`சுத்தம் என்பது நபருக்கு நபர் மாறுபடும். தினமும் குளிப்பதே போதுமான சுத்தமாக சிலர் நினைப்பார்கள். சிலரோ, நாளொன்றுக்கு இரண்டு முறை குளித்தால்தான் சுத்தமாக இருப்பதாக உணர்வார்கள். வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு வரும்போது, கால்களைச் சுத்தம் செய்யாமல் வீட்டுக்குள் நுழையவே மாட்டார்கள் சிலர். இன்னும் சிலர், அடுத்தவர் அணிந்த ஆடையை, துடைத்த டவலை சுத்தம் கருதி பயன்படுத்த மாட்டார்கள். சுத்தமாக இருந்தால் தொற்றுநோய் வராது என்கிற நம்பிக்கை இதற்கெல்லாம் காரணம். அதுதான் உண்மையும்கூட.
சுத்தம் பற்றிய போதுமான விழிப்புணர்வு இல்லாதவர்களையும் வழிக்கு கொண்டு வந்தது கொரோனா தொற்று. சுத்தம் பற்றிய இந்த விரிவான விளக்கத்துக்கு காரணம் இருக்கிறது. செக்ஸ் காரணமாக மட்டுமே பரவக்கூடிய ஹியூமன் பாப்பிலோமா வைரஸ், சுத்தமின்மையாலும் பாதிக்கப்பட்டவரிடம் இருந்து மற்றவருக்குத் தொற்றலாம். அதிர்ச்சியாக இருக்கிறதா? மூத்த பாலியல் மருத்துவர் நாராயண ரெட்டி சொல்வதைக் கேளுங்கள்.
``பெண்களின் பிறப்புறுப்பில் மரு வருவதுபற்றி நாம் அனைவருமே கேள்விப்பட்டிருப்போம். இதை ஜெனிட்டல் வார்ட் என்போம். இதற்கு, ஹெச்.பி.வி. எனப்படும் ஹியூமன் பாப்பிலோமா வைரஸ்தான் காரணம். இந்த வைரஸ் பாதிப்புள்ள நபருடன் உறவு கொள்ளும்போது மட்டுமே அடுத்தவருக்குப் பரவும். 99 சதவிகிதம் இப்படித்தான் நிகழும். அரிதிலும் அரிதாக, பெண்ணுறுப்பில் மரு இருப்பவர்கள் பயன்படுத்திய டவலை, அடுத்தவர் பயன்படுத்தினால், அவர்களுக்கும் ஜெனிட்டல் வார்ட் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. குறிப்பாக அந்த டவலில் பட்ட மருவின் திரவம் காய்வதற்குள் பயன்படுத்தினால் தொற்று நிச்சயம் பரவும்.
இந்த மருவைக் கிள்ளக்கூடாது. கிள்ளினால், இதிலிருந்து வெளிவருகிற திரவம் பட்டு பெண்ணுறுப்பு முழுக்க தொற்றுப் பரவும்.
இந்த மரு குறித்து பொதுவாக பயப்படத் தேவையில்லை. சருமத்தில் இருக்கிற செல்களின் அசாதாரண வளர்ச்சிதான் இது. மரு சிறிதாக இருந்தால் பிரச்னையில்லை. பெரிதாகிக்கொண்டே போனால், சரும மருத்துவரை அணுகி, அதற்கென இருக்கிற க்ரீமை பயன்படுத்தினால் சரியாகி விடும். இந்த க்ரீம் நார்மல் சருமத்தில் பட்டால் புண்ணாகிவிடும். க்ரீம் பயன்படுத்த அச்சப்படுபவர்கள், மருத்துவர் உதவியுடன் மருவை பொசுக்கியும் எடுத்து விடலாம்.
இதே வைரஸ்தான் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கும் காரணம் என்பதால், பிறப்புறுப்பில் மரு வந்தவர்கள் மருத்துவரை சந்தித்து `பாப் ஸ்மியர்' என்னும் பரிசோதனையைச் செய்து கொள்ள வேண்டும். இந்த பரிசோதனையின் மூலம், கர்ப்பப்பை வாய்ப்பகுதியின் செல் அமைப்பு சரியாக இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ளலாம். செல் அமைப்பு சரியாக இருக்கும்பட்சத்தில், இந்த மரு பற்றி அச்சம் கொள்ளத் தேவையில்லை'' என்றார்.