Published:Updated:

எப்போது ஒரு ரிலேஷன்ஷிப் `toxic' ஆக மாறுகிறது #AllAboutLove - 18

toxic relationship என்றால் உடனே அது ஆண், பெண்ணுக்குத் தரும் பிரச்னையாக மட்டுமே பார்க்கக் கூடாது. நம் பாட்டிக்களுக்கு நடந்ததை வைத்து ஓர் ஆண்தான் ஒரு ரிலேஷன்ஷிப்பை அப்படி மாற்றுகிறான் என நிச்சயம் சொல்ல முடியாது.

மதனும் மஞ்சரியும் அப்போதுதான் ரிலேஷன்ஷிப்புக்குள் நுழைந்திருந்தார்கள். மதனுக்காக ஏதாவது செய்ய வேண்டுமென்ற ஆசை மஞ்சரியை ஆக்ரமித்திருந்தது. `எனக்கு மீன் பிடிக்காது. அலர்ஜி’ என எப்போதோ மதன் சொல்லியிருந்தது மஞ்சரியின் நினைவுக்கு வந்தது. `எனக்கு ரொம்ப பிடிச்ச மீனை இனி சாப்பிடவே மாட்டேண்டா’ என்றாள் மஞ்சரி. மதனுக்கு அதில் ஆர்வமில்லை என்றாலும் தனக்காக, தனக்குப் பிடிக்காத ஒன்றை விட்டுவிடுகிறாள் என்பதைக் காதலாகப் பார்த்து மகிழ்ந்தான் மதன்.

நாள்கள் ஓடின. மஞ்சரிக்கு மீன் சாப்பிடாமல் இருப்பது ஆரம்பத்தில் சிக்கலாகத் தெரியவில்லை. ஆனால், அவள் வீட்டுக்கு விடுமுறைக்கு செல்லும்போதெல்லாம் அதைத் தவிர்ப்பது சிரமமாக இருந்தது. ஒரு நாள் தோழியின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் மீன் சாப்பிட்டுவிட்டாள். அதை மதனிடம் மறைத்துவிட்டாள். மதனிடம் சொன்னால் நிச்சயம் சண்டை போடுவான் என பயந்தாள். காரணம், மற்ற சில விஷயங்களில் மதனின் ரியாக்‌ஷன் அப்படி இருந்ததை இந்தக் கால இடைவெளியில் மஞ்சரி பார்த்திருந்தாள். ஒருநாள் மதனுக்கு மஞ்சரி மீன் சாப்பிடும் விஷயம் தெரிந்துவிட்டது. மஞ்சரி நினைத்ததுபோல் கோபத்தில் ஆடித் தீர்த்தான் மதன். `உன் லவ் அவ்வளவுதான்’ என்றெல்லாம் சொல்லிவிட்டான்.

காதல்
காதல்
Pixabay

பிரச்னை முடியவே இல்லை. எதைச் செய்தாலும் அதை மீனோடு முடிச்சு போட்டான் மதன். அவள் என்ன சொன்னாலும் `நிஜமாவா?’ எனக் கேள்வி கேட்கத் தொடங்கினான். மஞ்சரிக்கு அந்த ரிலேஷன்ஷிப் சுமையாக மாறிக்கொண்டிருந்தது. வேறு வழியின்றி தோழியிடம் இதைப் பற்றிப் பேசினாள்.

`இது வேலைக்காவாது மஞ்சரி. உங்க ரிலேஷன்ஷிப் toxic ஆ மாறிடுச்சு’ என்றாள் தோழி.

அது என்ன toxic relationship?

தன் இணையை மனரீதியாக, உடல்ரீதியாக ஒருவர் துன்புறுத்துவதும் அது தொடர்வதுமாக இருந்தால், அந்த உறவின் மூலம் மகிழ்ச்சியும் நிம்மதியுமைவிட வலியும் கவலையும் அதிகம் இருந்தால் அது toxic relationship.

ஓர் உறவில் ஒருவரின் எதிர்பார்ப்பு என்பது ஆளுக்கு ஆள் மாறும். தன் இணை தன் மேல் ஆதிக்கம் செலுத்துவதை ரசிக்கும் ஆள்கள் உண்டு. அதையே சுமையாகக் கருதுபவர்களும் உண்டு. ஒரு ஐடியல் ரிலேஷன்ஷிப்பில் எவையெல்லாம் toxic என்பதைப் பார்க்கலாம்.

மேலே சொன்ன உதாரணம் நிச்சயம் டாக்ஸிக் ரிலேஷன்ஷிப். மதன் மீதான காதலால்தான் மஞ்சரி மீன் சாப்பிடுவதை விட்டாள். ஆனால், மீண்டும் சாப்பிட்டதால் காதல் இல்லாமல் போனதாக ஆகிவிடாது. ஏற்கெனவே இந்தத் தொடரில் ரிலேஷன்ஷிப்பில் ஆரம்பத்தில் இந்த மாதிரியான வாக்குறுதிகளைத் தவிர்க்கலாம் எனச் சொல்லியிருந்தோம். மஞ்சரியும் தவிர்த்திருக்கலாம். அல்லது மஞ்சரி மீன் சாப்பிட்டதை மதன் புரிந்து நடந்திருக்கலாம். இரண்டுமே உறவைச் சிக்கலாக்கிவிட்டது. ஆனால், இங்கே முக்கிய பிரச்னை மீன் அல்ல. அந்தச் சம்பவத்தைவிட்டு மஞ்சரி பொய் சொல்கிறாள் என அதையே பிடித்துத் தொங்கின மதன்தான். இங்கே டாக்ஸிக் பார்ட்னர் மதன்தான்.

Woman
Woman
Image by StockSnap from Pixabay

ஓர் உறவில் விதிகள், எந்த மாதிரியான விதிகள் இருந்தாலும், அது டாக்ஸிக் ஆகத்தான் மாறும். காலையில் எழுந்தவுடன் ஒருவருக்கொருவர் `குட் மார்னிங்’ எனச் சொல்லிக் கொள்வதை வழக்கமாக வைத்துக் கொள்ளலாம். அது விதி கிடையாது. ஆனால், என்றேனும் ஒரு நாள் அதை மீறி இன்னொருவருடன் பேசிவிட்டால், உடனே அதை வைத்துச் சண்டை போடுவதுதான் தவறு. அப்போதுதான் அது விதியாக மாறுகிறது. அந்த விதி எதுவாக இருந்தாலும், அதை ஒருவர் வேண்டுமென கேட்டுக்கொண்டே இருந்தால் அது toxic relationshipதான். போலவே, தொடர்ச்சியாக ஒருவர் அந்த வழக்கத்தை விடுவதும், கேட்டால் பொய் சொல்வதோ மறைப்பதோ நடந்தால் அப்போதும் அந்த உறவு டாக்ஸிக் ஆக மாறிக்கொண்டிருக்கிறது எனலாம்.

ஒருவரின் கண்ணீருக்கு இன்னொருவர் மதிப்பு கொடுக்கவில்லையென்றால், அந்த அழுகை அவரை எதுவும் செய்யவில்லையென்றால் அங்கே காதல் இல்லையென்றுதான் ஆகும். அந்த உறவும் toxic relationship ஆகத்தான் மாறும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ரிலேஷன்ஷிப்பில் காதலைவிட முக்கியம் ஒருவருக்கொருவர் கொடுக்கும் மரியாதை எனப் பார்த்தோம். அது சுய மரியாதையாகவும் இருக்கலாம்; தன் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மீதான மரியாதையாகவும் இருக்கலாம். மரியாதை இல்லாத உறவு toxic relationship-தான். அங்கே மகிழ்ச்சியைவிட கசப்புகளே அதிகம் இருக்கும்.

வாழ்வையே மாற்றும் முக்கியமான சில முடிவுகளை எடுக்கும் சுதந்திரத்தை தன் பார்ட்னருக்கு இன்னொருவர் தர வேண்டுமென்றும் பார்த்தோம். அப்படியின்றி ஒருவரை இன்னொருவர் `ஃபோர்ஸ்’ செய்தால் அந்த உறவு எப்படிச் சரியானதாக இருக்கும்? அதுவும் toxic relationshipதான்.

சிலர் எந்தப் பிரச்னை வந்தாலும் ரிலேஷன்ஷிப்பைக் காரணமாக வைத்து மிரட்டுவார்கள். மிரட்டினாலே அது டாக்ஸிக்தான். யோசனையே வேண்டாம்.

ரிலேஷன்ஷிப்
ரிலேஷன்ஷிப்
Pixabay
காதலிலும் `No means no' தானா? #AllAboutLove - 16

ஒரு சிலருக்குக் கடந்த காலம் பிரச்னையாக மாறும். இதற்கு முன்னர் இன்னொரு ரிலேஷன்ஷிப்பில் இருந்திருப்பார். ரிலேஷன்ஷிப் தொடக்கத்தில் அதைச் சொல்லியிருந்தாலும், பார்ட்னர் அதைப் பெரிதாக எடுத்துக் கொண்டிருக்க மாட்டார். ஆனால், பிற்காலத்திலே அதையே வைத்து மட்டம் தட்டுவார். குறை சொல்வார். `இதனாலதான் உன்னை விட்டு போயிருப்பான் / போயிருப்பாள்’ என்பதையெல்லாம் சொல்லிக்காட்டுவார். அதுவும் ஒரு நல்ல உறவை toxic relationship ஆக நிச்சயம் மாற்றும். போலவே, ஒருவர் செய்யும் தவறுகளை ஆயுதமாக மாற்றுவதும் நல்ல உறவை நிச்சயம் கெடுக்கும்.

