Published:Updated:

பேசாக் கதைகள் - 10 | கணவரின் தீயப்பழக்கம்; மீட்கப் போராடும் மனைவி... இது எல்லா ஆண்களின் பிரச்னையா?

பேசாக் கதைகள்

பேசாப்பொருளைப் பேசும் பகுதி. குடும்ப உறவுச் சிக்கல்கள், மன அழுத்தம், தனிமையுணர்வு, அவநம்பிக்கை, பிரிவு, எதிர்மறை சிந்தனைகளால் தவிப்போருக்கான வெளி... பகிரலாம்... தீர்வு தேடலாம்!

பேசாக் கதைகள் - 10 | கணவரின் தீயப்பழக்கம்; மீட்கப் போராடும் மனைவி... இது எல்லா ஆண்களின் பிரச்னையா?

பேசாப்பொருளைப் பேசும் பகுதி. குடும்ப உறவுச் சிக்கல்கள், மன அழுத்தம், தனிமையுணர்வு, அவநம்பிக்கை, பிரிவு, எதிர்மறை சிந்தனைகளால் தவிப்போருக்கான வெளி... பகிரலாம்... தீர்வு தேடலாம்!

Published:Updated:
பேசாக் கதைகள்

"நான் மூணு வருஷம் காதலிச்சு நிறைய எதிர்ப்புகளைச் சமாளிச்சு எதிர்பார்ப்புகளோட கல்யாணம் முடிச்சவ. என் கணவர் என்மேல ரொம்பவே அன்பா இருப்பார். தாம்பத்யத்துலயும் எனக்கு எந்தக் குறையும் இல்லை. இப்போ நான் கன்சிவா இருக்கேன். சமீபத்துல இடிமாதிரி அவரைப் பத்தின ஒரு உண்மை எனக்குத் தெரிய வந்துச்சு. வேற வேற பெயர்கள்ல நிறைய ஃபேஸ்புக் கணக்குகள் தொடங்கி, பெண்களோட செக்ஸ் உரையாடல்கள் வச்சுக்கிட்டிருக்கார்... அதிர்ச்சி என்னன்னா, நாங்க காதலிச்ச காலத்துல இருந்தே அவருக்கு அப்படியான தொடர்புகள் இருந்திருக்கு. இதுபத்தி தெரியவந்ததும் அவர்கிட்ட கடுமையா சண்டை போட்டேன். அதுக்கு அவர் சொல்ற காரணம், 'இந்தமாதிரி கற்பனையா வாழ்றதாலதான் நிஜ வாழ்க்கையில நல்ல நடத்தையோட இருக்கேன்'ங்கிறதுதான்.

நான் சண்டை போட்டபிறகு, அவர் போலி ஃபேஸ்புக் அக்கவுண்ட்களை அழிச்சுட்டார். ஆனால் அவரால இதுக்குள்ள இருந்து அவ்வளவு எளிதா வெளியே வரமுடியலே. என் தோழிகள்கிட்ட பேசினப்போ அவங்க ஒரு தீர்வு கொடுத்தாங்க. நான் வேறு பேர்கள்ல ஃபேஸ்புக் அக்கவுண்ட்களை ஆரம்பிச்சு அவரோட உரையாட ஆரம்பிச்சேன். நடிகைகள் பெயர்கள், குடும்பத்துக்கு நெருக்கமான பெண்களின் பெயர்களையெல்லாம் அந்த உரையாடல்கள்ல அவர் பயன்படுத்தினார். நான் மன ரீதியாவும் உடல் ரீதியாவும் பாதிக்கப்பட்டேன். இல்லற வாழ்க்கையே வெறுத்துப்போச்சு.

ஒருமுறை அவரோட லேப்டாப்பை உபயோகிக்கும்போது அடுத்த இடி விழுந்துச்சு. என் மொபைல்ல நான் வச்சிருந்த என் தோழிகள், என் உறவினர்கள் படங்களையெல்லாம் எடுத்து ஆபாசமா மார்பிங் செஞ்சு வச்சிருக்கார். அவர் மிகப்பெரிய தப்பு பண்றார்ன்னு புரிஞ்சுக்கிட்டேன். இதுபத்தி அவர்கிட்ட பேசினா, நிச்சயம் இதுல இருந்து திருந்தி மீண்டு வருவேன்னு சொல்றார். அவர்மேல எனக்கு கோபம் இல்லே... அவரை எப்படி மீட்கிறதுன்னு குழப்பமாத்தான் இருக்கு.

Adult Chat
Adult Chat
Manuel Breva Colmeiro

ஏற்கெனவே எங்கள் காதல் திருமணத்தை உறவுக்காரங்க கடுமையா எதிர்த்தாங்க. 'விருப்பம்போல கல்யாணம் பண்ணிக்கிட்டில்ல... இப்போ அனுபவின்னு அவங்க சிரிச்சுருவாங்களோ'ன்னு ஒரு பக்கம் பயமாயிருக்கு.

இப்போ பேறு காலத்துக்காக அம்மா வீட்டுக்கு வந்திருக்கேன். இப்பவும் என்கிட்ட செக்ஸ் உரையாடல் செய்யவே விரும்புறார். இப்போ எனக்கு அதில் நாட்டமில்லை. நாளுக்கு நாள் எங்களுக்குள்ள சண்டைகள் அதிகமாகுது. எனக்கு இதைக் கையாளத்தெரியல...

எனக்கு ரொம்பவே நெருக்கமான மருத்துவம் படித்த தோழிக்கிட்ட இந்த விசயத்தை சொன்னேன். அவள் பிரிவுதான் தீர்வுங்கிறா. ஒரு மனநல மருத்துவர்கிட்ட அவரைக் கூட்டிக்கிட்டுப் போனேன். அவர் சில மாத்திரைகள் பரிந்துரைச்சார். ஆனாலும் பெரிசா மாற்றமில்லை... நான் என்ன செய்யனும்... என் கணவருக்கு இருக்கிறது இயற்கையான பிரச்னைதானா? இதுக்கு நிரந்தர தீர்வு என்ன... என்னை எப்படி மாத்திக்கணும்..?"

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கண்ணீரும் கம்பலையுமாதான் இந்த மெயிலை அனுப்பியிருக்காங்க அந்த சகோதரி. முதல்ல, இந்த விஷயத்தை ரொம்பவே மெச்சூர்டா ஹேண்டில் பண்றதுக்காக உங்களுக்கு வாழ்த்துகள். இன்னொரு முக்கிய விஷயம்... கர்ப்பிணியா இருக்கிற இந்தச் சூழல், இவ்வளவு பெரிய மன அழுத்தத்தை நீங்க சுமந்துக்கிட்டிருக்கிறது நல்லதில்லை. முதல்ல, தற்காலிகமா இந்தப் பிரச்னையிலிருந்து வெளியே வாங்க. எல்லாத்தையும் தள்ளி வச்சுட்டு, குழந்தையைப் பத்தி, அதோட எதிர்காலத்தைப் பத்தி சிந்திங்க. பிறக்கப்போற குழந்தை உங்க வாழ்க்கையை, சிந்தனையை மட்டுமில்லாம உங்க கணவரோட வாழ்க்கையைக்கூட மாற்றலாம்.

உங்க கணவரோட பிரச்னை, நீங்க நினைக்கிற அளவுக்கு ரொம்பப் பெரிய பிரச்னையில்லை. கற்பனையாலான ஒரு உலகத்துக்குள்ள தெரிஞ்சோ, தெரியாமலோ அவர் சிக்கிக்கிட்டுத் தவிச்சுக்கிட்டிருக்கார். இணையதளத்துல பாலியல் உரையாடல்கள் செய்றது இன்னைக்கு மிகப்பெரிய வணிகமா இருக்கு. முதல்ல அப்படியான வலைப்பின்னல்ல சிக்கி உங்க கணவர் பணத்தை இழக்கிறாராங்கிறதைப் பத்தி நீங்க மெயில்ல எதையும் பகிர்ந்துக்கலே. ஒருவேளை அப்படியிருந்தா, அதை முதல்ல தடுக்கனும். இப்படி, இளைஞர்களை வீழ்த்தி, பாலியல் உரையாடல்கள் மூலமா பணம் பறிக்குற கும்பல் இணையத்துல ஏராளம் உலவிக்கிட்டிருக்கு.

ஆன்லைனில் பணம் பறிக்கும் கும்பல்
ஆன்லைனில் பணம் பறிக்கும் கும்பல்

பொதுவா, மனிதர்கள் எல்லாருமே மூன்று முகங்கள் வச்சிருக்காங்க சகோதரி... முதல் முகம் சமூகத்துக்காக. இன்னொரு முகம் உறவுகளுக்காக... மூன்றாவது முகம், அவர்களுக்கு மட்டுமே தெரிந்த முகம். மத்தவங்க மரியாதை கொடுக்க என்னமாதிரி உடை அணியனும்... எப்படி நடந்துக்கனும்ன்னு பார்த்துப் பார்த்து நடத்துகிறது முதல் முகம். உறவுகளைத் திருப்திபடுத்த, அவங்ககிட்ட நல்லபேர் எடுக்க கிளீன் இமேஜோட எப்படி இருக்கணும்ன்னு நினைக்கிறது ரெண்டாவது முகம். மூன்றாவது முகம், ரொம்பவே ரகசியமானது... அது அவங்க பார்வைக்கு மட்டுமே புலப்படுற இருட்டுப் பக்கம். இந்த இருட்டுப் பக்கம் எல்லாருக்கும் இருக்கும். அது வெளிச்சத்துக்கு வந்தா பலபேரோட முகமூடிகள் கிளிஞ்சு தொங்கும்.

மனிதர்கள் இருக்காங்களே... எல்லாருமே அப்படியே உருகிப்போற பனிக்கட்டியும் கிடையாது. இறுகிக் கிடக்கிற கல்லும் கிடையாது. கல்லும் பனிக்கட்டியும் சேர்ந்த கலவைதான் மனுஷன். இந்தச் சமூகத்துக்காக எல்லாருமே தங்கள் இயல்பான குணங்களை, செயல்பாடுகளை மறைச்சுக்கிட்டு வேறொன்னைத்தான் வெளிப்படுத்திக்கிட்டிருக்காங்க. பெரிய கோபக்காரனா இருக்கலாம். வித்தியாசமான எண்ணம் கொண்டவரா இருக்கலாம்... ஆனா, வெளியில சமூகம் நிர்மாணிச்சு வச்சிருக்கிற வரம்புக்குள்ள வாழ்ந்துட்டார்ன்னா அவர் சராசரி மனுஷன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உங்க கணவரோட பிரச்னையை நீங்க ரொம்பவே மெச்சூர்டா ஹேண்டில் பண்ணியிருக்கீங்க. சில அடிப்படையான விஷயங்கள்ல நமக்குத் தெளிவிருந்தா இன்னும் வேகமா அவரை உங்களால மாத்திட முடியும்.

மனித உடல்ல முக்கியமான செக்ஸ் ஆர்கன் எதுன்னு கேட்டா ஆணுறுப்பு, பெண்ணுறுப்புன்னு பதில் சொல்வாங்க. ஆனா உண்மையிலேயே மனசுதான் முக்கியமான செக்ஸ் ஆர்கன். மனம் சிருஷ்டிக்கிற கற்பிதங்கள்தான் செக்ஸை முழுமைப்படுத்துது. பார்த்த, கேட்ட, ரசிச்ச புலன் உணர்வுகளெல்லாம் ஒரு புள்ளியா திரண்டு மனசுல கற்பனைகளை கிளர்ந்தெளச் செய்யும். இது ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமா வேறுபடும்.

சாதாரணமா ஒருத்தரை ஏன் பிடிக்குதுன்னு நாம யாரையாச்சும் கேட்டா, அவர் சிரிச்சது பிடிக்குதும்பாங்க. இன்னொருத்தர் அவர் நடந்தது பிடிக்குதும்பாங்க. ஒருத்தர் அவரோட நடை பிடிக்கும்பாங்க. செக்ஸ்லயும் அப்படித்தான். ஒவ்வொருத்தருக்கும் வெவ்வேறு தேடல்கள் இருக்கும். சில வரையறைகளுக்கும் வரம்புக்கும் உட்பட்டு அது வெளிப்படும்.

மனிதர்கள் பலவிதம்
மனிதர்கள் பலவிதம்

இன்னைக்கு விடுங்க... எல்லாக் காலத்திலயும் இப்படியான தேடல்கள் இருந்திருக்கு சகோதரி. அந்தக் காலத்துல ஆணும் பெண்ணும் திருமணத்துக்குப் பிறகுகூட முகம் பார்த்துப் பேசிக்க மாட்டாங்க. கூட்டுக்குடும்பங்கள்ல, பெரியவங்க முன்னாடி சிரிச்சாக்கூட தப்புன்னு நினைச்ச சமூகம் நம்மோடது. ஆனா, அப்பவும் இளைஞர்களுக்கு பாலியல் விஷயங்களைக் கத்துக்கொடுக்க ஏற்பாடுகளை வச்சிருந்தாங்க நம்ம முன்னோர். ஊர்கள்ல எல்லையில இருக்கிற காவல் தெய்வங்களுக்கு திருவிழா நடக்கும். அங்கே, குறவன் குறத்தியாட்டம்ன்னு ஒரு கலை நிகழ்ச்சி நடக்கும். பெரும்பாலும் அந்த நிகழ்ச்சியைப் பார்க்க பெண்கள் வரமாட்டாங்க. பெரியவர்கள் முன்னிலையில இளவட்டப் பசங்க கூடியிருப்பாங்க. அதுல குறவன் குறத்தி வேடம் தரிச்சு ஓர் ஆணும் பெண்ணும் நடனமாடி பாலியல் விஷயங்களைப் பேசிக்குவாங்க. நடனம்கூட பாலியல் தன்மையோட இருக்கும். நாம எந்தெந்த வார்த்தைகளையெல்லாம் பேசக்கூடாதுன்னு வரையறை போட்டு வச்சிருக்கோமோ, அந்த வார்த்தைகளெல்லாம் அங்கே சரளமா புழங்கும்.

இதேமாதிரி பெண்களுக்கும் பாலியல் கல்வி இருந்திருக்கு. ஔவை நோன்புன்னு ஒரு வழிபாடு. தை, ஆடி மாதங்கள்ல வர்ற செவ்வாய்க்கிழமைகள்ல, பெண்களெல்லாம் சேர்ந்து ரகசியமா கும்பிடுவாங்க. ஆண்களை அந்தப் பக்கமே விடமாட்டாங்க. அந்த வழிபாட்டுல முதிர்ந்த பெண்கள், இளம் பெண்களுக்கு ஒரு கதை சொல்வாங்க. அதுல கணவன் மனைவிக்கிடையில இருக்கிற உறவுகள் பத்தியெல்லாம் வரும். அந்த வழிபாட்டுல அரிசிமாவுல கொழுக்கட்டை செய்வாங்க. அந்தக் கதையில வர்ற எல்லா வடிவங்கள்லயும் அந்தக் கொழுக்கட்டைகள் இருக்கும். இன்னைக்கும் இந்த வழிபாடு இருக்கு. கொஞ்சம் மாறியிருக்கு.

ஒரு தலைமுறைக்கு திரைப்படங்கள் பாலியலை கற்றுக்கொடுத்துச்சு. மறைஞ்சு மறைஞ்சு முகம் தெரியாம போய் பார்த்த தலைமுறை நமக்கு முன்னால இருந்துச்சு. இன்னைக்கு இணையம் எல்லாத்தையும் எளிமைப்படுத்தியிருக்கு. மேலும் மேலும்ன்னு வரம்பே இல்லாம எல்லா விஷயங்களுக்கும் அங்கே இடமிருக்கு. தியேட்டர்ல போய் படம் பார்க்கணும்ன்னா முகம் மறைக்கனும். இணையத்துல அந்தமாதிரி நெருக்கடிகள் இல்லை. தங்கள் சுயத்தை மறைச்சுக்கிட்டு, அடையாளத்தை மறைச்சுக்கிட்டு நாம அங்கே எதையும் பார்க்கலாம்.

