Published:Updated:

காதலும் ரிலேஷன்ஷிப்பும் ஒண்ணுதான்னு நினைக்குறீங்களா? இல்ல; ஏன்?

Couple (Representational Image)
Couple (Representational Image) ( Photo by Jasmine Carter from Pexels )

ரிலேஷன்ஷிப் என்பது காதலைப் போல ஓர் உணர்வு கிடையாது. காதல் நிபந்தனையற்றது; ரிலேஷன்ஷிப் அப்படிக் கிடையாது.

இரண்டு கேள்விகள்.

நீங்கள் காதலித்திருக்கிறீர்களா?

நீங்கள் ஒரு ரிலேஷன்ஷிப்பில் இருந்திருக்கிறீர்களா?

`அப்போ இரண்டும் ஒன்றில்லையா?’ என ஷாக் ஆகிறவர்களுக்கு `ஒன் மார்க் ஆன்சர்’, `இல்லை' என்பதே. ஏன் இல்லை என்பதை 10 மார்க் விடையாகப் பார்க்கலாம்.

Couple
Couple
Image by Free-Photos from Pixabay

`I am in love‘ என ஒருவர் சொன்னால், அது ஒரு எக்ஸ்பிரஷன்; உணர்வின் வெளிப்பாடு. இரண்டு பேர் சேர்ந்து போக விரும்பும் பயணத்தின் தொடக்க நிலை. அந்த நிலையில், ஒருவரின் குறைகள் இன்னொருவரால் ஏற்றுக் கொள்ளப்படும். எல்லாமே கொண்டாடப்படும். `இதெல்லாம் ஒரு விஷயமா பேபி’ எனச் செல்லம் கொஞ்சப்படும். உதாரணமாக சொன்னால், ஒருவருக்கு காலையில் 9 மணிக்கு முன்னால் எழுந்திருக்கும் பழக்கமே இல்லையென்றால், இன்னொருவர் எல்லா பிளானையும் 9 மணிக்குப் பிறகு வைத்துக் கொள்வார். ஆனால், ரிலேஷன்ஷிப் என்பது தொடக்க நிலைக்கு அடுத்து வரும் காலக்கட்டம். அங்கே ஒருவர் 9 மணிக்குத்தான் எழுந்திருப்பேன் என்றால், இன்னொருவர் எல்லா தடவையும் அதை ஏற்றுக் கொள்வார் என சொல்ல முடியாது.

ரிலேஷன்ஷிப் என்பது காதலைப் போல ஓர் உணர்வு கிடையாது. காதல் நிபந்தனையற்றது; ரிலேஷன்ஷிப் அப்படிக் கிடையாது. அது இரண்டு பேரின் தேவைகளுக்காக, இரண்டு பேராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிகளுடன் கூடிய ஓர் ஒப்பந்தம். அது திருமணம் என்றாலும் சரி, மற்ற வகை ரிலேஷன்ஷிப் என்றாலும் சரி. இதுதான் அடிப்படை. இதில் இருவரின் நலனும், வளர்ச்சியும், மகிழ்ச்சியும் மிக மிக முக்கியம். ஒருவருக்காக மட்டும் அந்த ரிலேஷஷிப் அவர் பக்கம் சாய்ந்திருந்தால் அது ரிலேஷன்ஷிப்பே கிடையாது; அது ஆதிக்கம். இரண்டு பேரில் ஒருவரின் தேவைக்கு மட்டும் கவனம் அதிகம் கிடைத்து, இன்னொருவருக்கு அது கிடைக்காமல் போனால் அந்த ரிலேஷன்ஷிப் அவருக்கு சுமையாக மாறும். அங்கே அந்த அமைப்பு தேவையற்றதாகிவிடும்.

Love
Love
Image by Gerd Altmann from Pixabay

இந்த ரிலேஷன்ஷிப் என்பதை வேலை கொடுப்பவர் - வேலை செய்கிறவர் தொடங்கி பல விதமாகப் பொருள் கொள்ளலாம். கிட்டத்தட்ட அனைத்து வகை ரிலேஷன்ஷிப்புக்கும் முந்தைய பத்தியில் சொன்னவை பொருந்திபோகும். காதலின் அடிப்படையில் உருவாகும் ரிலேஷன்ஷிப்புக்கும் பொருந்தும். என்ன, அதில் கொஞ்சம் வித்தியாசம் உண்டு. மற்றவை ஆதாயம் மற்றும் வசதி சார்ந்து முடிவுகள் எடுக்கப்படும். இங்கே, அது மனம் மற்றும் உணர்வு சார்ந்து எடுக்கப்படும். அதனால்தான் `லவ் ரிலேஷன்ஷிப்’ என்றால் சிக்கல்கள் அதிகம்.

இந்த சிக்கல்களை முற்றிலுமாகத் தவிர்க்க முடியாது. ஆனால் குறைக்கலாம். ஒருவர் மீது ஒருவருக்குக் காதல் வர எந்த அடிப்படையும் தேவையில்லை. `காரணம் காரணமின்றி எதுவும் நடப்பதில்லை காஷ்மோரா’ எனச் சொல்பவருக்குக் கூட காரணங்களேயின்றி ஒருவர் மீது காதல் வரக்கூடும். ஆனால், காதலிப்பவருடன் ரிலேஷன்ஷிப்பில் வாழ சில விஷயங்கள் தேவைப்படும். ரிலேஷன்ஷிப்புக்கு காதல் தேவைதான். ஆனால் காதல் மட்டுமே போதும் என சொல்ல முடியாது என்பதுதான் சாராம்சம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

காதலுக்கும் ரிலேஷன்ஷிப்புக்குமான வித்தியாசங்கள் இவைதாம்.

1. உங்க மீது அன்பு கொண்டிருக்கும் எல்லோரும் உங்களுடன் ரிலேஷன்ஷிப்பில் இருக்க வேண்டிய அவசியமில்லை.

2. ரிலேஷன்ஷிப்பிலிருக்கும் எல்லோரும் காதலிக்கிறார்கள் என்றும் சொல்லிவிட முடியாது.

3. வாழ்க்கையின் நெருக்கடிகளில் இருந்து மீள மற்றும் இன்னும் பல காரணங்களுக்காக ஒரு தற்காலிக ரிலேஷன்ஷிப்புக்குள் நுழைபவர்கள் இருக்கிறார்கள். ஆனால், காதல் அப்படி வந்துவிடாது.

4. ரிலேஷன்ஷிப்பில் இருப்பவர்கள் தங்கள் இணையைத் தவறாக நடத்தும் வாய்ப்புண்டு. ஆனால், காதலில் அப்படிச் செய்ய முடியாது. செய்தால் அது காதலாக முடியாது.

5. ஒருவரை ஏமாற்றி கூட ஒரு ரிலேஷன்ஷிப் சாத்தியமாகலாம் (வேடிக்கையான உண்மை என்னவென்றால் நம் நாட்டில் பல திருமணங்களே அந்த வகையில்தான் வரும்). காதலில் சாத்தியமில்லை. ஏமாற்றி காதலிக்க வைக்கலாம்; ஆனால் காதலிக்க முடியாது.

6. ரிலேஷன்ஷிப்பில் போகப் போக இணையைப் பற்றி அக்கறை ஆப்ஷனாக இருக்கலாம். காதலில் அது தானாக நடந்துவிடும்.

7. காதலுக்கு எந்த நிபந்தனையும் இருக்காது. ரிலேஷன்ஷிப்புக்கு, அதன் வகையைப் பொறுத்து நிபந்தனைகள் இருக்கலாம்.

8. காதல் ஒரு கலை. ரிலேஷன்ஷிப் ஒரு சயின்ஸ். இது புரிந்துவிட்டாலே போதும்.

Love (Representational Image)
Love (Representational Image)
Photo: Pixabay
ஆண்ட்ரியா சொன்ன அந்த `ரிலேஷன்ஷிப் மிஸ்டேக்'... நீங்களும் செய்றீங்களா? #AllAboutLove - 6

ஆண் - பெண் ரிலேஷன்ஷிப்பில் இப்போது பல வகைகள் இருக்கின்றன. Live in, friends with benefits, Open relationship, fling என அதற்குள் நுழைந்தால் போய்க்கொண்டேயிருக்கிறது. எல்லா காலத்திலும் இவை இருந்திருக்கக்கூடும் என்றாலும், அதற்கு முறையான பெயர் சூட்டி, வகை பிரித்து, பெரும்பாலானோரால் அந்தப் பெயருடன் பின்பற்றுப்படுவது என்பது 21ம் நூற்றாண்டில் தான் அதிகமானது. குறிப்பாக இந்தியாவில் இவை கடந்த 10 -15 ஆண்டுகளாகத்தான் கணிசமாக அதிகரித்திருக்கிறது. நாம் என்ன வகையான ரிலேஷன்ஷிப்பில் இருக்கப் போகிறோம் என்பதை வைத்துதான் நமக்கான பார்ட்னர் யாரென அடையாளம் காண முடியும்.

இறுதியாக ஒன்று. காதலுக்கும் ரிலேஷிப்புக்குமான வித்தியாசத்தைப் புரிந்துகொண்டால், அது உங்கள் ரிலேஷன்ஷிப்பை மெருகேற்ற உதவும். என்ன தேவை, என்ன எதிர்பார்க்கலாம், என்ன செய்ய வேண்டும் என்பதை அந்த புரிதல் எடுத்துச் சொல்லும். சிக்கல்களை எப்படிக் கையாள்வது என்பதில் தெளிவை உண்டாக்கும்.

ஆதலினால் காதல் செய்வீர்
ஆதலினால் காதல் செய்வீர்

விகடன் தயாரிப்பில் வெளிவர இருக்கும் ஆதலினால் காதல் செய்வீர் தொடரின் Promo

அடுத்த கட்டுரைக்கு