Published:Updated:

``முதுமையின் தனிமைக்கு சிநேகிதம் அவசியம்!" - `சில்லுக்கருப்பட்டி'யின் 60+ காதலுக்கு வெல்கம்

சில்லுக்கருப்பட்டி
சில்லுக்கருப்பட்டி

``முதுமையில் வாழ்க்கை ஓட்டத்தின் வேகம் குறையும். கூடவே உடலின் வேகமும். இந்தக் காலகட்டத்தில், துணையை இழந்தவர்களுக்கு ஒரு சிநேகிதம் தேவைப்படும். அதன் பெயர் காதல் என்றால், அந்த உணர்வை தாராளமாக அப்படியே அழைக்கலாம்.''

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

காதல் என்பது இளைஞர்களுக்கானது என்ற பொதுபுத்தி, கொஞ்சம் கொஞ்சமாக மாறிவருகிறது; `சில்லுக்கருப்பட்டி' போன்ற சினிமாக்களின் வருகைக்குப் பின்னர், முதுமையின் தனிமையில் துளிர்க்கிற காதலைப் பற்றிச் சமூகம் யோசிக்க ஆரம்பித்திருக்கிறது. முதுமையின் தனிமையில் வருகிற காதலின் அவசியம் குறித்தும், அந்தக் காதலை சம்பந்தப்பட்டவர்களும் மற்றவர்களும் எப்படி அணுக வேண்டும் என்பது பற்றியும் உளவியல் நிபுணர் கண்ணன் பேசுகிறார்.

முதுமையின் தனிமைக்கு சிநேகிதம் அவசியம்!
முதுமையின் தனிமைக்கு சிநேகிதம் அவசியம்!

``நம் ஊரில் ஹார்மோன் சம்பந்தப்பட்ட அன்பைப் பற்றித்தான் நிறைய பேசுகிறோம். சிநேகிதத்துடன் கூடிய அன்பைப் புரிந்துகொள்வதே இல்லை. நடுத்தர வயதைத் தாண்டியவுடன் உடல் தேவைகள் குறைந்து மனதின் தேவைகள் அதிகமாகும். குழந்தைகளுக்காக வாழ்கிறோம் என்ற நிலையைக் கடந்து, வயோதிகத்தில் வாழ்க்கையின் சக்கரம் வேறு திசையில் பயணப்பட ஆரம்பிக்கும். அப்போது, தனிமைதான் விதி என்கிற நிலையில், முதுமையில் ஒரு சிநேகிதக் காதல் வரலாம். இதில் மனதின் தேவைகள்தான் மிகுந்திருக்கும்.

நமக்காக, நம் துணைக்காக, நாம் பேசுவதைக் காதுகொடுத்துக் கேட்க, உடலுக்கு ஏதாவது பிரச்னையென்றால் பார்த்துக்கொள்ள, நானிருக்கிறேன் என ஆறுதல் சொல்ல, பகிர்ந்துகொள்ள என முதுமையில் நிச்சயம் துணை தேவை. முதுமையில் வாழ்க்கை ஓட்டத்தின் வேகம் குறையும். கூடவே உடலின் வேகமும். இந்தக் காலகட்டத்தில், துணையை இழந்தவர்களுக்கு ஒரு சிநேகிதம் தேவைப்படும். அதன் பெயர் காதல் என்றால், அந்த உணர்வை தாராளமாக அப்படியே அழைக்கலாம்.

`சில்லுக்கருப்பட்டி' முதுமைக்காதலின் தேவையை இளைய தலைமுறையிடம் அழகாகக் கொண்டுசேர்த்திருக்கிறது.
உளவியல் நிபுணர் கண்ணன்

