Published:Updated:

``முரடா உன்னை ரசிப்பேன்" -Rugged boys மீதான ஈர்ப்புக்கு என்ன காரணம்? | OPEN-ஆ பேசலாமா? - 2

அர்ஜுன் ரெட்டி

நெடுங்காலமாகவே திரைப்படங்களிலிருந்து தங்களுக்கான மாதிரிகளை எடுத்துக்கொள்ளும் போக்கு நமது சமூகத்தில் நிலவுகிறது. இன்றைக்கு பேசுபொருளாகியிருக்கும் Rugged boys மீதான ஈர்ப்பு ஏன் என்பது பற்றி இக்கட்டுரையில் உரையாடலாம்.

``முரடா உன்னை ரசிப்பேன்" -Rugged boys மீதான ஈர்ப்புக்கு என்ன காரணம்? | OPEN-ஆ பேசலாமா? - 2

நெடுங்காலமாகவே திரைப்படங்களிலிருந்து தங்களுக்கான மாதிரிகளை எடுத்துக்கொள்ளும் போக்கு நமது சமூகத்தில் நிலவுகிறது. இன்றைக்கு பேசுபொருளாகியிருக்கும் Rugged boys மீதான ஈர்ப்பு ஏன் என்பது பற்றி இக்கட்டுரையில் உரையாடலாம்.

Published:Updated:
அர்ஜுன் ரெட்டி

பாலின ஈர்ப்புக்கான காரணிகள் எவற்றையும் பொதுமைப்படுத்திவிட முடியாதுதான். ஒவ்வொரு தலைமுறைக்கும் இடையே இக்காரணிகள் மாறிக்கொண்டே இருக்கும். இந்தத் தலைமுறைப் பெண்களில் கணிசமானவர்களுக்கு, Rugged boys மீது ஈர்ப்பு இருக்கிறது என்கிற கருத்து பரவலாக நிலவுகிறது. Rugged boys என்றால் வன்மையான தோற்றம் கொண்ட இளைஞர்கள். இங்கே நாகரிகம் எனக் கருதப்படுகிற தோற்றத்துக்கு முரணாக அடர்த்தியாக மீசை, தாடி வைத்து முரட்டுத்தனமான தோற்றத்தை வெளிக்காட்டுகிறவர்கள். திரைப்படங்கள் உண்டாக்கிய தாக்கத்தின் வெளிப்பாடே இந்த வன்மையான தோற்றம் கொண்ட ஆண்கள் மீதான ஈர்ப்புக்குக் காரணம் என்கிற கருத்தும் முன் வைக்கப்படுகிறது. இன்றைக்கு மட்டுமல்ல நெடுங்காலமாகவே திரைப்படங்களில் இருந்து தங்களுக்கான மாதிரிகளை எடுத்துக்கொள்ளும் போக்கு நமது சமூகத்தில் நிலவுகிறது. இன்றைக்கு பேசுபொருளாகி இருக்கும் Rugged boys மீதான ஈர்ப்பு ஏன் என்பது பற்றி இக்கட்டுரையில் உரையாடலாம்.

Rugged boys மீதான ஈர்ப்புக்கென தனிப்பட்ட உளவியல் காரணம் எதுவுமில்லை என்கிறார், சென்னையைச் சேர்ந்த உளவியல் மருத்துவர் ஸ்வாதிக் சங்கரலிங்கம்...

மனநல மருத்துவர் ஸ்வாதிக் சங்கரலிங்கம்
மனநல மருத்துவர் ஸ்வாதிக் சங்கரலிங்கம்

``பெண்களுக்கு அவர்களை எந்தச் சூழலில் இருந்தும் பாதுகாக்கிற ஆண்களைத்தான் பிடிக்கும். சமூகம் மற்றும் குடும்பத்தில் எந்தப் பிரச்னை வந்தாலும் தைரியமாக எதிர்கொள்வார்களா என்றுதான் பார்ப்பர்கள். அதிகாரத்தை எதிர்த்துப் போராடுகிற துணிச்சலானவர்களே நாயகன் ஆகிறார்கள். புறத்தோற்றத்தில் முரட்டுத்தனமாகத் தோன்றுபவர்கள் மீது ஈர்ப்பு ஏற்படவும் இதுவே காரணமாக இருக்கிறது. அப்படியான நபர்கள் உண்மையில் துணிச்சலான வர்களா, எந்தப் பிரச்னைகளையும் எதிர்த்து நிற்பார்களா என்பது இரண்டாம் பட்சம்தான். ஈர்ப்பு ஏற்பட அவ்வளவு ஆழத்துக்குச் சென்று யோசிக்கத் தேவையில்லை. திரைப்படங்கள் உருவாக்குகிற நாயக பிம்பங்கள் இதற்கு முக்கிய காரணியாக இருக்கின்றன. கடந்த சில ஆண்டுகளில் வெளியான திரைப்படங்களில் காட்டப்பட்ட நாயக பிம்பம் முரட்டுத்தனமானதாக இருக்கிறது. இது போன்ற நாயக பிம்பங்களைக் காட்டிய இயக்குநர்கள், யதார்த்த வாழ்வில் இருந்தே இக்கதாபாத்திரத்தை உருவாக்கியதாகக் கூறுகிறார்கள்.

கோவையாகப் பார்த்தால் வீரம்தான் ஆண் மீதான ஈர்ப்புக்கு அடிப்படைக் காரணியாக இருக்கிறது. அதற்கான வெளிப்பாடு ஒவ்வொரு காலத்துக்கும் மாறுபாடு அடைகிறது. அப்படியாக சமீப காலங்களில், Rugged boys மீதான ஈர்ப்பு ஏற்படுகிறது. வெளித்தோற்றத்தைக் கொண்டு மட்டுமே ஒருவரைக் காதலிக்கவோ, மணம் புரியவோ முடியாது என்கிற தெளிவு, மனமுதிர்ச்சி அடைகையில் ஏற்படும். பெண்கள் தற்போது நன்றாகவே முதிர்ச்சியடைந்திருக்கிறார்கள். இந்த ஈர்ப்பைத் தாண்டி தன்மீது அன்பும் அக்கறையும் செலுத்தும் ஆண்களையே அவர்கள் தேர்வு செய்கிறார்கள்" என்கிறார் ஸ்வாதிக் சங்கரலிங்கம்.  

Rugged boys மீதான ஈர்ப்புக்கு சமூக கட்டமைப்பை மீறுகிற மனநிலையே காரணம் என்கிறார் மானுடவியல் ஆய்வாளரான மோகன் நூகுலா...

மோகன் நூகுலா
மோகன் நூகுலா

``வீரமே ஆண்மையின் அடையாளமாகக் கருதப்படுகிறது. உடல் முழுக்கத் தழும்புகள் கொண்டவனே வீரன் என்பதைத்தான் போர்ச்சமூகம் முன்னிறுத்துகிறது. அத்தனை தழும்புகளை வாங்கியவனிடம்தான் அதிகாரமும் இருக்கும். சங்க இலக்கியப் பாடல்களிலும் ஆண் என்பவன் போர்க்குணம் நிறைந்தவனாகவே வர்ணிக்கப்பட்டுள்ளான். அந்தப் பாடல்கள் மூலம் இத்தோற்றத்தை முன்நிறுத்தியதும் ஆண்கள்தான். நூற்றில் 99 பாடல்கள் ஆண்களால் எழுதப்பட்டவை. குலோத்துங்க சோழன் கலிங்கத்துக்குப் போகையில் ஒவ்வொரு நகரிலும் உள்ள பெண்கள் மாடத்தில் இருந்து அவரை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்ததாக கலிங்கத்துப்பரணியில் செயங்கொண்டார் எழுதுகிறார்; ஆனால் பெண்கள் விரும்புகிற ஆண் முற்றிலும் வேறுபட்டவனாக இருக்கிறான். கோபியர்கள் கொஞ்சும் கண்ணன், கன்னியர்கள் காதலுறும் முருகன், இவர்களைப் போன்ற குழந்தை முகங்கொண்ட ஆணைத்தான் பெண்கள் விரும்புகிறார்கள். தன் குழந்தையைக்கூட சாதுவான குழந்தையாகத்தான் வளர்க்க விரும்புகிறார்கள். ஆக்ரோஷத்தைக் கழித்த ஆண்கள் நிறைந்த சமூகத்தில்தான் பெண்களின் ஆதிக்கம் வலுப்பெறும். ஆகவே, பெண்கள் சாத்வீகமான ஆண்களையே விரும்புகின்றனர். 

சமணம், பௌத்தம், இந்து, கிறிஸ்துவம் ஆகிய மதங்கள் அனைத்துமே சாத்வீகத்தையே முன்மொழிந்தன. வீர சைவம் ஆக்ரோஷத்தை முன் நிறுத்துகிறது. ருத்ரதாண்டவம் ஆடுகிற சிவன், காளியாக உருவெடுக்கும் சக்தி என சைவம் உக்கிரத்தை முன் வைத்தது. அதற்கு நேரெதிராக வைணவம் சாத்வீகமானதாக இருக்கிறது. பெருமாளின் அவதாரங்கள் அனைத்திலுமே அவர் சாத்வீகமானவராகவே இருந்திருக்கிறார். இந்து மதம் மட்டுமல்ல, கிறிஸ்துவ மதமும் சாத்வீகத்தையே முன்மொழிந்தது. கிறிஸ்துவம் வீறுகொண்டெழும் முன்பு ஐரோப்பாவின் தத்துவவாதிகள் தாடி வைத்திருப்பதை ஓவியங்களில் காண முடியும்.

சார்லஸ்
சார்லஸ்

கிறிஸ்துவ மதம் ஆழமாக வேரூன்றிய பிறகு மீசை, தாடி ஆகியவற்றை மழிப்பதே, ஐரோப்பாவில் நாகரிகமாகக் கருதப்பட்டது. அதன் தாக்கத்தால் ஐரோப்பாவுக்குள் இணைய வேண்டும் என 17-ம் நூற்றாண்டில், ரஷ்ய மன்னர் பீட்டர் தி கிரேட் தாடி, மீசை வைத்திருப்பவர்களுக்கு வரி விதித்தார். ஐரோப்பாவின் காலனிக்கு கீழ்தான் உலகின் மற்ற நாடுகள் இருந்த நிலையில், அவை ஐரோப்பிய நாகரிகத்தையே தங்களுக்கான முன்மாதிரியாக எடுத்துக்கொண்டன. அதன் விளைவாகத்தான் மீசை, தாடி வளர்ப்பதென்பது விலங்குத் தன்மைக்கான சான்று என்று உலகம் முழுவதும் கருதப்பட்டது.  

விலங்கினப் பண்பில் இருந்து விலக்கிக்கொள்ளவே நாகரிக சமூகங்கள் விரும்புகின்றன. இந்திய சமூகத்தில் மீசைதான் வீரம் என்றிருந்த கலாசாரம்கூட மாறியது. மென்மையான மனம் கொண்டவனாக தன்மகன் வர வேண்டும் என்பதுதான் தாயின் எண்ணமாக இன்றளவிலும் இருக்கிறது. இன்றைக்கும் பெரும்பாலான தாய்மார்கள் தங்களின் மகன் தாடி வளர்ப்பதை விரும்புவதில்லை.  

ஒட்டுமொத்த சமூகமே அளவாக மீசை வைத்து, தாடியை மழித்தலே நாகரிகம் எனப் பின்பற்றி வருகிறது. இந்த 20 ஆண்டுகளில், இந்தப் போக்கை எதிர்த்து ஓர் இயக்கம் வளர்கிறது. மீசை, தாடியை மழிக்கச் சொல்லும் நாகரிகத்துக்கு எதிராக அதை வளர்க்கிறார்கள். இதன் மூலம் சமூகம் கட்டமைத்திருக்கிற அறநெறிக்குள் தாங்கள் இயங்க மாட்டோம் என்கிற மீறல் நடக்கிறது. 

இதே காலகட்டத்தில், பெண்கள் ஆண்களுக்கு நிகராக அனைத்துத் துறைகளிலும் தழைத்தோங்குகிறார்கள். பொருளாதாரத் தன்னிறைவை எட்டிய அவர்கள் தங்கள் மீது சமூகம் விதித்திருக்கிற கட்டுப்பாடுகளுக்கு எதிராகப் போராடுகிறார்கள். லெக்கின்ஸ் அணிவது, துப்பட்டாவைப் போர்த்திக்கொள்ள மறுப்பது என ஆடை சுதந்திரத்தின் வழியே மீறலை நிகழ்த்துகின்றனர். சமூகத்தைப் புறக்கணிக்கிற, அதன் கட்டுப்பாடுகளுக்கு எதிராகப் போராடுகிற பெண்களுக்கு, போராட்ட குணம் கொண்ட ஆணைப் பிடிக்கிறது. விலங்கினப் பண்பாகக் கருதப்படுகிற முரட்டுத்தனமான தோற்றத்தின் வழியே அவர்களை சக போராளிகள் என்கிற அடிப்படையில் அவர்கள் மீது ஈர்ப்பு கொள்கின்றனர்.

``முரடா உன்னை ரசிப்பேன்" -Rugged boys மீதான ஈர்ப்புக்கு என்ன காரணம்? | OPEN-ஆ பேசலாமா? - 2

சமூகத்தின் போக்குக்கும் அது கட்டமைத்திருகிற ஒழுக்க நெறிக்கும் அடங்கிப்போகிற ஆண் மீது, இவர்களுக்கு ஈர்ப்பு ஏற்படுவதில்லை. சமூகப்போக்கை உடைத்தெறிவதே வீரம் என்கிற எண்ணம்தான் இந்த Rugged boys தோற்றத்தின் மீதான ஈர்ப்புக்குக் காரணம். 

பொதுவாகவே சாத்வீகமான, அதிகாரத்துக்கு அடங்கிப் போகிறவர்களே சமூக வெற்றியைப் பெறுவார்கள். அதை மீறுகிறவர்கள் சமூகத் தோல்வி கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு வேலை இருக்காது. போதிய வருவாய் இருக்காது. அப்படி இருந்தாலும், பொருளீட்டுகிற இடத்துக்கு நவீன காலப் பெண்கள் நகர்ந்துவிட்ட பிறகு இது போன்ற சமூகத்தோல்வி கொண்ட ஆணை ஏற்றுக்கொள்ளவே செய்கின்றனர். தன்னை அழுத்தியிருக்கும் சமூகக் கட்டமைப்புக்கு எதிரான மீறலே இந்த ஈர்ப்புக்கான அடிப்படைக் காரணியாக இருக்கிறது. இந்த ஈர்ப்பு என்பது ஒரு தொடக்க நிலைதான். Rugged ஆன தோற்றம் போராட்ட குணத்தின் வெளிப்பாடா... மிருகத்தனத்தின் வெளிப்பாடா என்று பார்க்க வேண்டும். பெண்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு கிருஷ்ணனைப் போன்று லீலைகள் புரியக்கூடிய திறம்படைத்த ஆண் மீது ஈர்ப்பு ஏற்படும். ஆனால், அவன் தன்னிடம் ராமனாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். தோற்றத்தின் பொருட்டு உண்டாகும் ஈர்ப்பைத் தாண்டி இதில் புதிதாக ஒன்றும் இல்லை. ஆண் - பெண் உறவில் ஏற்படும் முரண்கள் இந்த ஈர்ப்பு காதலாகி உறவாக மாறுகையிலும் நிகழும்" என்கிறார் மோகன் நூகுலா.   

இளைஞர்கள் என்ன சொல்கிறார்கள்? 

சித்திகா, ஐடி ஊழியர்:

``ரக்கட் பாய், சாக்லேட் பாய்ங்கிறதெல்லாம் அந்தந்தக் காலத்துல உருவாகுற டிரெண்ட். அந்த டிரெண்டுல பொண்ணுங்களுக்கு எந்த மாதிரியான பசங்களைப் பிடிக்குதோ அந்த மாதிரி தன்னை காண்பிச்சுக்கணும்னு நினைப்பாங்க. பொண்ணுங்களும் அப்படித்தான். ரக்கட் பாய்ஸ் ஆண்மைமிக்க நபரா தோணுறதால அவங்க மேல ஈர்ப்பு ஏற்படுது. பொதுவாவே பொண்ணுங்களுக்கு, சொல்ற பேச்சை கேட்டு அடங்குற பசங்களைப் பிடிக்காது. எந்தச் சூழலயும் தைரியமா எதிர்கொள்ற துணிச்சலான பசங்களைத்தான் பிடிக்கும். ரக்கட் பாய்ஸ் அப்படியானவங்களா இருப்பாங்கங்குற ஒரு நம்பிக்கைதான்.

சித்திகா
சித்திகா

இப்பக்கூட ரக்கட் பாய்ஸை எல்லாப் பொண்ணுகளுக்கும் பிடிக்கும்னு சொல்ல முடியாது. மென்மையான ஆண்களை விரும்புற பெண்களும் இருக்காங்க. அதனால தோற்றத்தை வெச்சு வரக்கூடிய ஈர்ப்புங்கிறது நிரந்தரமில்லை. இவங்க விரும்புற அதே முரட்டுத்தனத்தோட தனக்கு எந்தச் சுதந்திரமும் கொடுக்காத, துன்புறுத்துறவனா அந்தப் பையன் இருக்கான்னா, நிச்சயம் பிரேக்-அப் தான் ஆகும்.''  

அருண், திரைத்துறை 

``பசங்களைப் பொறுத்தவரைக்கும் நாங்க ரக்கட் பாயா இல்லை சாக்கோ பாயான்னெல்லாம் எங்களுக்கே தெரியாது. இதெல்லாம் திரைப்படங்கள் வழியா உருவாகி வர்ற டிரெண்ட். ஒரு பொண்ணு வந்து சொல்லும்போதுதான் நாங்க இந்த கேட்டகரின்னே எங்களுக்குத் தெரியும். அதுவும் எந்தளவுக்கு உண்மைன்னு தெரியாது. பொண்ணுங்களுக்கு ஒரு பையனைப் பிடிச்சிட்டா சாக்கோ பாயா இருக்கிறவனை ரக்கட் பாயாவும், ரக்கட் பாயா இருக்கிறவனை சாக்கோ பாயாவும் மாத்த முடியும்; அப்படியா நம்ப வைக்கவும் முடியும்.

அருண்
அருண்

பொண்ணுங்களை ஈர்க்கணும்ங்கிறது ஆண்களோட இயல்பான குணம். அந்தந்தக் கால டிரெண்டுக்கு தகுந்த மாதிரி பொண்ணுங்களுக்கு எப்படியிருந்தா பிடிக்குமோ அப்படியா வெளிக்காட்டிக்க முயற்சி பண்ணுவோம். எல்லாக் காலத்துக்கும் இது பொருந்தும். இன்னைக்கு சமூக வலைதளங்களில் ரக்கட் பாய்ஸ் பிடிக்கும்ங்கிற டிரெண்ட் உருவானப்புறம் இது பேசுற விஷயமா மாறியிருக்கு அவ்வளவுதான். மத்தபடி, வெளித்தோற்றத்தை வெச்செல்லாம் ஓர் ஆணை முடிவு பண்ணிடவே முடியாது.''