Published:Updated:

திருமணம் தாண்டிய உறவு; அன்புக்கா... காமத்துக்கா? - OPEN-னா பேசலாமா - 11

பாலுறவு

சமூகம் கட்டமைத்துள்ள ஒழுக்க விதிகளில் இருந்து மனிதர்கள் மீற முயன்றுகொண்டுதான் இருப்பார்கள். அது ஒரு வகையில் இயல்பானதும் கூட...

திருமணம் தாண்டிய உறவு; அன்புக்கா... காமத்துக்கா? - OPEN-னா பேசலாமா - 11

சமூகம் கட்டமைத்துள்ள ஒழுக்க விதிகளில் இருந்து மனிதர்கள் மீற முயன்றுகொண்டுதான் இருப்பார்கள். அது ஒரு வகையில் இயல்பானதும் கூட...

Published:Updated:
பாலுறவு

திருமண உறவில் இருக்கும்போதே தன் இணையரைத் தாண்டி இன்னொருவருடன் பாலியல் ரீதியாக உறவுகொள்வது  கள்ளக்காதல் என நெடுங்காலமாகக் கூறப்பட்டு வருகிறது. இன்றைக்கு `திருமணம் தாண்டிய உறவு' (Extra marital affair) என்கிற சொல்லாடல் பயன்படுத்தப்படுகிறது. உறவு மீறல் என்பது ஆண் - பெண் உறவின் மிகப்பெரும் பிரச்னையாக இருந்து வருகிறது. உறவு மீறலின் விளைவாகத் தொடர்ச்சியாகக் கொலைகள் நடைபெற்று வருவதை செய்திகளில் காண்கிறோம். 

திருமணம் தாண்டிய உறவின் மூலம் தன் இணையரிடம் கிடைக்காத அன்பைப் பெறுகின்றனர். இந்த உறவே அன்புக்காக நிகழ்வது என்கிற கருத்து முன் வைக்கப்படுகிறது. ஒருவனுக்கு ஒருத்தி என்பதெல்லாம் பழைமைவாத சிந்தனை, அவரவர் உடல் அவரவர் உரிமை. ஒருவர் தான் விரும்பும் யாருடன் வேண்டுமானாலும் உறவுகொள்ளலாம் என்று கூறுபவர்களும் உண்டு. கலாசார மதிப்பீடுகளுக்கு அப்பாற்பட்டு திருமணம் தாண்டிய உறவை எப்படிப் பார்க்கலாம், இது நிகழ்வது அன்புக்கா... காமத்துக்கா என இந்த அத்தியாயத்தில் உரையாடுவோம்...

திருமணம் தாண்டிய உறவு; அன்புக்கா... காமத்துக்கா? - OPEN-னா பேசலாமா - 11

திருமணம் தாண்டிய உறவை உடல் சார்ந்து மட்டுமல்லாது உணர்வு சார்ந்தும் பார்க்க வேண்டும் என்கிறார் உளவியல் மருத்துவர் ஸ்வாதிக் சங்கரலிங்கம்...

``திருமண உறவுக்குள் இருக்கும்போது தங்கள் துணையிடம் காதல், நம்பிக்கை, ஆறுதல், பாதுகாப்பு உள்ளிட்டவற்றை அடிப்படையாக எதிர்பார்ப்பார்கள். தனக்கு மட்டுமேயான தம் இணையர் அந்தத் திருமண உறவை மீறிய ஓர் உறவுக்குள் செல்லும்போது, அது நம்பிக்கை துரோகமாகத்தான் பார்க்கப்படுகிறது. திருமணத்தை மீறிய உறவு என்பது உடல் சார்ந்து மட்டுமல்லாது உணர்வு சார்ந்ததாகவும் இருக்கிறது. தற்போதைய சூழலில் நம் சமூகத்தில் உணர்வு சார்ந்த  உறவுதான் அதிக அளவு காணப்படுகிறது.

ஒருவர் திருமணத்தை மீறிய இன்னோர் உறவுக்குள் செல்ல, தற்போது உள்ள உறவில் ஏதோ ஒரு சிக்கல் இருக்கிறது என்பதே அடிப்படை காரணமாக இருக்கிறது. அந்தச் சிக்கல் எதிர்பார்ப்பில் இருந்து வருவதாகத்தான் இருக்கிறது.

தன்னுடைய துணை தன்னுடன் நெருக்கமாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கலாம். அது முழுமையாகப் பூர்த்தியடையாத போது, தன்மீது அவருக்கு காதலும், அக்கறையும் இல்லை என நினைக்கலாம். திருமண உறவுக்கான எதிர்பார்ப்பும் தேவையும் பூர்த்தியடையாதபோது, அதை எவ்விதம் சரி செய்ய வேண்டும் என்றுதான் யோசிக்க வேண்டும். அதற்காக எந்த முனைப்பும் இல்லாமல் வேறோர் உறவுக்குள் அதைத் தேடுகின்றனர். பெரும்பாலும் தங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தத் தெரியாதவர்களே இதுபோன்ற உறவில் சென்று சிக்கிக் கொள்கின்றனர். பல்வேறுபட்டவர்களுடன் உறவு கொள்வதில் தனக்கு எந்தத் தயக்கமும் இல்லை என நினைக்கிறவர்களும் திருமணத்தை மீறிய உறவுக்குள் செல்கின்றனர். 

மனநல மருத்துவர் ஸ்வாதிக் சங்கரலிங்கம்
மனநல மருத்துவர் ஸ்வாதிக் சங்கரலிங்கம்

ஏன் திருமணம் தாண்டிய உறவு நிகழ்கிறது என்பது பற்றி நடத்தப்பட்ட ஆய்வுகளில், பாலியலைக் கடந்து உணர்வு நிலையில் நெருக்கம் இல்லாமல்போகும்போதும், இணையருக்கு இடையிலான உரையாடல் சரியாக இல்லாதபோதும் உறவு மீறலுக்குச் செல்லும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகத் தெரிய வந்துள்ளது.

தம்பதிகளுக்குள் நெருக்கமின்மை இருக்கிறதா, ஒருவருக்கொருவர் பரஸ்பர மரியாதை கொடுப்பதில்லையா, பாலியல் உறவில் திருப்தியடையாமல் இருக்கிறார்களா என என்ன பிரச்னையோ, அதை அடையாளம் கண்டு பேசித் தீர்க்க முயல வேண்டும். அப்படி இல்லையெனில், உளவியல் மருத்துவரையோ, ஆலோசகரையோ அணுகி தங்களின் பிரச்னைகளைத் தீர்க்க வேண்டும். 

இருவருக்குள்ளும் இருக்கும் சிக்கல் தீர்க்க முடியும் எனும்போது அதற்கான தீர்வை நோக்கிச் சென்று உறவை மீண்டும் தொடரலாம். ஒருவேளை தம்பதியருக்குள் ஒத்துப்போகாது என முடிவெடுத்தால் பிரிந்துவிடுவது நல்லது. ஓர் உறவுக்குள் இருந்து கொண்டே இன்னோர் உறவை வளர்ப்பது என்பது பெரும் பிரச்னைகளையே கொண்டு வரும் என்பதால், அதைத் தவிர்க்க வேண்டும் என்கிறார் ஸ்வாதிக் சங்கரலிங்கம்.

``திருமணம் தாண்டிய உறவில் பெரும்பான்மையாக பெண்களே பலியாகிறார்கள்” என்கிறார் மானுடவியலாளர் மோகன் நூகுலா...

திருமணத்தை மீறிய உறவு என்பது காலங்காலமாக சமூகத்தில் நிலவி வருவதுதான். தாய்வழிச் சமூகங்களில் திருமணத்தை மீறிய உறவு என்பதே அபத்தமான வாதமாகத்தான் பார்க்கப்படுகிறது. ஏனெனில், அங்கு பெண்ணுக்கு கணவர் என்கிற ஸ்தானத்தில் ஒருவர் நிலையாக இருக்க வேண்டும் என்பதில்லை. அங்கு ஒரு பெண் அனுமதிக்கும் வரை ஒரு துணை உடன் இருக்கலாம். தந்தை வழிச் சமூகங்கள் அப்படி உருவாக்கப்பட்டவை அல்ல, அது நிலையான திருமண பந்தத்தை ஏற்படுத்துவதன் மூலம் ஒரு குடும்பத்தை, சமூக கட்டமைப்பை உருவாக்கி வைத்துள்ளது.

இங்கு காதல், திருமண உறவுகள் புனிதப்படுத்தப்பட்டு, அவை ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நிலை நிறுத்தப்பட்டுள்ளன. அதன் காரணமாக அந்த உறவு எல்லா உறவுகளை விடவும் மேம்பட்டது என்றும், அதற்குள் ஒருவருக்கு ஒருவர் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் கோருகிறது. இருந்தும், என்னதான் மனிதர்களிடம் புனிதத்தன்மை பற்றி பேசிக்கொண்டே இருந்தாலும், சமூகம் கட்டமைத்துள்ள ஒழுக்க விதிகளில் இருந்து மனிதர்கள் மீற முயன்றுகொண்டுதான் இருப்பார்கள். அது ஒரு வகையில் இயல்பானதும்கூட. ஆனால், அந்த மீறல் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கிறதா என்றால் இல்லை என்பதே யதார்த்தம். ஆகவேதான், இங்கு திருமணம் மீறிய உறவுகள் சமூகச் சிதைவை உருவாக்குகின்றன.

மோகன் நூகுலா
மோகன் நூகுலா
படம் : சொ.பாலசுப்ரமணியன்

ஒருநாளில் நடக்கும் குற்றச் சம்பவங்களில் ஏதேனும் ஒன்றுக்கு திருமணம் மீறிய உறவு காரணமாக உள்ளது என்பதை செய்திகளின் மூலமே அறிய முடியும். இன்றைய சூழலில் நாம் காணும் திருமணம் மீறிய உறவு என்பதே ஆணாதிக்க சமூகத்தின் வெளிப்பாடுதான். அதனால்தான் பெண்கள் இதற்கு பலியாகின்றனர்.

ஒருபுறம் காதல், அன்பு என்ற பெயரால் ஆண்கள், திருமண உறவில் ஏமாற்றத்தில் இருக்கும் பெண்களை ஏமாற்றுகிறார்கள் என்றால், மற்றொரு புறம் பெண்ணின் சுதந்திரம், உடல் என்பது பெண்ணின் உரிமை என்ற பெயரால் அறிவு நிலையில் இருந்தும் ஏமாற்றுகின்றனர். அதற்காக பெண்கள் திருமணம் மீறிய உறவுக்குள், ஆண்களை வீழ்த்துவதில்லையா என்றால், வீழ்த்துகிறார்கள். அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் அவர்கள் சந்தித்துதான் ஆக வேண்டும். 

திருமண உறவில் காதல், அன்பு, பாதுகாப்பு இல்லை என உணரும் போது, ஆணோ, பெண்ணோ இருவரும் ஆழ்ந்து சிந்தித்து, அதை சரிப்படுத்த முடியாதெனில் நேர்மையாகத் திருமண பந்தத்தை முறித்துக்கொண்டு புதிய உறவுக்குள் செல்லலாம். அப்படி இல்லை என்றால், அந்த உறவு மீறல் வாழ்க்கையையே சிதைத்து விடும். திருமணம் தாண்டிய உறவு என்பது இல்லறத்துக்கும், யதார்த்த வாழ்க்கைக்கும் முரணானது" என்கிறார் மோகன் நூகுலா. 

பார்வைக் கோணம்

பிரவின் குமார், தனியார் நிறுவன ஊழியர்: தம்பதிகள் தங்கள் துணையைத் தாண்டி புதிய நபருடன் அணுக்கமான உறவை உருவாக்கிக்கொள்ள, இந்தக் காலம் நிறைய வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்துள்ளதை நாம் கவனிக்க வேண்டும். பழைய காதலரோடு உறவை புதுப்பித்துக்கொள்ளவும், புத்தம்புது அந்நியர் ஒருவர் நம் வாழ்வில் திடுமென அறிமுகமாகி நம் அன்றாடத்தில் அவரது இருப்பு இன்றியமையாது ஆகிப்போவது மிக எளிதாகிவிட்டது.

அதுபோல் நாமும் யார் வாழ்விலும் மிக எளிதாக. நுழைந்துவிட முடியும். நாம் நம்மைப் பற்றிய தகவல்களை, ரகசியங்களை, அபரிமிதமாகப் பொதுவெளிக்கு வழங்கிக்கொண்டிருக்கிறோம். பிறரது வாழ்க்கையையும் மிக உன்னிப்பாக அறிந்து கொண்டிருக்கிறோம். நள்ளிரவில்கூட சாட்டில் அக்கறையுடன் பேசி, அந்தரங்க வாழ்க்கைக்குள் நுழைந்து ஒருவரது தனிமையுணர்வையும், வெற்றிடத்தையும் ஒருவரால் எளிதாக நிரப்பிவிட முடிகிறது.

பிரவின் குமார்
பிரவின் குமார்

எந்த ஒரு சிரமமும், மெனக்கெடலும் இல்லாமல் கைக்கெட்டும் வாகிலேயே நம்மால் ஒரே நேரத்தில் பல உறவுகளைப் பேண முடியும். ஆசை, காமம் என்பதையெல்லாம் தாண்டி இதில் கிட்டும் இந்த சாகச உணர்வுக்காகவே பலர் இந்த உறவுக்குள் ஆட்படக்கூடும்.

தம்பதிகள் தங்கள் துணை மேல் வைத்திருக்கும் உரிமையையும், பொறுப்பையும் உணர்ந்துகொண்டு தங்கள் எல்லையை வகுத்துக்கொண்டு நிற்பதே இது போன்ற உறவுச்சிக்கலில் மாட்டிக்கொள்ளாமல் தப்புவதற்கு வழி. தம் துணைவரை தனிமையுணர்வுக்கு ஆளாக்காமல், காதலைப் பேணுவதும் முக்கியம்.

கல்பனா அம்பேத்கர், தனியார் நிறுவன ஊழியர்: திருமணம் தாண்டிய உறவு முதலில் தேவையா என்பதை நாம் இங்கு பரிசீலிக்க வேண்டும். திருமணம் என்பது இந்திய சூழலில் ஒரு சமூக கட்டமைப்பாக, சமூக ஒழுக்கத்தைத் தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டு செல்லும் ஓர் அமைப்பாக உள்ளது. சமூக ஒழுக்கம் என்பது ஆண்பால், பெண்பால் என  இருவருக்கும் பொதுவானது. திருமணம் தாண்டிய உறவு இங்கு ஆண்களுக்கு தான் லாபமாக இருக்கிறது. ஒரு குடும்பத்தின் ஒழுக்கத்தைப் பாதுகாப்பது, அக்குடும்பத்துக்கு நேர்மையாகவும் அன்பாகவும், பொறுப்புணர்வுடனும் இருப்பது, குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரின் கடமையாகும். அப்படி இல்லாத நிலையில் ஆணோ, பெண்ணோ திருமணத்தைத் தாண்டி வேறோர் உறவைத் தேடுகின்றனர்.

கல்பனா அம்பேத்கர்
கல்பனா அம்பேத்கர்

திருமண உறவில் கிடைக்காத அன்பு, காதல், காமம் ஆகியவை இன்னொருவரிடத்தில் கிடைக்கும் என்று நம்புவது முட்டாள்தனம். ஆண் பெண் இருவருக்கிடையில் இன்னொரு நபர் வரும்போது அவருக்காக நாம் முயலும் ஒவ்வொரு செயலையும் ஏற்கெனவே நம்மோடு வாழும் இணையரிடம் மேற்கொண்டால், தேவையான அன்பையும், காமத்தையும் அவரிடமிருந்தே பெற்றுக் கொண்டால் திருமணத்தைத் தாண்டிய உறவு தேவையே படாது.

ஆணோ, பெண்ணோ தன்னை நம்பி தன்னுடன் வாழ வரும் மற்றோர் உயிரை எந்த விதத்திலும் ஏமாற்றக்கூடாது என்பதுதான் நியதி. அப்படி உங்களுக்கு அவர்களுடன் வாழ விருப்பம் இல்லை என்றால் முறையாக அவரிடம் இருந்து விலகி வேறொருவரைத் தேர்ந்தெடுத்து அவர்களுடன் வாழலாம். அதுதான் ஒரு முழுமையான சமூக ஒழுக்கத்தை நோக்கி இட்டுச் செல்லும்."