Published:Updated:

'வஜைனிஸ்மஸ்'... பெண்களின் பேசப்படாத பிரச்னைகளில் இதுவும் ஒன்று!

ஆ.சாந்தி கணேஷ்

ஒரு தம்பதியை மிகச் சுலபமாகப் பிரித்துவிடக்கூடிய மிகப் பெரிய பிரச்னை இது!

கணவன் - மனைவி
கணவன் - மனைவி

அந்தத் தம்பதிக்கு திருமணமாகி சில மாதங்கள் கடந்துவிட்டன. ஆனால், அதற்கு மேல் அவர்களிடையே அன்பை அதிகப்படுத்துவதற்கான எந்த நெருக்கமும் நிகழவில்லை. மற்ற நேரங்களில் இயல்பாக, அன்பாக இருக்கிற அந்த மனைவி, கணவன் தாம்பத்ய உறவுக்கு நெருங்கும்போதெல்லாம், 'நோ' என்ற ஒரு வார்த்தையில் அதைத் தவிர்த்துவிடுவார்.

பெண்களின் பேசப்படாத பிரச்னைகள் எத்தனையோ இருக்கின்றன. அந்தப் பிரச்னைகள் உடல் சார்ந்ததாகவும் இருக்கலாம்; மனம் சார்ந்ததாகவும் இருக்கலாம். அவற்றில் ஒன்றுதான் வஜைனிஸ்மஸ்.''
உளவியல் நிபுணர் சரஸ் பாஸ்கர்

கணவன் காரணம் கேட்டபோது, 'அந்த நேரத்துல வலிக்குது' என்று அழுதிருக்கிறார் மனைவி. 'திருமணமான பெண்களுக்கு வரக்கூடிய ஒரு பிரச்னைதான் இது' என்கிற புரிதல் கணவனுக்கு இருந்தால், அந்த மனைவியின் பிரச்னைக்குத் தீர்வு கிடைப்பதோடு அந்தத் திருமண பந்தமும் காப்பாற்றப்படும். இல்லையென்றால், ஒரு நீதிமன்றத்தில் முடிந்து போய்விடலாம். சரி, அந்த மனைவிக்கு என்னதான் பிரச்னை?

பெண்களின் பேசப்படாத பிரச்னைகள் எத்தனையோ இருக்கின்றன. அந்தப் பிரச்னைகள் உடல் சார்ந்ததாகவும் இருக்கலாம்; மனம் சார்ந்ததாகவும் இருக்கலாம். அவற்றில் ஒன்றுதான் 'வஜைனிஸ்மஸ்'. தமிழில் சொல்ல வேண்டுமென்றால், ஒரு பெண்ணால் தாம்பத்ய உறவில் ஈடுபட முடியாத தன்மையைத்தான் 'வஜைனிஸ்மஸ்' என்று மருத்துவர்களும் உளவியல் நிபுணர்களும் குறிப்பிடுகிறார்கள்.

தாம்பத்யம்
தாம்பத்யம்

ஒரு தம்பதியரை மிகச் சுலபமாக பிரித்துவிடக்கூடிய மிகப் பெரிய பிரச்னை. மேலேயுள்ள பத்திகளில் நாம் பார்த்த அந்த மனைவியின் பிரச்னை இதுதான். இந்தப் பிரச்னை வருவதற்கான காரணங்கள் என்னென்ன, தீர்வுகள் என்னென்ன... உளவியல் சரஸ்பாஸ்கரிடம் பேசினோம்.

'' 'வஜைனிஸ்மஸ்' என்பது பெண்களுக்கு வருகிற ஒரு மனம்சார்ந்த உடல் பிரச்னை. இதற்கு மூன்று காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, சம்பந்தப்பட்ட பெண் அளவுக்கு அதிகமான கவலைப்படுகிற இயல்பு கொண்டவராக இருக்கலாம். இந்தக் கவலையானது, உறவின்போது அந்தப் பகுதி தசையை இறுக்கமாக்கிவிடும். ஒரு புது அனுபவமாக தாம்பத்ய உறவு நிகழ ஆரம்பிக்கும்போது, 'நம்மால் இதைச் சரிவர செய்ய முடியுமா' என்று பயப்படுவது அல்லது புது நபருடன் தன்னை முழுமையாகப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்கிற நிலைமை வரும்போது வருகிற அளவுக்கு அதிகமான பயம் ஆகியவை 'வஜைனிஸ்மஸ்' பிரச்னையை ஏற்படுத்திவிடும்.

விருப்பமில்லாத திருமணம் நடந்தாலும், இந்த நிலை நிகழலாம். இது அந்தப் பெண்ணுக்குத் தெரிந்தே நிகழும். அந்தளவுக்கு, பெண்களின் மனதுக்கு சக்தி இருக்கிறது.''
உளவியல் நிபுணர் சரஸ் பாஸ்கர்

இரண்டாவது காரணம், சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு அவருடைய சிறுவயதில் ஏதாவது பாலியல் தொல்லை நடந்திருந்தாலும், அந்த ஞாபகங்களின் காரணமாக தாம்பத்திய உறவின்போது பயமும் தயக்கமும் ஏற்படும். இதன் காரணமாகவும், அந்தப் பகுதி தசைகளில் இறுக்கம் ஏற்படும்.

மூன்றாவதாக விருப்பமில்லாத திருமணம் நடந்தாலும், இந்த நிலை நிகழலாம். இது அந்தப் பெண்ணுக்குத் தெரிந்தே நிகழும். அந்தளவுக்கு, பெண்களின் மனதுக்குச் சக்தி இருக்கிறது'' என்றவர், தீர்வுகளை சொல்லத் தொடங்கினார்.

கணவன் - மனைவி
கணவன் - மனைவி

'வஜைனிஸ்மஸ்'-க்கு 80 சதவிகிதம் மனம் சார்ந்த பிரச்னைகள்தான் காரணம். உடல்சார்ந்த காரணங்கள் 20 சதவிகிதம்தான். இதற்கு மருந்து தேவைப்படாத அளவுக்குச் சிகிச்சைகள் இருக்கின்றன. மனம் ரிலாக்ஸானால் உடலும் ரிலாக்ஸாகும். இதற்கு உளவியல் ஆலோசனையும் பிசியோதெரபியும் தேவைப்படும். இதன்மூலம், உடலின் வயிற்றுப்பகுதியை ரிலாக்ஸாக்க முடியும்.

பெண்களுக்கு 'வஜைனிஸ்மஸ்' என்று சொல்லப்படுகிற பிரச்னை ஆண்களுக்கு வேறுவிதமாக நடக்கும். விறைப்புத்தன்மை குறைவாகவோ, விறைப்புத்தன்மை இல்லாமலோ இருக்கும். சிலருக்கு உறவுக்கு முன்னதாக விந்து வெளியேறிவிடும். இதை கவுன்சலிங் மூலம் சரி செய்யலாம். ஒருவேளை பிரச்னைக்கு காரணம் ஹார்மோன் குறைபாடு என்றால் மருந்துகளின் மூலம் சரிசெய்துவிடலாம். இதுவே பெண்ணின் 'வஜைனிஸ்மஸ்' பிரச்னைக்கு உளவியல் ஆலோசனையும் பிசியோதெரபியும் தேவைப்படும்.

பயத்தைப் போக்கும் கவுன்சலிங், அடிவயிற்றுத்தசைகளை ரிலாக்ஸ் செய்யும் பிசியோதெரபி, கூடவே புரிந்துகொண்ட கணவன் மூன்றும் சேர்ந்தால் வஜைனிஸ்மஸை எளிதாகக் கடந்துவிடலாம்.''
உளவியல் நிபுணர் சரஸ் பாஸ்கர்

பொதுவான பிசியோதெரபிஸ்ட்களிடம் 'வஜைனிஸ்மஸ்' பிரச்னைக்கான சிகிச்சை செய்துகொள்ளக் கூடாது. அதற்கென பயிற்சிபெற்றவர்களிடம்தான் செய்துகொள்ள வேண்டும்.

இந்த விஷயத்தை ஒரு குறையாகப் பார்க்காமல், ஜஸ்ட் ஒரு பிரச்னை என்கிற அளவில் யோசித்தால் நிச்சயம் தீர்வு கிடைத்துவிடும். பயத்தைப் போக்கும் கவுன்சலிங், அடிவயிற்றுத்தசைகளை ரிலாக்ஸ் செய்யும் பிசியோதெரபி, கூடவே புரிந்துகொண்ட கணவன் மூன்றும் சேர்ந்தால் வஜைனிஸ்மஸை எளிதாகக் கடந்துவிடலாம்.''