
அதுவரைக்கும் நாங்க யார்கிட்டயும் மாட்டிக்காம இருக்கணும்னு நினைச்சோம். எனக்குக் கொஞ்சம் பயமாதான் இருந்துச்சு. எங்க சைடுல எல்லாரும் சப்போர்ட்டிவாதான் இருந்தாங்க
``எல்லாமே கனவு மாதிரியிருக்கு. கேரளாவுல இருந்து கிளம்பும்போதே முடிவு பண்ணிட்டேன்... எந்தச்சூழல்லயும் கமலேஷ் இல்லாம தனியா இங்கே திரும்பி வரக்கூடாது. சென்னை வர்றவரைக்கும் கமலேஷ் பத்தி பெரிசா எதுவும் தெரியாது. ஒரே ஒருமுறை வீடியோ கால்ல பேசியிருக்கோம். அப்பப்போ போட்டோ ஷேர் பண்ணிப்போம். சின்னச் சின்ன உரையாடல்கள்லயே பெரிய நம்பிக்கை வந்திடுச்சு...’’ தமிழும் மலையாளமும் கலந்த மொழியில் பேசும் மனைவி சஜிதாவைக் காதல் ததும்பப் பார்த்துக்கொண்டிருக்கிறார் கமலேஷ். துரத்தல், மிரட்டல் பதற்றத்தையெல்லாம் கடந்து, சிறிய வீட்டில் வாழ்க்கையைத் தொடங்கி யிருக்கிறார்கள் கமலேஷும் சஜிதாவும்.
கமலேஷ் சென்னைத் திருவொற்றியூர்க்காரர். சஜிதா கேரளா. இருவருக்குமே 22 வயது. கமலேஷ் சென்னையிலும் சஜிதா கேரளாவிலும் பி.ஏ எக்கனாமிக்ஸ் படித்தார்கள். கொரோனாவால் கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடந்த நேரத்தில், ஒரு வாட்ஸப் குரூப்பில் இருவரும் இணைக்கப்பட்டிருக்கிறார்கள். மாணவர்களாகத் தொடங்கியவர்கள், நண்பர்களாகி, காதலர்களாகி, பெரும் போராட்டத்தைக் கடந்து தம்பதியு மாகியிருக்கிறார்கள்.

‘‘சஜிதா வாட்ஸப்ல நிறைய நோட்ஸ் ஷேர் பண்ணுவாங்க. அது ரொம்ப உபயோகமா இருக்கும். முதல்ல எனக்கு அவங்க பையனா, பொண்ணான்னுகூடத் தெரியாது. நான் ‘தங்கிலீஷ்ல கேட்க, அவங்க மலையாளமும் ஆங்கிலமும் கலந்து ரிப்ளை பண்ணுவாங்க. அப்படியே கொஞ்சம் கொஞ்சமா டெவலப் ஆகி, அவங்க பேரு சஜிதா, கேரளா திருச்சூரைச் சேர்ந்தவங்கங்கிற அளவுக்குப் பேச ஆரம்பிச்சோம். தயக்கம் தாண்டி பரஸ்பர மரியாதையோட எங்க உரையாடல் வளர்ந்துச்சு.
ஒருகட்டத்துல சஜிதா மனசுக்கு ரொம்ப நெருக்கமாகிட்டமாதிரி தோணுச்சு. ஆனாலும் நான் எந்தக் கட்டத்திலயும் அந்த உணர்வை வெளிப்படுத்தலே. சஜிதாதான் முதல்ல என்கிட்ட திருமணம் பண்ணிக்கலாமான்னு கேட்டாங்க. தொடக்கத்துல பயமாவும் பதற்றமாவும் இருந்துச்சு. சஜிதா வசதியான வீட்டுப்பொண்ணு. நிறைய உறவுகளோடு பேர்பெற்று வாழ்ற குடும்பம். நாங்க மிடில் கிளாஸ். முதல்ல அது செட்டாகுமான்னு கேள்வி வந்துச்சு. ‘கண்டிப்பா எங்க வீட்டுல எதிர்ப்பு வரும். அதை ஃபேஸ் பண்ணித்தான் நாம வாழவேண்டியிருக்கும்'னு சொன்னா. அவங்க உறுதியும் நம்பிக்கையும் இவதான் உனக்கானவங்கிற எண்ணத்தை உருவாக்கிடுச்சு. ‘கிளம்பி வா, பாத்துக்கலாம்'னு சொல்லிட்டேன்...’’ சிரிக்கும் கமலேஷின் கரம் பற்றிக்கொள்கிறார் சஜிதா.
‘‘வாட்ஸப் சாட்ல என்ன பெரிசா பகிர்ந்துக்க முடியும்னு தோணலாம். ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்க சின்னதா ஒரு ஹாய் போதும்... நாங்க எட்டு மாதங்கள் பேசியிருக்கோம். நான் சென்னை வந்தா, ஒரு பெரிய படை என்னைத் தேடி வரும்னு எனக்குத் தெரியும். அந்த பயத்தைவிட கமலேஷைப் பார்க்கப்போற சந்தோஷம் அதிகமா இருந்துச்சு. வந்து இறங்கினதும் புது இடம், புது மனுஷங்க, புது மொழி. கொஞ்சம் தடுமாற்றமாதான் இருந்தது. கமலேஷைப் பார்த்ததும் அவன் கையப் பிடிச்சுக்கிட்டேன். மறுநாளே கல்யாணம் பண்ணிக்கிட்டோம்...’’ என்று சிரிக்கிறார் சஜிதா.
சஜிதாவின் உறவினர்கள் கேரளக் காவல்துறையோடு சென்னை வந்திறங்கி கமலேஷ் வீடு, உறவினர்கள் வீடென அலசத் தொடங்கிவிட்டார்கள். திருமணச் சான்று கிடைக்க ஒருவாரம் ஆகும் என்ற நிலையில் இருவரும் புதுச்சேரிக்குக் கிளம்பிவிட்டார்கள்.

‘‘அதுவரைக்கும் நாங்க யார்கிட்டயும் மாட்டிக்காம இருக்கணும்னு நினைச்சோம். எனக்குக் கொஞ்சம் பயமாதான் இருந்துச்சு. எங்க சைடுல எல்லாரும் சப்போர்ட்டிவாதான் இருந்தாங்க. ஆனா, சஜிதா வீட்டுல எப்படியாவது அவளை கேரளா கூட்டிக்கிட்டுப் போயிடணும்னு நினைச்சாங்க. பதிவுச்சான்றிதழ் கிடைச்சதும் நேரா போலீஸ் ஸ்டேஷன் போயிட்டோம். ரெண்டு குடும்பத்தையும் உக்கார வச்சு போலீஸ் பேசினாங்க. கேரளக் காவல்துறை, ‘எப்.ஐ.ஆர் போட்ருக்கோம்... சஜிதாவைக் கேரள கோர்ட்ல ஆஜர்படுத்தணும். கூட்டிக்கிட்டுப் போறோம்’னு சொன்னாங்க. ‘நான் இப்ப உன்ன விட்டுட்டுப் போனா, என்னைத் திரும்ப அனுப்ப மாட்டாங்க. நான் அவங்ககூட போக மாட்டேன்’னு ரொம்ப உறுதியா சொல்லிட்டா சஜிதா. வேற வழி இல்லாம கேரள நீதிபதி வீடியோ கால்ல சஜிதாகிட்ட பேசினாங்க. ‘ரெண்டு பேருக்கும் சட்டப்படி அவங்க வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை இருக்கு. அதனால, இனி யாரும் அவங்கள வற்புறுத்தக்கூடாது'ன்னு நீதிபதி சொல்லிட்டாங்க. கடைசியா சஜிதாவோட பேரன்ட்ஸும் எங்கள சந்தோஷமா இருங்கன்னு வாழ்த்திட்டுதான் போனாங்க. நிச்சயம் கொஞ்ச நாள்ல எல்லோரும் மனம் மாறி வருவாங்க. சந்தோஷமா இருப்போம்” - நம்பிக்கையுடன் சொல்கிறார் கமலேஷ்வரன்.
அந்தச் சிறிய வீடு அன்பாலும் மகிழ்ச்சியாலும் நிறைகிறது!