கட்டுரைகள்
Published:Updated:

அப்பாவா, அம்மாவா... தேவைதானா `நீயா... நானா' வேற்றுமை?

அப்பாவா, அம்மாவா... தேவைதானா `நீயா... நானா' வேற்றுமை?
பிரீமியம் ஸ்டோரி
News
அப்பாவா, அம்மாவா... தேவைதானா `நீயா... நானா' வேற்றுமை?

முந்தைய காலத்தில் வேலைக்குச் செல்வது புருஷ லட்சணமாகச் சொல்லப்பட்டது. `திரைக்கடல் ஓடி திரவியம் தேடு' என்பதுபோல... வீட்டைத் தாண்டிய பொருளீட்டும் தேடல் ஆண்களுக்குக் கட்டாயமானதாக இருந்தது.

`அம்மா... 10 மாதங்கள் சுமக்கிறார். அப்பா... 25 வருடங்கள் தாங்குகிறார். ஆனால், அப்பாவின் தியாகம் மட்டும் ஏன் பின்னுக்குத் தள்ளப்படுகிறது?’

‘அம்மா... சம்பளம் இல்லாமல் குடும்பத்தை நிர்வகிக்கிறார். அப்பா... தன் சம்பளத்தை எல்லாம் குடும்பத்துக்காகச் செலவழிக்கிறார். ஆனால், அப்பாவின் தியாகம் முன்னிலைப்படுத்தப்படுவதில்லை?’

‘அலமாரியில் கண்கவர் புடவைகளும், குழந்தைகளுக்கான உடைகளும் நிறைந்துள்ளன. ஆனால், அப்பாவுக்கான உடைகளோ மிகக்குறைவுதான். அவர், தன் சொந்தத் தேவைகளைப் பற்றிக் கவலைப்படுவதில்லையோ...'

- அப்பாக்களின் புகழ்பாடும் இத்தகைய உதாரணங்களுடன் வாட்ஸ்அப் பதிவு ஒன்று, சமீபத்தில் பலராலும் பகிரப்பட்டது. குடும்ப உறவில் அப்பா, அம்மா இருவரில் யாருடைய பங்களிப்பு முக்கியமானது?

அப்பாவா, அம்மாவா... தேவைதானா `நீயா... நானா' வேற்றுமை?

இரண்டு கைகளின் ஓசைக்குத்தானே வீரியம் அதிகம்? அதுபோல, குடும்ப உறவில் பெற்றோர் இருவரின் பங்களிப்பும் இணையாக இருப்பதுதான் இல்லறத்தை நல்லறமாக்கும். ஆனால், அவரவர் குடும்பச்சூழல் மற்றும் தனிநபர் விருப்பங்களைப் பொறுத்து அம்மா அல்லது அப்பாவுக்குக் கூடுதல் முக்கியத்துவம் தரப்படுகிறது. பொதுவான கண்ணோட்டத்தில் `அப்பாவா... அம்மாவா?' என ஒருவரை முன்னிலைப்படுத்துவது சரியாகுமா? உளவியல் ரீதியான கண்ணோட்டத்தில் இந்த விஷயத்தை எப்படி அணுகலாம்? சென்னையைச் சேர்ந்த உளவியல் ஆலோசகர் நப்பின்னையிடம் பேசினோம்.

நேற்று இல்லாத மாற்றம்...

``முந்தைய காலத்தில் வேலைக்குச் செல்வது புருஷ லட்சணமாகச் சொல்லப்பட்டது. `திரைக்கடல் ஓடி திரவியம் தேடு' என்பதுபோல... வீட்டைத் தாண்டிய பொருளீட்டும் தேடல் ஆண்களுக்குக் கட்டாயமானதாக இருந்தது. அதனால், மனைவி மற்றும் பிள்ளைகளிடம் குடும்பத் தலைவர்களால் அதிக நேரம் செலவிட முடியாத சூழல் இருந்தது. அப்போதெல்லாம் வீடு மட்டுமே பெண்களுக்கான கூடு. அம்மாவின் அரவணைப்பிலேயே அதிகம் வளர்ந்த பிள்ளைகளுக்கு, அவர்தான் முதன்மையான உறவாகவும் தோளாகவும் இருந்தார்.

அந்தக் காலத்தில் சம்பாத்தியம் குடும்பத் தலைவனைச் சார்ந்ததாக இருந்ததால், பொருளாதாரத் தேவைக்காக அவரை அனுசரித்து நடந்தாக வேண்டிய கட்டாயம் மற்றவர்களுக்கு இருந்தது. தன் வருமானத்தில் குடும்பம் இயங்குவதால், வீட்டில் எல்லோரையும் தன் கட்டுக்குள் வைத்திருக்கவே பெரும்பாலான ஆண்கள் விரும்பினர். பெண்களின் உழைப்புக்கு உரிய மதிப்பும் மரியாதையும் தரப்படாமலிருந்தது. எந்த ஒரு முக்கிய முடிவையும் குடும்பத் தலைவரின் ஒப்புதலின்றி மனைவிமார்களால் எடுக்க முடியாமல்போனது.

அப்பாவா, அம்மாவா... தேவைதானா `நீயா... நானா' வேற்றுமை?

