Published:Updated:

மோசமான ஆண்களை, பெண்கள் தொடர்ந்து நம்புவது ஏன்? - காமத்துக்கு மரியாதை | S 3 E 26

Sex education

''சைக்கலாஜிக்கல் தியரிபடி, ஆண்-பெண் உறவுச் சிக்கலில் நான்கு நிலைகள் இருக்கின்றன.''

மோசமான ஆண்களை, பெண்கள் தொடர்ந்து நம்புவது ஏன்? - காமத்துக்கு மரியாதை | S 3 E 26

''சைக்கலாஜிக்கல் தியரிபடி, ஆண்-பெண் உறவுச் சிக்கலில் நான்கு நிலைகள் இருக்கின்றன.''

Published:Updated:
Sex education

காதலிக்கும் பெண்ணையோ அல்லது தன்னை திருமணம் செய்துகொண்ட பெண்ணையோ ஆண்கள் கை ஓங்குவதும், கெட்ட வார்த்தைகள் சொல்லித் திட்டுவதும், அதிகபட்சமாக எதிர்பாராமல் அல்லது திட்டமிட்டுக் கொலை செய்வதும் நம் சமூகத்தில் நடந்துகொண்டேதான் இருக்கிறது. சமீபத்தில்கூட, தன்னுடன் லிவ்இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்த பெண்ணை கொலை செய்து, 35 துண்டுகளாக வெட்டி ஃபிரிட்ஜில் வைத்து, டெல்லியில் ஆங்காங்கே வீசிய ஆணை பற்றிய  செய்தியைப் படித்து நாடே பதறியது.

இப்படிப்பட்ட ஆண்கள் ஒரே நாளில் கொலை வரை சென்றிருக்க மாட்டார்கள். ஆனால், அவர்களுடைய மோசமான இயல்பை பல்வேறு தருணங்களில் வெளிப்படுத்தி இருப்பார்கள். அப்படியிருந்தும் அந்த ஆண்களுடனே பெண்கள் ஏன் வாழ்க்கையைத்  தொடர்கிறார்கள் என்பதற்கான காரணம் பற்றி விளக்கமாகப் பேசுகிறார் மூத்த பாலியல் மருத்துவர் நாராயண ரெட்டி. 

Dr. Narayana Reddy
Dr. Narayana Reddy

`` 'யுனைடெட் நேஷன் ரிப்போர்ட்'படி, யாரோ ஓர் ஆணால் ஒவ்வொரு 14 நிமிடத்துக்கும் ஒரு பெண் அடிக்கப்படுகிறாள் அல்லது அவனுடைய கெட்ட வார்த்தைகளை எதிர்கொள்கிறாள். இதை இன்டிமேட் பர்சனல் வயலன்ஸ் என்போம். பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல், மூன்றில் ஒரு பெண், தன்னுடைய வாழ்க்கைத்துணைவனால் குடும்ப வன்முறைக்கு ஆளாகிறார் என்கிறது. இதை இன்டிமேட் பார்ட்னர் வயலன்ஸ்  என்போம். சரி, காதலன் அல்லது கணவனின் இயல்பு சரியில்லை என்று தெரிந்த பிறகும், பெண்கள் ஏன் அந்த ஆணுடனான உறவைத் தொடர்கிறார்கள் என்கிற கேள்வி எழுகிறதல்லவா? 

சைக்கலாஜிக்கல் தியரிபடி, ஆண்-பெண் உறவுச் சிக்கலில் நான்கு நிலைகள் இருக்கின்றன. முதல் நிலை பதற்றம் (Tension). இந்த நிலையில் இருவருக்குமிடையில் விவாதமும் சண்டையும் இருக்கும். இரண்டாவது நிலை சம்பவம் (incident). இந்த நிலையில், பெண்ணை அடிப்பது, காயம் ஏற்படுத்துவது, மிரட்டுவது, குடும்பம் நடத்த பணம் தராமல் இருப்பது என இருப்பார்கள். மூன்றாவது நிலை நல்லிணக்கம் (reconciliation).  இந்த நிலையில், ஆண் 'இனிமே இப்படி நடந்துக்க மாட்டேன்' என்று சொல்லி பெண்ணிடம் மன்னிப்பு கேட்பான். அதேநேரம், 'நீ அப்படிப் பேசினதாலதான் நான் உன்னை அடிச்சிட்டேன். நான் கை ஓங்குனதுக்கு காரணமே நீ தான்' என்பான். நான்காவது நிலை அமைதி (calm). இந்த நிலையில், சில பெண்கள் 'இவர் சொல்ற மாதிரி நடந்த பிரச்னைக்கெல்லாம் நான்தான் காரணமோ' என்று நினைக்க ஆரம்பிப்பார்கள்.

பெண் மீது தாக்குதல்
பெண் மீது தாக்குதல்

பல பெண்கள், 'அதான் மன்னிப்பு கேட்டுட்டாரே... இனிமே அடிக்க மாட்டாரு, திட்ட மாட்டாரு' என்று நம்ப ஆரம்பிப்பார்கள். இதை தேனிலவு கட்டம் (honeymoon phase) என்போம். இந்தக் காலகட்டத்தில் அப்போதுதான் திருமணமான தம்பதியர்போல மகிழ்ச்சியாக இருப்பார்கள். ஆனால், இவையெல்லாம் சில நாள்களோ அல்லது சில வாரங்களோதான் நீடிக்கும். பிறகு மறுபடியும் சண்டை, கை ஓங்குவது, கெட்ட வார்த்தையில் திட்டுவது, செலவுக்குப் பணம் தராமல் தவிக்க விடுவது என ஆரம்பிப்பான் ஆண். இதை நாங்கள் 'சைக்கிள் ஆஃப் வயலன்ஸ்' என்போம். 

இந்தக் குழப்பத்தில்தான், அடிக்கிற கணவனுடனும், சந்தேகப்படுகிற காதலனுடனும் தொடர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் பெண்கள்.  நம் சமூகத்தில் நிறைய வீடுகளில் நடப்பதுதான் இது. இந்த வகை ஆண்களின் இயல்பு அப்படியேதான் இருக்கும். இப்படிப்பட்ட ஆண்களை, தொடர்ந்து பொறுத்துக்கொண்டே இருக்க வேண்டிய அவசியம் பெண்களுக்கில்லை. 

Sex Education
Sex Education

தவிர, உங்கள் பொறுமை உங்கள் உயிருக்கு ஆபத்தாகவும் முடியலாம். இப்படிப்பட்ட ஆண்களை முடிந்தால் உளவியல் ஆலோசகரிடம் அழைத்துச் சென்று தீர்வு காண முயற்சி செய்யுங்கள் அல்லது பெற்றோரின் உதவியை நாடுங்கள். தேவைப்பட்டால் காவல்துறையில் புகார் செய்யுங்கள். எல்லாவற்றையும்விட உங்கள் உயிர் முக்கியம்'' என்கிறார் டாக்டர் நாராயண ரெட்டி.