சென்னையைச் சேர்ந்த மருத்துவரும் உளவியல் ஆலோசகருமான ஷர்மிளாவும் அவரின் டீன் ஏஜ் மகள் ஆஷ்லியும் `பேரன்ட்டீனிங்' என்ற பெயரில் பெற்றோர்களுக்கும் பதின்பருவ பிள்ளைகளுக்கும் விழிப்புணர்வு பயிற்சி வகுப்புகள் எடுப்பவர்கள். இதுவரை பத்தாயிரத்துக்கும் மேலான குடும்பங்களில் மாற்றங்களை நிகழ்த்திக் காட்டியிருப்பவர்கள். பிள்ளைகளைக் குறைசொல்லும் பெற்றோர்களுக்கு தன் வயதினரின் குரலாக ஆஷ்லியும், பதின்பருவத்தினரிடம் பெற்றோர்கள் உணரும் பிரச்னைகளை, எதிர்பார்க்கும் மாற்றங்களை பெற்றோர் சமூகத்துக் குரலாக ஷர்மிளாவும் பகிர்ந்துகொண்ட தகவல்கள் அவள் விகடன் இதழில், 13 அத்தியாயங்களில் வெளிவந்திருக்கின்றன. பெற்றோருக்கும் டீன் ஏஜ் பிள்ளைகளுக்குமான உறவுச்சிக்கல் பற்றி பகிர இன்னும் ஏராளமான விஷயங்கள் இருப்பதால் விகடன்.காமில் தொடர்ந்து பேசுகிறார்கள் டாக்டர் ஷர்மிளாவும் அவரின் மகள் ஆஷ்லியும்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
டாக்டர் ஷர்மிளா
சோஷியல் கேதரிங் எனப்படும் சந்திப்புகளின் போது மது அருந்துவதும் போதை மருந்துகள் உபயோகிப்பதும் பதின்பருவ வயதினரிடையே சமீப வருடங்களில் அதிகரித்து வருகிறது. தங்களை ரிலாக்ஸ் செய்து கொள்வதற்காகவும் தங்களுக்குள் உள்ள தயக்கங்களை, தடைகளைத் தகர்த்தெறியவும் இவற்றைப் பயன்படுத்துவதாக அவர்கள் சொல்கிறார்கள்.
டீன் ஏஜில் இன்னொரு பிரிவினர் பார்ட்டி டிரக்ஸ் (Party Drugs) எனப்படும் போதைப் பொருள்களுக்கு தெரிந்தோ தெரியாமலோ அறிமுகமாகிறார்கள். ஆரம்பத்தில் நட்பு வட்டத்தின் அழுத்தம் காரணமாக இந்த மருந்துகளை எடுத்துப் பழகுபவர்கள், ஒருகட்டத்தில் அந்த போதை வஸ்து தரும் ஒருவித கிளர்ச்சி நிலைக்காகவும் தங்களுடைய பிரச்னைகளிலிருந்து விடுபடுவதாக உணரும் நிலைக்காகவும் தொடர்ந்து அவற்றைப் பயன்படுத்த ஆரம்பிக்கிறார்கள். தொடர்ந்து இதுபோன்ற போதைப் பொருள்களைப் பயன்படுத்தும்போது, அது மூளையின் செயல்திறனை வெகுவாக பாதிக்கும். இந்தப் பொருள்களை எடுக்கும்போது ஒருவித கிளர்ச்சி மனநிலை ஏற்படுவதாக உணர்வார்கள். ஒருகட்டத்தில் மூளை அதற்குப் பழகி, உண்மையாகவே நல்ல மனநிலையை ஏற்படுத்தும் ரசாயனங்களைச் சுரப்பதை நிறுத்திவிடும். டீன் ஏஜில் ஆரம்பிக்கிற இந்தப் பழக்கம் ஒரு சிலருக்கு அவர்கள் பெரியவர்கள் ஆனபிறகும் அந்த போதை வஸ்து இல்லாமல் சமாளிக்க முடியாத நிலைக்குத் தள்ளுகிறது.
டீன் ஏஜில் போதைப் பொருள்கள் உபயோகிப்பதன் பின்னணியில் சில காரணங்கள் சொல்லப்படுகின்றன. அவை...
- ஆர்வக்கோளாறு
- நட்பு வட்டம் தரும் அழுத்தம்
- மன அழுத்தம்
- ஒரு விஷயத்திலிருந்து தப்பிக்க முயலும் முயற்சி.
போதைப்பழக்கத்துக்கு அடிமையான பலரையும் கூர்ந்து கவனித்தால் அவர்களில் பலரும் தங்களுடைய 20 வயதுக்குள் முதன்முதலாக அந்தப் பழக்கத்துக்கு அறிமுகமானது தெரியவரும்..
ஏன் அடிமையாகிறார்கள்?
டீன் ஏஜ் பிள்ளைகள் போதை வஸ்துகளுக்குப் பழகவும் அடிமையாகவும் ஏராளமான காரணங்கள் உள்ளன. பார்ட்டி போன்று நண்பர்களுடன் சேர்ந்திருக்கும் தருணங்கள் போன்ற இடங்களில் முதல் முறையாக இத்தகைய போதைப் பொருள்களுக்குப் பழக அவர்களுக்கு வாய்ப்புகள் அதிகம். ஆல்கஹால், சிகரெட் போன்ற போதை வஸ்துகள் அவர்களுக்கு எளிதில் கிடைப்பதும் இதற்கு மிக முக்கியமான ஒரு காரணம்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSமுதல்முறை உபயோகத்திற்கு இது காரணம் என்றால் தொடர்ந்து போதைப்பொருள்களுக்கு அடிமையாக இன்னொரு காரணம் உண்டு. அது அவர்களுக்குள் இருக்கும் பாதுகாப்பின்மை மற்றும் போதை உபயோகத்துக்குப் பழகினால்தான் தன்னை தன் நட்புவட்டம் அங்கீகரிக்கும் என்ற தவறான எண்ணம். பொதுவாக இதுபோன்று போதைவஸ்துகளுக்குப் பழகும்போது அதன் பின்னணியில் மறைந்திருக்கும் பயங்கரத்தை பற்றியோ, பின் விளைவுகள் பற்றியோ உணரும் மனநிலையில் அவர்கள் இருக்க மாட்டார்கள். போதை அவர்களது மூளையை முழுமையாக மழுங்கடித்திருக்கும்.
மறைந்திருக்கும் ஆபத்துகள்...
- குடும்ப பின்னணியில் இதுபோன்று போதைவஸ்து உபயோகிக்கும் பழக்கம் தொடரலாம்.
- போதைப்பொருள்களுக்குப் பழகும் ஒரு நபர், தீவிர மன அழுத்தம், பதற்றம் ஏடிஹெச்டி எனப்படும் (Attention deficit hyperactivity disorder (ADHD) உள்ளிட்ட மனநலம் சார்ந்த பிரச்னைகளால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலை ஏற்படலாம்.
- ஆபத்தான செயல்களில் ஈடுபடும் எண்ணம் அவர்களுக்குத் தோன்றலாம்.
- மிகப்பெரிய விபத்து அல்லது வன்முறையை அருகில் பார்த்ததன் பாதிப்பும் போதைக்குள் அவர்களை விழவைத்திருக்கலாம். சுய மதிப்பீடு அறவே இல்லாதது, தான் மற்றவர்களால் புறக்கணிக்கப்படுவதாக உணர்வது போன்றவையும் இதற்கான காரணங்களாகச் சொல்லப்படுகின்றன. போதைக்குள் வீழ்பவர்களுக்கும் சுய மதிப்பீடு காணாமல் போகும்.

அறிகுறிகள்:
- படிப்பில் மந்தமாவது
- கண்கள் ரத்தச்சிவப்பு நிறத்தில் இருப்பது
- காரணமே இல்லாமல் சிரித்துக்கொண்டே இருப்பது
- எந்தச் செயலிலும் ஆர்வமின்றி காணப்படுவது
- சுய சுத்தம், சுகாதாரம் பேணாதது
- தோற்றத்தில் அக்கறை கொள்ளாதது
- யாரையும் கண்ணோடு கண் பார்த்துப் பேசாதது
- அடிக்கடி பசியெடுப்பதாக உணர்வது, எதையாவது கொறித்துக்கொண்டே இருப்பது
- சுவாசத்திலும் உடைகளிலும் சிகரெட் வாடை
- ரகசியமான, சந்தேகத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகள்
- அசாதாரண களைப்பு
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
எல்லாப் பெற்றோருக்கும் தங்கள் பிள்ளைகள் நல்லவர்கள் என்ற எண்ணமே இருக்கும். ஆனாலும் மேற்குறிப்பிட்டவற்றில் உங்கள் குழந்தையிடம் ஏதேனும் அறிகுறி தென்பட்டால் அப்போதும் பிள்ளைகள் தவறு செய்ய மாட்டார்கள் என்ற எண்ணத்தில் அலட்சியம் செய்யாதீர்கள். சந்தேகம் வந்தால் பிள்ளைகளைக் கூப்பிட்டு உட்காரவைத்துப் பேசுங்கள். தங்கள் பிள்ளைகள் போதைக்கு அடிமையாகியிருக்கலாம் என்று சந்தேகப்படும் ஐந்தில் ஒரு பெற்றோர், அதைத் தடுப்பது குறித்து பிள்ளைகளுடன் அடுத்தகட்ட உரையாடலை நிகழ்த்துவதில்லை என்கிற ஆபத்தான டேட்டா சொல்கிறது ஓர் ஆய்வு.
ஆஷ்லி
டீன் ஏஜில் நண்பர்கள் தரும் அழுத்தம் காரணமாக இதுபோன்ற தவறான, தகாத பழக்கங்களுக்கு ஆளாவது சகஜமாக நடக்கும். தவிர அந்த வயதில் எதையாவது புதிதாகச் செய்ய வேண்டும் என்ற உந்துதலும் இதற்கொரு காரணம். துரதிர்ஷ்டவசமாக டீன் ஏஜில் பலரும் தவறான சகவாசத்தில் இருக்கிறார்கள். அவர்களது தவறான வழிகாட்டுதலுக்கு மயங்கி, இதுபோன்ற பழக்கங்களில் சிக்கிக்கொள்வது ஒருபுறம் என்றால் டீன்ஏஜர்களின் பாதுகாப்பும் அங்கே கேள்விக்குறியாவது இன்னொரு பக்க பயங்கரம். தெரிந்தோ, தெரியாமலோ இப்படிப்பட்ட சகவாசம் ஏற்பட்டு, தகாத பழக்கம் வந்திருந்தால், அது குறித்து பெற்றோரிடம் மனம்விட்டுப் பேசி, மீள்வதற்கான வழிகளைக் கேட்பதில் தவறில்லை. அதை அசிங்கமாகவோ, பெற்றோர் என்ன சொல்வார்களோ என்ற பயத்தின் காரணமாகவோ மறைக்கத் தேவையில்லை.
என் நட்பு வட்டத்திலும் தெரிந்தவர்கள் மத்தியிலும் இதுபோன்ற சம்பவங்களைக் கேள்விப்படும்போதெல்லாம் அது குறித்து அம்மாவிடம் பேசியிருக்கிறேன். அப்போதெல்லாம் போதையின் பாதை எவ்வளவு பயங்கரமானது என்ற விழிப்புணர்வை அம்மா எனக்கு விளக்கியிருக்கிறார். அதுதான் இன்றுவரை எனக்கான பாதுகாப்பாகத் தொடர்கிறது.
மீட்க முடியுமா?
போதையின் பயங்கரத்தை உணரத் தொடங்கிய அடுத்த நிமிடம் உடனடியாக மீட்பு சிகிச்சைக்குத் தயாராக வேண்டியது அவசியம். கூடவே...
உங்கள் நண்பர்களிடம் நீங்கள் போதையிலிருந்து முழுமையாக வெளியேறப்போகிற உங்கள் முடிவைச் சொல்லுங்கள்.
உதவி தேவைப்படும்போது அருகிலிருக்கும்படி குடும்பத்தாரையும் நண்பர்களையும் கேட்டுக்கொள்ளுங்கள்.

ஆல்கஹால், சிகரெட் உள்ளிட்ட எந்த போதையும் புழங்காத இடம் என உறுதியாகத் தெரிந்தால் மட்டுமே உங்களுக்கு அழைப்பு வரும் இடங்களுக்குச் செல்ல முடிவெடுங்கள்.
போதை புழங்கும் இடத்துக்கு ஒருவேளை தெரியாமல் சென்று மாட்டிக்கொண்டாலும் அங்கிருந்து வெளியேறுவது எப்படி என்ற திட்டத்தைத் தயாராக வைத்திருங்கள்.
அடிமைத்தனம் இருந்ததோ, அதிலிருந்து மீண்டதோ ஒரு நபரை பலவீனமானவராக்காது என்பதில் உறுதியாக இருங்கள்.
டேக்ஹோம் மெசேஜ்
போதையின் பிடியில் சிக்கிக்கொண்டால் அது வாழ்நாள் முழுவதையும் நரகமாக்கிவிடும். அந்த ஆபத்தை உணர்ந்து ஆரம்பத்திலேயே அதிலிருந்து மீள முடிவெடுத்துவிட்டால் சிகிச்சைகள் நிச்சயம் பலனளிக்கும். போதையின் அடுத்தகட்டத்துக்குப் போவதற்கு முன் விழித்துக்கொள்வது சிறந்தது. போதையின் பிடியில் சிக்கித் தவிக்கும் பிள்ளைகளுக்கு முதல் ஆதரவு பெற்றோர் தரப்பிலிருந்தே கொடுக்கப்பட வேண்டும். அவர்களைக் குறைசொல்லாமல், திட்டாமல் அவர்களின் நிலை அறிந்து அவர்களை அந்தப் பழக்கத்திலிருந்து முழுமையாக மீட்க அன்பையும் அக்கறையையும் கொடுத்தால் பிள்ளைகள் நிச்சயம் நல்வழிக்குத் திரும்புவார்கள்.