இதனால், மனைவி, பிள்ளைகள் உட்பட குடும்பத்தில் பலரும் குடும்பத்தலைவனை மரியாதை கலந்த பயத்துடனேயே அணுகினர். ஆண்கள் பலரும் பெண்களை அடக்கி ஆளவே நினைத்தனர். குடும்பத்தின் ஆளுமையாக தங்களைக் கருதிக்கொண்ட ஆண்கள் பலரும், தங்களின் உணர்வுகளைப் பொதுவெளியில் அதிகம் வெளிப்படுத்தாமலேயே இருந்தனர். அப்பாக்களின் உள்ளத்தை முழுமையாக அறியாதவர்களாக, அறிவதற்கு வாய்ப்பு கிடைக்காதவர்களாகவே முந்தைய தலைமுறையினர் வாழ்ந்தனர். இதுவே, தங்களிடம் அதிக நேரம் செலவிட்டதாலும், தங்களின் கஷ்ட நஷ்டங்களைப் பிள்ளைகளிடம் எடுத்துச் சொல்லியதாலும், பெரும்பாலான பிள்ளைகள் அம்மாக்களின் அன்பையும் அரவணைப்பையும் சிலாகித்தனர்.

ஆண்கள் மட்டும் லேசுப்பட்டவர்களா என்ன? பணியிடங்களில் எண்ணற்ற பிரச்னைகள் இருந்தாலும், அவற்றையெல்லாம் சமாளித்து 58 - 60 வயதுவரை உத்தியோகத்தை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, பொருளாதார நெருக்கடிகளில் மீண்டு கரைசேர்வது நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய விஷயம்தான். தள்ளாத வயதுவரையிலும் உழைத்து, குடும்பத்தைக் காப்பாற்றும் ஆண்கள் பலரின் பொறுப்புணர்வு மெச்சத்தக்கதுதான். இவற்றையெல்லாம் உதாரணமாகக் கொண்டு, `நீயா... நானா?' எனப் போட்டி போடுவதில் எந்த அர்த்தமும் இல்லை. கஷ்டமே தெரியாமல் வாழ்க்கையை சொகுசாக அனுபவிப்பவர்களும் உண்டு. காலம் முழுக்க உழைத்துத் தேய்பவர்களும் உண்டு. அவரவர் நிலையையும் குடும்பத்தையும் தனிப்பட்ட காரணங்களையும் பொறுத்தே இவையெல்லாம் அமையும்'' என்று முந்தைய கால நிலவரங்களுடன், யதார்த்தத்தையும் சொன்ன நப்பின்னை, தற்போதைய மாற்றங்கள் குறித்துப் பேசினார்.

அப்பாவா, அம்மாவா... தேவைதானா `நீயா... நானா' வேற்றுமை?

மாற்றம்... முன்னேற்றம்!

``காலம் தன்னைத் தகவமைத்துக்கொள்ளும் என்பார்கள். அதுபோல, அப்பா - அம்மா - பிள்ளை உறவில் இன்று எத்தனையோ பயனுள்ள மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இப்போது ஏராளமான வீடுகளில் பெற்றோர் இருவருமே குழந்தை வளர்ப்புக்கு சரிவிகித அக்கறை கொடுக்கிறார்கள். வேலைக்குச் செல்லும் பெண்கள் பலரும், கணவருடன் குடும்பப் பொருளாதாரச் சுமைகளைப் பகிர்ந்துகொள்கிறார்கள். மனைவிக்கு ஒத்தாசையாகக் கணவர்களும் சமைக்கிறார்கள்; வீட்டு வேலைகளிலும் உதவுகிறார்கள். பிள்ளைகளின் உலகத்திலும் உளவியலிலும் அம்மாக்களுக்கு இணையாக அப்பாக்களின் அக்கறையும் கூடிவருகிறது. `என் மனைவியை ரொம்பப் பிடிக்கும்; என் மனைவி சமையல் நல்லாருக்கும்' என்றெல்லாம் முந்தைய தலைமுறை ஆண்கள் பொதுவெளியில் சொல்லத் தயங்கிய அன்பான வார்த்தைகளை யெல்லாம், இன்றைய தலைமுறை ஆண்கள் சிலாகித்துச் சொல்கின்றனர். பெரும்பாலான தாய்மார்கள் இன்று சுயமாக முடிவெடுக்கிறார்கள். ஆண்கள் பலரும், தங்கள் மனைவியை முன்னிலைப்படுத்தவும், சுய முன்னேற்றத்துடன் அவர்கள் செயல்படவும் ஊக்கப்படுத்துகின்றனர்.

இயற்கையின் படைப்பில் எது சிறந்தது? இதற்கான பதில், ஒவ்வொரு வருக்கும் மாறுபடலாம். இதுபோலவே உலகின் எல்லா விஷயங்களிலும் ஒவ்வொருவரின் பார்வையும் வேறுபடும். எனவே, `அம்மா சிறந்தவரா... அப்பா சிறந்தவரா?' என்பதை விடுத்து, பெற்றோராகச் சிறப்புடன் செயல்படுகிறோமா என்பதில் கவனம் கொடுப்பதே சரியாக இருக்கும். குடும்ப உறவில் இருவரும் சமமாக மதிக்கப்படுவதுதான் சரியான இல்லறம்!'' என்று வலியுறுத்தி முடித்தார் நப்பின்னை.

என்றென்றும் ஒலிக்கட்டும் இருகை ஓசை!