வெளிநாடுகளில் இது சர்வ சாதாரணமாக நடைபெறுகிறது. அங்கு அவரவர் வாழ்க்கை, அவரவர் தேவை என, ஒருவருடைய சொந்த வாழ்க்கைக்குள் மக்கள் தொடர்பு குறைவாக இருப்பதால், முதுமைக்காதல் வித்தியாசமாகப் பார்க்கப்படுவதில்லை. உங்களுக்குத் தெரியுமா? லண்டனில், 2017-ம் வருடம் தெரசா மே பிரதமராக இருந்தபோது, `மினிஸ்டர் ஆஃப் லோன்லினெஸ் (Minister of Loneliness)' என ஒரு பதவியே புதிதாக உருவாக்கப்பட்டது. தனிமையின் கொடுமையைப் புரியவைப்பதற்காக இந்தத் தகவலைச் சொல்கிறேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நம் ஊரிலும், முதுமைக்காதல் இங்கொன்றும் அங்கொன்றுமாக நடந்தாலும் அதைப் பற்றி நாம் பேசுவதே இல்லை. அந்த வகையில் `சில்லுக்கருப்பட்டி' போன்ற படங்கள், முதுமைக்காதலின் தேவையை இளைய தலைமுறையிடம் அழகாகக் கொண்டுசேர்க்கின்றன.

தனிமையில் இருப்பவர்களுக்கு உடல்ரீதியான மற்றும் மனரீதியான பிரச்னைகள் அதிகம் வரும்; அவர்களின் வாழ்நாளும் குறைகிறது என்கின்றன மருத்துவ ஆராய்ச்சிகள்.

முதுமைக்காதல்
முதுமைக்காதல்

ஏற்கெனவே கூட்டுக்குடும்பங்கள் உடைந்து, தனிக்குடும்பங்களாகி, அதிலும் பாதி வெளிநாட்டில் மீதி உள்நாட்டில், இன்னும் சிலர் முதியோர் இல்லத்தில் என்று இருக்கிற காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இந்த நேரத்தில் முதுமையில் தனிமையை அனுபவிப்பவர்கள் மத்தியில் வருகிற அன்பு, காதல் எல்லாம் அத்தியாவசியத் தேவைகள். இதைத் தடுக்காமல் இருப்பதே சரி.

இந்த விஷயத்தில் தற்போது நகர்ப்புறங்களில் மாற்றம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. நம் வாழ்க்கையை நாம்தான் வாழ முடியும் என்கிற தெளிவு வந்திருக்கிறது. சமுதாயத்தைவிட்டுத் தள்ளி வைத்துவிடுவார்கள் என்பதுபோன்ற தயக்கங்கள் கொஞ்சமாக உடைந்துகொண்டிருக்கின்றன. இந்த மாற்றங்கள், சம்பந்தப்பட்ட முதியவர்களின் குடும்பத்தினருக்கும் வந்தால், முதுமையில் தனிமை என்ற நிலைமையை இல்லாமல் செய்யலாம்.

முதுமையில் தனிமை அவசியமில்லை
முதுமையில் தனிமை அவசியமில்லை
Vikatan

இன்னொரு விஷயத்தையும் இங்கு நினைவுபடுத்த வேண்டும். இன்றைக்கு மனிதர்களின் வாழ்நாள் அதிகரித்திருக்கிறது. இந்த நேரத்தில் துரதிர்ஷ்டவசமாக முதுமையில் துணையை இழந்தவர்கள், கடைசிக்காலம் வரைக்கும் தனிமையில் உழல வேண்டுமா என்ன? துணையின் நினைவுகளுடன் வாழ்வது என்பது ஒரு நிலையென்றாலும், பரஸ்பரம் உதவிக்கொள்ள ஒரு சிநேகிதமான உறவை அமைத்துக்கொள்வது மிக நல்ல விஷயம். இதற்கு முன்னதாக, சம்பந்தப்பட்டவர்கள் தங்களுடைய தேவையென்ன, இந்த விஷயத்தின் யதார்த்தம் என்ன என்பதை யோசித்து முடிவெடுக்க வேண்டும். அடுத்து, குடும்பத்தில் யார் இந்த உணர்வைச் சரியாகப் புரிந்துகொள்வார்கள், நல்லவிதமாக எடுத்துக்கொள்வார்கள் என்பதை யோசித்து அவர்களிடம் சொல்லி ஒரு துணையைத் தேடிக்கொள்ளலாம். அது இயல்பான விஷயமும்கூட.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு