந்த மாதிரி சின்னச் சின்ன டீடெயில்ஸும் பர்சனல் டச்சும் அந்த அழைப்பிதழை வேற லெவலுக்குக் கொண்டு போயிடும்...’’ வார்த்தைகளில் கவனமாக கர்வம் தவிர்த்துப் பேசுபவர், தன் டிசைன்களில் சிலவற்றை நமக்குக் காட்டினார். மணமகனை, மணமகள் தன் முந்தானையால் இறுகக் கட்டிவைத்து, ‘கேம் ஓவர்’ எனச் சொல்கிறார்...

கேரிகேச்சர் அழைப்பிதழ்
கேரிகேச்சர் அழைப்பிதழ்

தூண்டிலைப் பிடித்துக்கொண்டு சிரிக்கிறார் மணமகள்... தூண்டிலில் சிக்கிய மீனாக மணமகன்...

மணமகள் கையில் அரிவாள்... ஆட்டுக்கு பதில் மணமகன். ‘மவனே நீ காலி’ என்கிறது கிடாவெட்டு!

இப்படி ஒவ்வொரு டிசைனிலும் குறும்பும் கற்பனைத்திறனும் ஓவர் லோடடு!

இளங்கோவன்
இளங்கோவன்

கேரிகேச்சரில் அழைப்பிதழ் டிசைன் வேண்டுவோர், மணமக்களின் முகங்கள் நேரே தெரிகிற மாதிரியான போட்டோக்களையும் தீம் ஐடியாக்களையும் பகிர வேண்டும்.

``இத்தனை வருஷ அனுபவத்தில் எந்தெந்தத் திருமண முறைகள் எப்படியிருக்கும் என்பது ஓரளவு எனக்கு அத்துப்படி. தீமுக்கான ஐடியாக்களை என் பொறுப்பிலேயே விடறவங்களுக்கு நானே என் கற்பனைக்கேத்தபடி டிசைன் பண்ணிடுவேன். அதைத் தாண்டி, சிலர் அவங்களுடைய குறிப்பிட்ட தேவைகளையும் சொல்வாங்க. கடைசி நிமிஷம்வரை அவங்க சொல்லும் ஐடியாக்களைப் பரிசீலிப்பேன். எனக்குத் திருப்தி வரும்வரை இம்ப்ரூவ் பண்ணிட்டே இருப்பேன்...’’ அநியாய அடக்கத்துடன் சொல்பவர், மணமக்களுக்கு யோசிப்பதற்கு வேலையே வைக்காமல் மிகப்பெரிய ரெஃபரன்ஸை வைத்திருக்கிறார். அத்தனை கலெக்‌ஷன்ஸ்.... அத்தனை தீம்ஸ்!

கேரிகேச்சர் அழைப்பிதழ்
கேரிகேச்சர் அழைப்பிதழ்

‘`மணமக்களின் முக்கிய எதிர்பார்ப்பு என்ன தெரியுமா? கேரிகேச்சரில் நான் உருவாக்கும் உருவங்கள் அவங்களை மாதிரியே இருக்கணும். கொஞ்சம் வித்தியாசம் தெரிஞ்சாலும் ரிஜெக்ட் பண்ணிடுவாங்க...’’ என்கிறார். இவர் டிஸைன் மட்டுமே செய்து தருகிறார். அழைப்பிதழ்களை அச்சடித்துக் கொடுப்பதில்லை. கேரிகேச்சரில் இவர் உருவாக்கித் தரும் டிசைன்களை, சம்பந்தப் பட்ட மணமக்கள் அழைப்பிதழ்களாக அச்சடித்துக்கொள்ள வேண்டும்.

கேரிகேச்சர் அழைப்பிதழ்
கேரிகேச்சர் அழைப்பிதழ்

அழைப்பிதழ்களைத் தாண்டி, அன்பளிப்பு களுக்கும் கேரிகேச்சரில் ஓவியங்கள் வரைந்து கொடுக்கிறார் இளங்கோவன். சச்சின், சித்ஸ்ரீராம், விஜய் ரசிகரின் வேண்டுகோளுக்கேற்ப ‘பிகில்’ படத்திலிருந்து விஜய்யின் லுக், `தர்பார்’ படத்தில் ரஜினியின் லுக் எனப் பலவற்றையும் கேரிகேச்சரில் கொண்டுவந்திருக்கிறார். தவிர வாய்ப்பு கிடைக்கும்போது திரைப்படங்களிலும் தன் கலைவண்ணத்தைக் காட்டுகிறார். ‘கல்யாண சமையல் சாதம்’, ‘தெகிடி’, ‘அப்புச்சி கிராமம்’ படங்கள் அவற்றில் சில.

கேரிகேச்சர் அழைப்பிதழ்
கேரிகேச்சர் அழைப்பிதழ்

‘`மக்களுக்கு மெள்ள மெள்ள இப்போதான் கேரிகேச்சர் கான்செப்ட் பற்றிப் புரிய ஆரம்பிச்சிருக்கு... இதையே கிஃப்ட்டா கொடுக்கலாமேனு நிறைய பேர் யோசிக்க ஆரம்பிச்சிருக்காங்க. அடுத்தகட்டமா கேரிகேச்சர் ஸ்டைலில் அனிமேட்டடு வீடியோஸ்ல இன்விடேஷன்ஸை டிசைன் பண்ற முயற்சியில் இறங்கியிருக்கேன். வருஷம் முழுக்க பிஸியா இருக்கேன். கல்யாண சீஸன்ல சூப்பர் பிஸியாயிடறேன். பிடிச்ச விஷயமே வாழ்வாதாரமா அமையற அதிர்ஷ்டம் எத்தனை பேருக்கு அமையும்னு தெரியலை. நான் அதிர்ஷ்டசாலி....’’ அமைதியான அந்தச் சிரிப்பிலும் கேரிகேச்சர் எஃபெக்ட்!