சென்னையைச் சேர்ந்த மருத்துவரும் உளவியல் ஆலோசகருமான ஷர்மிளாவும் அவரின் டீன் ஏஜ் மகள் ஆஷ்லியும் 'பேரன்ட்டீனிங்' என்ற பெயரில் பெற்றோர்களுக்கும் பதின்பருவ பிள்ளைகளுக்கும் விழிப்புணர்வு பயிற்சி வகுப்புகள் எடுப்பவர்கள். இதுவரை பத்தாயிரத்துக்கும் மேலான குடும்பங்களில் மாற்றங்களை நிகழ்த்திக் காட்டியிருப்பவர்கள். பிள்ளைகளைக் குறைசொல்லும் பெற்றோர்களுக்கு தன் வயதினரின் குரலாக ஆஷ்லியும், பதின்பருவத்தினரிடம் பெற்றோர்கள் உணரும் பிரச்னைகளை, எதிர்பார்க்கும் மாற்றங்களை பெற்றோர் சமூகத்துக் குரலாக ஷர்மிளாவும் பகிர்ந்துகொண்ட தகவல்கள் அவள் விகடன் இதழில், 13 அத்தியாயங்களில் வெளிவந்திருக்கின்றன. பெற்றோருக்கும் டீன் ஏஜ் பிள்ளைகளுக்குமான உறவுச்சிக்கல் பற்றி பகிர இன்னும் ஏராளமான விஷயங்கள் இருப்பதால் விகடன்.காமில் தொடர்ந்து பேசுகிறார்கள் டாக்டர் ஷர்மிளாவும் அவரின் மகள் ஆஷ்லியும்.

டாக்டர் ஷர்மிளா
``நான் என் பிள்ளைளை சரியா வளர்த்திருக்கேன். நல்ல பழக்கவழக்கங்களைக் கத்துக்கொடுத்திருக்கேன். தப்பு பண்ணினா 'சாரி' கேட்கப் பழக்கியிருக்கேன்....'' - இப்படிப் பெருமைபேசும் பல பெற்றோர்களைப் பார்க்கலாம். இது நல்ல விஷயம்தான். வீட்டில் பிள்ளைகள் தவறு செய்யும்போது அவர்களைவிட வயது குறைவான தம்பி, தங்கைகளிடமோ, நண்பர்களிடமோ, ஏன் பெற்றோரிடமோகூட 'சாரி' கேட்கப் பழக்கியிருப்பார்கள். அதே நேரம் தாங்கள் தவறு செய்யும்போது பிள்ளைகளிடம் அதற்காக 'சாரி' கேட்க வேண்டும் என பெரும்பாலான பெற்றோர்கள் நினைப்பதில்லை. ''என்னது.... பிள்ளைங்ககிட்ட நாம 'சாரி' கேட்கறதா.... அப்புறம் அவங்க எப்படி நம்மளை மதிப்பாங்க?'' என்பதே அவர்கள் தரப்பு நியாயமாகவும் இருக்கிறது. ஆனால் உண்மையில் 'சாரி' கேட்பதால் அல்ல, கேட்காமல் விடுவதால்தான் பிள்ளைகள் மத்தியில் உங்களுக்கான மரியாதை குறைகிறது பெற்றோர்களே...
'சாரி' கேட்பதை, அதிலும் நம் பிள்ளைகளிடம் கேட்பதை பெரும்பாலான பெற்றோரும் கவுரவக் குறைவான விஷயமாகப் பார்க்கிறார்கள் என்பதே உண்மை. குழந்தை வளர்ப்பு விஷயத்தில் தாங்கள் செய்வதுதான் எப்போதும் சரி என்ற எண்ணமே இதற்கு காரணம். பிள்ளைகளிடம் 'சாரி' கேட்பதால் அவர்கள் நாளை அதையே நமக்கெதிரான ஆயுதமாகத் திருப்புவார்கள் என்ற பயமும் காரணம்.
மனிதராகப் பிறந்த எல்லோரும் தவறுகள் செய்வது இயல்பே. இந்த உலகில் யாரும் 100 சதவிகிதம் சரியானவர்கள் அல்லர். பிள்ளைகள் மட்டுமல்ல, பெற்றோர்களுக்கும் இது பொருந்தும். குழந்தைகளுக்கு ஒழுக்கத்தையும் நல்ல பண்புகளையும் போதித்து வளர்க்கும் பெற்றோர்களும்கூட தவறு செய்யலாம். அந்தத் தவறுகள் பிள்ளைகளின் மனதைக் காயப்படுத்தலாம். உங்களுடைய ஒரு செயல், பிள்ளையைக் காயப்படுத்தியது தெரிந்தால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? முதலில் அந்தத் தவற்றுக்குப் பொறுப்பேற்க வேண்டும். அமைதியான முறையில் மனதாரா மன்னிப்புக் கோர வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSமன்னிப்பு எல்லாவற்றையும் மாற்றிவிடுமா?
மன்னிப்பு கேட்பது என்பது மகத்தான குணம் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்திருக்காது. ஆனால் மன்னிப்பு கேட்பதால் மட்டுமே சூழல் சரியாகிவிடும் என்று சொல்வதற்கில்லை. நடந்த தவறு மீண்டும் நடக்காது என்பதற்கான உறுதிமொழியை அளிக்க வேண்டியதும் அவசியம். நம்மால் காயப்பட்ட நபருக்கு இனிமையான ஏதோ ஒரு விஷயத்தைச் செய்வதும் சூழலை இலகுவாக்கும்.
சில நேரங்களில், சில சூழல்களில் 'சாரி' என்ற ஒற்றை வார்த்தையே எல்லாவற்றையும் சரியாக்கிவிடும். ஆனால் பல நேரங்களில் உங்கள் குழந்தைக்கு அதை ஏற்றுக்கொள்வதிலோ, மீண்டும் இயல்புநிலைக்குத் திரும்புவதிலோ சின்ன தயக்கம் இருக்கலாம். இயல்புநிலைக்குத் திரும்ப குழந்தைக்கு அவகாசம் கொடுக்க வேண்டியது அவசியம்.
சில வேளைகளில் சிம்பிளாக 'சாரி' சொல்லி முடித்துவிடுவோம். ஆனாலும் அதற்குப் பிறகும் செய்த தவற்றை நினைத்து மனது கஷ்டப்படும். ஆனாலும் மனதார மன்னிப்பு கோரிவிட்ட அந்த நிறைவு, மெள்ள, மெள்ள எல்லாவற்றையும் மாற்றும்.
பிள்ளைகளிடம் 'சாரி' கேட்பது மட்டும் போதாது டியர் பேரன்ட்ஸ்...
- நீங்கள் அவர்களைக் காயப்படுத்தியதாக நினைக்கும்போதெல்லாம் 'சாரி' கேளுங்கள்.... அடிக்கடி 'சாரி' கேட்பதற்கு அசிங்கப்படவே தேவையில்லை.
- உங்கள் பிள்ளைகள் காயப்பட்டதை மனதார உணருங்கள்.
- உங்களுக்கு ஒரு விஷயம் சாதாரணமாகத் தோன்றலாம். ஆனால் உங்கள் பிள்ளைகளுக்கு அது பெரிய விஷயமாகத் தெரியலாம். அதை ஒப்புக்கொள்வதில் தவறில்லை.
- 'சாரி' கேட்பதோடு நின்றுவிடாமல் பிள்ளைகளிடம் என்ன நடந்தது என்று விவரியுங்கள்.

- அடுத்தவரை குறைசொல்லத் தோன்றும் உணர்வை அடக்குங்கள்.
- நடந்ததை பிள்ளைகளுக்கு விளக்கிச் சொல்லலாம். அதே நேரம் நீங்கள் செய்ததுதான் நியாயம் என நிலைநிறுத்த முயன்று 'சாரி' கேட்பதைத் தவிர்க்கத் தேவையில்லை.
- ஒரு தவறு நடக்கும்போது அதற்குப் பொறுப்பேற்க வேண்டியதன் அவசியத்தை உங்களையே உதாரணமாக்கி பிள்ளைகளுக்குப் புரியவையுங்கள்.
- நடந்த தவற்றை சரிசெய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.
- மீண்டும் அதே தவறு நடக்காது என உறுதியளியுங்கள்.
- நீங்கள் சொன்ன 'சாரி'யை ஏற்றுக்கொள்ள உங்கள் பிள்ளைகள் தயாரா என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
'சாரி' கேட்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை....
- மனதார மன்னிப்பு கேளுங்கள். அதை எக்ஸ்கியூஸாக மாற்றாதீர்கள்.
- குற்ற உணர்வுடன் கேட்காதீர்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
டேக் ஹோம் மெசேஜ்
உங்களுடைய நோக்கமானது பிள்ளைகளுடன் இணக்கமான உறவை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும். பெற்றோராக இருந்தாலும் தவறு செய்துவிட்டீர்கள் என்று தெரிந்தால் அதற்காக மன்னிப்பு கேட்பது என்பது நிச்சயம் நல்ல குணம். அது சிறந்த பெற்றோராக உங்களை மேம்படுத்திக்கொள்ள உதவுவதோடு, ஆரோக்கியமான குழந்தைவளர்ப்பிலும் உங்களை மேம்படுத்தும். மன்னிப்பு என்பது மகத்தான விஷயம். உறவுச்சிக்கல்களுக்குத் தீர்வளிக்கிற மந்திரச் சொல்லும் அதுவே.
ஆஷ்லி
தவறுகளுக்கு மன்னிப்பு கேட்பது என்பது எந்த வயதினருக்குமே கொஞ்சம் சிரமமான விஷயம்தான். மன்னிப்பு கேட்பதன் மூலம் நீங்கள் செய்த தவற்றை ஒப்புக்கொள்கிறீர்கள் என்றாகிவிடுமே என்பதில்தான் பலருக்கும் ஈகோ. ஆனாலும் ஈகோவை கொஞ்சம் ஒதுக்கிவைத்துவிட்டு சக்திவாய்ந்த சொல்லான 'சாரி' கேட்பதில் தவறே இல்லை.

'உங்கள் குழந்தைக்கு மரியாதையைக் கற்றுத்தருவதற்கு முன் நீங்கள் மரியாதை தெரிந்தவராக இருக்க வேண்டும்' என்று சொல்வதுண்டு. மன்னிப்பு கேட்கும் விஷயத்துக்கும் அது பொருந்தும். பெற்றோர் 'சாரி' கேட்பதைப் பார்த்து வளரும் பிள்ளைகளும் 'சாரி' சொல்லத் தயங்க மாட்டார்கள்.
நான் என் அம்மாவைப் பார்த்துதான் இந்தப் பழக்கத்தைக் கற்றுக்கொண்டேன். சாதாரணமாக குரலை உயர்த்திப் பேசுவதில் தொடங்கி, என்னுடன் நேரம் செலவிட முடியாததுவரை சின்னதோ, பெரியதோ எந்த விஷயத்துக்கும் அம்மா 'சாரி' கேட்கத் தயங்கியதில்லை. தான் செய்ததுதான் சரி என்று நியாயப்படுத்தியதும் இல்லை. என் உணர்வுகளை மதித்து நான் காயப்பட்டிருப்பேன் என்று தெரிந்து அவர் 'சாரி' கேட்பது என்பது எனக்கு மிகப் பெரிய விஷயமாக இருந்தது. அம்மாவைப் பார்த்து நானும் அதைக் கற்றுக்கொண்டேன். 'சாரி' என்பதொரு மந்திரச் சொல்... அதைச் சொல்லிப் பாருங்கள், புரியும்.
- ஹேப்பி பேரன்ட்டீனிங்