Published:Updated:

உ.பி: `அவருக்கு இரண்டாம் வாய்ப்பாடே தெரியவில்லை!' - மணமேடையில் கல்யாணத்தை நிறுத்திய மணப்பெண்

Marriage - Representational Image
Marriage - Representational Image

`கணிதத்தின் அடிப்படையைக்கூட தெரியாத ஒருவரை நான் எப்படித் திருமணம் செய்துகொள்வது...' என்று கூறி மணமகள் திருமணத்தைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு வெளியேறினார்.

உத்தரப்பிரதேசத்தில், மணமகனுக்கு இரண்டாம் வாய்ப்பாடு தெரியாததால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண், கணிதத்தின் அடிப்படையைக்கூட தெரிந்து வைத்துக்கொள்ளாத ஒருவரை திருமணம் செய்ய முடியாது எனக் கூறியுள்ளார்.

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த மஹாபா மாவட்டத்தில் உள்ள தவேர் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர், தங்கள் மகனின் கல்வித் தகுதியைப் பற்றிக் கூறாமல் மணமகளின் பெற்றோர் மற்றும் உறவினர்களை ஏமாற்றி திருமணம் நிச்சயம் செய்திருந்தனர். மணமகனுக்கு இந்தத் திருமணத்தில் உடன்பாடு இல்லையென்றாலும் பெற்றோரும் நண்பர்களும் வற்புறுத்தியதால் திருமணத்துக்கு ஒப்புக் கொண்டுள்ளார்.

Relationship conflict (Representational image)
Relationship conflict (Representational image)
Pixabay

இந்தச் சூழ்நிலையில் மணமகள் வீட்டினர், மணமகனின் கல்வித் தகுதி குறித்து சந்தேகத்துடனே இருந்துள்ளனர். முக்கியமாக, மணமகள் தனது சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்வதற்காக, தாங்கள் மாலைகளை மாற்றிக் கொள்வதற்கு முன் மணமகனுக்கு ஒரு கணித சோதனையை நடத்த விரும்பினார்.

அந்த சோதனையில் மணமகன் இரண்டாம் வாய்ப்பாடு சொல்லிக் கொண்டிருந்தபோது, அவரால் அதைச் சரியாகக் கூற முடியாததால், `கணிதத்தின் அடிப்படைகூட தெரியாத ஒருவரை நான் எப்படித் திருமணம் செய்துகொள்வது' என்று கூறி மணமகள் திருமணத்தைப் பாதிலேயே நிறுத்திவிட்டு வெளியேறினார்.

Marriage called off - Representational Image
Marriage called off - Representational Image

இதுகுறித்து மணமகளின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரிடம் பேசியபோது, ``மணமகனின் குடும்பத்தினர் மற்றும் மணமகனின் கல்வியைப் பற்றிக் கேள்விப்பட்டதில் இருந்து நாங்கள் இருளில் ஆழ்ந்திருந்தோம். அவர் பள்ளிக்குக்கூட சென்றிருக்க மாட்டார். ஆனால், மணமகனின் குடும்பத்தினர் எங்களை நன்றாக ஏமாற்றிவிட்டார்கள். இந்தச் சூழ்நிலையில்தான் என் சகோதரி துணிச்சலாக சமூகத் தடைக்கு அஞ்சாமல் இந்த முடிவை எடுத்திருக்கிறார்" என்று கூறினார்.

இரு குடும்பங்களும் நகைகள் மற்றும் பரிசுகளைத் திருப்பித் தருவதற்கு சம்மதித்ததால் சமரசம் ஏற்பட்டு, இந்த விஷயம் காவல்துறை வரை செல்லாமல் தவிர்க்கப்பட்டது.

அடுத்த கட்டுரைக்கு