Published:Updated:

“வீட்ல இருந்தாலே விசேஷம்தான்!” - இது போலீஸ் தீபாவளி

எஸ்.சரவணன் - துணை ஆணையர் - திருநெல்வேலி
பிரீமியம் ஸ்டோரி
எஸ்.சரவணன் - துணை ஆணையர் - திருநெல்வேலி

அனுபவம்

“வீட்ல இருந்தாலே விசேஷம்தான்!” - இது போலீஸ் தீபாவளி

அனுபவம்

Published:Updated:
எஸ்.சரவணன் - துணை ஆணையர் - திருநெல்வேலி
பிரீமியம் ஸ்டோரி
எஸ்.சரவணன் - துணை ஆணையர் - திருநெல்வேலி
சினிமா ரசிகர்களால் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாதது... `மைனா’ படத்தில் வரும் தீபாவளி! தலை தீபாவளி... வேலையிலிருந்து கணவர் வருவாரா, மாட்டாரா என்று ஒரு போலீஸ்காரரின் மனைவியும் அவர் குடும்பத்தினரும் கோபத்தோடு காத்திருப்பார்கள்; சிறையிலிருந்து தப்பியோடிய கைதியைப் பிடித்து அழைத்துவரும் முக்கியமான பணியில் இருந்தபடி, மனைவியை எப்போது பார்ப்போம் என்று பரிதவித்துக்கொண்டிருப்பார் அந்த போலீஸ்காரர். திரையில் மட்டுமல்ல... நிஜ வாழ்க்கையிலும் போலீஸ்காரர்களின் பண்டிகை தினங்கள் இப்படித்தான் இருக்கின்றன. காரணம், காவல்துறைப் பணியில் இருப்பவர்களுக்கு 24 மணி நேரமும் `ஆன் டூட்டி.’ இது எழுதப்படாத விதி. கொரோனாகாலத்தில் முன்களப் பணியாளர்களாக இவர்களின் பணி குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் சில உயரதிகாரிகளிடம், அவர்களின் மறக்க முடியாத தீபாவளி அனுபவங்கள் குறித்துக் கேட்டோம்.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
“வீட்ல இருந்தாலே விசேஷம்தான்!” - இது போலீஸ் தீபாவளி

கே.கண்ணன் - துணைக் காவல் கண்காணிப்பாளர் - சி.பி.சி.ஐ.டி, எழும்பூர்

``எனக்கும் சிவகாமிக்கும் 1989-ம் வருஷம் நெல்லையில கல்யாணம் நடந்தது. சட்டசபைத் தேர்தல் நேரம்கிறதால அஞ்சு நாளைக்கு மேல லீவு கிடைக்கலை. அதனால கல்யாணத்துக்கு முதல் நாள்தான் ஊருக்கு வந்தேன். பஸ்ஸுல வந்தது, தண்ணியும் சாப்பாடும் சேராததுனு ஜலதோஷமும் இருமலும் சேர்ந்துக்குச்சு. என் அண்ணன், இருமல் மருந்து வாங்கிக் கொடுத்தாரு. ஒரு ஸ்பூன் குடிச்சேன், கேட்கலை. அதனால ஒரு பாட்டில் மருந்தையும் அப்படியே குடிச்சிட்டேன். அப்புறம் என்ன... தாலி கட்டுற வரைக்கும் கிறக்கத்துலயே இருந்தேன். தலை தீபாவளிக்கு ரெண்டு நாள் லீவு கிடைச்சுது. மாமனார் வீட்ல சந்தோஷமா கொண்டாடிட்டேன். ஆனா, அதுக்கப்புறம் எந்த தீபாவளிக்கும் நான் வீட்ல இருந்ததில்லை.

தீபாவளின்னாலே இன்னொரு சம்பவத்தையும் என்னால மறக்க முடியாது. 2006-ம் வருஷம் திருச்சி, திருவெறும்பூர்ல இன்ஸ்பெக்டரா இருந்தேன். தீபாவளிக்கு முந்தின நாள், ஒரு பிரபல ரௌடியப் பிடிக்கறதுல களேபரமாகி... எனக்கும் எஸ்.ஐ-க்கும் அருவா வெட்டு விழுந்துடுச்சு. ரெண்டு பேருக்குமே நல்ல காயம். ஹாஸ்பிட்டல்ல அட்மிட்டாகியிருந்தோம். தீபாவளிக்கு வீட்டுக்கு வர்றதா சொல்லியிருந்தேன். ஆனா போக முடியலை. நல்ல நாளும் அதுவுமா அந்தச் சம்பவம் நடந்திருந்ததால வீட்ல யாருக்கும் சொல்லலை. ஆனா அந்தச் செய்தியை டி.வி-யில பார்த்துட்டு கதறி அழுதுக்கிட்டே என் மனைவியும் குழந்தைகளும் ஹாஸ்பிட்டலுக்கு வந்துட்டாங்க. அந்த தீபாவளிக்கு அவங்க ஹாஸ்பிட்டலுக்கு வந்தது இன்னும் என் கண்ணுக்குள்ளயே நிக்குது...’’

“வீட்ல இருந்தாலே விசேஷம்தான்!” - இது போலீஸ் தீபாவளி

சிவகாமி கண்ணன்

``அந்த தீபாவளியை நெனைச்சா இப்பவும் அடி வயிறு கலங்குது. அதை யோசிக்கவே என்னால முடியலை. தீபாவளின்னா எல்லா வீட்டுலயும் பட்டாசு சத்தத்தோட சிரிப்பு சத்தமும் கேட்கும். எங்க வீட்ல அவரோட சிரிப்பு சத்தம் மட்டும் கேட்காது. அது கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும். குழந்தைங்க மனசு சங்கடப்படுமேனு அதை வெளிக்காட்டிக்க மாட்டேன். அவருக்கும் சேர்த்துதான் டிரெஸ் எடுத்திருப்போம். தீபாவளி அன்னிக்கி நாங்கல்லாம் புது டிரெஸ் போட்டிருப்போம். அவருக்கு மட்டும் அது வாய்க்காது. எப்பவுமே தீபாவளிக்குப் பிறகுதான் அதைப் போட்டுக்குவார். போலீஸ் சர்வீஸ்ல இருக்குறவங்களுக்கு தீபாவளி அன்னைக்கும் காக்கி டிரஸ்தானே! அவரு குடும்பத்தோட இருக்கற நாள்தான் எங்களுக்கு தீபாவளி!’’

எஸ்.சரவணன் - துணை ஆணையர் - திருநெல்வேலி

``2003-ம் வருஷம். போலீஸ் வேலைக்குச் சேர்ந்திருந்த நேரம். தீபாவளிக்கு ஊருக்குப் போறதுக்காக லீவு கேட்டேன். அப்போ போலீஸ் பயிற்சிக் கல்லூரி பிரின்ஸிபாலா இருந்தவர் முதல்ல `ஓகே... லீவு எடுத்துக்கோ’னு சொல்லிட்டார். நானும் ஊருக்குப் போறதுக்கு டிரெஸ், பட்டாசு, இனிப்புனு வாங்கிவெச்சுட்டேன். தீபாவளிக்கு முந்தின நாள் பிரின்ஸிபால் கூப்பிட்டார். `உன் லீவு கேன்சல்’னு சொன்னார். எனக்கு மட்டுமில்ல... அந்த வருஷம் என்னை மாதிரியே தீபாவளிக்கு லீவு கேட்ட அத்தனை பேருக்குமே லீவை கேன்சல் பண்ணியிருந்தார். தீபாவளி அன்னிக்கி ட்ரெயினிங்குல இருந்த எங்களைக் கீழ்ப்பாக்கத்துல இருக்குற ஒரு இல்லத்துக்குக் கூட்டிட்டுப் போனார். அது, மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் இல்லம். அந்தக் குழந்தைகளோடதான் அந்த தீபாவளியை நாங்க கொண்டாடினோம். பிரின்ஸிபால் சொன்னார்... `லீவு குடுக்கலைன்னதும் நீங்க எல்லாருமே வருத்தப்பட்டிருப்பீங்க. போலீஸ் வேலைன்னா அப்படித்தான். இந்த சர்வீஸ்ல இது மாதிரி எதிர்பாராத சூழலெல்லாம் வரத்தான் செய்யும். இதுவும் ஒரு வகையில உங்களுக்கான ஒரு டிரெயினிங்தான்.’ அப்போதான் எங்கள் துறையின் முக்கியத்துவம் எங்களுக்கு அழுத்தமா புரிஞ்சுது. என் தலை தீபாவளிக்கும் அப்படித்தான். லீவு கிடைக்கலை. ஆனா, எப்படியோ பர்மிஷன்ல போய், கொண்டாடிவிட்டு வந்துட்டேன். எந்தப் பண்டிகையா இருந்தாலும் பர்ச்சேஸ் பண்றதெல்லாம் நான் இல்லை. எல்லாத்தையும் நிர்மாவே பார்த்துக்குவாங்க.

2011-ம் வருஷம்... தீபாவளிக்கு முந்தின நாள், தேவர் ஜயந்தி டூட்டி. அதுக்காக சென்னையிலருந்து கமுதிக்குப் போயிருந்தேன். அன்னிக்கி, பாதுகாப்புக்காகப் போயிருந்த எங்க டீமுக்கு சாப்பாடுகூட கிடைக்கலை. எங்களோட டூட்டிக்கு வந்திருந்த போலீஸ் அதிகாரி ஒருத்தர் பிரெட்டும் ஜாமும்வெச்சிருந்தார். அதுதான் எங்களுக்கு அன்னிக்கு தீபாவளி ஸ்பெஷல்.’’

“வீட்ல இருந்தாலே விசேஷம்தான்!” - இது போலீஸ் தீபாவளி

நிர்மா சரவணன்

``என்னோட அப்பாவும் போலீஸ் ஆபீஸர்தான். பெரும்பாலும் அப்பாவும் தீபாவளி அன்னிக்கோ, மத்த பண்டிகை நாள்களிலோ வீட்ல இருக்க மாட்டாங்க. டூட்டிக்குப் போயிடுவாங்க. அது அப்படியே பழகிப்போச்சு. அதனால என் கணவர் பண்டிகை நாள்ல வீட்டுல இல்லைன்னாலும் நான் பெருசா வருத்தப்பட மாட்டேன். குழந்தைகள் அர்ஜூனுக்கும் அக்‌ஷராவுக்கும்தான் சின்னதா வருத்தம் இருக்கும். ஆனா, அதை வெளியில காமிச்சுக்க மாட்டாங்க.’’

எஸ்.ஜெயக்குமார் -காவல்துறைக் கண்காணிப்பாளர், தூத்துக்குடி மாவட்டம்

``தீபாவளிப் பண்டிகைன்னாலே நிறைய வீடுகள்ல காலையிலேயே கறி விருந்தும், மது விருந்தும் அமர்க்களப்படும். சில இடங்கள்ல இதையொட்டி சண்டை சச்சரவு வர்றதும் நடக்கும். அதையெல்லாம் தடுக்க வேண்டியதும் எங்க வேலைதான். தீபாவளிக்கு முந்தின நாளிலிருந்தே ஆபீஸர்களெல்லாம் ரவுண்ட்ஸ்ல இருந்தாத்தான் எந்தப் பிரச்னையையும் ஃபேஸ் பண்ண முடியும். 2004-ம் வருஷம்... விழுப்புரம் மாவட்டம் எஸ்.கொளத்தூர் பகுதியில தீபாவளி யன்னிக்கி ஒரு பிரச்னை ஆரம்பிச்சுது. கொஞ்சம் கொஞ்சமா அந்தச் சாதாரண பிரச்னை கலவரத்துல கொண்டுவந்து விட்டுடுச்சு. அதனால ஒட்டுமொத்த போலீஸ் டீமுக்கும் அங்கேதான் விடிய விடிய தீபாவளி. பிரச்னையைப் பேசி முடிச்சு, வீட்டுக்கு திரும்பினப்போ தீபாவளியே முடிச்சு போயிருந்துச்சு. போலீஸ்காரங்களுக்கு காவல் நிலையம் தான் முதல் வீடு.’’

“வீட்ல இருந்தாலே விசேஷம்தான்!” - இது போலீஸ் தீபாவளி

காஞ்சனாதேவி ஜெயக்குமார்

``எங்க குடும்பத்துலயோ, தெரிஞ்சவங்க வீட்லயோ ஏதாவது விசேஷம்னா சாருக்கு டைம் இருந்தா எங்களோட வருவாங்க. அவர் வந்தா நாங்க எல்லாருமே ரொம்ப சந்தோஷப்படுவோம். அதேநேரத்துல அவர் வரலைன்னா, அதுக்காக வருத்தப்பட மாட்டோம். அவரோட வேலையை நானும், குழந்தைகள் உத்ராவும் அபர்ணாவும் நல்லா புரிஞ்சிவெச்சிருக்கோம். குழந்தைங்க `அப்பா எங்கே...’னு சின்ன வயசுல அழுது அடம்பிடிச்சிருக்காங்க. அது புரியாத வயசு. அப்போகூட நான் எதையாவது சொல்லி அவங்களை சமாளிச்சுடுவேன். இப்போ இரண்டு பேரும் காலேஜ் படிக்கிறாங்க. அதனால அவங்க அப்பாவின் டூட்டி பத்தி அவங்களுக்கு நல்லாத் தெரியும். குடும்பத்தை நினைக்காம இப்பிடி வேலை பார்க் கிறாரேனு உள்ளூர ஒரு சந்தோஷம்கூட இருக்கத்தான் செய்யுது...’’

எம்.ரவி - ஏ.டி.ஜி.பி, - சிறப்பு அதிரடிப் படை, ஈரோடு

``அது 1993-ம் வருஷம். தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்துல ஏ.எஸ்.பி-யாக இருந்தேன். எனக்கு தலை தீபாவளி. மாமனார் வீட்டுல தடபுடலான ஏற்பாடு. இந்த வருஷம் சந்தோஷமா தீபாவளியைக் கொண்டாடிட வேண்டியதுதான்னு முடிவு செஞ்சிருந்தேன். என் உயரதிகாரிகிட்ட விஷயத்தைச் சொல்லி லீவு கேட்டேன். அப்போ என்னோட கன்ட்ரோல்ல ஒன்பது போலீஸ் ஸ்டேஷன் இருந்துச்சு. `இப்போ இருக்குற சூழ்நிலையில நீங்க தலை தீபாவளிக்கு ஊருக்குப் போக வேண்டாமே...’னு அன்பா கட்டளை போட்டுட்டார். அதை என் மனைவிகிட்ட சொன்னேன். அவங்க சந்தோஷ மெல்லாம் அப்படியே வடிஞ்சுபோச்சு. மாமனார் வீட்ல அத்தனை பேருக்கும் ரொம்ப மனவருத்தம். தலை தீபாவளியே கொண்டாட முடியாத எனக்கு, அதுக்குப் பிறகு எந்த தீபாவளியையும் குடும்பத்தோட கொண்டாடவே முடியாம போச்சு. தமிழகக் காவல்துறையில பணியாற்றும் ஒவ்வொரு காவலரின் குடும்பத்திலும் இதுதான் நிலைமை.

இந்த போலீஸ் வேலையை நான் லவ் பண்றேன். அதனால பண்டிகைகளைக் கொண்டாடாததுல எனக்கு எந்த வருத்தமும் இருக்குற தில்லை. சில நேரங்கள்ல லீவ் கிடைக்கும். ஆனா, குழந்தைகளுக்கு ஸ்கூல், எக்ஸாம்னு ஏதாவது வந்துடும். அதனாலேயே எதையும் பிளான் பண்ணிக்கிறதும் இல்லை; முன்கூட்டியே எங்கேயாவது போகணும்னு திட்டம் போடுறதுமில்லை. கொஞ்சம் நேரம் கிடைக்குதா... அதைக் குடும்பத்தோட செலவு செய்வேன். அந்த நேரம்தான் எனக்கு தீபாவளி, பொங்கல்!’’

“வீட்ல இருந்தாலே விசேஷம்தான்!” - இது போலீஸ் தீபாவளி

தெய்வம் ரவி

``எந்தப் பண்டிகையா இருந்தாலும் அவர் வீட்ல இல்லாம இருந்தது ஆரம்பத்துல எனக்குக் கஷ்டமாத்தான் இருந்துச்சு. அதுக்கப்புறம், `அவரோட வேலை அப்படி’னு நானும் பிள்ளைகளும் மெள்ள மெள்ள அவரைப் புரிஞ்சிக்கிட்டோம். அவரை மாதிரி போலீஸ்காரங்க டூட்டியில இருந்தாத்தானே மக்கள் தீபாவளியைச் சந்தோஷமா கொண்டாட முடியும்..? அவர் சொன்னமாதிரி, அவர் எங்ககூட இருந்தாலே எங்களுக்கு விசேஷம்தான்!''