Published:Updated:

`இளைஞர்களுக்குத் திருமணத்திலும், குழந்தை பெற்றுக்கொள்வதில் ஆர்வம் குறைவது ஏன்?' - நிபுணர் விளக்கம்

wedding
wedding ( Pixabay )

10,000 ரூபாய்க்குள் மாத வருமானம் வாங்குவோரில் 4-ல் ஒருவர், குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பம் இல்லை என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

கொரோனா லாக்டௌன் காரணமாக இளைஞர்கள் பலர் வேலையிழப்பு, பணப்பற்றாக்குறை, தனிமை என்று பல்வேறு நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கின்றனர். இந்நேரத்தில் 23 வயதிலிருந்து 39 வயதிற்குள்ளானவர்களின் மனநிலையை அறியும் முயற்சியில் யூகவ் - மின்ட் - சிபிஆர் (YouGov-Mint-CPR) ஆகிய நிறுவனங்கள் இறங்கின.

marriage
marriage

இந்தியாவில் உள்ள 184 நகரங்களில் இருந்து சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் இந்த ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டார்கள். அவர்களிடத்தில் காதல், திருமணம், குழந்தை பெற்றுக்கொள்வதில் உள்ள ஆர்வம் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன. இந்த ஆய்வின் முடிவுகளை யூகவ் - மின்ட் - சிபிஆர் நிறுவனங்கள் சமீபத்தில் வெளியிட்டுள்ளன.

இதில் கலந்துகொண்டவர்களின் வருமானத்தையும், வயதையும் அடிப்படையாகக் கொண்டு வரிசைப்படுத்தப்பட்டிருக்கும் ஆய்வின் முடிவுகள் அதிர்ச்சியளிப்பவையாக உள்ளன. திருமணத்திலும், குழந்தை பெற்றுக்கொள்வதிலும் இளைஞர்களின் விருப்பம் குறைந்து வருவது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

10,000-க்கும் குறைவான மாத வருமானம் உள்ளவர்களில் 39 சதவிகிதம் பேர், தங்களுக்குத் திருமணமே வேண்டாம் என்ற விரக்தி மனநிலையில் உள்ளனர். 25,000 ரூபாய்க்குள் மாத வருமானம் உள்ளவர்களில் 25 சதவிகிதம் பேரும், 60,000-க்கும் மேல் சம்பாதிப்பவர்களில் 21 சதவிகிதம் பேரும்கூட, தங்களுக்குத் திருமணத்தில் விருப்பமில்லை என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

லாக்டெளனில் பிரேக் அப் பிரச்னைகள்... எதிர்கொள்வது எப்படி? உளவியல் ஆலோசகரின் வழிகாட்டல்

10,000 ரூபாய்க்குள் மாத வருமானம் வாங்குவோரில் 4-ல் ஒருவர், குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பம் இல்லை என்று கருத்து தெரிவித்துள்ளனர். 25,000 ரூபாய்க்குள் மாத வருமானம் இருப்போரில் 20 சதவிகிதத்தினரும், 60,000-க்கு மேல் மாத வருமானம் இருப்போரில் 19 சதவிகிதத்தினரும் தங்களுக்குக் குழந்தை வேண்டாம் எனக் கூறியுள்ளனர்.

Babies
Babies

ஒருவேளை நீங்கள் திருமணம் செய்துகொண்டால் அது காதல் திருமணமா அல்லது நிச்சயிக்கப்பட்ட திருமணமா என்று கேட்டதற்கு பெரும்பாலான இளைஞர்கள் காதல் திருமணத்திற்கே ஆதரவு தெரிவித்துள்ளனர். 24 - 39 வயதுக்குட்பட்டோரில் 62.3 சதவிகிதத்தினர் காதல் திருமணத்தையே விரும்புகின்றனர். மீதமுள்ள சதவிகிதத்தினர் நிச்சயிக்கப்பட்ட திருமணமே சிறந்தது என்றும் கூறுகின்றனர். 23 வயதுக்குட்பட்டோரிடம் இந்தக் கேள்வி கேட்கப்பட்டபோது 10-ல் 7 பேர் காதல் திருமணமே சிறந்தது என்று பதிலளித்துள்ளனர்.

ஆண்களை விடப் பெண்களே காதல் திருமணத்தை அதிகம் விரும்புகின்றனர். பெண்களில் 49 சதவிகிதத்தினர் காதல் திருமணத்தையே தேர்ந்தெடுக்கலாம் என்கின்றனர். 21 சதவிகிதத்தினர் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை விரும்புகின்றனர். அதே நேரம், 30 சதவிகிதப் பெண்கள், திருமணமே வேண்டாம் என்கின்றனர்.

love
love

ஆண்களில் 41 சதவிகிதத்தினர் காதல் திருமணத்திற்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். 32.5 சதவிகிதத்தினர் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை விரும்புவதாகவும், 6.5 சதவிகிதத்தினர் திருமணமே வேண்டாம் என்றும் கூறுகின்றனர்.

மொத்தத்தில் இந்திய இளைஞர்களுக்கிடையே திருமணத்திலும், குழந்தை பெற்றுக்கொள்வதிலும் உள்ள ஆர்வம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துவருவது தெளிவாகிறது. இளைஞர்களிடம் பெருகி வரும் இந்த மனநிலை குறித்து மனநல மருத்துவர் அபிராமியிடம் பேசினோம்.

வாழ்வை இனிக்கச் செய்ய
இரண்டு விஷயங்கள்!

"இப்போதைய இளைஞர்கள் மத்தியில் திருமணம் பற்றிய எண்ணமும், குழந்தை பெற்றுக்கொள்வதில் உள்ள ஆர்வமும் குறைந்து வருவதற்குப் பல்வேறு வகையான காரணங்கள் உள்ளன. அவற்றில் முதன்மையானது பொருளாதாரத்தில் உள்ள நிச்சயமற்ற தன்மை. நாட்டில் மக்கள்தொகை பெருகிக்கொண்டே செல்லச் செல்ல வேலையில்லா திண்டாட்டமும் அதிகரிக்கிறது. பெரும்பாலான இளைஞர்கள் குறைவான ஊதியத்திற்கே வேலைபார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

மனநல மருத்துவர் அபிராமி
மனநல மருத்துவர் அபிராமி

10,000 சம்பளம் வாங்கும் ஒருவருக்குத் தன்னுடைய தேவைகளையே சரியாக நிறைவேற்றிக்கொள்ள முடியாது. இந்த நிலையில் திருமணம், குடும்பம், குழந்தை என்பதையெல்லாம் நினைத்துப் பார்க்க அவருக்கு வாய்ப்பே இருக்காது. அப்படி நினைத்துப்பார்த்தாலும் திருமணம் செய்துகொண்ட பிறகு நம்மால் குடும்பத்தின் பொருளாதாரத்தைச் சமாளிக்க முடியுமா என்ற எண்ணமே மேலோங்கி இருக்கும். இதன் காரணமாகவே திருமணத்திலும், குழந்தை பெற்றுக்கொள்வதிலும் அவருக்கு ஆர்வம் குறைந்து போகிறது.

இதுவே சம்பளம் அதிகமாக வாங்குகிறவர் என்றால் அவருக்கு வேறு மாதிரியான பிரச்னைகள் இருக்கலாம். சிலர் தங்களுக்கு கிடைத்துக்கொண்டிருக்கும் சுதந்திரம் திருமணம், குடும்பம் என்ற பெயரில் கெட்டுப்போய்விடும் என்று திருமணத்துக்கு 'நோ' சொல்லலாம்.

சிலர் சொந்த வீடு, கார், பேங்க் பேலன்ஸ் என்று செட்டில் ஆனபிறகு திருமணம் செய்துகொண்டு நிம்மதியாக வாழலாம் என்பதன் அடிப்படையில் திருமணத்தைத் தள்ளிப்போடுவார்கள். தன் குடும்பத்தின் வறுமை நிலையினாலும் பலர் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கலாம்.

`லாக்டௌனால் பிரிந்திருக்கும் இணையுடன் போனில் பேசும்போது...'- தம்பதிகள், காதலர்களுக்கு மனநல ஆலோசனைகள்

சிலருக்கு நிறைய படிக்க வேண்டும், விளையாட்டு, ஆராய்ச்சி போன்றவற்றில் பெரிதாகச் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அதற்குத் திருமணம், குழந்தை எல்லாம் தடையாக இருக்கலாம் என்று கருதலாம்.

காதல் தோல்வி ஏற்பட்ட பிறகு சிலருக்குத் திருமணத்தில் விருப்பம் இல்லாமல் போகலாம். இவற்றைத் தவிர சிலருக்கு பர்சனல் விஷயங்கள் ஏதேனும் கூட திருமணத்தைத் தவிர்க்கக் காரணமாக இருக்கலாம்.

Breakup
Breakup

திருமணம் செய்துகொள்வது, குழந்தை பெற்றுக்கொள்வது எல்லாம் ஒருவரின் தனிப்பட்ட விருப்பத்தைச் சார்ந்தது என்பதால் அதில் கருத்து சொல்ல நமக்கு உரிமையில்லை. ஆனால் `பருவத்தே பயிர் செய்' என்பதே நம் வழக்கு. வீணான காரணங்களுக்காகத் திருமணத்தைத் தள்ளிப் போடுவதைத் தவிர்க்கலாம்.

ஆண்களை விடப் பெண்களுக்குக் காதல் திருமணத்தில் விருப்பம் அதிகம். ஏன்?

love
love

ஓர் ஆணும் பெண்ணும் பேசிப் புரிந்துகொள்ளக் காதல் திருமணத்தில் கிடைக்கின்ற வாய்ப்பு பெரும்பாலும் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் கிடைப்பதில்லை. இதுதான் பலரும் காதல் திருமணத்தை விரும்புவதற்கான முதல் காரணம். தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் பெண்கள் தேர்ச்சியானவர்கள். தங்களுக்கு எது தேவை என்பதை மற்றவர்களைக் காட்டிலும் அதிகம் தெரிந்துவைத்திருப்பார்கள்.

இதன் காரணமாகவே பெரும்பாலான பெண்கள் காதல் திருமணத்தையே விரும்புகிறார்கள். தங்களுக்கான துணையை தாங்களே தேர்ந்தெடுக்க ஆசைப்படுகிறார்கள். அப்படி அவர்கள் தேர்ந்தெடுத்த தங்களுக்குப் பிடித்த துணையுடன் வாழும்போது ஏற்படும் கஷ்டங்களையும் எளிதாக அவர்களால் கடக்க முடியும்" என்றார் மனநல மருத்துவர் அபிராமி.

அடுத்த கட்டுரைக்கு