காதலர்கள் என்றாலும், கணவன் மனைவி என்றாலும் ஒரு ஜோடி என்பது இரண்டு பேர். அதிலும் அவரவருக்கான இடம் நிச்சயம் வேண்டும். ஒரே ஜோடி என்பதால் ஒருவருக்கென தனிப்பட்ட நேரமோ, வேலையோ இருக்கவே இருக்காதென நினைக்கக் கூடாது. அந்த `ஸ்பேஸ்’ நிச்சயம் இருவருக்கும் வேண்டும். அது இல்லாத ரிலேஷன்ஷிப் எப்போது வேண்டுமென்றாலும் டாக்ஸிக் ஆக மாறலாம். ஒருவர் பேசாமலே இருப்பதால், அந்த ஸ்பேஸ் கேட்கவில்லை என்பதால் அவருக்கு எந்தப் பிரச்னையும் இல்லையென நினைக்கக் கூடாது.

Toxic relationship என்றால் உடனே அது ஆண், பெண்ணுக்குத் தரும் பிரச்னையாக மட்டுமே பார்க்கக் கூடாது. நம் பாட்டிக்களுக்கு நடந்ததை வைத்து ஓர் ஆண்தான் ஒரு ரிலேஷன்ஷிப்பை அப்படி மாற்றுகிறான் என நிச்சயம் சொல்ல முடியாது. நாம் இந்தத் தொடரில் பேசும் இந்த ரிலேஷன்ஷிப் பிரச்னைகள் எல்லாமே இப்போதும் இனி வருங்காலத்துக்காகவும்தான். இதில் ஆண் பெண் இருவருமே சம பொறுப்புடையவர்கள். இப்போதே நிறைய ரிலேஷன்ஷிப்பைப் பெண்கள் டாக்ஸிக் ஆக மாற்றிக்கொண்டு தானிருக்கிறார்கள். எனவே, இருவருமே இதைப் பொறுப்புடன் அணுக வேண்டும்.

இன்னொரு விஷயம். ஒரே ஒரு சம்பவத்தை வைத்து toxic relationship என முடிவுக்கு வரக்கூடாது. மஞ்சரி - மதன் விஷயத்திலும் மீன் சாப்பிட்டது ஒரு சம்பவம். அதை வைத்து மதன் தொடர்ச்சியாகப் பிரச்னை செய்த பின்னர்தான் மஞ்சரிக்கு அந்த உறவு கசந்தது.

ரிலேஷன்ஷிப்
ரிலேஷன்ஷிப்
Pixabay
ரிலேஷன்ஷிப்பில் பொய் சொல்லலாம்தான்; ஆனால்..?! #AllAboutLove - 17

ஒருவருக்கு தங்கள் உறவு இப்படி டாக்ஸிக் ஆக மாறுகிறது எனத் தோன்றினால் அவர் செய்ய வேண்டியது பேசுவதுதான். பிரச்னையில் யார் விக்டிமோ அவர் முதலில் பேச வேண்டும். தன்னை எது பாதிக்கிறதென பார்ட்னரிடம் சொல்ல வேண்டும். அவர் அதைத் தெரியாமல் கூட செய்யலாம். அதைப் புரிய வைக்க வேண்டும். புரிந்துகொண்டாலும் அவரை அவர் மாற்றிக்கொள்ள காலம் தர வேண்டும். தோழியிடம் சொல்லும் முன் மஞ்சரி மதனிடம் பேசியிருக்கலாம். மதன் தன் தவறை உணர்ந்தால், அவனை அவன் மாற்றிக்கொள்ள மஞ்சரி டைம் தர வேண்டும். ஒரே நாளில் மாறுவது எல்லாம் சாத்தியமில்லை. ஒருவேளை மதன் தன் தவறை உணர்ந்து தன்னை மாற்றிக்கொண்டுவிட்டால், நிச்சயம் மஞ்சரி மதனை இழக்கக் கூடாது. இழந்தால், அவளுக்குத்தான் நட்டம். ஆனால், அதன் பின்னரும் மதன் அப்படியே நடந்தால் என்ன செய்வது?

வேறு வழியில்லை. பிரிவதுதான் நல்லது. பிரேக் அப் கொடுமையானதுதான். வலிதான். ஆனால், சில சமயம் பிரேக் அப் தான் ஒருவரை மீட்கும் வழி. ரிலேஷன்ஷிப் வாழ்வின் ஓர் அங்கம்தான். அதையே வாழ்க்கையென நினைத்து தேவையான சமயத்தில் கூட பிரேக் அப் செய்யாமல் போனால், வாழ்க்கையே போய்விடும்.

அப்படியென்றால், பிரேக் அப் நல்லதா? அதைச் செய்ய சரியான நேரம் எது? பிரேக் அப் செய்தால் பார்ட்னர் என்ன ஆவார்? அவருக்கு வலிக்காமல் எப்படிச் சொல்வது?

அடுத்த வாரம் பார்க்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு