``நான் மாடலிங் செஞ்சப்ப ரியாக்ஷன் வேற... ஆனா, இப்ப..?!'' - அண்ணன் கெளதம் மேனன் பற்றி உத்ரா மேனன்

``வேலையைப் பொறுத்தவரையில எனக்கான இடத்தை அண்ணா முழுமையா கொடுத்திருக்கார். அதுல அவர் தலையிட்டதேயில்லை."
உறவுகளில், அண்ணன்-தங்கை உறவு கொஞ்சம் கூடுதல் ஸ்பெஷல்தான். 'டாம் அண்ட் ஜெர்ரி' போல எந்நேரமும் சண்டை போட்டுக்கொண்டாலும், ஹிமாவாரியைப் பாதுகாக்கும் ஷின் சானைப்போல், வெளியுலக வாழ்க்கையைத் தைரியமாக எதிர்கொள்ள தங்கைகளை ஊக்குவிக்கும் முக்கியமான உறவு அன்பான அண்ணன்கள்தாம். இவர்கள் என்றைக்குமே பிரியாத நிரந்தர நண்பர்கள்.

தான் இயக்கிய பெரும்பாலான திரைப்படங்களில் அண்ணனுக்கு உறுதுணையாக இருக்கும் ஃப்ரெண்ட்லி தங்கை கதாபாத்திரத்தை அழகாக வடிவமைத்திருப்பார் கெளதம் மேனன். அவருடைய நிஜ வாழ்க்கையிலும் இப்படியொரு தங்கை இருக்கிறார். பெயர் உத்ரா மேனன். முன்னாள் மாடல்; இந்நாள் காஸ்ட்யூம் டிசைனரான உத்ரா, தன் அண்ணனுடைய படங்களிலும் காஸ்ட்யூம் டிசைனராகப் பணியாற்றி வருகிறார். அண்ணன் கெளதம் உடனான ரிலேஷன்ஷிப் பற்றி நம்மிடம் பகிர்ந்துகொண்டார் உத்ரா.
குழந்தைப் பருவத்தில் உங்கள் அண்ணன் - தங்கை உறவு பாசமலரா, டிஷ்யும் டிஷ்யூமா?

பாசமலரெல்லாம் சான்ஸே இல்ல. அண்ணன் என்ன சொன்னாலும் நான் கேட்க மாட்டேன். அதேபோல நான் என்ன சொன்னாலும் அவரு கண்டுக்கவே மாட்டாரு. ஆனா, வீட்டுக்கு வெளியே எங்களை ரொம்பவே பத்திரமா பார்த்துப்பாரு. உதாரணத்துக்கு ஒரு சம்பவம் சொல்றேன். 'பிரேமம்' படத்துல வர்ற மாதிரியே, ஸ்கூல் படிக்கிறப்போ என்னையும் அக்காவையும் நிறைய பசங்க ஃபாலோ பண்ணுவாங்க. அந்தப் பசங்களோட சண்டையெல்லாம் போட்டிருக்காரு அண்ணா.
நான் மாடலிங் செய்ய ஆரம்பிச்சப்போ, நிறைய விளம்பரப்படங்கள்ல நடிக்கிறதுக்கு வாய்ப்புகள் கிடைச்சுது. சொன்னா, ஆச்சர்யப்படுவீங்க... நான் மாடலிங் செய்யக் கூடாதுன்னு எங்க வீட்ல எதிர்த்த முதல் ஆள் கெளதம் அண்ணாதான். அந்த நேரத்துல ரொம்ப கோவம்கோவமா வந்துச்சு எனக்கு. ஆனா, கொஞ்சம் மெச்சூரிட்டி வந்தபிறகுதான், அண்ணா நம்ம நல்லதுக்குதான் சொல்லிருக்காருனு புரிஞ்சுது. மத்தபடி, எல்லா அண்ணன் - தங்கச்சியும் மாதிரிதான் நாங்களும்... அடி தடி, டமால் டுமீல் சண்டை குஸ்தி எல்லாமே உண்டு.
உங்க அண்ணன் அம்மா செல்லமா; அப்பா செல்லமா?
கெளதம் அண்ணா எப்பவுமே அம்மா செல்லம்தான். நானும் அக்காவும் அப்பா செல்லம். அண்ணனுக்குப் பிடிச்ச சிக்கன் ஃபிரை மாதிரி ஏதாவது ஸ்பெஷலா சமைச்சாங்கன்னா, அவருக்கு மட்டும் தனியா எடுத்து வெச்சிடுவாங்க அம்மா. இதனால, எங்களுக்கு சிக்கன் குறைஞ்சுபோச்சுனு சண்டையெலாம் போட்டிருக்கேன். (சிரிக்கிறார்)
அண்ணனுக்கு நீங்க வாங்கிக் கொடுத்த முதல் கிஃப்ட்?
நான் சேமிச்சு வெச்சிருந்த பணத்திலிருந்து அண்ணாவுக்கு ஒரு 'ஹெட்ஃபோன்' வாங்கிக் கொடுத்தேன்.
அண்ணன் இயக்கியப் படங்களில் வந்த தங்கை கேரக்டர்களில் உங்களுடைய தாக்கம் இருந்ததா?
'வாரணம் ஆயிரம்' படத்துல வர்ற தங்கச்சி கதாபாத்திரத்துல நான் பாதி, என் அக்கா பாதி இருந்தோம்னு சொல்லலாம். அந்தப் படத்துல வர்ற மாதிரியே என் அப்பா இறந்தப்போ நான்தான் அவர்கூட இருந்தேன். முழுசா என் கேரக்டர்ல ஒரு கதாபாத்திரத்தை அண்ணன் இன்னும் தன் படத்துல வைக்கலை.
அண்ணன் கெளதம் மேனன் - தாய்மாமன் கெளதம் மேனன்... அன்புகாட்டுவதில் யார் பெஸ்ட்?
சந்தேகமே வேண்டாம். கண்டிப்பா தாய்மாமா கெளதம்தான் பெஸ்ட். குழந்தைகள்னா அண்ணாவுக்கு ரொம்பப் பிடிக்கும். அதுலேயும் என் மகன் மேலே கொஞ்சம் கூடுதல் லவ்தான் அவருக்கு...
அண்ணா இயக்கிய திரைப்படங்களில் உங்களின் ஃபேவரைட் எது?
எல்லாமே ஃபேவரைட்தான். 'மின்னலே', 'காக்க காக்க', 'வேட்டையாடு விளையாடு'னு லிஸ்ட் நீண்டுட்டே போகும். இந்தப் படங்களையெல்லாம் ஏதோ ஒரு விதத்துல நம்ம வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்க்க முடியும். அந்த வரிசையில 'நீதானே என் பொன்வசந்தம்' திரைப்படம் அண்ணாவோட பெஸ்ட் திரைப்படங்கள்ல ஒண்ணு. ரிலேஷன்ஷிப்ல இருக்கிறவங்களுக்கு கண்டிப்பா இந்தப் படத்துல வர்ற எமோஷன்ஸ் புரியும்.
ஷூட்டிங் ஸ்பாட்டில் உங்கள் அண்ணன் - தங்கை உறவு எப்படியிருக்கும்?

அந்த நேரத்துல தனியா பேசுறதுக்கு சான்ஸே கிடைக்காது. அங்கேயும் இங்கேயும் ஓடிட்டே இருப்போம். ரொம்ப முக்கியமான விஷயம்னா மட்டும்தான் பேச வேண்டி வரும். படத்தைப் பத்தி ஏதாவது கருத்து பரிமாற்றம், எது சரி, எது தப்புனு எல்லா விஷயங்களையுமே கலந்து பேசி முடிவெடுப்போம். வேலையைப் பொறுத்தவரையில எனக்கான இடத்தை அண்ணா முழுமையா கொடுத்திருக்கார். அதுல அவர் தலையிட்டதேயில்லை.
காஸ்ட்யூம் 'இன்னும் கொஞ்சம் பெட்டரா' என்று உங்கள் அண்ணன் கேட்ட சம்பவங்கள் நடந்திருக்கின்றனவா?
இதுவரைக்கும் அப்படி எதுவும் நடக்கலை. 'என்னை அறிந்தால்' படத்துல ஒரு பாட்டுக்கு அனுஷ்காவுக்கு ஆடை வடிவமைக்கப் போதுமான நேரமில்லை. கடைசி நிமிஷத்துல அவசர அவசரமா வடிவமைச்சேன். 'இன்னும் நல்லா பண்ணிருக்கலாமே'ன்னு நான்தான் வருத்தப்பட்டுட்டு இருந்தேன். ஆனா, அண்ணா எதுவும் சொல்லலை. அவரு எப்பவுமே அமைதியாத்தான் இருப்பார். அதுதான் அவரோட இயல்பு. ஆனா, அவர் பிடிச்சிப்போய் அமைதியா இருக்காரா, பிடிக்காம அமைதியா இருக்காரானு சில நேரங்கள்ல நானே குழம்பிப்போயிருக்கேன்.
'ஹை... இவங்கதான் கெளதம் மேனன் தங்கை' என்று நீங்கள் அடையாளம் காட்டப்பட்ட முதல் தருணத்தை எப்படி ஃபீல் செய்கிறீர்கள்?
அப்படி ஒரு சம்பவம் நடந்ததேயில்லை. ஒரேயொரு முறை 'பாப்' கட் பண்ணிருந்தபோ, சிலபேர் 'கெளதம் மேனன் மாதிரியே இருக்கே'ன்னு சொன்னாங்க. மத்தபடி யாருக்கும் நான் கெளதம் தங்கச்சின்னு தெரியாது.