இன்றைய தேதியில் கல்லூரி சாலைகளில் அதிகம் எதிரொலிக்கும் வார்த்தை, `வீ ஆர் பெஸ்டீஸ்' என்பதுதான். இதைக் கேட்காத, சொல்லாத இளம் தலைமுறை மக்கள், மிக மிகக் குறைவு. "ஒரு நல்ல பெஸ்டீ எப்படி இருக்கணும் தெரியுமா? ஒளிவுமறைவில்லாமல் இருப்பதுதான் ஒரு நல்ல `பெஸ்டீஸூ'க்கான அழகு. `எனக்குத் தெரியாம என் பெஸ்டீ எதுவுமே செய்யமாட்டான்/செய்யமாட்டாள்'" என்பதுதான் பெஸ்டீஸ்களின் தாரக மந்திரம்.
இருவருக்குமான ஒற்றுமைகளைப் பொறுத்துதான், நட்பின் நெருக்கம் அமையும்.மனநல மருத்துவர் ஸ்வாதிக்

`ஒளிவு மறைவே இன்றி செயல்படுவது சாத்தியம்தானா? நட்புக்குள் இந்தளவுக்கான நெருக்கம் சரியானதா?'
என்பது பற்றி மனநல மருத்துவர் ஸ்வாதிக் சங்கரலிங்கத்திடம் பேசினோம்.
"'அனைத்தையும் நண்பனிடம் சொல்ல வேண்டும்' என்பது இயல்பு. அப்படியிருப்பது பிரச்னையில்லை. ஒருவித உணர்வு பகிர்தல்தான். ஆனால் `சொல்லியே ஆக வேண்டும்' என்ற நிலை உருவாகும்போது அந்த இயல்பு, கடமையாகும். கடமை என்பது ஒரு கட்டத்துக்குமேல், கட்டாயமாகிவிடும். `இதை இவர்களிடம் சொல்லியே ஆக வேண்டும்' என்ற தேவையில்லாத நிர்பந்தம், உறவுக்குள் உண்டாகி அழுத்தம் ஏற்படத் தொடங்கும். ஒருவேளை வேலை அலுப்பில் மறந்து எதையேனும் சொல்லாமல் விட்டுவிட்டால், அது சிக்கல்தான். மிஸ்அண்டர்ஸ்டாண்டிங், தேவையில்லாத விவாதங்கள் போன்றவை ஏற்பட்டு உறவுக்குள் சிக்கல் ஏற்படும்."
`பெஸ்டீஸ், தங்கள் உறவுகளுக்குள் இப்படியான சிக்கல்கள் வராமல் இருக்க என்ன செய்யலாம்?'
நண்பர்களில் பல வகைகள் இருக்கின்றனர். அவர்களில் கவனிக்கப்பட வேண்டியவர்கள், பெஸ்டீஸ்கள்தான். காரணம் இவர்கள் மத்தியில் எந்தளவு அக்கறை அதிகமாக உள்ளதோ, அதே அளவுக்கு எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கும். எந்தவொரு சிறந்த உறவுக்குள்ளும், ஏதாவதொரு விஷயத்தில் ஒற்றுமை இருக்கும்.

உதாரணத்துக்கு, இரு நண்பர்களை எடுத்துக்கொண்டால் அவர்கள் இருவருக்குள்ளும் ஏதோவொரு இடத்தில் மிக நுண்ணிய ஒற்றுமை ஒன்றிருக்கும். பிடித்த நடிகர், பிடித்த ஊர், பிடித்த உணவு, பிடித்த விளையாட்டு என அந்த ஒற்றுமை எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். சில நண்பர்கள் ஒரே மாதிரியான நடத்தையோடு இருப்பார்கள். நடத்தை தொடர்பான ஒற்றுமை இருக்கும் நண்பர்கள், மற்றவர்களைவிட கூடுதல் நெருக்கமாக இருப்பதைக் காணலாம்.
கட்டுப்பாடுகளும் முன்னெச்சரிக்கையும் எல்லைதாண்டி போகும்போது, சுயத்தைப் பாதிக்கும்.மனநல மருத்துவர் ஸ்வாதிக்
ஒற்றுமைகளைப் பொறுத்துதான், நட்பின் நெருக்கம் அமையும். நெருக்கம் அதிகரிக்கும்போது, அது ஒரு கட்டத்துக்கு மேல் எதிர்பார்ப்பாக மாறும். எதிர்பார்ப்புகள் ஏமாற்றமாகும்போது, தேவையில்லாத சந்தேகங்கள் உருவாகும்.

இந்த சந்தேகங்கள் அதிகரிக்கும்போது, அதைச் சரிசெய்ய எண்ணி பெஸ்டீக்களில் யாரேனும் ஒருவர் தனக்குத்தானே கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்வார். அவை யாவும், உறவைப் பலவீனமாக்கும். காரணம், கட்டுப்பாடுகளும் முன்னெச்சரிக்கையும் எல்லைதாண்டி போகும்போது, சுயத்தைப் பாதிக்கும். சுயம் பாதிக்கப்படும்போது, மனஉளைச்சல்தான் அதிகமாக இருக்கும். சுயம் பாதிக்கப்படாதவரையில் நெருங்கிய நட்பும், உறவும் தவறில்லை" என்றார் அவர்.
சில பெஸ்டீஸ்கள், பிரச்னையின்போது மூன்றாவதொரு நபரை உள்ளிழுத்து சரிசெய்ய முயல்கின்றனர். இது முற்றிலும் தவறான செயல்.மனநல மருத்துவர் ஸ்வாதிக்
`ஒருவேளை இப்படியான பிரச்னைகள் வந்துவிட்டால், அதை எப்படிக் கையாள்வது?' அவரிடமே கேட்டோம்.
"எளிமையான வழி, சம்பந்தப்பட்ட நபரிடம் பேசி புரியவைப்பதுதான். சில பெஸ்டீஸ்கள், இந்த நிலையில் மூன்றாவதொரு நபரை உள்ளிழுத்து வருவார்கள். இது முற்றிலும் தவறான செயல். எந்தவொரு இடையூறும் இல்லாமல், தொழில்நுட்ப உதவியும் இல்லாமல் ஒன்றாக அமர்ந்து பேச வேண்டும். `உன்னுடைய எதிர்பார்ப்புகள், என்னை சங்கடப்படுத்துகின்றன. நான் நம் உறவில் என் சுயத்தை இழப்பதுபோல உணர்கிறேன். இந்தச் சூழல் நீடிக்கும்பட்சத்தில், நம் இருவருக்குள்ளும் தேவையில்லாத மற்றும் தவறான புரிதல்கள் அதிகரிக்கும். அவை யாவும் நம் உறவைக் கெடுத்துவிடும் என நான் பயப்படுகிறேன்' எனச் சொல்ல வேண்டும்.

பிரச்னை ஏற்பட்ட பெரும்பாலானவர்கள், ஒரு கட்டம் வரை அனைத்துக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு நடக்க முயல்வதுண்டு. அதன்மூலம், தன் நட்பின் ஆழத்தைப் புரிய வைக்கவும் முயல்வர். இதன்மூலம் உறவு பிரச்னைகள் சரியாகும் என்ற நம்பிக்கை தவறு. இப்படியான செய்கைகள், எதிரிலுள்ள ந(ண்)பரின் எதிர்ப்பார்ப்பை அதிகப்படுத்தத்தான் செய்யுமே தவிர, பிரச்னையைத் தீர்க்காது. பேசிப் புரியவைப்பதுதான் சரியான மற்றும் முழுமையான தீர்வு.
பேசிப் புரியவைப்பதுதான் சரியான மற்றும் முழுமையான தீர்வு.
பல வருடங்கள் நீடித்திருக்கும் எல்லா நட்பும், நிச்சயமாக இப்படியொரு நிலையைத் தாண்டிதான் வந்திருக்கும். இதைத் தாண்டாத உறவுகள், நீடிக்காது. ஒருவேளை உங்கள் உறவை நீடித்துக்கொள்ள வேண்டுமென நீங்கள் நினைத்தால், பிரச்னையைப் பேசி சரிசெய்து கொள்ளுங்கள்" என்கிறார் அவர்.
ஆக மக்களே , பெஸ்டீஸ்கள்ட்ட எதிர்பார்ப்பில்லாம ஹேப்பியா இருங்க..!