Published:Updated:

`நான் ஐ.ஏ.எஸ் ஆக கணவர்தான் காரணம்!' - வான்மதி - சந்திர மோகன் தம்பதியின் சுவாரஸ்ய காதல்

சந்திர மோகன் - வான்மதி
சந்திர மோகன் - வான்மதி

அர்த்தமுள்ள நோக்கத்தில் காதலர்களாக இணைந்த இவர்கள், தம்பதியராகக் கரம் பிடித்த கதை சுவாரஸ்யமானது.

தனக்கு வசப்படாத ஐ.ஏ.எஸ் பணியில் மனைவியை அமரவைத்து அழகு பார்த்த சூப்பர் கணவர் சந்திர மோகன். கணவரால்தான் இதெல்லாம் சாத்தியமானது என்று பூரிக்கும் அன்பு மனைவி வான்மதி ஐ.ஏ.எஸ். அர்த்தமுள்ள நோக்கத்தில் காதலர்களாக இணைந்த இவர்கள், தம்பதியராகக் கரம் பிடித்த கதை சுவாரஸ்யமானது.
சந்திர மோகன் - வான்மதி
சந்திர மோகன் - வான்மதி

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர் வான்மதி. அப்பா தனியார் நிறுவனத்தில் டிரைவராகப் பணியாற்றியவர். அரசுப் பள்ளியில் படித்த முதல் தலைமுறைப் பட்டதாரியான வான்மதி, காதல் கணவரின் ஊக்கத்துடன், ஐ.ஏ.எஸ் கனவை விடாமுயற்சியுடன் எட்டிப்பிடித்து வசப்படுத்தியவர். தேனி மாவட்டம் போடிநாயக்கனூரைச் சேர்ந்தவர் சந்திர மோகன். கிடைத்த அரசுப் பணியை உதறிவிட்டு, ஐ.ஏ.எஸ் அகாடமியில் பயிற்சியாளராகப் பணியாற்றுகிறார்.

``ஸ்கூல் படிக்கும்போது ஒருமுறை எங்க ஸ்கூலுக்கு சிறப்பு விருந்தினரா உதயசந்திரன் ஐ.ஏ.எஸ் வந்திருந்தாரு. அவரோட பேச்சைக் கேட்டு, என் மனசுல ஐ.ஏ.எஸ் ஆகணும்ங்கிற ஆசை விதையா பதிஞ்சது. காலேஜ் நேரத்துல அந்தக் கனவு பெரிசா வளர்ந்துச்சு. என் மேற்படிப்புக்கு வீட்டுலயும் ரொம்பவே ஊக்கப்படுத்தினாங்க. மாஸ்டர் டிகிரி முடிச்சுட்டு, உடனே சென்னை வந்தேன். சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியில கட்டணமில்லாம படிக்க வாய்ப்பு கிடைச்சது.

சந்திர மோகன் - வான்மதி
சந்திர மோகன் - வான்மதி

அப்போதான் என் கணவரும் அதே அகாடமியில சேர்ந்தாரு. ரெண்டு பேரும் நண்பர்களா பழகினோம். ஏற்கெனவே அஞ்சு முறை வெற்றி கிடைக்காத நிலையில, அந்த அகாடமியில ஆறாவது முறையா தேர்வுக்குத் தயாரானார். எனக்கு அப்போ முதல் முயற்சி. எங்களோட நோட்ஸைப் பரிமாறிப்போம். அந்த நேரம் எங்களுக்குள் காதல் மலர்ந்துச்சு. ஒருவர் வெற்றிக்கு இன்னொருவர் ரொம்பவே சப்போர்ட் பண்ணினோம்.

2012-ம் ஆண்டு தேர்வுல எங்க ரெண்டு பேருக்கும் தோல்வியே கிடைச்சது. பிறகு, படிச்சுகிட்டே அதே அகாடமியில பயிற்சியாளராவும் வேலை செஞ்சேன். என் வீட்டுல கல்யாணப் பேச்சை எடுக்கிறத்துக்குள்ள, ஏதாச்சும் ஒரு கவர்ன்மென்ட் வேலை வாங்கியாகணும்னு ரெண்டு பேருமே பேங்க் எக்ஸாமுக்கும் தயாரானோம். அந்த நேரத்துல ஏழு முறைதான் சிவில் சர்வீஸ் எக்ஸாம் எழுத முடியும். அடுத்த வருஷம் நான் ரெண்டாவது முறை தேர்வெழுதிய போது, இவர் ஏழாவது முறையா தேர்வு எழுதினார். என்னோட வெற்றியைவிடவும், இவருக்கு வெற்றி கிடைக்கணும்னு எனக்குப் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ரெண்டு பேருக்கும் அழுத்தம் அதிகமா இருந்துச்சு. எதிர்பார்ப்புகளை மீறி, ரெண்டு பேருக்குமே அந்த வருஷமும் வெற்றி கிடைக்கல" என்று தளர்வான குரலில் கூறுகிறார் வான்மதி.

சந்திர மோகன் - வான்மதி
சந்திர மோகன் - வான்மதி

ஐ.ஏ.எஸ் வெற்றி வசப்படாவிட்டாலும், வங்கித் தேர்வில் இருவருக்கும் வெற்றி கிடைத்திருக்கிறது. வான்மதிக்கு ஈரோடு மாவட்டத்திலும், சந்திர மோகனுக்குச் திருச்சி மாவட்டத்திலும் முன்னணி வங்கியில் உதவி மேலாளர் பணி கிடைத்திருக்கிறது. அதன் பிறகு, சந்திர மோகனின் ஊக்கத்தால், நான்காவது முயற்சியில் வாகை சூடியிருக்கிறார் வான்மதி. ஆனால், தந்தையின் மரணம், காதலுக்கு எதிர்ப்பு என ஓராண்டுக்காலம் பெரும் சவாலை எதிர்கொண்டிருக்கிறார் வான்மதி.

அந்த அத்தியாயத்தை உற்சாகத்துடன் பகிர்கிறார் சந்திர மோகன். ``பெற்றோரும், என்னோட சகோதர, சகோதரிகளும் படிச்சவங்க. இன்ஜினீயரிங் முடிச்சதும் எனக்கு சிவில் சர்வீஸ் ஆர்வம் ஏற்பட்டுச்சு. வீட்டுல ரொம்பவே ஊக்கப்படுத்தினாங்க. டெல்லியில தங்கியிருந்து தொடர்ச்சியா அஞ்சு வருஷம் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதியும் வெற்றி கிடைக்கல. பிறகுதான் சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமி பயிற்சி வகுப்புல சேர்ந்தேன். மக்களுக்கு நல்லது செய்யணும்ங்கிற எண்ணம் உட்பட ரெண்டு பேரின் ஆர்வங்கள் பலவும் ஒரே அலைவரிசையில வரவே, எங்க நட்பு காதலாச்சு.

பயணம்... அநிருத் பாடல்கள்... வெஜ் பிரியாணி... ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்  
ஃபேமலி ஷேரிங்ஸ்

ஆரம்பத்துலயே இந்த விஷயத்தை எங்க வீட்டுல சொல்லிட்டேன். சம்மதமும் கிடைச்சுடுச்சு. இந்த நிலையில, 2014-ல் ரெண்டு பேரும் பேங்க் வேலையில சேர்ந்தோம். இந்த வேலையோடு இருந்துடலாம்னு வான்மதி நினைச்சாங்க. ஆனா, என்னால அடைய முடியாத கனவை, மனைவியாவது அடையணும்னு ரொம்பவே ஆசைப்பட்டேன். நம்பிக்கை கொடுத்துகிட்டே இருந்தேன். பேங்ல வேலை செஞ்சுகிட்டே ரெண்டு முறை தேர்வெழுதினாங்க. அந்த நேரத்துல வான்மதி வீட்டுல கல்யாணப் பேச்சு அதிகமாகிடுச்சு. இக்கட்டான சூழல்ல, இவங்க அப்பாகிட்ட எங்க காதலைச் சொல்லியிருக்காங்க. `நீ நல்லபடியா சிவில் சர்வீஸ் எக்ஸாமை முடி. அப்புறமா இதைப் பத்திப் பேசிக்கலாம்'னு அவர் சொல்லியிருக்கார்.

நல்லபடியா 2015-ல் நாலாவது முயற்சியில வான்மதிக்கு வெற்றி கிடைச்சது. அப்போ இவங்க அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லாம போயிடுச்சு. ஐ.ஏ.எஸ் டிரெய்னிங் முடிச்சுட்டு வான்மதி வர்றதுக்குள்ள, அவங்க அப்பா இறந்துட்டார். அந்தச் சோகம் ஒரு பக்கம். இவங்களுக்கு மகாராஷ்டிரா மாநில கேடர் ஒதுக்கப்படவே, ரெண்டு பேருக்குமான நீண்ட தூர பிரிவும் சின்ன வருத்தமும் மறுபக்கம். பிறகு, எங்க காதல் விஷயத்தை வான்மதி வீட்டுக்குச் சொன்னோம். பெரிய எதிர்ப்பு இருந்துச்சு. ஒரு வருஷ போராட்டத்துக்குப் பிறகுதான் இவங்க வீட்டுல சம்மதம் கிடைச்சது"

வான்மதி ஐ.ஏ.எஸ்
வான்மதி ஐ.ஏ.எஸ்

- பெருமிதத்துடன் சந்திர மோகன் சிரிக்க, வான்மதியின் முகத்தில் வெட்கம் மெதுவாக எட்டிப் பார்க்கிறது. இருவீட்டார் சம்மதத்துடன் இவர்களுக்கு 2017-ல் திருமணம் நடைபெற்றுள்ளது.

``நான் இப்போ ஐ.ஏ.எஸ் அதிகாரியா இருக்க கணவர்தான் காரணம். நான் செலக்ட் ஆனதும் என்னைவிட இவர்தான் ரொம்பவே சந்தோஷப்பட்டார். தமிழ்நாட்டுல வேலை செஞ்ச நிலையில, எனக்காக மகாராஷ்டிரா மாநிலம் புனேவுக்குப் பணிமாறுதல் வாங்கிட்டு வந்தார். இங்கு ஒரு வருஷம் வேலை செஞ்ச நிலையில, சிவில் சர்வீஸ் சார்ந்த வேலைதான் இவருக்குப் பிடிச்சிருந்துச்சு. அதனால, சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியில பயிற்சியாளரா சேர்ந்துட்டார். துலே மாவட்டத்துல ஜில்லா பரிஷாத் திட்ட சீஃப் எக்ஸிகியூட்டிவ் ஆபீஸரா இருக்கேன். சாமான்ய மக்களுக்கும் தரமான கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு கிடைக்கணும்ங்கிறதுதான் என்னோட பிரதான நோக்கம். அதுக்காக, என்னாலான பங்களிப்பைக் கொடுத்துகிட்டு இருக்கேன். மாசத்துல மொத்தமா ஒருவார லீவ்ல இவர் மகாராஷ்டிரா வந்திடுவார். அவர் வருகைக்காக, நானும் எங்க பையன் விஷ்வ தேவும் மூணு வாரங்கள் காத்துகிட்டிருப்போம்" என்கிற வான்மதியின் குரலில் உற்சாகம் கூடுகிறது.

சந்திர மோகன் - வான்மதி
சந்திர மோகன் - வான்மதி
இந்த மூணுல உங்க காதல் எந்த வகை?! - #AllAboutLove - 2

``நாங்க ஜோடியா எங்கே போனாலும் வான்மதிக்குக் கூடுதல் மரியாதையும் மதிப்பும் இருக்கும். அதைப் பார்க்கிறப்போ எனக்கு விவரிக்க முடியாத பெருமை கிடைக்கும். ஆனா, `உன்னைவிட உன் மனைவிக்கு அதிக பாராட்டுகள் கிடைக்குதே'ன்னு சிலர் என்கிட்ட சொல்வாங்க. இதெல்லாம் எங்க அன்பை ஒருபோதும் பாதிக்காது. இப்போ வரை வெவ்வேறு இடங்கள்ல நாங்க வசிச்கிறது மட்டுமே சின்ன வருத்தமா இருக்கு. ஆனா, முழுமையான புரிந்துணர்விலும் நினைவுகளிலும் எப்போதும் இணை பிரியாத பந்தத்துலதான் இருக்கோம்"

- மென் சிரிப்புடன் கூறும் சந்திரமோகனின் உள்ளார்ந்த வார்த்தைகளில், வான்மதியின் முகத்தில் வெட்கப் புன்னகை!

காதலர் தின ஸ்பெஷல்: உங்களது Flames பொருத்தத்தைப் பார்க்க இங்கு க்ளிக் செய்யவும்.

அடுத்த கட்டுரைக்கு