Published:Updated:

காதலிலும் காமத்திலும் இதயத்தைப் படபடக்கச் செய்வது எது தெரியுமா? பெட்ரூம்... கற்க, கசடற - 17

Couple (Representational Image) ( Photo by Pablo Heimplatz on Unsplash )

உணர்ச்சிமயமான காதல் எப்படித் தொலைந்துபோகிறது? ஒரு திங்கள் கிழமையன்று பேரழகியாகத் தோன்றும் பெண், 364 நாள்கள் கழித்து இன்னொரு திங்கள்கிழமையன்று அவலட்சணமாக ஏன் தோன்றுகிறாள்? நிச்சயமாக அந்த உருவம் அவ்வளவு மாற்றங்களுக்கு ஆளாகவில்லை.

காதலிலும் காமத்திலும் இதயத்தைப் படபடக்கச் செய்வது எது தெரியுமா? பெட்ரூம்... கற்க, கசடற - 17

உணர்ச்சிமயமான காதல் எப்படித் தொலைந்துபோகிறது? ஒரு திங்கள் கிழமையன்று பேரழகியாகத் தோன்றும் பெண், 364 நாள்கள் கழித்து இன்னொரு திங்கள்கிழமையன்று அவலட்சணமாக ஏன் தோன்றுகிறாள்? நிச்சயமாக அந்த உருவம் அவ்வளவு மாற்றங்களுக்கு ஆளாகவில்லை.

Published:Updated:
Couple (Representational Image) ( Photo by Pablo Heimplatz on Unsplash )

கண்கயல் என்னும் கருத்தினால் காதலி
பின்சென்றது அம்ம சிறுசிரல்; - பின்சென்றும்
ஊக்கி எழுந்ததும் எறிகல்லா ஒண்புருவம்
கோட்டிய வில்வாக்கு அறிந்து.

- நாலடியார்

(சிறிய மீன் கொத்திப் பறவை என் தலைவியின் கண்களைக் கயல் மீன் எனக் கருதி, அவளைப் பின் தொடர்ந்து சென்றது. அப்படிச் சென்றும், ஊக்கத்துடன் முயன்றும், அவளுடைய ஒளிமிக்க புருவத்தை வில்லின் வளைவு என்று எண்ணிக் கண்களைக் கொத்தாமல் விட்டுவிட்டது.

- தலைவன், தலைவியின் அழகை வியந்து தோழனிடம் கூறியது)

காதல் வயப்பட்ட ஆரம்ப நாள்களில் பலருக்கும் இப்படி ஓர் அனுபவம் வாய்த்திருக்கும்... எந்த வயதாக இருந்தாலும், எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவன் அல்லது அவளுக்கு போன் செய்து, குரலை மட்டும் கேட்டுவிட்டு, என்ன பேசுவதென புரியாமல் இதயம் படபடக்க போனை வைப்பார்களே... இதில் இதயத்தைப் படபடக்கச் செய்வதும் இதயம் அல்ல... மூளையேதான்!

Couple (Representational Image)
Couple (Representational Image)
Photo by Andrea Piacquadio from Pexels

நாம் ஏன், யாரோடு காதல் செய்கிறோம் என்பதற்கு நிறைய விளக்கங்களை அளித்திருக்கிறார்கள் நம் மனவியலாளர்கள். ஃபிராய்டு சொல்வதுபோல ஒடிபஸ் காம்ப்ளக்ஸாக (பெண்ணாக இருந்தால் அப்பா மீதும், ஆணாக இருந்தால் அம்மா மீதும் ஏற்படும் நாட்டத்தின் பின்விளைவு) இருக்கலாம். ஜங் சொல்வது போல, இனம்புரியாத உள்ளுணர்வுகளின் தொகுப்பின் விளைவாக இருக்கலாம். கலிஃபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானி தாமஸ் லூயிஸ் சொல்வது போல, குழந்தைப் பருவத்திலிருந்து மீண்டு பெரியவராகும் முயற்சியாக இருக்கலாம். அல்லது வேறு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். காதலில் விழ காரணங்களா முக்கியம்?

ஸ்விஸ் விஞ்ஞானி கிளாஸ் வெட்கைன்ட் (காதல் வயப்பட்டவர்தான்!) வேடிக்கையான ஆராய்ச்சி செய்தார். 49 பெண்களை வியர்வையில் நனைந்த வெவ்வேறு டி-ஷர்ட்டுகளை மோரும்படிச் செய்தார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இவை மாறுபட்ட வாசனை மற்றும் ஜீனோடைப் கொண்டவை. எது பெஸ்ட், எது வொர்ஸ்ட் என்று அவர்களிடம் வரிசைப்படுத்தும்படி கேட்டார் அவர். அவரவருடைய ஜீனோடைப்பிலிருந்து மாறுபட்டிருந்த டிஷர்ட்டுகளின் மணத்தையே அந்தப் பெண்கள் விரும்பினார்கள் என்பதே ஆராய்ச்சி முடிவு. அவர்களின் மூளை எவ்வளவு நுணுக்கமாகச் செயல்பட்டிருக்கிறது, பாருங்கள்... காரணம் - வெவ்வேறு ஜீனோடைப்கள் இணையும்போதுதானே நோய்த் தொற்றுகளிலிருந்து காத்துக்கொள்ளும் தன்மை வலுப்பெற்று, சந்ததி தழைக்கும்!

ஆனால், `நான் அவரது வாசனை நன்றாக இருப்பதால் திருமணம் செய்தேன்’, `அவர் புத்திசாலி என்பதால்...’, `அவள் அழகாக இருந்ததால்...’, `அவர் காமெடியாகப் பேசியதால்...’, `நன்றாகச் சமைப்பார் என்பதால்...’ - இப்படியெல்லாம் யாரும் சொல்வதில்லை. இருந்தாலும் மூளை தன் வேதியியலுக்கு வேலை கொடுத்து, சரியான பொருத்தம் பார்த்து, சேர்த்துவிடுகிறது!

Couple
Couple
Photo by Womanizer Toys on Unsplash

உணர்ச்சிமயமான காதல் எப்படித் தொலைந்துபோகிறது? ஒரு திங்கள் கிழமையன்று பேரழகியாகத் தோன்றும் பெண், 364 நாள்கள் கழித்து இன்னொரு திங்கள்கிழமையன்று அவலட்சணமாக ஏன் தோன்றுகிறாள்? நிச்சயமாக அந்த உருவம் அவ்வளவு மாற்றங்களுக்கு ஆளாகவில்லை. அதே வடிவுடைய கண்கள். அதே ஹஸ்கி வாய்ஸ். ஆனால், அது இப்போது கரகரவென கேட்கச் சகிக்காமல் இருக்கிறது. ஏன் இப்படி?

காம வேட்கைக்கு நிச்சயமாக ஒரு முடிவு உண்டு. சட்டென பற்றிக்கொண்டது போலவே, சடாரென மழையில் நனைந்த கரித்துண்டு மாதிரி அணைந்து போகவும் கூடியது அது. ஆகவேதான் சில சமூகங்களில் வாழ்க்கைத் துணையைக் கணநேரத்தில் முடிவு செய்வதை மடத்தனமாகக் கருதுகின்றனர். மூளையிலுள்ள டோபமைன் செயல்பாட்டைப் பொறுத்தே வேட்கை தணிவதும், வேகம் கூடுவதும் இருக்கிறது. இதை வைத்து, எதிர்காலத்தில் என்றும் மனைவி மீது மட்டும் காதல் மற்றும் காம வேட்கை குறையாமலிருக்கும் மருந்துகள், தடுப்பு ஊசிகள் வந்தாலும் வியப்பதற்கில்லை!

ரொமான்ஸ் ஒரு கட்டத்தில் பிசுபிசுத்துப் போவதும் நல்லதற்குத்தானே! எல்லோரும் எப்போதும் மோகத்தோடு திரிந்தால் பாலங்களைக் கட்டுவது யார்? விமானங்களை இயக்குவது யார்? தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது யார்? ஓடிடி. சீரிஸ் தயாரித்து பொழுதுபோக்கு விருந்து அளிப்பது யார்?

`இன்னும் இந்தியாவில் ஏராளமான காதல்கள் பெற்றோர்களால் மறுக்கப்படுகின்றன. சில காதலர்கள் கட்டி வைத்து உதைக்கப்படுகிறார்கள். சில காதலர்கள் கொல்லப் படுகிறார்கள். பல காதலர்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். நிறைய இந்தியர்களுக்கு காதல் என்பது தோல்விதான். ரொமான்ஸ் என்பது மேற்கத்திய கலாசாரம். இந்தியாவில் அதற்கெல்லாம் இடமே இல்லை...’ - இப்படி ஒரு கருத்தும் உண்டு.

இப்போது விஞ்ஞானிகள் கூறுவதோ வேறு விதம். ரொமான்ஸ் என்பது நம் மூளையிலேயே பதிக்கப்பட்டிருக்கிறது. 166 கலாசாரங்களை ஆராய்ந்தபோது, 147 கலாசாரங்களில் ரொமான்ஸ் உணர்வு உயிர்த்திருப்பதை அறிய முடிந்தது. ஐரோப்பா, ஜப்பான், பிலிப்பைன்ஸ் என வேறுபட்ட கலாசார மக்களிடம் ஆய்வு நடத்தியபோதும், அவர்களிடம் ஒரே விதமான விடையே கிடைத்தது.

ரொமான்ஸ் காதல் என்பது உலக அளவில் ஒரே உணர்வோடு இருந்தாலும், கலாசார வெளிப்படுத்தல்கள் மட்டும் மாறுபடுகின்றன. இந்திய இளைஞர்களிடையே எடுக்கப்பட்ட சர்வே படி 76 சதவிகிதம் பேர் காதல் இல்லாவிட்டாலும், சரியான குணாம்சங்கள் கொண்டவரையே மணக்க விரும்புகின்றனர். அமெரிக்காவில் இது 14 சதவிகிதம்தான்.

Couple (Representational Image)
Couple (Representational Image)
Photo by Jonathan Borba from Pexels

ரொமான்ஸ் காதலுக்கு டோபமைன் தூபம் போடுவது போல, பாசம் - பிணைப்புக்கு ஆக்ஸிடோசின் என்ற மூளை வேதிப்பொருள் உதவுகிறது. நீண்ட காலமாக நம்மோடு வாழ்ந்துவரும் துணையைத் தழுவும்போதும், நம் குழந்தைகளை அணைக்கும்போதும் இதுவே செயல்படுகிறது. தாய் குழந்தையைப் பேணும்போது வெளிப்படும் உணர்வும் இதிலிருந்தே பிறக்கிறது. சில விலங்குகளில் இதை நீக்கி சோதனை செய்தபோது, குடும்ப உணர்வு குறைந்ததை அறிய முடிந்தது. ஆட்டிசம் குறைபாடு உள்ள குழந்தைகளைக் குணப்படுத்த ஆக்ஸிடோசினைப் பயன்படுத்த முடியுமா என்று இப்போது ஆராய்கிறார்கள்.

ஏதாவது பிரச்னையால் ஆக்ஸிடோசின் குறைபாடு இருந்தால், நீடித்து பிணைப்போடு வாழ முடியாதா? `பரஸ்பர மசாஜ் மற்றும் தாம்பத்ய வாழ்க்கை மூலம் ஆக்ஸிடோசினைத் தூண்டி மகிழ்ச்சியை அடைய முடியும். புதுமையான விஷயங்களை இருவரும் இணைந்து செய்வதும் நல்ல பயிற்சி’ என்கிறார் மனவியலாளர் ஹெலன். ஆனால், இந்திய சூழலில் நம் தம்பதிகளுக்கு இதெல்லாம் சரிவருமா, என்ன? இப்போது `சரிவரும்' என்கிற பதில் நிறையவே ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. நன்று!

- சஹானா