
வந்த இடத்துல திடீர்னு ராணிக்கு உடம்பு சரியில்லாமப்போச்சு. சமயபுரம் பக்கத்துல இருக்கிற தனியார் ஆஸ்பத்திரியில அட்மிட் பண்ணினோம். அப்போதான் அவங்களுக்கு கிட்னியில பிரச்னை இருந்தது தெரிய வந்துச்சு.
‘‘பிச்சை எடுத்தாவது உன்னை நான் காப்பாத்துவேன். என்னை நம்பி வா..!’’ - காதல் கைகூட பல ஆண்கள் இப்படியான வார்த்தைகளைக் காதலியிடம் சும்மாவாவது சொல்லி உருகுவதைப் பார்த்திருப்போம். ஆனால், திருச்சியில் உண்மையிலேயே தன் ஆசைக் காதல் மனைவியைக் காப்பாற்ற, பிச்சையெடுத்து வாழ்ந்துவருகிறார் முருகன் என்னும் ஆத்மார்த்தமான காதலன்.
திருச்சி கலெக்டர் அலுவலகம்... கோடை வெயில் கொளுத்திய மதிய நேரம் அது. கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்துவிட்டு, இரண்டு அடி நீள அகலமுள்ள கட்டை வண்டியில் உட்கார்ந்தபடி, கையைத் தரையில் வைத்துத் தள்ளித் தள்ளி நகர்ந்துவந்தார், இரண்டு கால்களும் இல்லாத முருகன். முகத்தில் சொல்ல முடியாத சோகமும் கவலையும் தென்பட்டது. ‘‘என்னண்ணே பிரச்னை!’’ என நாம் கேட்டதுதான் தாமதம். ‘ஓ’வென பெருங்குரலெடுத்து அழத்தொடங்கினார். மனதில் அடக்கிவைத்திருந்த சோகம் அத்தனையையும் வார்த்தைகளில் கொட்டினார்.

‘‘எனக்கு சொந்த ஊர் மதுரைங்க. படிப்பு இல்லை. 12 வயசுல எங்க அப்பா குடும்பத்தை விட்டுட்டுப் போயிட்டாரு. சென்னையில என்னோட அக்கா வீட்ல தங்கியிருந்து ஹோட்டல், டீக்கடைன்னு வேலைசெஞ்சு குடும்பத்தைப் பாத்துக்க ஆரம்பிச்சேன். அந்தச் சமயத்துலதான், நான் வேலை செஞ்ச டீக்கடை வழியா வேலைக்குப் போற ராணியைப் பார்த்தேன். எனக்கு ரொம்பப் புடிச்சிப்போச்சு.வீட்டை விட்டு ஓடிவந்து 1996-ல கல்யாணம் செஞ்சிக்கிட்டோம். 2002-ல சென்னையில் சின்னதா ஒரு ஹோட்டல் போட்டு சம்பாதிக்க ஆரம்பிச்சோம். 2011 வரைக்கும் வாழ்க்கை நல்லா போய்க்கிட்டு இருந்துச்சி.
யாரு கண்ணு பட்டுச்சோ தெரியல... சொந்தக்காரங்க ஒருத்தருக்கு உடம்பு சரியில்லைன்னு, அவங்களைப் பாக்குறதுக்காக திருச்சியில் இருந்த ராணியோட வீட்டுக்கு வந்திருந்தோம். வந்த இடத்துல திடீர்னு ராணிக்கு உடம்பு சரியில்லாமப்போச்சு. சமயபுரம் பக்கத்துல இருக்கிற தனியார் ஆஸ்பத்திரியில அட்மிட் பண்ணினோம். அப்போதான் அவங்களுக்கு கிட்னியில பிரச்னை இருந்தது தெரிய வந்துச்சு. சென்னையில நடத்திக்கிட்டிருந்த ஹோட்டலை அப்படியே விட்டுட்டு, ராணியை அட்மிட் பண்ணியிருந்த ஆஸ்பத்திரிக்குப் பக்கத்துல இருந்த ஒரு ஹோட்டல்ல வேலைக்குச் சேர்ந்தேன். ஒரு கட்டத்துல ராணியோட ரெண்டு கிட்னியும் பாதிப்படைஞ்சதால, டயாலிசிஸ் செஞ்சு அவங்களைப் பாத்துக்கிட்டே, 2017-ல இருங்களூர்ல ஒரு ஃபாஸ்ட் புட் கடை போட்டேன். ஆனா, விதி திரும்ப திரும்ப என் வாழ்க்கையில விளையாட ஆரம்பிச்சது. கடை போட்ட அடுத்த வருஷத்துலயே சுகர் பிரச்னையால எனக்கு ஒரு காலை எடுக்க வேண்டியதாப்போச்சு. 2020-ல இன்னொரு காலையும் எடுத்துட்டாங்க.
ஆஸ்பத்திரிக்கும் வீட்டுக்குமா ராணிக்காக அலைஞ்சுகிட்டு எங்க வாழ்க்கையே போராட்டமா இருந்ததுல, என் மகன் விஜய்யை ஒன்பதாவதுக்கு மேல படிக்க வெக்க முடியல. இதோ இப்ப வரைக்கும் அவன்தான் ராணியை ஆஸ்பத்திரிக்கு டயாலிசிஸ் செய்ய கூட்டிப் போயிட்டு வந்துட்டிருக்கான்.
இந்த நிலையில ராணியைப் பாத்துக்குற பொறுப்பை அவன்கிட்ட ஒப்படைச்சுட்டு, ‘தூரமா போனாலாவது ஏதாவது வேலை கிடைக்கும்’னு நினைச்சு திருவண்ணாமலை பக்கம் போனேன். அங்கேயும் பல இடங்கள்ல கேட்டும் எனக்கு ஒரு வேலையும் கிடைக்கல. அப்பதான் அங்கே என்னைப் பாத்த சாமியாருங்க சிலரு, ‘கால் இருக்குறவனே பிச்சை எடுக்குறான். உனக்குதான் ரெண்டு காலும் இல்லையே.... எங்க கூட வா’ன்னு என்னைப் பிச்சை எடுக்கக் கூட்டிட்டுப் போயிட்டாங்க. ராணியோட மருத்துவச் செலவுக்கும் குடும்பச் செலவுக்குப் பணம் வேணுமே... அதனால, எனக்கும் வேற வழி தெரியல. இப்ப வரைக்கும் பிச்சை எடுத்துதான் என் பொண்டாட்டியைக் காப்பாத்திட்டு இருக்கேன்’’ என்று கலங்கினார்.
அவரை ஆறுதல்படுத்திவிட்டுப் பேசிய ராணி, ‘‘அப்பப்ப திருவண்ணாமலையில இருந்து வந்து காசு கொடுத்துட்டுப் போவாரு. ‘காசு மட்டும் குடுக்குற... என்ன வேலைக்குப் போற?’ன்னு கேட்டும் அவர் சொல்லவே இல்லை. ஒரு கட்டத்துல, பிச்சையெடுத்துதான் பணம் கொண்டு வர்றாருங்கிற விஷயத்தை அவருகூட வந்த ஒருத்தரு சொல்லிட்டாரு. வீட்டுக்காரரு பிச்சையெடுக்குறாருன்னா மனசு எப்படிங்க தாங்கும்? மனசு முழுக்க அம்புட்டு வேதனை. நான் படிச்சதுக்கு என் உடம்பு மட்டும் நல்லா இருந்திருந்தா, அவரை வீட்ல உக்கார வெச்சி சம்பாரிச்சி சோறு போட்டிருப்பேன். அவரு இப்படி சிரமப்படுறது எனக்கும் கஷ்டமாத்தான் இருக்கு. ‘என்னை அப்படியே விட்ரு, மருந்தைக் குடிச்சிட்டு ரெண்டு பேரும் செத்துடலாம்’னுகூட பல தடவை சொல்லிட்டேன். ‘என்னை நம்பி உன் வீட்ல இருந்து எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சிட்டு வந்த... என் உசுரு இருக்குற வரைக்கும் உன்னைப் பாத்துப்பேன்’னு சொல்லிக் கலங்குறாரு’’ என்று விசும்பினார்.

இறுதியாகப் பேசிய முருகன், ‘‘இதுவரை ஆஸ்பத்திரிக்கு மட்டும் 15 லட்ச ரூபா செலவு பண்ணியாச்சி. ராணி போட்டிருந்த 40 பவுன் நகை எல்லாத்தையும் வித்துட்டேன். கடை வெச்சதுல நாலு லட்சம் வரைக்கும் நஷ்டம். கடையில இருந்த சாமானை வித்துதான் கொஞ்ச கடனை அடைச்சேன். எங்கேயும் யாரும் வேலையும் கொடுக்கலை. சொந்தத் தொழில் செய்யவும் கையில காசு இல்லை. வேற வழி தெரியாமத்தான் கட்டை வண்டியோட கையை எத்தி எத்தி போய் பிச்சை எடுத்துட்டு இருக்கேன். கையேந்தும்போது அசிங்கமாகத்தான் இருக்கு. என்னத்த செய்ய? இப்ப கவர்மென்ட் காப்பீடுத் திட்டத்துலதான் ராணிக்கு வைத்தியம் பார்த்துக்கிட்டு இருக்கேன். அரசாங்கத்துல இருந்து ஒரு மூணு சக்கர ஸ்கூட்டர் கொடுத்தாங்கன்னா, பைக்லயே போய் டீ வித்தாவது பொழச்சுக்குவேன். இல்லாட்டி ஒரு பெட்டிக்கடை வைக்கிறதுக்கு உதவி செஞ்சாலும், அதை வெச்சு வாழ்க்கையை ஓட்டிடுவேன். அதுக்காகத்தான் அப்பப்ப கலெக்டர் ஆபீஸுக்கு வந்து மனு கொடுத்துட்டுப் போறேன். இதுவரைக்கும் ஒரு விடிவு பொறக்கல. காலம் பூரா பிச்சையெடுத்து வாழற நிலைக்கு என்னைத் தள்ளிவிட்றாதீங்க’’ என்று வழிந்தோடிய கண்ணீரைத் துடைத்துக்கொண்டார்.
நம்பிக்கையுடன் காத்திருக்கும் முருகன் எழுந்து நிற்க ஆதரவாக ஒரு கரம் கிடைக்காமலா போய்விடும்!