Published:Updated:

`அவர்களின் தேவை, அட்டென்ஷன்!' - மல்டிபிள் ரிலேஷன்ஷிப்புக்குப் பின் உள்ள உளவியல்!

ஜெ.நிவேதா

`மல்டிபிள் ரிலேஷன்ஷிப்பில் ஈடுபடுபவர்கள், குறை சொல்லப்பட வேண்டியவர்களா?'

ரிலேஷன்ஷிப்
ரிலேஷன்ஷிப்

கலாசாரம் என்ற போர்வையில், அதிகம் புனிதப்படுத்தப்பட்ட வார்த்தை காதலாகத்தான் இருக்கும். சங்க இலக்கியம் தொடங்கி, சினிமா வரை அனைத்துத் தளங்களுமே ஒவ்வொரு விதமாகக் காதலை புனிதப்படுத்தி வருகின்றன. எனினும், நவீன சமூகம் காதலை இப்படித்தான் பார்க்கின்றதா என்றால், இல்லைதான். பிரேக்-அப், பேட்ச் அப் எல்லாம், இன்றைய தலைமுறைக்கு சாதாரணமான விஷயமாகிவிட்டது. 'எனக்குக் கொஞ்சம் இடைவெளி வேணும்' என்று சொல்லி ட்ரிப் ஒன்றை அடித்துவிட்டு, அடுத்த வேலையைப் பார்க்கத் தொடங்கிவிடுகின்றனர்.

காதல்
காதல்

எங்கும் எதிலும் தேங்கி நின்றுவிடக் கூடாது, எந்தவொரு உறவின் பிரிவிலும் நம் சுயத்தை இழந்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கின்றனர் அவர்கள். லிவிங் டு கெதர், ஃப்ரெண்ட்ஸ் வித் பெனிஃபிட்ஸ், ஒன் நைட் ஸ்டாண்ட் என அடுத்தடுத்த நகர்வுகளை நோக்கிச் செல்ல ஆரம்பித்துவிட்டது நம் அடுத்த தலைமுறை. ரிலேஷன்ஷிப் மீதான இந்தத் தலைமுறையின் பார்வையைப் பார்த்து, 'இவையெல்லாம் நம்ம கலாசாரத்துக்கு சரியா வருமா?' என விவாதங்கள் எழாமல் இல்லை. என்றாலும், 'எங்களுக்கு எது சரினு படுதோ, அதை நாங்க செய்றோம். இதுல உங்களுக்கென்ன பிரச்னை' எனப் பதில்களும் வந்துகொண்டுதான் இருக்கின்றன.

ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களுடன் உறவில் இருப்பது, தேவைப்படும்பட்சத்தில் ஒருவருடன் உறவிலிருப்பதை மற்றொருவரிடம் மறைப்பது - என்பதுதான் மல்டிபிள் ரிலேஷன்ஷிப் கல்சர்.
மனநல மருத்துவர் பூங்கொடி பாலா.

"உறவுகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் அடுத்தடுத்த கட்டங்களை அடைந்துகொண்டேதான் இருக்கும். 'ஜெனரேஷன் கேப்'பின் பின்னணியைப் புரிந்துகொண்டதாக இதை ஏற்றுக்கொள்ளலாம். மாடர்ன் ரிலேஷன்ஷிப்பில், கவனிக்கப்பட வேண்டிய மற்றும் ஆபத்தான பக்கம் என்றால், அது 'மல்டிபிள் ரிலேஷன்ஷிப் கல்சர்தான்' என்கிறார்" மனநல மருத்துவர் பூங்கொடி பாலா.

மனநல மருத்துவர் பூங்கொடி பாலா
மனநல மருத்துவர் பூங்கொடி பாலா

`அதென்ன மல்டிபிள் ரிலேஷன்ஷிப்?' அவரிடமே கேட்டோம்.

"ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களுடன் உறவில் இருப்பது, தேவைப்படும்பட்சத்தில் ஒருவருடன் உறவிலிருப்பதை மற்றொருவரிடம் மறைப்பது - என்பதுதான் மல்டிபிள் ரிலேஷன்ஷிப் கல்சர். இப்படியானவர்களிடம், 'போதிய அன்பு தனக்கு கிடைக்கவில்லை, தேவையான இடத்தில் சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை' என்ற எண்ணம் மேலோங்கி இருக்கும். அதையே அவர்கள் தங்களின் பிம்பமாக அனைத்து இடங்களிலும் எதிரொலிப்பர்.

இது, ஒருவகை பிஹேவியரல் டிஸ்ஆர்டர். முழுக்க முழுக்க நடத்தைத் தொடர்பான பிரச்னை என்பதால், காதல் மட்டுமன்றி அன்றாட வாழ்வின் அனைத்து நிகழ்வுகளிலும் இதன் எதிரொலிகளைக் காணலாம்.
மனநல மருத்துவர் பூங்கொடி பாலா

மல்டிபிள் ரிலேஷன்ஷிப்பில்,

* ஒரே நேரத்தில் ஒருவருக்குத் தெரியாமல் இன்னொருவருடன் உறவு கொண்டிருப்பது.

* ரிலேஷன்ஷிப்புக்குள் நுழைந்த மிகக் குறுகிய காலத்தில், காரணமேயில்லாத காரணத்தை முன்னிறுத்தி மிக இயல்பாக பிரேக் அப் செய்வது.

* எந்தவொரு உறவிலும் நிலைத்திருக்காமல் இருப்பது. உறவுகளைப் பிரிந்த பின்னர், அதுகுறித்த கவலையோ வருத்தமோ இல்லாமல் மிக இயல்பாக அடுத்த உறவுக்குத் தயாராகி நிற்பது,

* பார்ட்னர்களிடம் அதிக போலித்தனத்துடனும் நாடகத்தன்மையுடனும் செயல்படுவது

* தங்களின் எதிர்பார்ப்புகளையும் தேவைகளையும் நிறைவேற்றும் சூழல்களை செயற்கையாக உருவாக்கி அதை நிறைவேற்றி ரசிப்பது போன்றவை ஆபத்தான போக்குகள்.

காதல்
காதல்

பொதுவாகவே மல்டிபிள் ரிலேஷன்ஷிப்பில் ஈடுபட்டவர்களை, எமோஷனலி அன்ஸ்டேபிள் என நாங்கள் (மனநல மருத்துவர்கள்) குறிப்பிடுவோம். காரணம், இவர்களால் யாருடனும் ஆழமான உறவை ஏற்படுத்திக்கொள்ள முடியாது. அதனாலேயேவும், எதிரில் இருப்பவரின் மனநிலை எப்படி இருக்கும் என்பதையோ நம்முடைய செயல் எதிரில் இருப்பவருக்கு என்ன மாதிரியான சிரமத்தைத் தரும் என்பதையோ இவர்களால் சுயமாக யோசிக்கவோ புரிந்துகொள்ளவோ முடியாது."

Vikatan

`மல்டிபிள் ரிலேஷன்ஷிப்பில் ஈடுபடுபவர்கள், குறை சொல்லப்பட வேண்டியவர்களா?'

"இது, ஒருவகை பிஹேவியரல் டிஸ்ஆர்டர். முழுக்க முழுக்க நடத்தைத் தொடர்பான பிரச்னை என்பதால், காதல் மட்டுமன்றி அன்றாட வாழ்வின் அனைத்து நிகழ்வுகளிலும் இதன் எதிரொலிகளைக் காணலாம். காதல், காமம் மட்டுமல்ல. அலுவல் விஷயங்கள், பொருளாதார விஷயங்கள், மற்ற உறவுகள் என எல்லா உணர்வுகளையும் அந்நியமாகவே எடுத்துக்கொண்டு கையாள்வர். உன்னிப்பாகக் கவனிப்பதன் மூலமாகத்தான் இதைக் கண்டறிய முடியும். இப்படியானவர்களின் உணர்வுகள் செயற்கையானவை, நாடகத்தன்மை, நிலையின்மை போன்றவை நிறைய இருக்கும். இவர்களுக்கு முடிவெடுப்பதில் சிக்கல்கள் இருக்கும்.

 உளவியல் சிக்கல்
உளவியல் சிக்கல்

மூன்றாவது நபராக இந்த உளவியல் சிக்கலை அணுகுபவர்கள், இப்படியானவர்களை ஏமாற்றுப் பேர்வழிகளாக முன்னிறுத்திவிடுவர். உண்மை என்னவெனில், ஒருவரை ஏமாற்ற வேண்டும் என்று நினைத்துச் செயல்படுபவர்களுக்கு, சில தேவைகள் இருக்கும். அவற்றை முன்னிறுத்தி மட்டுமே அவர்கள் எந்தவொரு உறவுக்குள்ளும் நுழைவர். மல்டிபிள் ரிலேஷன்ஷிப்பில் இருப்பவர்களுக்கு, 'எமோஷனலாக ஒருவருடன் கனெக்ட் ஆக வேண்டும்' என்பதைத் தவிர, வேறெந்த அவசியமும் இருக்காது. பொருள் சார்ந்தோ, பணம் சார்ந்தோ பெரியளவிலான தேவைகள் இருக்காது. ஆகவே, ஏமாற்றும் குணம் இவர்களுக்கு இருக்காது.

எந்த உறவோடும் ஆழமாக கனெக்ட் ஆகிக்கொள்ள முடியாதது என்பது, அவர்களின் குணாதிசயமாக இருக்கும். குணாதிசயத்தை, குற்றப்படுத்துவது சரியல்ல. 19 வயதுக்கு மேற்பட்ட ஒருவரின் குணாதிசயம் என்பது, முழுக்க முழுக்க அவரின் குழந்தைப் பருவத்தைப் பொறுத்துதான் அமையும் என்பதால், இங்கு குற்றப்படுத்தப்பட வேண்டியது அவர்தம் வளர்ப்பு முறையைத்தான்.

குழந்தை
குழந்தை

பெற்றோரால் அதிகம் நேசிக்கப்படாமல் இருப்பது, ஆசிரியர்களிடமிருந்து சரியான வழிமொழிகளோ அறிவுரைகளோ பெறாமல் இருப்பது, உறவுகள் மத்தியில் நேசிக்கப்படாமல் இருப்பது, உண்மையான நட்புகள் கிடைக்காமல் போயிருப்பது போன்றவற்றை எதிர்கொண்ட குழந்தைகள், 'அதுதான் உலகம், அப்படித்தான் உலகம்' எனச் சில தவறான வரைமுறைகளுக்குப் பழக்கப்பட்டு இருப்பர். குழந்தை வளர்ப்பில் வந்த விரிசல்தான், இந்தப் பிரச்னையின் வேர்.

பொழுதுபோக்குக்காக, ஆதாயத்துக்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை மனநலப் பிரச்னையின் கீழ் வகைப்படுத்த முடியாது. அப்படியானவர்களை நியாயப்படுத்துவதும் தவறுதான்.

ஒரு விஷயத்தைக் குழந்தை தன்னிடம் மறைக்கிறது அல்லது சொல்லத் தயங்குகிறது என்பது தெரிய வந்தவுடனேயே, பெற்றோர் அவர்களிடம் அமர்ந்து பேச வேண்டும். குழந்தையின் சின்னச் சின்ன விஷயங்களைத் தட்டிக்கழித்துவரும் பெற்றோரிடம், பெரிய பெரிய விஷயங்களைப் பின்னாள்களில் குழந்தை சொல்லத்தயங்கும். வளர்ந்த பின்னர், யாரொருவரின் குணத்தையும் முழுமையாக மாற்ற முடியாது. என்றாலும் தெரபிகள் மூலம் நெறிமுறைகளைக் கற்பித்து, ஓரளவு மேம்படுத்தலாம் ‘எமோஷனலி அன்ஸ்டேபிள் பெர்சனாலிட்டி டிஸ்ஆர்டர்’ என்ற பிரச்னையின் கீழ் இவர்களை வகைப்படுத்தலாம்.

 ரிலேஷன்ஷிப்
ரிலேஷன்ஷிப்

மல்டிபிள் ரிலேஷன்ஷிப்பில் ஈடுபடுபவது, ஒரு வகை டிஸ்ஆர்டர்தான் என்றாலும், மனநலப் பிரச்னைகள் இல்லாத சிலரும்கூட இப்படியான செயல்களில் ஈடுபடலாம். பொழுதுபோக்குக்காக, ஆதாயத்துக்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை மனநலப் பிரச்னை என்று வகைப்படுத்த முடியாது. அப்படியானவர்களை நியாயப்படுத்துவதும் தவறு. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது தவறு என்பதையும் பிரச்னை கை மீறிப் போகும்போது குற்ற வழக்கு வரை போய் அவமானத்தைச் சந்திக்க வேண்டி வரும் என்பதையும் கூறி உடனிருப்பவர்கள் இவர்களை எச்சரிக்க வேண்டியது அவசியம். தேவைப்பட்டால் மனநல மருத்துவர்களிடம் அழைத்துச் செல்லலாம்" என்றார் அவர்.

`மல்டிபிள் ரிலேஷன்ஷிப்'பில் ஒருவர் ஈடுபடுவதன் பின்னணி என்ன?' மனநல மருத்துவர் வசந்த்திடம் கேட்டோம்.

"இரண்டு பின்னணிகள் உள்ளன. முதல் காரணம், செக்‌ஷூவல் ட்ரைவ். அதாவது, பாலியல் தேவைகள். மற்றொன்று, அடுத்தவரிடமிருந்து கிடைக்கும் கவன ஈர்ப்பு. இப்படியானவர்கள், எப்போதும் பிரிவுக்குத் தயாரான மனநிலையிலேயே இருப்பார்கள். பிரிந்த பின்னரான அடுத்தகட்ட நகர்வுகள் குறித்த யோசனைகள் இவர்களிடம் மேலோங்கி இருக்கும். மேம்போக்கான உறவில் இருப்பதால், பார்ட்னரின் இன்ப துன்பங்களை முழுமையாக உள்வாங்கிக்கொள்ள மாட்டார்கள்.

`அவர்களின் தேவை, அட்டென்ஷன்!' - மல்டிபிள் ரிலேஷன்ஷிப்புக்குப் பின் உள்ள உளவியல்!

இவர்களை, 'ஒரே நேரத்தில், ஒன்றுக்கும் மேற்பட்டவரோடு உறவிலிருப்பவர்கள்' எனக் கூறுவது தவறு. இவர்கள், ஒருவருடன்கூட உறவில் இல்லை என்று சொல்லப்பட வேண்டியவர்கள். ‘எமோஷனலி அன்ஸ்டேபிள் பெர்சனாலிட்டி டிஸ்ஆர்டர்’ என்ற பிரச்னையின் கீழ் இவர்களை வகைப்படுத்தலாம். அன்றாட வாழ்விலேயே ஈடுபாடின்றி இவர்கள் காணப்படுவர் என்பதால் உடனிருப்பவர்கள், நண்பர்கள், உறவினர்கள், பெற்றோரின் உதவியின்றி இவர்களை மாற்றுவது சிரமம். ஆரோக்கியமான மற்றும் நம்பிக்கை வாய்ந்த உறவுகள்தான் இவர்களுக்கான சிறந்த தெரபி. உடன், மனநல மருத்துவரின் பரிந்துரையோடு சேர்த்து சில நடத்தைச் சார்ந்த மாற்றங்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கும்" என்கிறார் அவர்.