பெண்களை விட ஆண்களுக்கு செக்ஸ் எப்பவுமே பிரச்னைக்குரிய விஷயமாவே இருக்கு. இதை 'பெர்மார்மன்ஸ் ஆங்சைட்டி'ன்னு சொல்வாங்க. அதுக்கு ஆண்களோட உடலியல் அமைப்பு முக்கியக் காரணம். அவங்களுக்கு தூண்டுதல்கள் அவசியமாயிருக்கு. ஒவ்வொருத்தருக்கும் அதற்கான தேடுதல் வேறுமாதிரியிருக்கும். தன் மனைவிக்கிட்ட அது பத்திப் பேசினா, தன் விருப்பத்தைக் கேட்டா அவ தப்பா நினைச்சிருவாளோன்னு பயம்... அந்த தயக்கத்தால அவர்கள் வேறு தளங்கள்ல அதைத் தேடத் தொடங்குறாங்க. அப்படித் தேடத் தொடங்கி அந்த சுவாரஸ்யத்துல மயங்கி அதுக்குள்ள வீழ்ந்துடறது இயல்பானதுதான். உங்க கணவர் கொஞ்சம் அதிக தூரம் போயிட்டார்.

சைபர் க்ரைம்
சைபர் க்ரைம்

கையும் களவுமா மாட்டாத வரைக்கும் எல்லாருமே நல்லவங்கதான்னு சொல்வாங்க... உங்க கணவர் உங்ககிட்ட வெளிப்பட்டுட்டார். அதேநேரம், அவர் செய்ற சில விஷயங்கள் சட்டவிரோதம். உங்க தோழிகள், உறவினர்களுடைய படங்களை மார்பிங் பண்றதையெல்லாம் அனுமதிக்க முடியாது. 'நான் இந்த மாதிரியான விஷயங்கள் பண்றதாலதான் வெளியில நல்லவனா இருக்கமுடியுது'ன்னு சொல்ற உங்க கணவருக்கு இதை புரிய வைங்க... இது சிறைதண்டனை அளிக்கக்கூடிய அளவுக்கான பெரிய குற்றம். இது தொடர்ந்தா, ஒரு கட்டத்துல அவர் மேல இருக்கிற மொத்த மரியாதையும் போயிடும்.

பேசுறதன் மூலம் பாக்குறதன் மூலம் பாலியல் திருப்தி அடையுற விஷயத்தை உளவியல் மருத்துவத்துல ஸ்கோட்டோலாஜியா (scotologia) ன்னு சொல்றாங்க. இது ஒருவித வடிகால். ஆனா, உங்க கணவர் தீவிர மாயையில சிக்கியிருக்கார். இது அடுத்த லெவலுக்குப் போகலாம்.

ஆனா, நிச்சயம் இதைச் சரி செய்யமுடியும். மனநல மருத்துவரும் எழுத்தாளருமான சிவபாலன் இளங்கோவன் அதற்கான வழிமுறைகளைப் பகிர்ந்துக்கிறார்.

.............

சகோதரி... நிறைய முயற்சி செஞ்சிருக்கீங்க... உங்க கணவரோட விருப்பத்துக்காக நீங்களே ஃபேஸ்புக் ஐடி ஓபன் பண்ணி உரையாடவும் துணிஞ்சிருக்கீங்க... இதுக்கெல்லாம் காரணம், அவர் மேல இருக்கிற வற்றாத காதல். இன்னும் கொஞ்சம் முயற்சி பண்ணுங்க. உங்க கணவர் அந்த தளையிலிருந்து விடுபட நிறைய வாய்ப்பிருக்கு. அவரை நல்வழிப்படுத்தமுடியும். குழப்பமில்லாத, அன்பு நிறைஞ்ச வாழ்க்கை உங்களுக்கு உங்க குழந்தை மூலமாவும், கணவர் மூலமாவும் அமையும்! வாழ்த்துகள்!

- பேசுவோம்...

வாசகர்களே... உங்கள் மனதை அழுத்தும் பிரச்னைகளை kppodcast@vikatan.com என்ற மெயில் ஐடியில் பகிர்ந்து கொள்ளுங்கள். தீர்வு தேடுவோம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism