``என் கணவரைக் கைது செய்து சிறையில் அடைத்தபோது, எங்களுக்குத் திருமணமாகி வெறும் மூன்று மாதங்கள் மட்டுமே ஆகியிருந்தன. எங்களுக்கென்று ஒரு குடும்பத்தை ஆரம்பிப்பதற்கான நேரம்கூட கிடைக்கவில்லை. அதற்குள் ஒரு வழக்கில் என் கணவர் சிறைக்குச் சென்றுவிட்டார். கடந்த 7 வருடங்களாக அவர் சிறையில்தான் இருக்கிறார். நாங்கள் குடும்பம் நடத்தவும் எங்களுக்கென்று வாரிசைப் பெற்றுக்கொள்ளவும் என் கணவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்க வேண்டும்'' - இப்படியொரு மனு உத்தரகாண்ட் உயர் நீதிமன்றதுக்கு வந்திருக்கிறது. இதே தம்பதியின் இதே வேண்டுகோளுடனான ஜாமீன் மனுவை ஏற்கெனவே இரண்டு முறை உத்தரகாண்ட் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்த நிலையில், சில தினங்களுக்கு முன்னால் தலைமை நீதிபதி ஆர்.எஸ். சவுஹான், நீதிபதி அலோக் குமார் வர்மா முன்னிலையில் இந்த வழக்கு மறுபடியும் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்தவர்கள், வாரிசு இல்லாத சிறைக்கைதிகளுக்கு ``மனைவியுடன் குடும்பம் நடத்துவதற்கும் குழந்தை பெற்றுக்கொள்வதற்கும் (right to procreate) இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் உரிமை இருக்கிறதா என ஆராயப்படும்" என்றவர்கள், ``அத்தகைய உரிமை நிபந்தனைக்குட்பட்டதா, அந்த நிபந்தனைகள் என்னென்ன என்பதையும் நீதிமன்றம் ஆராயும்" என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.
மேலும் அவர்கள், ``பல வருடங்கள் சிறைத்தண்டனைப் பெற்றவர்கள் வாரிசு பெற்றுக்கொள்ளும் உரிமையைப் பற்றி பேசுகிற அதேநேரத்தில், மனைவியின் உரிமையைப் பற்றியும் ஆராய வேண்டும். இவையிரண்டையும்விட முக்கியமாக, இத்தகைய முறையில் பிறக்கும் அந்தக் குழந்தை தந்தை என்ற உறவு இல்லாமலே வளர நேரிடும். அந்தக் குழந்தையும் `சிறையிலிருக்கிற என் தந்தையுடன் சேர்ந்து இருப்பதற்கு எனக்கு உரிமை இருக்கிறது' என வாதிடலாம்.
இந்தக் கேள்வியைவிட நாம் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம், பிறக்கும் அந்தக் குழந்தையை அதன் அம்மா சிங்கிள் பேரன்ட்டாக வளர்க்க வேண்டி வரும். `ஏன் அப்பா நம்முடன் இல்லை' என்று அந்தக் குழந்தை கேட்க நேரிட்டால், அதனுடைய உளவியல் எப்படி இருக்கும்? குழந்தையின் இந்த உரிமையைக் கேட்க தற்போது அந்தக் குழந்தை கருவிலும் இல்லை, பிறக்கவும் இல்லை'' என்ற தலைமை நீதிபதி, ``ஒருவேளை இவருடைய மனுவை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டால், அந்தப்பெண், தன்னால் குழந்தையை வளர்க்க இயலவில்லை எனலாம். அப்போது, அந்தக் குழந்தையை வளர்க்கும் சுமை அரசுக்கா?'' என்று கேள்வியும் எழுப்பியிருக்கிறார்கள். தவிர, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் இதுபோன்ற வழக்குகளில் பின்பற்றப்படும் மரபுகள் குறித்து நீதிமன்றத்திற்குத் தெரிவிக்குமாறு மனுதாரரின் வழக்கறிஞரிடம் நீதிமன்றம் கேட்டிருக்கிறது.

2015-ல் இதே போன்றதொரு வழக்கில், ``கொலை வழக்கில் சிறைத்தண்டனைப் பெற்று வருபவரின் இந்த உரிமையை ஏற்றுக்கொள்ள முடியாது" என்று மறுத்திருக்கின்றன பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றங்கள்.
நீண்ட காலம் தண்டனைப் பெற்ற சிறைக்கைதிகளை சில வெளிநாடுகள் குழந்தை பெற்றுக்கொள்ள அனுமதித்ததை மேற்கோள் காட்டி, 2020-ல் ஆயுள் தண்டனை பெற்ற பெண்ணுக்குக் குழந்தை பெற்றுக்கொள்வதற்காக பாட்னா உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், உத்தரகாண்ட் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கு மிகுந்த பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.