நீங்கள் அந்த உணர்வை உணர்ந்ததுண்டா? உங்களின் காதலரையோ அல்லது மனதுக்கு நெருக்கமானவரையோ பார்க்கும்போது அடிவயிற்றில் ஏற்படும் பட்டாம்பூச்சி பறப்பது போன்ற அந்த ஓர் உணர்வை..? இந்தக் கேள்விக்கு உங்கள் பதில் `ஆம்' என்றோ, அல்லது உதட்டில் ஒரு சிறு புன்னகையாகவோ இருப்பின், இந்தக் கட்டுரை உங்களுக்குத்தான்!

இதயத்தைப் பறிப்பவர்களும் பட்டாம்பூச்சியும்!
பதின் வயதின் தொடக்கத்திலேயே உங்கள் அடிவயிற்றில் இந்தப் பட்டாம்பூச்சிகள் உயிர்கொள்ளத் தொடங்கிவிடும். ஆனால், அவற்றைப் பறக்கவைக்கச் சிலரால் மட்டுமே முடியும். ஒரு நாளில் பல பேரைச் சந்திக்கிறோம். அதில் பலர் கவனத்தைக் கவர்வார்கள்; சிலர் இதயத்தில் பதிவார்கள்; மிகச் சிலரே இதயத்தைப் பறிப்பார்கள். அப்படிப்பட்டவர்களால் ஏற்படக்கூடிய அற்புத உணர்வே இது!
உங்களின் காதலரைப் பார்த்தாலோ, அவரிடம் ரொமான்டிக்காகப் பேசினாலோ, உங்களுக்கு இந்த உணர்வு ஏற்படுவது இயல்பு. ஆனால், நீங்கள் காதலிக்காத, உங்கள் மனம் கவர்ந்த ஒருவரை, அதாங்க... `க்ரஷ்' - அவரைப் பார்க்கும்போது, அவரிடம் பேசும்போது, ஏன் அவரைப் பற்றி நினைக்கும்போதுகூட உங்கள் அடிவயிற்றில் பட்டாம்பூச்சிகள் அடித்துக்கொள்ளும். இது அந்த நபரின் மீது உங்களுக்கு உள்ள ஈர்ப்பைப் பொறுத்தது.

காதல் மற்றும் கவர்ச்சியில் ஏன் பட்டாம்பூச்சிகள் பறக்கின்றன?' உளவியல் ஆலோசகர் கண்ணனிடம் கேட்டோம். இந்தப் பட்டாம்பூச்சிகளுக்குப் பின் உள்ள உடலியலை விரிவாக விளக்கினார் கண்ணன்.
பட்டாம்பூச்சியும் அறிவியலும்!
``இந்த உலகிலேயே மிகவும் சிக்கலான ஒன்று எது தெரியுமா? மனித உடலமைப்புதான்! ஏனென்றால் நம் உடலில் பல உறுப்புகள் நம் கட்டுப்பாட்டில் இயங்குவதில்லை. அவையெல்லாம் தானியங்கி. சரி, நாம் பட்டாம்பூச்சிக்கு வருவோம். நமக்கு இரண்டு விதமான உணர்வுகள் உள்ளன. ஒன்று `உடல் உணர்வு', மற்றொன்று `மன உணர்வு'.

உடல் உணர்வானது உடல் உறுப்புகளையும், சில வேதியியல் பொருள்களையும் சார்ந்தது. மன உணர்வு என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட புரிந்துணர்வு திறனைச் சார்ந்தது. இந்த இரண்டு உணர்வுகளுக்குமே தலைமை அதிகாரி, நரம்பு மண்டலம். இதன் கட்டுப்பாட்டு அறை, மூளை.
Fight or Flight தத்துவம்!
நம் உடலில் நிறைய தானியங்கி அமைப்புகள் உள்ளன. அவற்றில் ஒன்று தானியங்கி நரம்பு மண்டலம். இதை `சிம்பதடிக்' மற்றும் `பாரா சிம்பதடிக்' என்று இரு வகையாகப் பிரிப்பார்கள். இவை 'Fight or Flight' தத்துவத்தில் இயங்குகின்றன. அதாவது நம் உடலும் மனமும் அதன் Comfort Zone-ல் இருந்து வெளிவரும்போது வேறுவிதமாகச் செயல்படத் தொடங்கிவிடும். நம் பட்டாம்பூச்சி உணர்வெல்லாம் இந்தத் தத்துவத்தின் கீழ்தான் வரும்.
காதலை வெளிப்படுத்தும் நேரத்தில், காதலரைச் சந்திக்கும் நேரத்தில், அவரை வாழ்க்கைத் துணையாக உணரும் நேரத்தில் எல்லாம் பட்டாம்பூச்சிகள் சடசட சடவென சிறகடிக்கத் தொடங்கிவிடும்!
இரண்டு விதமான சூழ்நிலைகளில் இந்தப் பட்டாம்பூச்சி உணர்வு நமக்கு ஏற்படுகிறது. ஒன்று இனிமையான, சந்தோஷமான தருணங்கள். மற்றொன்று மன அழுத்தமான, பயம்கொண்ட, வெறுப்பான தருணங்கள்.
சந்தோஷ பட்டாம்பூச்சி!

இனிமையான தருணங்களில் நம் வயிற்றில் ஏற்படும் உணர்வை `அடிவயிற்றில் பட்டாம்பூச்சி' என்கிறோம். போட்டியில் வெற்றி, மனதுக்குப் பிடித்தவருடனான எதிர்பாராத சந்திப்பு, காதலரின் வருகை போன்ற மகிழ்ச்சி நிறைந்த நேரங்களில் நம் பட்டாம்பூச்சி உயிர் பெற்றுவிடும். குறிப்பாக, காதலர்களுக்கு இடையே இந்த உணர்வு தோன்றும்போது அது அவர்களுடைய நெருக்கத்தை அதிகரிக்கும். காதலை வெளிப்படுத்தும் நேரத்தில், காதலரைச் சந்திக்கும் நேரத்தில், அவரை வாழ்க்கைத் துணையாக உணரும் நேரத்தில் எல்லாம் பட்டாம்பூச்சிகள் சடசட சடவென சிறகடிக்கத் தொடங்கிவிடும்!
சோக பட்டாம்பூச்சி!
நாம் சோகமாக, பயமாக, கவலையாக, பொறாமையாக உணரும்போதும் வயிற்றில் பட்டாம்பூச்சி பறக்கும். ஆனால், அது நமக்கு இனிமையான உணர்வைக் கொடுக்காததால் அதை `வயித்தைக் கலக்குது', `வயிறு எரியுது' போன்ற வார்த்தைகளால் குறிப்பிடுவோம். என்றாலும், இதுவும் பட்டாம்பூச்சியின் விளைவே. தேர்வு எழுதச் செல்லும்போது அடிவயிற்றில் ஏற்படும் ஒருவித பய உணர்வு இதற்கு ஆகச் சிறந்த எடுத்துக்காட்டு.
`எல்லாம் சரி, அந்தப் பட்டாம்பூச்சி அடிவயிற்றில்தான் பறக்கணுமா? கண், காது, மூக்கு, தொண்டை என வேறு எங்கேயும் பறக்காதா?' என நீங்கள் கேட்கலாம். அதற்கும் காரணம் உண்டு.
நமது மூளையில் உள்ள சில ரசாயனப் பொருள்கள் நம் அடிவயிற்றுக் குடல் பகுதியிலும் இடம்பெற்றுள்ளன. நமக்கு உடல் மற்றும் மனம் சார்ந்த மாற்றங்கள் ஏற்படும்போது, அது மூளைக்குக் கடத்தப்பட்டு, அதன் மூலம் அடிவயிற்றைத் தூண்டி பட்டாம்பூச்சிகளைச் சிறகடிக்கச் செய்கிறது’’ என்றார் உளவியல் ஆலோசகர் கண்ணன்.

ஆக, சினிமாவில் நாயகன், நாயகியைப் பார்க்கும்போது பறக்கும் பட்டாம்பூச்சிகளைப்போல, நீங்கள் உங்கள் நாயகனையோ நாயகியையோ பார்க்கும்போது பறக்கும் பட்டாம்பூச்சிகளும் கதையல்ல நிஜம். ஏனென்றால் நமக்கும்தான் `மூளை' என்ற இயக்குநரும், `நரம்பு மண்டலம்' என்ற உதவி இயக்குநரும் இருக்கிறார்களே!’’