Published:Updated:

குழந்தைகளை வீட்டில் தனியாக விட்டுச் சென்றால் சட்டம் தண்டிக்குமா? - ஓர் அலசல்

குழந்தைகள் தனியாக இருக்கும்போது கேட்ஜெட்ஸில்தான் மூழ்குவார்கள். இன்டர்நெட் அடிக்ஷனுக்கு ஆளாக நேரிடும். வெளியே சென்று விளையாடாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கிவிடுவதால் உடல் பருமன் ஏற்படலாம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

குழந்தைகள் உலகம் அழகானது. பயம் அறியாதது. என்றாலும், அவர்களுக்கு ஆபத்துகளிலிருந்து கவசம் அளித்து, கூட்டுக் குடும்பங்களில் பாதுகாப்பாக வளர்த்தார்கள். இன்று நிலைமை அப்படி அல்ல.

குழந்தைகள்
குழந்தைகள்

கூட்டுக்குடும்பங்கள் சிதைந்துவிட்டன. இன்றைய காலகட்டத்தில் தனிக்குடித்தனங்களே அதிகம். பெற்றோர் இருவருமே வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. விளைவு, சில நேரங்களில் குழந்தையை வீட்டில் தனியாக விட வேண்டியிருக்கிறது. பக்கத்து வீட்டில் பார்த்துக்கொள்ளச் சொல்ல வேண்டியிருக்கிறது. ஆனால், `வீட்டில் தனியாக இருக்கும் குழந்தை எந்த அபாயத்திலும் சிக்கலாம். குழந்தைக்குப் பாதுகாப்பான உலகம் பெற்றோரைத் தவிர வேறு யாருமில்லை' என எச்சரிக்கின்றனர் குழந்தைகள்நல மருத்துவர்கள்.

குழந்தையுடன் சாப்பிட்டுக்கொண்டே டி.வி. பார்த்தால்...?! உஷார் பெற்றோர்களே!

குழந்தையை எந்த வயதுக்குப் பின் வீட்டில் தனியாக விட்டுச் செல்லலாம்? குழந்தைகள்நல மருத்துவர் வெங்கடேஷ்வரனிடம் கேட்டோம்.

“சமீப காலமாக, குழந்தைகளை எந்த வயதுவரை வீட்டில் தனியாக விட்டுச் செல்லலாம் என்ற விவாதம் அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் ஒரு வீட்டில் மூன்று வயதுக் குழந்தையை பெற்றோர் தனியாக வீட்டில் விட்டுவிட்டுச் சென்றுவிட்டனர். வீட்டில் தனியாக இருந்த குழந்தை துரதிர்ஷ்டவசமாக இறந்துவிட்டது.

குழந்தைகள்நல மருத்துவர் வெங்கடேஷ்வரன்
குழந்தைகள்நல மருத்துவர் வெங்கடேஷ்வரன்

இந்தச் சம்பவம் அமெரிக்காவில் தன்னார்வத் தொண்டர்களாலும், சமூக ஆர்வலர்களாலும் மிகப் பெரும் விவாதமாகப் பேசப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, எந்த வயதுவரை குழந்தையை வீட்டில் தனியாக விட்டுச் செல்லலாம் என்பது குறித்த சட்டம் இயற்ற வேண்டும் என்கிற கோரிக்கையும் அந்த நாட்டு மக்களிடமிருந்து எழுந்தது. இதைப் பற்றி மருத்துவர் சார்லஸ் ஜென்னிசென் (Dr. Charles Jennissen) ஓர் ஆராய்ச்சிக் கட்டுரையை எழுதியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`இன்ஜுரி எபிடெமியாலஜி (Injury Epidemiology)' என்ற பத்திரிகையில் அந்த ஆராய்ச்சிக் கட்டுரை வெளியாகியுள்ளது. குழந்தைகளை வீட்டில் தனியாக எந்த வயதுவரை விட்டுச் செல்லலாம் என்பதற்கான சட்டம், அமெரிக்காவில் 14 மாநிலங்களில் மட்டுமே அமலில் உள்ளது. அதிலும் சில மாநிலங்களில் இந்தச் சட்டம் வேறுபடுகிறது. ஒரு மாநிலத்தில் குழந்தைகளை 6 வயதுக்கு மேல் தனியாக விடலாம் என்றும், மற்றொரு மாநிலத்தில் 14 வயதுக்கு மேல் விடலாம் என்றும் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுவான விதி என்று எதுவும் இல்லை.

குழந்தைகள்
குழந்தைகள்

ஆகவே, அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவானதாக, 12 வயதுக்குக் குறைவான குழந்தையை வீட்டில் தனியாக விட்டுச்செல்லக் கூடாது என்றும், ஒருவேளை அந்த வயதுக்குட்பட்ட குழந்தையை நான்கு மணி நேரத்துக்குமேல் தனியாக விட்டுச் சென்றிருந்து, அந்தக் குழந்தைக்கு ஏதேனும் விபத்து நேர்ந்தாலும் அல்லது நேராமல் போனாலும்கூட, அது தண்டனைக்குரிய குற்றம் எனும் கோரிக்கையை சார்லஸ் ஜென்னிசென் தனது கட்டுரையில் முன்வைத்திருக்கிறார்.

குழந்தைகள்நல மருத்துவர்கள், பெற்றோர், சமூக ஆர்வலர்கள், சட்ட வல்லுநர்கள் எனப் பலரிடம் பேசி, பல ஆய்வுகளை மேற்கொண்ட பின்னரே அவர் இந்த முடிவுக்கு வந்திருக்கிறார். இதைச் சட்டமாக்க வேண்டும் என்ற முயற்சிகள் தற்போது அமெரிக்காவில் தீவிரமாகி வருகின்றன.

குழந்தைகள்
குழந்தைகள்

நம் நாட்டுச் சூழலுக்கு இப்போது வருவோம். இந்தியாவில் 'குழந்தை புறக்கணிப்பு' என்ற சட்டப் பிரிவின் கீழ் இது வருகிறது. எதுவெல்லாம் குழந்தை புறக்கணிப்பு என்ற விளக்கமும் அளிக்கப்பட்டிருக்கிறது. உண்பதற்கு ஆரோக்கியமான உணவு தராமல் போவது, வசிக்க இடம் அளிக்காதது, உடுத்த ஆடைகள் வழங்காதது, மருத்துவ உதவிகள் மற்றும் அவர்களின் எமோஷனல் தேவைகளைக் கண்டுகொள்ளாமல் விடுவது போன்றவை குழந்தை புறக்கணிப்புச் சட்டத்தின் கீழ் வருகிறது. ஆனால், குழந்தைகளை எந்த வயதுவரை வீட்டில் தனியாக விடலாம் என்பதற்கான சட்டம் உருவாக்கப்படவில்லை.

இந்தச் சட்டம் வேண்டுமா, வேண்டாமா?

2011-ம் ஆண்டு இந்தியாவில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி நம் மக்கள் தொகையில் 18 வயதுக்கும் குறைவானோர் 41% பேர் இருப்பதாகக் கண்டறியப்பட்டது. 2005-ம் ஆண்டில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், 17,000 குழந்தைகளிடம் ஒரு சர்வே எடுத்தது. அந்த சர்வேயின் முடிவுகள் அதிர்ச்சியூட்டும்படியாக இருந்தன.

குழந்தைகள்
குழந்தைகள்

அவர்களில் சுமார் 69% பேர் 'உடல்ரீதியான வன்கொடுமைகளுக்கு (Physical abuse)' உட்படுத்தப்பட்டிருக்கின்றனர் என்றும், 53 % பேர் `பாலியல்ரீதியான தவறான செய்கைகளுக்கு' (Child sexual abuse) ' ஆளாகியிருக்கின்றனர் எனவும் தெரியவந்தது. இதில் ஆண் குழந்தைகள்தான் அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல 48% பேர் `உணர்வுரீதியான வன்முறைகளுக்கு' (Emotional abuse)' உள்ளாகியிருக்கின்றனர் என்பதும் தெரியவந்தது.

"குழந்தைகளை மரங்களில் ஏறி விளையாட அனுமதிக்கலாமா?" - ஓர் அலசல்

இதற்குப் பிறகு நிறைய சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, போக்ஸோ சட்டம்(2012) ஒரு குழந்தை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டால் என்ன வகையான தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்பதைச் சொல்கிறது. குழந்தை தொழிலாளர் ஒழிப்புச் சட்டம் நடைமுறையில் உள்ளது. ஆனால், குழந்தைகள் உரியமுறையில் பராமரிக்கப்படாமல் புறக்கணிக்கப்படுவதைத் தடுக்கும் சட்டம் மட்டும் இன்னும் உருவாக்கப்படவில்லை என்பது வேதனையான ஒன்றே.

குழந்தைகள்
குழந்தைகள்

குழந்தைகளைத் தனியாக விட்டுச் சென்றால் கீழ்க்கண்ட விளைவுகள் ஏற்படலாம்.

தற்போது தனிக்குடித்தனங்கள் அதிகரித்துவிட்டன. பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்லும் நிலை உருவாகியிருக்கிறது. வேலைவிட்டு வருவதற்கு இரவு 8 மணிக்கு மேல் ஆகிவிடுகிறது. அதனால் பள்ளி விட்டு வரும் குழந்தைகளை, பக்கத்து வீட்டிலிருப்பவர்களிடம் பார்த்துக்கொள்ளச் சொல்கிறார்கள். தனியாக இருக்கும் குழந்தையிடம் பாலியல் அத்துமீறல் நடப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் உண்டு.

குழந்தை தனியாக இருக்கும்போது அவர்களுக்கு அதிக ஆர்வம் (curiosity) ஏற்படும். எரிவாயு அடுப்பைப் பற்றவைத்து நூடுல்ஸ் சமைத்துப் பார்க்கலாமே போன்ற எண்ணங்கள் ஏற்பட்டு அதைச் செய்து பார்க்க முயல்வர். இதனால் தீவிபத்தோ, தீக்காயங்களோ ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

குழந்தைகள்
குழந்தைகள்

குழந்தைகள் தனியாக இருக்கும்போது கேட்ஜெட்ஸில்தான் மூழ்குவார்கள். இன்டர்நெட் அடிக்ஷனுக்கு ஆளாக நேரிடும். வெளியே சென்று விளையாடாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கிவிடுவதால் உடல் பருமன் ஏற்படலாம்.

``பப்பி லவ் ஆபத்தானதா?’’- பெற்றோர்களின் கவனத்துக்கு

'பெற்றோருக்கு விழிப்புணர்வு இருந்தால் போதுமானதுதானே... இதற்கு எதற்குச் சட்டம்?' என்று சிலர் கேட்கலாம். இது சட்டமாக்கப்படவில்லையென்றால் பெற்றோருக்கு ஆதரவு கிடைக்காது. இருவருமே வேலைக்குச் செல்லும்போது சம்பந்தப்பட்ட அலுவலகமோ, நிறுவனமோ அதற்குரிய சலுகைகளைத் தராது. இதனால் சில நேரங்களில் பெற்றோரில் ஒருவர் வேலையை விடவேண்டிய சூழலுக்குத் தள்ளப்படலாம்.

குழந்தைகள்
குழந்தைகள்

வேலையில்லாததன் கோபம் குழந்தையின் மீது பிரதிபலிக்கலாம். எனவே சட்டமாக்கப்படும்போது அலுவலகங்களில் டே கேர் மாதிரியான முயற்சிகள் தொடங்கும். இதனால் வேலைக்குச் செல்லும் பெற்றோரின் பிரச்னைகள் குறையும்.

எது சரியான வயது?

அமெரிக்காவில் மருத்துவர் சார்லஸ் ஜென்னிசென் கூறியபடி 12 வயது என்பதை முன்னெடுக்கலாம். ஆனால் இந்தியாவில் 18 வயது வரைக்கும் தனியாக விடக்கூடாது. இதற்குக் காரணம் கலாசாரமும் பண்பாடும்தான். அவர்களுடைய கலாசாரம் வேறு. நாம் ஒரு பாரம்பர்யத்தைப் பேணி வருகிறோம்.

குழந்தைகள்
குழந்தைகள்

மது, சிகரெட் போன்றவற்றை அனுமதிப்பது கிடையாது. குழந்தைகள் எந்தவொரு கெட்ட பழக்கத்துக்கும் ஆளாகக் கூடாது என்று நினைக்கும் சமூகம். இது நடைமுறைக்குச் சாத்தியமில்லை என்றாலும்கூட குறைந்தபட்சம் 14 வயது வரைக்கும் குழந்தைகளை வீட்டில் தனியாக விடாமல் இருப்பதே நலம் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. ஆனால், இந்த விஷயத்தில் பல்வேறு நிபுணர்களின் கருத்துகளைக் கேட்டறிந்து சரியான வயதை நிர்ணயிக்கலாம்'' என்கிறார் டாக்டர் வெங்கடேஷ்வரன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு