Election bannerElection banner
Published:Updated:

`வீடியோ கால் அனுமதி... சிறைத்துறைக்கு நன்றி!'- கைதிகளின் குடும்பங்கள் நெகிழ்ச்சி

Video call
Video call

இப்படியோர் உருக்கமான காட்சி சீரியல் சீன் கிடையாது. தமிழகச் சிறைகளில் ஒன்றில் நடந்த நிஜம்.

வீடியோ கால் ஒன்றில் அப்பாவும் மகளும் கண்ணீரும் சிரிப்புமாகப் பேசுகிறார்கள். 'வெளியே எங்கேயும் போகாதேம்மா... ஹாட் வாட்டர் மட்டும் குடி' என்று கண்களைத் துடைத்தபடியே மகளிடம் சொல்கிறார் அப்பா. மகளோ, 'நல்லா சாப்பிடுங்கப்பா. பத்திரமா இருங்கப்பா' என்றபடியே அழ ஆரம்பிக்கிறார். கணவரை வீடியோ காலில் பார்த்த மகிழ்ச்சியில், மகளை அணைத்தபடி மனைவியும் சந்தோஷத்தில் அழ ஆரம்பிக்கிறார். இப்படியோர் உருக்கமான காட்சி சீரியல் சீன் கிடையாது. தமிழகச் சிறைகளில் ஒன்றில் நடந்த நிஜம். கொரோனா காரணமாக குடும்பத்தினரைப் பார்க்க முடியாமல் தவித்த கைதிகளுக்கு மன அழுத்தம் வந்துவிடக் கூடாது என்பதற்காக, அவர்களுடைய குடும்பத்தினருடன் பேசுவதற்காகக் கடந்த ஒன்றரை மாதங்களாக தமிழகச் சிறைத்துறை செய்துகொண்டிருக்கிற செயல் இது.

prisoner's family @video call
prisoner's family @video call

சிறைத்துறையின் டிஜிபி சுனில் குமார் சிங் பேசுகையில், "சிறைக்குள்ளே இருப்பவர்களுக்கு அவர்கள் குடும்பத்தினரைச் சந்திப்பதற்கு வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை அனுமதி அளிப்போம். இது வழக்கமாக நடைபெறும். கொரோனா வந்தபிறகு சிறைக்குள் இருப்பவர்களைச் சந்திப்பதற்கு அவர்களுடைய குடும்பத்தினர் வந்தால் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க முடியாது. அது கொரோனா தொற்றுக்கு வழி வகுக்கலாம் என்பதால் கடந்த இரண்டு மாதங்களாக அதற்கு சிறைத்துறை அனுமதி வழங்கவில்லை.

அதே நேரம், சிறைக்குள் இருப்பவர்களுக்குக் கொரோனா பயம், தங்களுடைய குடும்பத்தினரைப் பற்றிய பதற்றம், அவர்களைப் பார்க்க முடியாத மன அழுத்தம் எல்லாம் இருக்கும் என்பதால், குடும்பத்தினருடன் வீடியோ காலில் பேச வைக்கலாம் என்று முடிவு செய்தோம். இதன் மூலம் சிறைக்குள் இருப்பவர்களும் மன நிம்மதியுடன் இருப்பார்கள் அவர்கள் குடும்பத்தினருக்கும் இவர்களைப் பார்த்துப் பேசிய திருப்தி கிடைக்கும் என்பதால் இந்த முடிவை எடுத்தோம்.

lockdown
lockdown

ஆனால், இதற்கான வசதிகளை ஒருங்கிணைப்பதில் நிறைய நடைமுறைச் சிக்கல்கள் இருந்தன. முதலில் குரூப் குரூப்பாக குடும்பத்தினரை ஓர் இடத்தில் வரவழைத்து, அங்கிருந்து கைதிகளுடன் பேச வைக்கலாம் என்று நினைத்தோம். ஆனால் குடும்பத்தினர் நாங்கள் சொல்கிற இடத்திற்கு வருவதற்குப் போக்குவரத்து வசதி இல்லையே... வேறு என்ன செய்யலாம் என்று யோசித்து வீடியோ காலில் பேச வைக்கலாம் என்று முடிவு செய்தோம். இதற்காக 4ஜி சிம், தரமான 58 ஸ்மார்ட்போன்களை வாங்கினோம்.

கைதிகளை சமூக இடைவெளியுடன் உட்கார வைத்துவிட்டு, ஸ்மார்ட்போனில் அவர்கள் குடும்பங்களுக்கு வீடியோ கால் செய்தோம். கடந்த ஒன்றரை மாதங்களாக இப்படிச் செய்து வருகிறோம். தமிழகம் முழுக்கக் கிட்டத்தட்ட 75 ஆயிரம் கைதிகள் இதனால் பலனடைந்திருக்கிறார்கள்" என்றார்.

Corona
Corona

சிறையில் இருக்கிற தன் வீட்டு நபருடன் வீடியோ காலில்பேசிய சில குடும்பத்தினருடனும் பேசினோம்.

"ஒரு மாசமா அப்பாவைப் பார்க்க முடியலைன்னு என் பிள்ளைங்க ஒரே அழுகை. அதுவும் என் பொண்ணு டாடியைப் பார்க்கணும்னு ஒரே பிடிவாதம். வீடியோ காலில் வாரத்துக்கு ரெண்டு தடவை அவரைப் பார்த்துப் பேசின பிறகுதான் நிம்மதியா இருக்கோம்" என்கிறார் அன்பு மனைவி ஒருவர்.

"சிறையில நேர்ல பார்த்துப் பேசுறப்போ எல்லோரும் பக்கம் பக்கமா நின்னு பேசுவோம். அதனால, என் பிரதர் என்ன பேசறார்னு காதுல சரியா விழாது. நான் பேசறதும் அவர் காதுல விழாது. ஆறுதல் வார்த்தைகூட சொல்ல முடியாது. கூட்டத்துல முகத்தையும் நல்லா பார்க்க முடியாது. ஆனா, இப்போ போன்ல பேசுறப்போ பக்கத்துல இருந்து பேசற மாதிரி இருக்கு" என்று சந்தோஷப்படுகிறார் சகோதரி ஒருவர்.

social distance
social distance
நெகட்டிவிட்டிக்கு நோ... நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 5 விஷயங்கள்! #StayInsideStaySafe

"எங்க குடும்பம் ஊர்ல இருக்கு. நானும் ஒரு அண்ணனும் சென்னையில இருக்கோம். இன்னொருத்தர் ஜெயில்ல இருக்கார். இவரைப் பார்க்கணும்னா நாங்க வேலைக்கு லீவு போட்டுட்டுதான் போகணும். அதனால, எப்பவாவதுதான் ஜெயில்ல இருக்கிற அண்ணனைப் பார்க்கப் போவோம். இப்போ வீடியோ காலில் பேச முடியும்கிறதால நான், ஊர்ல இருக்கிற பேரன்ட்ஸ் எல்லோருமே அண்ணன்கிட்ட பேசறோம்" என்று நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார் இன்னொரு சகோதரி.

"என்கிட்ட சாதாரண போன்தாம்மா இருக்கு. அதனால என் தம்பிகூட பேச மட்டும் முடிஞ்சது. பார்க்க முடியல. இருந்தாலும் வாரத்துக்கு ரெண்டு நாள் அவன் குரலையாவது கேட்க முடியுதே... அதுவே நிம்மதி" என்கிறார் அண்ணன் ஒருவர்.

"லாக்டெளன் ஆரம்பிச்சு ஒரு மாசம் வரைக்கும் என் பிரதரை நேர்ல பார்க்க ஜெயில்ல அனுமதிக்கல. அதுக்கப்புறம் இப்போ வரைக்கும் ரெகுலரா வீடியோ காலில் பேச அனுமதிக்கிறாங்க. பத்து நிமிஷம் பேச விடுறாங்க. அதனால மொத்தக் குடும்பமும் அண்ணன்கூட பேசறோம்" என்கிறார் தம்பியொருவர்.

"என் ஃப்ரெண்டை ஒரு மாசம் கழிச்சு வீடியோ காலில் பார்த்தப்போ நான் அழுதுட்டேங்க. அப்புறம் அவனோட அம்மா, தங்கச்சியும் என் போன்ல வந்ததும் ஜெயிலுக்குள்ள அவனும் கதறி அழ ஆரம்பிச்சுட்டான். காவல்துறைக்கு நன்றி சொன்னேன்னு சொல்லிடுங்க" என்கிறார் கைதியின் நண்பர் ஒருவர்.

’’கொரோனா வந்துடுச்சு. விசிட்டர்ஸ் யாருக்கும் அனுமதி கிடையாதுன்னு சொன்னாங்க. ஆனா, எங்களை மாதிரி சிறைக்குள்ள இருக்குறவங்களுக்குக் குடும்பத்தார்கிட்ட பேசறதுதான் ஆறுதலே... முக்கியமா ரொம்ப வருஷமா சிறையில இருக்கிறவங்களுக்குக் குடும்பத்தார் வந்து பார்க்கிறதுதான் ஸ்ட்ரெஸ் பஸ்ட்டரே. அதையே கூடாதுன்னு சொன்னப்போ ரொம்ப மன உளைச்சலா இருந்தது. நல்ல நேரம் வீடியோ காலில் பேச பர்மிஷன் கொடுத்தாங்க. எங்கம்மா ரொம்ப அழுததால அண்ணன்கிட்ட மட்டும் பேசினேன்" என்கிறார் பெயிலில் இருக்கிற நபர் ஒருவர்.
வெளியிடங்களுக்குப் பயணம்... நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மூலிகைத் தேநீர் செய்வது எப்படி?

உடல் நலத்துக்குக் கொடுக்கிற முக்கியத்துவத்தை நாமெல்லாம் மனநலத்துக்குக் கொடுப்பதே இல்லை. அந்த வகையில் கைதிகளின் மன நலத்துக்கும் அதைவிட அதிகமாக உறவுகளின் நலத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருக்கிற சிறைத்துறைக்கு வாழ்த்துகள்!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு